ஃப்ரெஞ்ச் கிஸ்


“I thought it was my job to give all the boys their first kiss.”
-    Jessica Alba, Hollywood Actress


ஃப்ரெஞ்ச் கிஸ் என்பது பொதுவாய் ஆணும் பெண்ணும் காதலின் / காமத்தின் நிமித்தம் உதட்டோடு உதடு வைத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வகை முத்தம். லிப் லாக், மௌத் கிஸ் எனப் பலவாறாக இது அழைக்கப்ப‌டுகிறது. உதடுகள் கலப்பது என்பதைத் தாண்டி நாக்குகள் பரஸ்பரம் துழாவிக் கொள்வதும் அதன் நீட்சியாய் எச்சில் பரிமாற்றமும் நிகழும். நெற்றி, கன்னம், புறங்கை பகுதிகளில் முத்தமிடுவதை விட அந்தரங்கமானதாக ஆனந்தரகமானதாக கருதப்படுவது இது!

செசர் லம்ப்ரோஸோ காதலர்களிடையேயான‌ உதட்டு முத்தம் ஆதிகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையேயான வாய்வழி உணவு ஊட்டும் பழக்கத்திலிருந்து உருவானதாகச் சொன்னார். எர்னெஸ்ட் க்ராலி பறவைகள் அலகுகளில் கொஞ்சிக் கொள்வதும், பூச்சிகள் உணர்கொம்புகளில் முட்டி விளையாடுவதும் கூட உதட்டு முத்தத்தின் பரிமாணமே என்றார். மனிதக்குரங்குகளில் உதட்டு முத்தம் சகஜம் - சிம்பன்ஸிக்கள் திறந்த வாயுடனும், போனோபோக்கள் நாக்கு தொடுமளவும்.

பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இன்னமும் ஸ்பெஷல்! காரணம் விரலின் நுனிகளைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக உணர்ச்சிகரமானவை உதட்டின் இதழ்கள். பாலியல் உறுப்புகளுக்குக் கூட அவ்வளவு துல்லிய உணர்ச்சி கிடையாது. முத்தமிடும் போது 34 முகத்தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது - குறிப்பாய் உதட்டிலிருக்கும் ஆர்பிக்யூலரிஸ் ஓரிஸ் தசை. இதை முத்தமிடும் தசை என்று சொல்கிறார்கள்.

பெயர் ஃப்ரெஞ்ச் முத்தம் என்றாலும் இதன் ஆரம்பம் நம் இந்தியாவில் தான். வேதங்களில் (கிமு 1500) உதட்டு முத்தம் பற்றி சொல்லப்படுகிறது. பின் கிபி 1000ம் ஆண்டு வாக்கில் உண்டாக்கப்பட்ட கஜுராஹோ சித்ரகுப்தா கோவிலில் ஆணும் பெண்ணும் உதட்டில் முத்தமிட்டுக் கொள்ளும் சிற்பம் இருக்கிறது. பிற்பாடு கிமு 326ல் அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்த போது கிரேக்கர்கள் நம்மிடமிருந்து உதட்டு முத்தம் பற்றிக் கற்றுக் கொண்டார்கள்.

பல நூற்றாண்டுகளாக நம் தேசம் முழுக்க‌ வாய்மொழிக்கதையாக‌ இருந்து கிபி350ல் எழுத்து வடிவம் பெற்ற‌ மகாபாரதத்தில் உதட்டு முத்தம் காதலின் அடையாளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பின் 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாத்ஸாயனரின் காமசூத்ரா 30 வகை உதட்டு முத்தங்களை விவரிக்கிறது.


 கிமு 200ம் ஆண்டில் லத்தீன் கவிஞர் ப்ளாடஸ் எழுதிய ஒரு படைப்பில் ஓர் அடிமை ஒரு பெண்ணிடம் "என்னை ஒரு சர்ப்பமாக மாற்றி விடு, இரண்டு நாக்குகளையும் கொடு" என்று சொல்வதாக வருகிறது. அது தான் இந்தியா அல்லாத அந்நிய தேசத்திலிருந்து உதட்டு முத்தம் பற்றி வரும் முதல் குறிப்பு.

