எரிநட்சத்திரம்


18ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் ஃப்ரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியன் இந்தியாவில் ப்ரிட்டிஷ் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைக் கைபற்றும் திட்டத்தை வகுத்தார். ஆங்கில எதிர்ப்பின் காரணமாக தந்தையைப் போலவே திப்பு சுல்தானும் ப்ரெஞ்ச் ஆதரவாளர். இக்கணக்கீடுகள் நான்காம் மைசூர் போருக்கு இட்டுச் சென்றன.

உலகின் இரு பெரும் போர் வீரர்களின் தலைவிதி அந்தப் போரில் கிறுக்கப்பட்டது.


திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நான்காம் மற்றும் கடைசி மைசூர் போர் உச்சமாய் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிடும் நோக்கில் ப்ரிட்டிஷ் துருப்புக்கள் முன்னேறிக் கொண்டிருந்தன.

ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்கு 1.6 கிமீ முன்பாக மரங்கள் அடர்ந்த சுல்தான்பேட்டை தோப்பு அமைந்திருந்தது. அங்கே திப்பு சுல்தானின் படை ஒன்று முகாமிட்டிருந்தது.

கம்பெனியின் படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட இவர்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான ஒரு படையை அந்தக் காரியத்தை முடிக்க அனுப்பி வைத்தார்கள். 5 ஏப்ரல் 1799 அன்று இரவு தன் படையினருடன் தோப்புக்குள் நுழைந்த வெல்லெஸ்லிக்கு ஆப்பு காத்திருந்தது.

காரணம் சுல்தான்பேட்டையில் தங்கி இருந்தது திப்புவின் ராக்கெட் படைப்பிரிவு!

அந்தப் படைக்குத் தலைமையேற்று இருந்தவர் திப்புவின் திவான் பூர்ணய்யா. (இவர் முன்பே முன்றாம் மைசூர் யுத்தத்திலும் ராக்கெட் படைப் பிரிவை நடத்தியவர்.)

வெல்லஸ்லி அங்கு ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளானான். அதற்கு முன் ராக்கெட் தாக்குதலை அவன் வாழ்வில் சந்தித்ததில்லை. அதனால் அரண்டு மிரண்டான்.

சுற்றி ராக்கெட்கள் பாய்ந்தன. எங்கு காணினும் வான் நெருப்பு. பலர் கொல்லப் பட்டனர். 12 பேர் சிறை பிடிக்கப்பட்டனர். வெல்லஸ்லியும் காயமடைந்தான்.

பதற்றத்தில் செய்வதறியாது யுத்தகளத்தை விட்டு ஓடிப் போனான் வெல்லஸ்லி.

அலெக்ஸான்டர் பீட்ஸன் என்ற வரலாற்றாசிரியர் ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற தொனியில் இதை “சாதகமான சூழல் வாய்க்கும் வரை தாக்குதலை ஒத்திப் போட வேண்டி இருந்தது” என நாசூக்காய்க் குறிப்பிடுகிறார்.

போரில் பங்கேற்ற ஒரு ப்ரிட்டிஷ் வீரர் இந்த ராக்கெட்களின் அழிவு வீரியத்தைக் கண்டஞ்சி “பறக்கும் கொள்ளை நோய்” (Flying Flagues) என்று வர்ணித்திருக்கிறார்.

“இரவு நேரத் தாக்குதல்கள் மிகுந்த மூர்க்கத்துடன் அமைந்தன. சில காட்சிகள் மிகுந்த பிரம்மாணடம் கொண்டவை. தென்மேற்கிலிருந்து குண்டுகளும் ராக்கெட்களும் வந்து விழுந்தவாறிருந்தன. வடக்கு பக்கம் பதுங்கு குழிகளிலிருந்து தாக்கினர். பீரங்கிகள் தீக்கிரையாகின. அவர்கள் முன்னேறுவதற்கான சமிக்ஞையாக அது பயன்படுத்தப் பட்டது.” என்று அந்த இரவினைப் பேசுகிறார் இன்னொரு ப்ரிட்டிஷ் படை வீரர்.

