அன்பின் அனல்மூச்சு


ஓர் அழகான இளம் பெண் செல்ஃபோன் கேமெராவில் தான் வாழ விரும்பாததைத் தன் பெற்றோரிடம் பேசி ஒளிப்பதிவு செய்து விட்டுப் பாலிதீன் கவரை முகத்தைச் சுற்றிக் கொண்டு தற்கொலை செய்வதில் தொடங்குகிறது  Breathe சீரிஸ்.

இரண்டேகால் கழுதை வயதாகிறது. ஆனால் நான் வாழ்க்கையில் காணும் முதல் வெப்சீரிஸ் இது தான்.

பிடித்திருந்தது. எட்டு எபிஸோட்கள். சராசரியாய் ஒவ்வொன்றும் 40 நிமிடம். ஆக, ஐந்தரை மணி நேரம் வருகிறது. பெரும்பாலும் தொய்வில்லாமல் கதை நகர்கிறது. ஆனாலும் சீரிஸ் என்பது உண்மையில் சீரியல் தான் என்பதால் ஆங்காங்கே நாடகத்துக்கே உரிய மெல்லிய இழுவைக் காட்சிகள் உண்டு. அதை எல்லாம் கத்தரித்திருந்தால் மூன்றரை மணி நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான திரைப்படமாக எடுத்திருக்கலாம்.


மேஸ்கரனஸின் (மாதவன்) மகன் உயிர் பிழைக்க‌ அடுத்த சில மாதங்களில் அவனுக்கு நுரையீரல் மாற்று தேவை. அவன் உறுப்பு பெறுபவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறான். ஆனால் அவனது இரத்த வகை அரிது என்பதால் அவனுக்கு உறுப்பு கிடைக்கும் சாத்தியம் குறைவு. மேஸ்கரனஸ் உறுப்பு தானம் செய்பவர்களின் பட்டியலில் இருப்பவர்களைக் கொலை செய்யத் தீர்மானிக்கிறார். அதை ஒரு போலீஸ் துப்பறியத் தொடங்குகிறான். மேஸ்கரனஸ் மகனைக் காப்பாற்றினானா என்பது கதை. சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

மேஸ்கரனஸ் பாத்திரத்தின் ஆக்கம் மற்றும் அவனது செயல்களில் ஆங்காங்கே குழப்பங்கள் இருக்கின்றன. ஏன் தானம் கொடுப்பவர்களை மட்டும் கொல்ல வேண்டும்? தானம் பெறுபவர்களைக் கொன்றாலும் அவனது மகன் காத்திருப்புப் பட்டியலில் முன்னேறலாம். தவிர, ஒரு கட்டத்தில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அப்பாவிகளையும் கொல்ல / சிக்கலில் மாட்டி விட இறங்குகிறான். தன் கொலைகளுக்கே பெரும் குற்றவுணர்வு கொள்பவன், உறக்கத்தினிடையே பயந்து விழிப்பவன், தன் மனைவியின் கல்லறையில் பாவ மன்னிப்புக் கோருபவன், சிலுவையைக் கழற்றி வைத்து விட்டுக் கொலை செய்பவன் எப்படி அதை எல்லாம் செய்வான்? தன் மகனைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வான் என்ற ஒற்றை வரி விளக்கம் போதுமானதாய் இல்லை. அப்புறம் முதல் கொலையில் ஹெல்மெட்டை ஏன் மீண்டும் வண்டியில் கொண்டு போய் வைக்க வேண்டும்? ஷைனா கதாபாத்திரமும் அவள் காதலனும் கதைக்கு எவ்விதத்தில் உதவி எனப் புரியவில்லை. போலீஸ் மேஸ்கரனஸை அடைவதிலும் பெரிய சிக்கல் இல்லை.

