டிஜிட்டல் நிர்வாணம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நூறாம் நாளில் பொதுமக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச்சூடு எனும் கொடூர அரச பயங்கரவாதத்தை நடத்திப் பச்சைப் படுகொலைகள் செய்த பின் ஐந்து நாட்களுக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையச் சேவையை ரத்து செய்துள்ளனர். அதாவது வாட்ஸாப், ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களையும் கூகுள் வழியே இதர செய்தி இணையதளங்களையும் பொதுமக்கள் பார்க்க முடியாது.
வதந்திகள் பரப்புவதைத் தடுக்க என அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மையில் செய்திகள் பரவுவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு என்பது தெளிவு. முன்பு இம்மாதிரி சூழல்களில் கேபிள் தொலைக்காட்சிகளைத்தான் ப்ளாக்-அவுட் செய்வார்கள். இப்போது இணையத்தையும் சேர்த்து. ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் வீச்சும் அதன் மீதான மக்களின் சார்பும் கடந்த பத்தாண்டில் இந்தியாவில் அத்தனை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது. அதன் இன்னொரு முகத்தை இரும்புத்திரை திரைப்படம் பேசுகிறது.
படம் இப்படித் துவங்குகிறது: ரிச்சி ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு செல்பேசி ஒட்டுக்கேட்டல் மூலம் ஓர் ஐடி இளைஞனின் வங்கிக் கணக்குக்குப் பெருந்தொகை வருவதை அறிந்து கொண்டு, பணம் வந்ததும் அவன் வங்கிக் கணக்கை ஹேக் (Hack) செய்து, அதைத் தம் கணக்குக்கு மாற்றி அந்தப் பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர். இந்தச் சம்பவங்களின் விரிவாக்கம் அல்லது விளக்கம் தான் மீதித் திரைப்படம்.
இரும்புத் திரை படத்தில் செல்ஃபோன் மற்றும் இணையப் பயன்பாடு தொடர்புடைய மூன்று விஷயங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள்: 1) சமூக வலைதளங்களில் நம்மைப் பற்றிய அதீதத் தகவல்கள் பகிர்வது (உதாரணமாய் நம் குடும்ப உறுப்பினர்கள் யார் யார், அவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள், எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறோம், நமது உறவுகளுக்குள் பிணக்கு அல்லது நெருக்கம், கார், வீடு உள்ளிட்ட நம் செல்வச் செழிப்பு, நம் நண்பர்கள், நம் நிலைப்பாடுகள் என நிறைய). 2) தேவையற்றவர்களிடம் செல்பேசி, மின்னஞ்சல், வங்கிக் கணக்கு போன்ற தகவல்கள் பகிர்வது (ஏதாவது பரிசு என யாராவது தொலைபேசினால் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் தகவல்களை எல்லாவற்றையும் பகிர்வோர் உண்டு). 3) செல்ஃபோனில் ஆப் நிறுவுகையில் தரும் அனுமதிகள் (அந்த ஆப் என்னென்ன விஷயங்களை உங்களின் செல்ஃபோனில் செய்யலாம், உதாரணமாய், உங்கள் எஸ்எம்எஸ்ஸை பார்க்கலாமா, அனுப்பவும் செய்யலாமா போன்றவை). இந்த எச்சரிக்கைகள் யாவும் நியாயமானதே. இவற்றில் பொது மக்கள் கவனமாக இருத்தல் அவசியம் தான். அன்றேல் அவர்கள் தகவல்கள் திருடு போகக்கூடும். திருடிய தகவல்கள் திருட்டுக்குத் துணை போகும்.
*
படம் இன்னொரு விஷயத்தையும் சாடுகிறது. ஆதார் (Aadhaar) அட்டை என்ற பெயரில் குடிமக்களின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த நாள், செல்பேசி எண், மின்னஞ்சல், வங்கிக் கணக்குகள், எரிவாயுக் கணக்கு, கைரேகை, கருவிழி ரேகை உள்ளிட்ட பல அதிமுக்கியமான தனிமனிதத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் அரசாங்கம் அதை எத்தனை தூரம் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
அரசில் உயர்பதவி வகிக்கும் கேபினெட் அமைச்சர் மாதிரியான ஒருவர் அவற்றை ஏதேனும் நாசகார கும்பலுக்கு விற்கும் சாத்தியமும் இருக்கிறது என்கிறது படம்.