மைசூரின் வெப்பம் வெல்லஸ்லிக்குப் புதிது. தவிர மோசமான குடிநீரின் காரணமாக வயிற்றுப்போக்கு கண்டிருந்தான். சுல்தான்பேட்டை ராணுவரீதியாக ஆய்வு ஏதும் செய்யாமல் களத்தில் இறங்கியது தவறு என்பது வெல்லஸ்லி கற்றுக் கொண்ட முதல் பாடம். பயம் தோல்வி தரும் என்பது அந்த இரவு அளித்த அடுத்த பாடம்.

அடுத்த நாள் சுதாரித்து மீண்ட வெல்லஸ்லி பெரும்படையுடன் மீண்டும் தாக்குதல் நடத்தி ஒரு வீரனைக் கூட இழக்காமல் சுல்தான்பேட்டையை தன் வசமாக்கினான்.

போர்க்களத்திலிருந்து பின்வாங்கி ஓடி வந்ததற்காக சட்டப்படி வெல்லஸ்லி ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவனது சகோதரன் அப்போது கல்கத்தா கவர்னர் ஜெனரலாக இருந்ததைப் பயன்படுத்தி தப்பித்துக் கொண்டான். அந்நிகழ்வு அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்கிறார் அவனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஃபிலிப் க்யூடெல்லா. அதற்கு பின் அவன் எச்சூழலிலும் பயமோ பதற்றமோ கொள்ளலாகா எனத் தீர்மானித்துக் கொண்டான்.

இந்த வெல்லஸ்லி தான் பிற்பாடு வெல்லிங்டனின் முதலாம் ட்யூக் ஆனான். அதன் பிறகு வாட்டர்லூ போரில் உலகம் போற்றிய மாவீரனான நெப்போலியனைச் சந்தித்து அவனுக்கு முடிவுரை எழுதினான். லார்ட் வெல்லிங்டன் என்றும் இரும்பு ட்யூக் என்றும் அழைக்கப்பட்ட வெல்லஸ்லி வார்க்கப்பட்டது சுல்தான்பேட்டையில் தான்.

நெப்போலியனின் அழிவுக்கு அவனே துவக்கி வைத்த நான்காம் மைசூர் யுத்தமே மறைமுகக் காரணம் எனலாம். சுல்தான்பேட்டை இருளில் கர்னல் வெல்லஸ்லியை தெளிந்த அஞ்சான் ஆக்கிய வகையில் மட்டுமல்லாது இன்னுமொரு வழியிலும் அப்போர் நெப்போலியனின் அழிவுக்கு காரணமானது. அதைப் பற்றி பிற்பாடு.

*

பதினான்கு நாட்கள் கழிந்தன. 22 ஏப்ரல் 1799. ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட காவிரி நதியின் வடகரையில் காத்திருந்த கர்னல் ஸ்டூவர்ட் தலைமையிலான ப்ரிட்டிஷ் படையின் முகாமை பின்புறத்திலிருந்து திப்புவின் வீரர்கள் தாக்கினர்.

இம்முறையும் ராக்கெட் தாக்குதல். ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான ராக்கெட்கள் ப்ரிட்டிஷ் கூடாரங்களின் மீது ஏவப்பட்டன. இது உண்மையில் ஒரு சமிக்ஞை. மிர் கோலாம் ஹுஸைன் மற்றும் முகமது ஹுலேன் மிர் மிரான்ஸ் ஆகியோர் தலைமையினான 6,000 வீரர்கள் (இதில் ஒப்பந்த வாடகைக்கு அமர்த்தப் பட்டிருந்த ப்ரெஞ்சுப் படை வீரர்களும் அடக்கம்) தாக்குதலைத் தொடங்கலாம் என்பதற்கான குறிப்பு. சில ராக்கெட்கள் காற்றில் வெடிகுண்டுகள் போல் வெடித்தன இந்த ராக்கெட்கள் சுமார் 1 கிமீ தூர அளவிற்கு வீச்சினைக் கொண்டிருந்தன.

தரை ஏவுகணை (Ground Rocket) என்றழைக்கப்பட்ட ராக்கெட்கள் நிலத்தில் விழுந்த பின் மேலெழுந்து, விசையுள்ள வரை பாம்பு போல் முன்னகர்ந்து பின் வெடித்தன.

ப்ரிட்டிஷ் படைகளின் மீது வந்து விழுந்த ராக்கெட்கள் யாவும் பெருத்த ஓசையுடன் வெடித்தன. இது அவர்களின் குதிரைப் படைகளை சிதறி மிரண்டோடச் செய்தன.