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதைகளில் கொட்டாவி விடும் காதலனை ஒரு பெண் தன் உதடுகள் கொண்டழுத்தி நாக்கை ஆழச் செலுத்தி நடனமாடி வாயைத் துழாவுவதாக‌ கதைசொல்லியான‌ சேஹெரஸாட் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

ரோமானிய சாம்ராஜ்யத்தில் மூவகை முத்தம் மிகப்பிரபலமாக இருந்திருக்கிறது. முதல் வகை ஆஸ்குலம் - சாதாரணமாக கன்னத்தில் முத்தமிடுவது. இரண்டாம் வகை பேஸியம் - உதட்டில் ஒரு முறை ஒற்றி எடுப்பது. மூன்றாவது வகையான‌ சேவோலியம் தான் நாக்கு வரை நீளும் நீடிக்கும் அசல் ஃப்ரெஞ்ச் முத்தமாகும். இந்த மூன்றாம் வகை முத்தத்தை உற்றார் உறவினர் நண்பர்க‌ள் முன்னிலையில் கொடுத்துத் தான் ஆணும் பெண்ணும் திருமணம் செய்ததை அறிவிப்பது வழக்கம்.

கிபி 300ல் ரோமில் கணவர்கள் வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய பின் மனைவியரை உதட்டில் முத்தமிடுவதைப் பழக்கமாக வைத்திருந்தனர். அது காதலின் பொருட்டன்று; மது அருந்தியிருக்கின்றனரா என அறியும் நோக்கில்.

1590களில் ஷேக்ஸ்பியரின் ரோமியோ - ஜூலியட் நாடகம் மேடையேற்றப்பட்ட போது ரோமியோ ஓர் உதட்டு முத்தத்துடன் இறந்து போவதாக இருந்த காட்சி நிகழ்த்தப்பட்டது. 1763ல் முத்தத்தை XOXO என்று எழுதும் முறை அறிமுகமானது.

1784ல் இங்கிலாந்தில் நடந்த தேர்தல்களில் ஜார்ஜியானா என்ற அரச குடிப் பெண் தேர்தலில் போட்டியிட்ட நண்பருக்கு ஆதர’வாய்’ப் பிரச்சாரம் போய் ஆட்களுக்கு லஞ்ச‌ உதட்டு முத்தம் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டது - “kisses for votes” scandal!

உதட்டு முத்தத்திற்கு ஏன் ஃப்ரெஞ்ச் முத்தம் என்று பெயர் வந்தது? ஃப்ரான்ஸுடன் காலனியாதிக்கப் போட்டி உச்சத்தில் இருந்த சமயத்தில் இங்கிலாந்து நாட்டினர் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்தச் சொல்லை உருவாக்கினார்கள். ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரை உதட்டில் முத்தம் தருவது இங்கிதமற்ற செயல். அதனால் அதனை தங்கள் வைரிகளின் பெயரால் கிண்டலாக‌ ஃப்ரெஞ்ச் கிஸ் என்று சொன்னார்கள். 1923ல் இச்சொல் பரவலாய்ப் புழங்கத் தொடங்கியது.

முதல் உலகப் போரில் ஈடுபட்டு ஊர் திரும்பிய பிரிட்டிஷ் சிப்பாய்கள் தம் காதலியர், மனைவியரிடம் ஃப்ரெஞ்ச் முத்தத்தைப் பிரபலமாக்கி விட்டனர்.

1889ல் ஃப்ரெஞ்சுக்காரரான அகஸ்டி ரோடின் ஓர் ஆண் ஒரு பெண்ணை மடியில் இருத்தி உதட்டில் முத்தமிடுவதாய் அமைந்த புகழ்பெற்ற The Kiss சிற்பத்தை வடிவமைத்தார். இன்றும் அதன் மினியேச்சர்கள் உலகெங்கும் விற்கப்படுகின்றன.

1896ம் ஆண்டு The Kiss என்ற ப‌டத்தில் ஜான் ரைஸ் - மே இர்வின் இருவரிடையே முதல்‌ முத்தக்காட்சி இடம் பெற்றது. ந‌ம் கமல்ஹாசனுக்கெல்லாம் தாத்தா இவர். 1918 ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ‘Private Lindner’s Letters: Censored and uncensored’ என்ற புத்தகத்தில் ஃப்ரெஞ்ச் கிஸ் என்ற சொல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது.


1937ல் புகழ்பெற்ற ஸ்னோ வைட் என்ற டிஸ்னி கார்ட்டூன் கதையில் உறங்கும் இளவரசியை உதட்டில் முத்தமிட்டு இளவரசன் உயிர்த்தெழச் செய்யும் ‌ காட்சி பிரபலமானது. 1945 லைஃப் இதழில் ஒரு மாலுமி ஒரு செவிலியை தெருவில் முத்தமிடும் அட்டைப்படம் ‌ இடம்பெற்றது. தலைமுறைகள் தாண்டி இன்றும் ஓர் அபாரமான ரொமான்டிக் சித்திரமாக மக்கள் மனதில் அப்படம் உறைந்திருக்கிறது.