இது அடிப்படையற்ற சந்தேகம் ஒன்றும் கிடையாது. சில மாதங்கள் முன் மாநில அரசு நடத்தும் இண்டேன் (Indane) என்ற எரிவாயு வழங்கல் நிறுவனத்தின் API-களைப் (Application Programming Interface - தம் இணையச் சேவையைப் பயன்படுத்தி மென்பொருள் உருவாக்குனர்கள் செயலிகள் – app - உருவாக்கும் முகமாய் ஒவ்வொரு நிறுவனமும் அளித்திருக்கும் வசதி இது) பயன்படுத்தி இந்தியாவின் எந்தக் குடிமகனுடைய ஆதார் தகவல்களையும் எடுக்க முடிந்தது. அதாவது மேற்குறிப்பிட்ட எல்லாத் தரவுகளையும்.
எந்தச் சான்றளிப்பும் (Authentication) இன்றி (உதாரணமாய் கடவுச்சொல் அல்லது ஓடிபி) குறியாக்கம் செய்யப்பட்ட (encoded) INDAADHAARSECURESTATUS என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு (Hardcoded Access Token) எவருடைய ஆதார் தகவலையும் எடுக்க முடிந்தது என்பதை தில்லியைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சியாளர் நிரூபித்திருக்கிறார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுவாய் API பயன்படுத்த Rate Limiting கட்டுப்பாடு வைத்திருப்பர். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு செயலியிலிருந்து இத்தனை முறை தான் அழைக்க வேண்டும் என. இதில் அதுவும் கூட இல்லை. எந்தக் கேள்வியும் இன்றி எந்த 12 இலக்க எண்ணை வழங்கினாலும் அப்படி ஓர் ஆதார் எண் இருந்தால் அதன் சம்மந்தப்பட்ட தகவல்களைக் கொட்டி இருக்கிறது.
அதுவும் ஆதாரிலிருந்து ஒருமுறை மட்டும் பெறப்பட்ட பழைய தகவல்களாக (Static Data) இல்லாமல், ஆதாரில் தகவல்கள் மாறும் போதெல்லாம் (உதாரணம்: முகவரி, புதிய வங்கிக் கணக்குகள்) இதுவும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இண்டேனுக்கு இத்தகவல்களை ஆதாரே நேரடியாய் வழங்குகிறதா என்பது பற்றித் தெரியவில்லை.
இது போல் மேலும் சில சம்பவங்களும் ஆதார் விஷயத்தில் நடந்துள்ளன. ஆந்திர பிரதேச வீட்டு வசதி வாரியத்தின் (Andhra Pradesh Housing Corporation) வலைதளத்தில் சில மாதங்கள் முன் அதன் 1,34,000 பயனர்களின் சாதி, வங்கிக் கணக்கு, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்கள் பொதுவெளியில் பதிப்பிக்கப்பட்டதை என்பதை ஒரு சைபர்செக்யூரிட்டி ஆர்வலர் கண்டுபிடித்தார். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், தரவிறக்கலாம், எதற்கும் பயன்படுத்தலாம். இண்டேன் விஷயத்திலாவது API-கள் கொண்டு கணிணி நிரல் எழுதும் திராணி கொண்டோர் மட்டுமே தரவுகளை எடுக்க முடியும். ஆனால் இதிலோ இணையம் பயன்படுத்தத் தெரிந்த எவரும் எடுக்கலாம்.