இப்படியான சில்லறைச் சறுக்கல்கள் போக‌ திரைக்கதை பெரும்பாலும் நன்று. அதுவும் நான்காம் எபிஸோடின் முடிவில் கச்சிதமான திருப்பம். இண்டர்வெல் ப்ளாக் போல். நியூட்டனின் இரண்டாம் விதியை வைத்துக் கணக்கிட்டுக் கொலைக்குத் திட்டமிடும் சுவாரஸ்யமான கதாநாயகப் பாத்திரம். ஆனால் சில கொலை முயற்சிகள் ரொம்ப lab condition முயற்சிகள் (உதா: சுயஇதயவலி வரவழைத்தல், பார்வையற்றோர் பள்ளிக்கூடத்தில் பொம்மை செட்டப்) என்றாலும் ஒரு வெகுஜன ஆக்கம் என்ற அளவில் பொறுத்துப் போகலாம். நிறைய இடங்களில் வசனங்கள் அழகாக இருந்தன (உதா: சப்னா தன் காதலனுடன் பேசும் முதல் காட்சியின் வசனங்கள், மாதவன் தன் மகனுடன் பேசும் காட்சிகள்). இன்னொரு விஷயம் வசனங்கள் சில இடங்கள் தவிர்த்து இந்தி சீரிஸின் டப்பிங் என்ற உணர்வு எழவே இல்லை. மொழி அத்தனை இயல்பாக இருந்தது (உதா: பிரகாஷ் பாத்திரத்தின் வசனங்கள்). மொழிபெயர்த்தவருக்குப் பாராட்டு.

Comeback மாதவனின் சிறப்பான பங்களிப்பு வரிசையில் இறுதிச்சுற்று, விக்ரம் - வேதா வரிசையில் இதையும் சேர்க்கலாம். சொல்லப் போனால் இதுவும் விக்ரம் - வேதா போன்ற டாம் அண்ட் ஜெர்ரி கதை தான். ஆனால் இம்முறை மாதவன் டாம் அல்ல; ஜெர்ரி. குறிப்பாக அவர் குற்றவுணர்க்குள்ளாகும் காட்சிகள் எல்லாவற்றிலும் நல்ல நடிப்பு.

துப்பறியும் ஆளுக்கும் ஒரு விரிவான‌ பின்புலம் இருப்பதும் அது கதைக்குத் தொடர்புடையதாய் இருப்பதும் பொதுவாய் ஒரு கொலைக்கதையை மனதுக்கு மிகவும் நெருக்கமானதாய் ஆக்கும். Talaash படத்தை உதாரணமாய்ச் சொல்லலாம். விக்ரம் - வேதாவும் அப்படித்தான். அம்பையின் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு சிறுகதைத் தொகுப்பிலும் அபிலாஷின் கதை முடிவிற்கு வந்து விட்டீர்கள் நாவலும் இத்தகைய விஷயத்தைக் கொண்டிருப்பவை. Breathe சீரிஸும் அப்படி இன்ஸ்பெக்டருக்கு ஒரு வலுவான பின்புலத்தைக் கொடுக்கிறது. அவ்வகையில் இன்ஸ்பெக்டர் கபீர் சாவாந்தாக வரும் அமித் சத் ஒரு குடிகாரனாகவும் ஒரு தந்தையாகவும் ஒரு கணவனாகவும் ஒரு போலீஸ்காரனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் சப்னா பப்பியும் நளினமான நடிப்பு. இன்ஸ்பெக்டரின் கீழ் பணிபுரியும், 'மெஷின்' வேலை செய்யாத பிரகாஷாக வரும் ரிஷிகேஷ் ஜோஷியும் ரசிக்கத்தகுந்த நடிப்பு.

கதையின் பதற்றத்தைப் பிரதிபலிக்கும் டைட்டில் இசை அற்புதம். மற்ற இடங்களிலும் பின்னணி இசை பரவாயில்லை. Indoor காட்சிகள் தவிர்த்து மற்ற யாவும் நேர்த்தியான ஒளிப்பதிவு. இயக்குநர் மயங்க் ஷர்மாவுக்கு இது முதல் முயற்சி எனத் தெரிகிறது. நல்ல திரைப்படமெடுக்கும் திறமை இருக்கிறது. விரைவில் நிறைவேறட்டும்.

அமேசான் ப்ரைமில் கிடைக்கிறது. தினம் ஒன்று அல்லது இரண்டு வீதம் கூடப் பார்க்கலாம்.

*

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

பொச்சு