ஜன கண மன இந்தியா?


தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி சொன்னதாக ஒரு வாக்கியம் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் சுற்றலில் இருக்கிறது. "என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எல்லோரும் தேசிய கீதம் பாடித்தான் ஆகனும்" என்று அவர் விளம்பியதாகச் செய்தி. அவர் அப்படிச் சொன்னது நிஜமா பொய்யா என இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்றாலும் அவர் இத்தகு விஷயத்தைச் சொல்லும் திராணி பெற்றவர் என்பதை முன்னிட்டு அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன்.


தோழர் ஷாலின் மரிய லாரன்ஸ் இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் தேசிய கீதம் இந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்: "The National Anthem of India Jana-gana-mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950." (https://www.india.gov.in/india-glance/national-symbols) அதாவது சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய‌ சபை 1950ல் ஜன கண மன பாடலின் இந்தி வடிவத்தைத் தேசிய கீதமாக்கத் தீர்மானித்தது என்கிறது.


தேடிப் பார்த்ததில் குறிப்பிட்ட‌ இந்த வரி இந்திய அரசின் தளத்தில் 2015 வாக்கில் மோடி அரசால் தான் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்போதே அதை எதிர்க்கும் நோக்கில் விளக்கம் கேட்டு இரு வங்காளிகள் ஆர்டிஐ தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்தி மொழிபெயர்ப்பைச் செய்தது யார்? அதற்கான ஆவணங்கள் எங்கே? மொழிபெயர்ப்பு வடிவம் எங்கே? என்பவை ஆதாரக் கேள்விகள். இது தொடர்பான தகவல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கை விரித்திருக்கிறது (https://www.anirbansaha.com/wp-content/uploads/2016/05/RTI-Response.pdf). அதே உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தேசிய கீதம் பாடுவது தொடர்புடைய அதிகாரப்பூர்வ உத்தரவிலும் அது இந்திப் பாடல் எனக் குறிப்பில்லை (https://mha.gov.in/sites/default/files/NationalAnthem%28E%29_2.pdf).

இது பற்றிய என் பொதுவான புரிதல் இப்படி இருக்கிறது: தாகூர் ஒரு பாடல் எழுதுகிறார். 1911ல். மொத்தம் ஐந்து பத்திகள். எழுதியது வங்காளத்தில். சமஸ்கிருதம் கலந்த வங்காளம். இப்படிக் கடன் பெறப்பட்ட சொற்கள் 'தத்சமா' எனப்படும். வங்காளிகளின் பேச்சு மொழியிலிருந்து விலகி நிற்கும் இதை 'சாது பாஷா' என்கிறார்கள். 'ப்ராணநாதா' என்றெல்லாம் வரும் நம் மணிப்பிரவாள நடை போல. அந்தப் பாடலின் முதல் பத்தி மட்டும் "அப்படியே" ந‌ம் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை இந்திக்கு யாரும் மொழிபெயர்க்கவில்லை. அதன் சமஸ்கிருதக் கலப்பால் அது இந்தி போன்ற தோற்றத்தை அளிக்கிறது. (அல்லது பாடலை இந்தியில் ஒலிபெயர்த்து - கவனிக்க: மொழிபெயர்த்து அல்ல; ஒலிபெயர்த்து - நேவநகரி எழுத்துருவில் எழுதியதாலும் குழப்பம் வந்திருக்கலாம்.) மற்றபடி, வரிகள் பெங்காலி தான். சுருங்கச் சொன்னால் தாகூரின் வரிகள் அப்படியே தான் தேசிய கீதமாக இருக்கிறது. இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லை. (இடையில் நேதாஜி முயற்சியில் கேப்டன் அபித் அலி என்பாரைக் கொண்டு உருது கலந்த இந்தியில் ஜன கண மன மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் தற்போதைய தேசிய கீதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.)

ஒருவேளை இது திட்டமிட்ட சதி இல்லை எனில் இந்தக் குழப்பம் எங்கிருந்து வந்தது? என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிக்கா ஆஃப் இந்தியாவில் இடம் பெற்றுள்ள தவறான தகவலால் வந்திருக்கலாம். ஐந்து பாகம் கொண்ட இந்தத் தொகுப்பில் இப்படி ஒரு வரி இடம் பெற்றிருக்கிறது: "Adopted by the Constituent Assembly as the national anthem of India on January 24, 1950, the song Jana-gana-mana, in its Hindi version of the first stanza, was originally composed in Bengali by poet Rabindranath Tagore". இது 2008ல் வெளியாகி இருக்கும் நூல். ஒருவேளை இதையே "சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் முழுக்க ஆராயாமல் அரசின் தளத்துக்கு எடுத்தாண்டிருக்கலாம். இது நம் சூழலில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அற்ற வழமை தான்.

எப்படியாகினும் இதை இப்போதைக்கு இந்தித் திணிப்பின் ஒரு பகுதியாகவே, வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டியுள்ளது.

***

Comments

என்ன தம்பி சவுக்கியமா?
அப்புறம் இந்தமாதிரி நிறைய கட்டுரை எழுதுங்க.குறிப்பா மோதிஜியை நல்லா திட்டி எழுதுங்க.அப்படியே அமித் ஷா அவர்களையும்.அப்போதான் அவங்க தொடர்ந்து ஆட்சில இருப்பாங்க.வரட்டா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்