இம்மாதிரி சிலபல சம்பவங்ளுக்குப் பிறகு தான் ஆதார் தொடர்பாய் தன்னிடம் வந்த பல்வேறு மனுக்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு உச்சநீதிமன்றம் ஆதார் அரசியலமைப்புச் சட்டப்படி சரியானதா என்ற கேள்வியை எழுப்பியது. வங்கிக் கணக்குகளிலும், செல்பேசிக் கணக்குகளிலும் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்ற அரசின் முடிவை தற்காலிகமாய் நிராகரித்தது. தகவல்களின் பத்திரத்தன்மையைச் சந்தேகித்தது. ஆதார் எண் சரி பார்க்கும் படலத்தில் கைரேகை எடுப்பது தவறான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
ஆனால் ஆதாரை நிர்வகிக்கும் UIDAI (Unique Identification Authority of India) இதை மறுத்தது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல், “ஆதார் தகவல்கள் 13 அடி உயரமும் 5 அடி அடர்த்தியும் கொண்ட சுவற்றுக்குப் பின்னால் பாதுகாப்பாக இருக்கிறது” என்று சொன்னது பெரும் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்டது. (ஆனால் அவர் சொன்னதன் பொருள், ஆதார் டேட்டாபேஸ் எங்கோ ஒரு நாட்டிலிருக்கும் சர்வரில் இல்லை; அது இங்கே இந்தியாவில் நம் கட்டுப்பாட்டில், போதிய புறப்பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கிறது என்பது தான்.) மீறிக் கேள்வி எழுப்பினால் அதற்கு அளிக்கப்படும் முழுமையான பதிலே அதன் பாதுக்காப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று சொல்கிறார் UIDAIயின் தலைமை நிர்வாகி அஜய் பூஷண் பாண்டே (Financial Express, May 20, 2018).
தனியார் நிறுவனங்கள் ஆதாரை கையாளும் நடைமுறையே ஆச்சமூட்டுவதாக, கவலைக்குரியதாக இருக்கிறது. ஏர்டெல் உள்ளிட்ட செல்பேசி சேவையாளர்கள், ஹெச்டிஎஃப்சி போன்ற வங்கிகள், பேடிஎம் மாதிரியான ஆன்லைன் வேலட் நிறுவனங்கள் என எல்லோருமே நம் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நிதி நிறுவனங்கள் KYC (Know Your Customer) என்ற நுகர்வோரை ஐயந்திரிபற அறியும் முறைமை இருந்து வருகிறது தான். ஆனால் அதில் நம் அடையாள அட்டை அல்லது இருப்பிடச் சான்றின் ஒளிநகல் பெறுவதோடு நிற்கிறது. ஆனால் ஆதார் இணைப்பு அத்தனை நேரடியானது அல்ல. முதலில் நம்மிடம் ஆதார் எண்ணைக் கேட்டுப் பெறுகிறார்கள். பிறகு அதை கணிணியில் உள்ளிட்டு ஓர் இயந்திரத்தில் நம் கைரேகையைப் பதியச் சொல்கிறார்கள். பிறகு எண்ணும் ரேகையும் சரிபார்க்கப்பட்டு இணைப்பு நடக்கிறது. உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது இந்த முறையைத் தான்.
UIDAI என்ன சொல்கிறது எனில் இதில் கைரேகை அந்தத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்படுவதில்லை. இயந்திரம் கைரேகை பெற்றவுடன் அது ஆதார் சேவையுடன் நேரடியாகச் சரி பார்க்கப்பட்டு பொருந்துகிறது அல்லது பொருந்தவில்லை என்ற தகவல் மட்டும் தான் தனியார் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்கிறார்கள். இது உண்மை என்று கொண்டால் ஓரளவு இம்முறை பாதுகாப்பானது தான். ஆனால் இதில் விடையற்ற கேள்வி அந்த இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்துத் தான்.
நாம் நமது கைரேகையை அளிப்பது ஓர் அதிகாரப்பூர்வ அரசு அலுவலகத்தில் அல்ல. அந்தந்த நிறுவனங்களின் மக்கள் தொடர்புக் கிளைகளில். சில இடங்களில் ப்ளாஸ்டிக் குடைகள் போட்டு சாலையோரமாய்க் கூட அமர்ந்திருக்கிறார்கள். அந்த இயந்திரம் UIDAI சொல்லும் வேலையை மட்டும்தான் செய்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அவர்கள் வைத்திருக்கும் இயந்திரம் அரசு வழங்கியதா? அப்படியே இருந்தாலும் அதில் இன்னொருவர் தம் கணிணி அறிவைப் பயன்படுத்தி - ஒரு தொழில்நுட்ப இடைச்செருகல் மூலம் - மக்களிடமிருந்து பெறும் கைரேகைகளை எல்லாம் பிரதி எடுத்து வைத்துக் கொள்ள முடியாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
இன்று இம்மாதிரி ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் இருக்கக்கூடும். ஆதார் பயன்பாடு பரவலாகையில் இது லட்சக்கணக்கில் உயரும். UIDAI ஒவ்வொரு இடத்திலும் போய் அதன் பயன்பாட்டின் நேர்மைத்தன்மையை உறுதி செய்தல் சாத்தியமே இல்லை.
தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய சந்தேகங்கள் எழுப்படும் காலத்தில் இந்த இயந்திரங்களை எப்படி நம்புவது?
என் அலுவலகத்தில் ஒரு தனியார் வங்கி ஸ்டால் போட்டிருக்கிறது. ஆதாரை அழகான ப்ளாஸ்டிக் அட்டைகளில் அச்சிட்டுக் கொடுக்கிறார்கள். அதற்கு ஆதார் எண்ணும் கை ரேகையும் வழங்க வேண்டும். இலவசமாகச் செய்கிறார்கள். ஆனால் அதனால் அந்த வங்கிக்கு என்ன லாபம்? ஏன் வலிய வந்து சேவை செய்கிறார்கள்?
இப்படி ஒவ்வொன்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டி இருக்கிறது. (இரும்புத்திரை படத்தில் ஜெராக்ஸ் கடையில் ஆவணங்கள் ஒளிநகல் செய்கையில் தானொரு காப்பி எடுத்து வைத்துக் கொண்டு அவற்றைத் தலா ஒரு ரூபாய்க்கு கால் செண்டர்களுக்கு விற்றுச் சம்பாதிக்கும் காட்சியை இதோடு இணைத்துப் பார்க்கலாம்.)
*
இன்னொருபுறம் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்க ளில் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கருத்துக்களை கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா போன்ற சில தரவு அலசல் (Data Analytics) நிறுவனங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அமெரிக்காவில் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு இது உதவியிருப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்திருக்கிறது. சுமார் 8.7 கோடி பேரின் தகவல்கள் (எந்தப் பக்கங்களை லைக் செய்திருக்கிறார்கள், வாழுமிடம், இன்ன பிற ப்ரொஃபைல் தகவல்கள்) ஃபேஸ்புக்கிலிருந்து எடுக்கப்பட்டு அவர்களின் மனநிலை அலசப்பட்டு என்ன மாதிரி விளம்பரம் அல்லது பிரச்சாரம் செய்தால் அவர்களை ஈர்க்கலாம் / மாற்றலாம் என சம்மந்தப்பட்ட கட்சிக்கு / நிறுவனத்துக்கு ஆலோசனை தருகிறார்கள். இந்தியாவில் கூட கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா நிறுவனம் 2010 பீஹார் சட்டமன்றத் தேர்தலில் 5.6 லட்சம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களின் அடிப்படையில் இத்தகு ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி இருக்கிறது.
இது அம்பலமான பின் ஃபேஸ்புக் இதற்காகத் தன் பயனர்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறது. அதாவது கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விதிமுறைகளை மீறி இப்படியான தகவல் சேகரிப்பை மேற்கொண்டிருக்கிறது எனச் சொல்லி அப்படியான நிறுவனங்களைத் தன் தரப்பிலிருந்து தகவல்கள் எடுக்கத் தடை செய்திருக்கிறது.
நீங்கள் தீவிர இணையப் பயனர் எனில் சமீப காலங்களில் இணையத்தில் உங்களுக்கு நேரும் சில ஆச்சரியமான விஷயங்களைக் கவனித்திருக்கலாம். அமேஸானிலோ, கூகுளிலோ தேடிய நீங்கள் ஒரு பொருளின் விளம்பரம் ஃபேஸ்புக்கில் உங்களுக்குத் தொடர்ச்சியாய்க் காட்டப்படும். நீங்கள் ஜிமெயிலில் தனிப்பட்டு ஒருவருடன் பேசிய ஒரு விஷயத்தின் அடிப்படையில் தொடர்புடைய பொருள் விளம்பரமாய் உங்கள் முன் வந்து நிற்கும். நாம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். இன்று கூகுளுக்குத் தெரியாமல் நீங்கள் எதுவுமே செய்ய முடியாது என்று கூடச் சொல்லி விடலாம்.
நாம் அறியாமலேயே நம் தகவல் வியாபாரத்துக்கும் அரசியலுக்கும் பயன்படுகிறது. அதன் மூலம் நமது ப்ரக்ஞையின்றியே நம் மனதை ஈர்த்து பொருளை விற்கிறார்கள்; நம் மனதைக் குழப்பி நம் ஓட்டையே மாற்றச் செய்கிறார்கள். அதன் அடுத்தபடியாய் அப்படியான தகவல்கள் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்ளையடிக்கவே முடியும் என்ற ஒரு சாத்தியத்தைத் தான் இரும்புத் திரை திரைப்படம் முன்வைக்கிறது.