1946ல் ஆல்ஃப்டெட் ஹிட்ச்காக்கின் Notorious படத்தில் இன்க்ரிட் பெர்க்மன், கேரி க்ராண்ட் இடையேயான‌ முத்தம் படங்களில் ஆக செக்ஸியானதாகச் சொல்வர்! Don Juan (1926) படத்தில் ஜான் பேரிமோர், மேரி ஆஸ்டர் இடையே 127 முத்தங்கள் இடம்பெற்றன. 1961ன் Splendor in the Grass திரைப்படத்தில் நடாலி வுட், வாரன் பீட்டி முத்தம் ஹாலிவுட்டின் முதல் ஃப்ரெஞ்ச் கிஸ். 1963ன் ஆண்டி ஆண்டிஹோலின் Kiss படத்தில் மிக நீளமான முத்தக்காட்சி 54 நிமிடங்களுக்கு இடம்பெற்றது.

2002ல் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் போபே மாகுய்ர், க்ரிஸ்டென் டன்ஸ்ட்க்குத் தரும் மிகப் புகழ்பெற்ற‌ தலைகீழ் உதட்டு முத்தம் இடம்பெற்றது.

2003ல் நடந்த எம்டிவி ம்யூசிக் அவார்ட்ஸ் நிகழ்வில் பிரபல பாப் பாடகிகளான‌ மடோனாவும் ப்ரிட்னி ஸ்பியர்ஸும் மேடையிலேயே முத்தமிட்டுக் கொண்டனர். அவர்கள் வாயடைத்துக் கொண்டதை உலகமே உலகம் வாயடைத்துப் பார்த்தது!


2003ல் நடந்த ஒரு நிகழ்வில் ஹாலிவுட் நடிகை ஷாரன் ஸ்டோன் முத்தத்தை ஏலம் விட்டார். ஜானி ரிம் என்ற அமெரிக்கர் 50,000 டாலர்களுக்கு அந்த ஒற்றை முத்தத்தை ஏலம் எடுத்துப் பெற்றார். அந்த‌ப் பணம் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உணவு வசதி ஏற்பாடு செய்ய ஒரு தொண்டு நிறுவனத்திற்குத் தரப்பட்டது.

எம்டிவி மூவி ஆவார்ட்ஸில் ஆண்டுதோறும் திரைப்படங்களில் இடம்பெற்ற சிறந்த முத்தத்திற்கு விருது வழங்கி வருகிறார்கள். 2009லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக Twilight சீரிஸில் தவறாது இடம்பெறும் கிரிஸ்டென் ஸ்டீவர்ட் - ராபர்ட் பேட்டின்ஸன் முத்தக்காட்சிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றன.

1990ல் மின்னெஸோட்டா மறுமலர்ச்சி திருவிழாவில் ஆல்ஃப்ரெட் வுல்ஃப்ரம் 8001 பேரை எட்டு மணி நேரத்தில் முத்தமிட்டு சாதனை படைத்தார் - நிமிடத்திற்கு 16 உதடுகளுக்கு மேல்! 2012ல் காதலர் தினத்தின் போது தொடர்ந்து 50 மணி நேரம் 25நிமிடம் 1 வினாடி தாய்லாந்தைச் சேர்ந்த நொந்தவாட் சரோன்கேஸொர்ன்ஸின் மற்றும் தனகோர்ன் சித்தியம்தாங் என்ற ஜோடி முத்தமிட்டு சாதனை படைத்தது.

முத்தமிடுவதால் மன அழுத்தம் குறைந்து ஆண் பெண் உறவுகளில் திருப்தியும் நிம்மதியும் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடம்பின் கொலஸ்ட்ரால் குறைவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். முத்தமிடும் போது அதீத‌ அட்ரினலின் சுரப்பால் இதயம் வேகமாகத் துடிக்கிறது (நிமிடத்திற்கு 100 வரை). உடற்பயிற்சிக்கு சமானமாய் இது உடம்புக்கு நன்மை பயக்கிறது. அலெக்ஸாண்டர் டீவீஸ் என்பவர் முத்தமிடுவதால் நிமிட‌த்திற்கு 2 முதல் 3 கலோரி வரை எரிக்கலாம் என்கிறார்.

