மீனம்மாவின் அணங்கு


எனது 'அணங்கு' சிறுகதைக்கு மீனம்மா கயல் ஒரு மாற்று முடிவு எழுதியிருந்தார்:

தேர்வறை நோக்கி நடந்தவள் சட்டெனத் திரும்பிச்சென்று, கேலிசெய்து சிரித்தவர்கள் கண்களைப் பார்த்தாள்.. அலட்சியப் புன்னகை அரும்ப சுடிதார் டாப்சினை கழட்டினாள்.. அவள் பெருத்த முலைகள் கனம் தாளாது தாழ்ந்திருந்தன.. அவளுக்கு அங்கு வெட்கங்கள் இல்லை யாரையோ பழிவாங்குகிறோம் என்றுபட்டது.. அது ஒரு வெறி, மருத்துவப் படிப்பின் மீதான வெறி.. தன்னை அலைக்கழிப்பவர்கள் மீதான வெறி.. தன்னை ஆய்வு செய்தவர்களை திரும்பிப் பார்த்தாள் அவர்களிடம் ஒரு குற்றஉணர்ச்சியை கண்டாள், மிக மிக ஆழமான குரலில் எல்லாருக்குமாக ஒன்றைச் சொல்லியபடி சுடிதாரை மீண்டும் அணிந்தாள்., ஒரு தேவதைப் போல் தேர்வறை நோக்கி நடந்தாள்.

அவள் சொன்னது ஒரு கேள்வி, ஒரு திறப்பு,

''இந்த உடலைப் பற்றி படிக்கும் ஆசையில்தான் நான் நீங்கள் நாம் பரிக்ஷா தேர்வு எழுதவே வந்திருக்கிறோம் அல்லவா?!''


இந்த முடிவு - நடை தவிர‌ - எனக்குப் பிடித்திருந்தது. அணங்கு கதையின் நோக்கமானது நங்கேலியின் வரலாற்றை எடுத்துக் கொண்டு சமகால மீட்டுருவாக்கம் செய்வ‌தாக மட்டும் இருந்திருந்தால் அவரது முடிவு தான் என்னுடையதை விட இன்றைய தேதிக்குக் கச்சிதம். அதாவது போன முறை ந‌ங்கேலி தன் முலையை மறைக்க முடியாத அவமானத்தில் தான் செத்துப் போனாள். அவளது செயல் முலையை மறைப்பது தான் கௌரவம், அதை மற்றவர் பார்ப்பது அவமானம் என்ற அன்றைய காலத்து எண்ணத்திலிருந்து எழுந்தது. ஆனால் இம்முறை அதே போன்றதொரு சூழலில் அந்தக் கருத்தாக்கத்தை மறுதலித்து, அது ஒரு விஷயமே இல்லை என்று நங்கேலி அலட்சியமாய் நடப்பதே நவீன முன்னெடுப்பாக, சமகாலப் பொருத்தப்பாடுடையதாக‌ இருக்க முடியும். அவ்வகையில் கதைக்கு மீனம்மா ஈந்திருக்கும் முடிவு அங்கீகாரத்துக்குரியது.

சிலப்பதிகாரக் கண்ணகி தன் இடமுலை திருகியெறிந்து தான் மதுரையை எரித்தாள். அணங்கு அவளையே குறிக்கிறது. சேர்த்தலை, திருவிதாங்கூர், நங்கேலி, முலக்கரம், வாழையிலை என்று இந்தக் கதையில் ஆங்காங்கே வருவதெல்லாம் முலையரிதலை நோக்கிய நகர்வுகள் தாம். அந்த வகையில் மீனம்மா தந்திருக்கும் முடிவானது நங்கேலியை அறிந்த ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பாராதது; அதனாலேயே என்னுடையதை விடவும் சுவாரஸ்யமானது. தவிர, சமூகச் சிக்கல்களை ஒருவர் (அதுவும் பெண்) நேர்மறையாக அணுக வேண்டும் என்ற அடிப்படையிலும் அவமானத்தில் சாவதை விட அதைக் கடந்து வருவது அல்லது எதிர்கொள்வது மேலானது என்ற வகையிலும் மீனம்மாவின் முடிவு கூடுதல் பலம் பெறுகிறது.

ஆனால் அணங்கு கதை நங்கேலி பற்றியது மட்டுமல்ல. அது ஒரு குறியீடு மட்டுமே. பிரதான நரம்பு பரிக்ஷா என்ற கொடுங்கோன்மையை விமர்சிக்கிறது. கதையின் மைய நோக்கு பரிக்ஷா எளிய மனிதர்களுக்கு பலவிதத் தொந்தரவுகளை அளிக்கிறது; இளம் மனங்களின் கனவுகளை உடைக்கிறது; சில சமயம் உயிரிழப்பை கூட அருள்கிறது என்பதை எல்லாம் சொல்வது தான். அவ்வகையில் அணங்கு ஒரு பிரச்சாரக் கதை எனலாம். (தனிப்பட்டு புனைவிலக்கிய‌த்தில் பிரச்சார நெடி வ‌ருவதை விரும்பாதவன் நான். ஆனால் இம்முறை இப்படி.) அதனால் தான் இந்தக் கதையில் புனைவைத் தாண்டி ஒரு செய்தித்தன்மை படிந்திருக்கிறது. கதையின் அந்த மனநிலைக்கு (mood) மீனம்மாவின் முடிவை வைத்தால் பரிக்ஷாவை நாம் சவாலாக (நேர்மறையாக) எடுத்துக் கொண்டு, அதை வென்று, அதன் இருப்பை அங்கீகரிப்பதான‌ தொனி வந்து விடுகிறது. கதையின் உத்தேசம் அதுவல்ல என்பதால் அம்முடிவு இந்தக் கதைக்கு உவப்பானதல்ல எனக் கருதுகிறேன்.

சுருங்கச் சொன்னால் கதையின் கலைக்கு, முற்போக்குத்தன்மைக்கு மீனம்மாவுடைய முடிவு பொருத்தமான‌து, ஆனால் அதன் பேசுபொருளுக்கு, அது குறித்த பிரச்சாரத்துக்கு வேறு ஏதேனும் முடிவு தேவை. அதில் ஒன்று என்னுடையது.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்