*
படத்தின் ஆதாரக் கதைக்கு வருவோம். இரும்புத் திரையில் நடைபெறும் கொள்ளை யாவும் ஹேக்கிங் வழியே தான் நடக்கிறது. ஒருவரது செல்ஃபோனை அல்லது வங்கிக் கணக்கைத் தற்காலிகமாய்க் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து அதன் மூலம் தம் கொள்ளையை நடத்துகிறார்கள். அதாவது படம் பேசும் அரசியலுக்கும் படத்தின் கதைக்கும் நேரடித் தொடர்பில்லை. மெர்சல் ஜிஎஸ்டி பற்றிப் பேசியது போல் தான். ஆனால் இதில் திறமையாய் இரண்டையும் கலந்து நம்மை நம்ப வைக்கிறார்கள்.
என்னவென விளங்கிக் கொள்ள முயல்வோம். படத்தில் நுட்பக் கொள்ளையர்களால் பாதிக்கப்படுபவர்கள் அந்தக் கும்பலிடம் மாட்டுவது மேற்சொன்ன சமூக வலைதளத் தகவல் பகிர்வுகளாலோ ஆதார் தகவல் கசிவினாலோ அல்ல. (அல்லது அவை ஓர் ஆரம்பப் புள்ளி மட்டுமே!) மற்றபடி, கஷ்டத்தினால் / பேராசையினால் ஃபோர்ஜரி செய்து வங்கிக் கடன் பெறும் சாதாரணர்களின் செல்பேசிகளை ஹேக் செய்வதன் மூலமும், அவர்கள் காசோலையில் போடும் கையெழுத்தைப் பயன்படுத்தி அவர்கள் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றுவதன் மூலமுமே கொள்ளை அடிக்கிறார்கள்.
இக்கதையில் ஆதார் லீக், ஒரு ரூபாய்க்கு ஜெராக்ஸ் கடைக்காரர் தகவல் விற்பது, கால் சென்டர்களிலிருந்து தகவல் கசிவது, ஃபேஸ்புக் பகிர்வுகளில் கிடைக்கும் தனிப்பட்ட தகவல்கள் என்றெல்லாம் இன்றைய நாட்டு நடப்புக்களை ஊடுபாவாய்ச் சொருகி “மானே தேனே” போட்டபடி அரசியல் பேசி இருக்கிறார்கள். மற்றபடி அவற்றுக்கும் படத்தின் மைய இழைக்கும் நேரடித் தொடர்பில்லை. ஒரு வகையில் கொஞ்சம் அளவுக்கு மீறி பயமுறுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தரம் மற்றும் சுவாரஸ்யத்தின் அடிப்படையில் பார்த்தால் படம் சுமாருக்கும் மேல்.
சமந்தா வாயைத் திறந்து உதட்டில் செந்நிற ஜிபிஎஸ் சிப் காட்டும் போது நிஜமாகவே நிமர்ந்து உட்கார்கிறோம். ரயில் நிலையச் செல்ஃபியில் சிவப்புக்குடையும் கையுமாய் விஷால் பதிவாவது இன்னொன்று. இது போல் சில காட்சிகள் ரசிக்கும் படி இருந்தது.
சப்வே சண்டைக்காட்சியும் நன்று. (மவுண்ட் ரோடில் பழைய சாந்தி தியேட்டர் எதிரே இருக்கும் சப்வே தானே அது! ரிச்சி ஸ்ட்ரீட்டும் லொகேஷன் பொருந்தி வருகிறது.)
தமிழ்ப் படங்களில் ஹேக்கர்களை கடவுள் போல் காட்டுகிறார்கள். அவர்களால் உலகில் எங்கிருக்கும் சிசிடிவி கேமெரா ஃபுட்டேஜையும் எடுக்க முடியும். எந்தத் தொலைபேசியையும் ஓட்டுக் கேட்க முடியும். எந்தக் கணிப்பொறியையும் ஹேக் செய்ய முடியும். எங்கு வேண்டுமானாலும் ஜிபிஎஸ் சிப் வைக்க முடியும். எந்த வங்கிக் கணக்கிலும் கை வைக்க முடியும். இதிலும் வில்லனாய் வரும் அர்ஜுன் அப்படித்தான். போரடிக்கிறது. திரைக்கதை அதனால் தான் சுமாராய் இருக்கிறது.