உதட்டு முத்தத்தால் மோனோந்யூக்ளியோசிஸ், ஹெர்ப்ஸ் சிம்ப்ளெக்ஸ் போன்ற எச்சிலின் வழி பரவும் வியாதிகள் ஏற்படுகின்றன. மிக அரிதாய் எயிட்ஸ் கூடப் பரவும்! 1997ல் அப்படிப்பட்ட‌ ஒரு கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட ஆண் பெண் இருவருக்கும் ஓர் ஈறு நோயினால் பாதிக்கப்பட்டிருக்க, உதட்டு முத்தத்தின் போது ரத்தத்தின் சேர்க்கை காரணமாய் ஹெச்ஐவி தொற்றிவிட்டது.

உதட்டு முத்தமிடுகையில் மூன்றில் இரண்டு பங்கினர் தம் தலையை வல‌து பக்கம் திருப்புவதாக‌ ஓனக் குண்டூர்கம் என்ற‌ ஜெர்மனிய‌ சைக்காலஜிஸ்ட் கண்டுபிடித்திருக்கிறார். இந்த குணம் கருவில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போதே நிர்ணயிக்கப்பட்டு விடுவதாகவும் சொல்கிறார் இவர்.

முத்தம் தொடர்பாய் மருத்துவ ஆராய்ச்சிகள் புரிந்த மார்ட்டின் மூரியர் என்பவர் உலக ஜனத்தொகையில் பாதிப்பேர் ஃப்ரெஞ்ச் முத்தம் இடுவதாகக் குறிப்பிடுகிறார்.

சில ஆப்ரிக்கப் பழங்குடியினர் உயிர் மூச்சு பரிமாறப்பட்டு விடும் என்ற பயத்தின் காரணமாக‌ உதட்டு முத்தமிட்டுக் கொள்வதில்லை. மொஸாம்பிக்குவைச் சேர்ந்த பிக்மிக்கள், தொங்காக்கள் உதட்டு முத்தம் சுகாதாரமானதல்ல என்றெண்ணுவதால் அதைத் தவிர்க்கின்றனர். மாஞ்சா என்ற ஆப்ரிக்க பழங்குடியினப் பெண்கள் மேல் உதட்டில் துளையிட்டு ஒரு மரவட்டும் இரு கொக்கிகளும் அணிவ‌து வழக்கம். அவர்களுடன் உதட்டு முத்தம் முயற்சிக்கும் ஆண் வாய் கொத்து பரோட்டாவாகி விடும் சாத்தியம் அதிகமுண்டு என்பதால் அவர்களும் அதை முயற்சிப்பதில்லை.

சீனர்கள் ஃப்ரெஞ்ச் முத்தம் ஆபாசமானது என எண்ணுகின்றனர். பொதுவிடத்தில் அதை நிகழ்த்துவது பெரும் அசிங்கமாகக் கருதப்படுகிறது. பாப்பா நியூ கினியா மக்கள் யாராவது உதட்டு முத்தமிடுவதைப் பார்த்து விட்டால் பெரும் சிரிப்புடன் குலவையிடுகின்றனர். பாலித்தீவு மக்கள் உதட்டு முத்தம் இட்டுக்கொள்வதில்லை; பதிலாக ஆணும் பெண்ணும் முகங்களை த‌ம் நெருக்கமாக வைத்துக் கொண்டு முகர்ந்து பார்த்து, தேக வெம்மையை உணர்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். தகித்தியர்கள் ஆண் பெண் மூக்கில் மூக்கு வைத்துத் தேய்த்துக் கொள்கின்றனர். எஸ்கிமோக்கள் மூக்கை உறுஞ்சிப் பார்த்து நாவுகளை ஒட்டிக் கொள்கின்றனர்.

உலகம் உள்ளளவும் உதட்டு முத்தம் ஏதேனும் வடிவில் இருந்து கொண்டிருக்கும்.

*

Stats சவீதா

•    ஒரு மனிதன் தன் ஆயுளில் 2 வாரங்களை முத்தமிடுவதில் கழிக்கிறான்.
•    உதட்டு முத்தத்தின் போது 100 கோடி பேக்டீரியாக்கள் பரிமாறப்படுகின்றன.
•    70% பேர் தம் முதல் முத்தத்தை 15 வயதில் அனுபவித்தாக சொல்கின்றனர்.
•    ஓர் அமெரிக்கப்பெண் 79 ஆண்களை திருமணத்திற்குமுன் முத்தமிடுகிறாள்.
•    39% பெண்கள் மிலிட்டரி உடை ஆண்களை முத்தமிட விரும்புகின்றனர்.

***

(2012ல் குங்குமம் இதழில் வெளியானது) 

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்