குறிப்பாய் பெரும் எண்ணிக்கையில் ப்ரிட்டிஷ் படைகளுக்குத் துணையாய் வந்து கொன்டிருந்த பிற மாகாண இந்திய வீரர்களை இது எளிமையாய்ப் பயமுறுத்தியது. அவர்கள் பொதுவாய் பிரிட்டிஷாருக்கு இணையாய்ப் பயிற்சி பெற்றவர்கள் அல்லர்.

"நாங்கள் மிக எரிச்சலும் குழப்பமும் அடைந்தோம். அழிவு ராக்கெட்களிடமிருந்து ஆபத்தின்றி தப்பித்து நகர்வது சிரமமானதாக இருந்தது. 20,000 பேர் கொண்ட எதிரிப் படை தொடர்ச்சியாய் ராக்கெட் தாக்குதல் நடத்தின. ஆலங்கட்டி மழை கூட அதை விட அடர்த்தியானதாய் இருக்க முடியாது. நீல ஒளியாய்த் துவங்கிய ஒவ்வொன்றும் ராக்கெட்டாய் வந்து பொழிந்தது. சில தூண்களின் தலையில் குத்தி பின்புறம் வெளி வந்தன. மரணமும், காயமும், வெட்டுகளும் சூழ்ந்தன. 20 - 30 அடி நீளம் கொண்ட மூங்கில் கழிகள் அவற்றில் இணைக்கப்பட்டிருந்தன." என இப்போரில் பங்கேற்ற பெய்லி என்ற இளம் ப்ரிட்டிஷ் அலுவலர் தன் டைரிக் குறிப்பில் எழுதுகிறார்.

2 மே 1799 அன்று ஸ்ரீரங்கப்பட்டினத்தின் மீது தாக்குதல் துவங்கியது. கோட்டைக்குள் வைக்கப்பட்டிருந்த ராக்கெட் தளவாடங்களை ப்ரிட்டிஷார் சுட்டு தாக்குதல் நடத்தினர். அவை வெடித்து பெரும் கரும்புகை மேகத்தை அங்கு ஏற்படுத்தியது. கோட்டைக் கொத்தளத்திலிருந்து அடுக்கடுக்காய் வெடிப்பின் வெண்ணொளி கிளம்பியது.

அடுத்த நாள் திப்பு கோட்டையின் சுவரில் துளையிட்டு உள்ளே ஊடுருவினார்கள். 4 மே 1799 அன்று மதியம் கோட்டையின் மீதான இறுதித் தாக்குதலை ஆரம்பித்தது டேவிட் பேர்ட் தலைமையிலான ப்ரிட்டிஷ் படை. அங்கும் ராக்கெட்கள் வரவேற்றன.

பேர்டுக்கு திப்புவிடம் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று பாக்கி இருந்தது.

அதற்கு சுமார் 20 ஆண்டுகள் முன் திப்பு முதன் முதலாய் ராக்கெட் பயன்படுத்திய பொல்லிலூர் யுத்தத்தில் ப்ரிட்டிஷார் தோற்ற போது போர்க் கைதியாய் சிக்குண்டு 44 மாதங்கள் சிறை இருந்தவன். அவனுக்கு திப்பு பற்றித் தெரியும். ராக்கெட்களையும்.

ராக்கெட் தடுப்பாட்டம் அதிக நேரம் உதவவில்லை. இம்முறை வலுவான ப்ரிட்டிஷ் படை ராக்கெட்களை எதிர்கொண்டு முன்னேறியது. ஒரு மணி நேரத்தில் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார். போர் முடிவுக்கு வந்தது.

ஆம். இப்படி திடுதிப்பென்று தான் திப்புவின் மரணத்தை அறிவிக்க வேண்டியுள்ளது!
திப்புவின் உடல் மீட்கப்பட்ட போது மூன்று பயோனெட் (துப்பாக்கியின் முனையில் இணைக்கப்பட்ட கத்தி) காயங்களும், தலையில் ஒரு குண்டடியும் பட்டிருந்தது.

*

போரில் மட்டுமல்லாது சடங்கு சம்பிரதாயங்களிலும் மைசூரில் ராக்கெட்கள் பயன் படுத்தப்பட்டன. உதாரணமாய் ப்ரெஞ்சுக்காரர்கள் அமைத்த ஜேகோபியன் க்ளப் ஆப் மைசூர் என்ற குடியரசுக்கான புரட்சி அமைப்பு தூதுக்குழு ஒன்றை அனுப்பி மைசூர் வைத்த போது 500 ராக்கெட்கள் வெடித்து மரியாதை செய்தான் திப்பு சுல்தான்.