இந்திய ராணுவத்தில் மேஜர் லெவலில் இருக்கும் ஒருவர் ஆறு லட்சம் ரூபாய்க்கு இவ்வளவு அல்லல்பட வேண்டுமா! அதே சமயம் இன்னொரு இடத்தில் கமிஷனரோ டிஎஸ்பியோ அவரின் மாதச் சம்பளம் இரண்டே கால் லட்சம் ரூபாய் என்கிறார்கள்!
வசனங்கள் சில நன்று (குறிப்பாய் படம் பேச முனைந்திருக்கும் சமூக அக்கறை கொண்ட விஷயங்களான ஆதார் சாடல் முதலியவை). பாடல்களைக் கவனிக்க முடியவில்லை. அர்ஜுனுக்கான பின்னணி இசை சில இடங்களில் பிரமாதம். காதல் காட்சிகளில் யுவனின் இசையில் கொஞ்சம் இளையாராஜா எட்டிப் பார்க்கிறார்.
அர்ஜுனிடம் ‘தனி ஒருவன்’ அரவிந்த்சாமி ரோல் மாதிரி என்று சொல்லி அழைத்து வந்திருப்பார்கள் போல! அது ஆர்யா நடிக்க மறுத்த பாத்திரம் என்று சொல்கிறார்கள். அரவிந்த்சாமி அளவுக்கு இல்லை அர்ஜுன். ஆர்யா நடிக்கவில்லை என்பது ஆறுதல்.
அரசு மனநல மருத்துவர் சமந்தாவிடம் விஷால் சான்றிதழுக்காகப் போகும் ஆரம்பக் காட்சிகள் மாயவன் படத்தை நினைவூட்டின. சமந்தா ரசிக்கும்படி (நடித்தும்) உள்ளார். (ரதி தேவி! என்னவொரு பெயர்!) நெடுநாள் கழித்து டெல்லி கணேஷும் அபார நடிப்பு.
படம் வெளியான போது சங்கிகள் கதறியது தான் இப்படத்துக்கான முக்கியமான ஈர்ப்பு. டிஜிட்டல் இந்தியா என்பதைப் படம் காறி உமிழ்கிறது. அதென்னவோ பாஜகவை, மோடியை யார் அடித்தாலும் காணக் கொண்டாட்டமாய் இருக்கிறது. (அர்ஜுன் குடும்பமற்றவர். பிறகேன் இத்தனை கொள்ளை என அவரே கேட்டுக் கொண்டு அவரே சொல்லும் பதில்: “ஏன்னா என்னால முடியும்.” அந்தக் கணத்தில் அந்தப் பாத்திரம் மோடியை விட ஜெயலலிதாவைத் தான் நினைவூட்டியது!)
இம்மாதிரியான விஷயங்களைத் தன் முதல் படத்திலேயே தைரியமாகப் பேசி இருப்பதற்காகவே அறிமுக இயக்குநர் மித்ரனை வாழ்த்தி வரவேற்க வேண்டும். உணர்ந்து ஆதரித்து இதில் இறங்கித் தயாரித்து நடித்த விஷாலுக்கும் பாராட்டு.
மனுஷ்ய புத்திரன் அவர்கள் இரும்புத் திரை படம் பற்றிக் கட்டுரை எழுதக் கேட்ட போது, நான் தயங்கினேன். உயிர்மை மாதிரி ஓர் இலக்கியப் பத்திரிக்கைக்கு ஒரு வெகுஜன சினிமா பற்றி எழுதுவதா என்ற யோசனை தான் காரணம். அதற்கு அவர் சொன்னார், “எல்லாப் படமுமே வெகுஜனப் படம் தான்.” யோசித்துப் பார்த்தால் அது சரியென்றே தோன்றுகிறது. கலைஞர் திரைக்கதை எழுதிய படங்களை வெகுஜனப் படங்கள் என ஒதுக்க முடியுமா என்ன! இரும்புத் திரையும் அப்படியான ஒன்று தான்!
***
(உயிர்மை ஜுன் 2018 இதழில் வெளியானது)
Comments
One line beauty... superb punch
Tells everything