விர்ஜினியாவிலிருக்கும் நாசாவின் வாலோப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டியில் போர்க் களத்தில் மைசூர் ராக்கெட்களின் சாகஸத்தை விளக்கும் ஓவியம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. நாஸா தளத்தில் ராக்கெட் இயல் பற்றிய வரலாற்றுக் குறிப்பிலும் திப்புவின் பங்கு பேசப்படுகிறது. நவீன ராக்கெட்களின் துவக்கம் திப்பு சுல்தான் தான்!

திப்புவின் ராக்கெட் நவீன ராக்கெட் இயலுக்கு வலுவான அடித்தளமாய் அமைந்தது. இறுதியில் திப்பு சுல்தான் தோல்வி அடைந்தாலும் அவன் இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக்கம் வேரூன்ற பெரும் தடையாய் இருந்தான். எந்த தேசத்தையும் தம் படை பலத்தால் எதிர்கொண்டு அடக்கிய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு திப்புவின் ராக்கெட்கள் பிரம்மாண்ட சவாலாய் அமைந்தன. விஞ்ஞானத்துக்கு சாம்ராஜ்யம் அடிபணிந்தது.

திப்பு சுல்தானின் படைகளுக்கும் எதிரி சேனைகளுக்குமான வித்தியாசம் வீரர்களின், குதிரைகளின், யானைகளின் எண்ணிக்கையில் இல்லை; ஆயுதங்களின் எண்ணிக்கை இல்லை. யுத்த கள நிலவியல் அல்ல. போர் வியூகம் கூட அல்ல. அது ராக்கெட்கள்!

ஒன்று மட்டும் நிச்சயம். மொத்த மைசூர் போர்களிலும் ராக்கெட் தாக்குதல் என்பது வெள்ளைக்காரர்கள் எதிர்பாராதது. அது அவர்களிடையே பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அவர்களுக்கு பலத்த உயிர் மற்றும் பொருட்சேத்ததை விளைவித்தது. அவர்களைப் பின்வாங்கச் செய்தது. சில இடங்களில் தோற்கவும் வைத்தது. அவர்கள் திப்புவின் ராக்கெட்களைக் கண்டு பயந்தனர்; பிரம்மித்தனர். ஆனால் இதை எல்லாம் பாடமாக எடுத்துக் கொண்டார்கள் ப்ரிட்டிஷ்காரர்கள்.

அவர்கள் இன்னொரு முறை ஒரு கிழக்கத்திய நாட்டின் காட்டான்களிடம் இப்படி எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலையத் தயாரில்லை. பிழையிலிருந்து கற்றனர்.

ஸ்ரீரங்கப்பட்டினம் வீழ்ந்த பின் அங்கு கைப்பற்றப்பட்டு 600 ராக்கெட் ஏவும் கருவிகள், பயன்படுத்தப்படும் நிலையிலிருந்த 700 ராக்கெட்கள், 900 ராக்கெட் உதிரி பாகங்கள், 9,000 காலி ராக்கெட்கள் ஆகியவை இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அவற்றில் இரு ராக்கெட்கள் மட்டும் மிஞ்சி தற்போது லண்டன் ராயல் ஆர்ட்டிலரி ம்யூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 1990களில் ஒருமுறை அப்துல் கலாம் ஐரோப்பிய பயணம் சென்ற போது இவற்றை ஆராய்ந்து மகிழ்ந்திருக்கிறார்.

சரி, மீத ராக்கெட்கள் என்னவாகின? காரணமில்லாமலா வெள்ளைக்காரன் அத்தனை இரும்பையும் கப்பலேற்றுவான்! அதற்கு ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.

ஆம்! மைசூரில் இறந்து போனது திப்பு சுல்தான் மட்டும் தான். ராக்கெட் அல்ல.

***

(குங்குமம் இதழில் வெளியான 'ஆகாயம் கனவு அப்துல் கலாம்' தொடரில் ஓர் அத்தியாயம். நூலை வாங்க‌: https://www.amazon.in/dp/9385118706. இன்று திப்பு ஜெயந்தியை ஒட்டி இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்