நீலப்படம்


Blue Planet II - குழந்தைகளுக்காகப் போனது. அவர்களை விட எனக்குப் பிடித்திருந்தது. இது உண்மையில் ஒரு தொலைக்காட்சித் தொடர். ஆவணப்படம். ஏழு பகுதிகள் கொண்டது. பிபிசி எர்த் தயாரிப்பு. அதன் முதலிரு பாகங்களை மட்டும் இங்கே திரையரங்குகளில் பிவிஆர்காரர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். One Ocean மற்றும் The Deep ஆகிய முதலிரு பகுதிகள் மட்டும் இதில் இருக்கிறது. மற்றவை பிற்பாடு தனித் திரைப்படங்களாக வரக்கூடும்.


One Ocean பகுதியில் வெப்ப மண்டச் சமுத்திரங்களிலிருந்து துருவக் கடல்கள் வரை வெவ்வேறு மீன்கள் அல்லது கடல்வாழ் உயிரினங்களின் பழக்க வழக்கங்கள் குறித்து ஒவ்வொன்றாகச் சொல்கிறார்கள். நமக்கு நன்கு தெரிந்த போத்தல் மூக்கு டால்ஃபின்கள் முதல் நமக்குப் புதிதான பாதி வாழ்வில் ஆணாய் மாறி விடும் பெண் மீன் வரை காட்டுகிறார்கள். உணவு, வேட்டை, கலவி இன்னும் சில வினோதப் பழக்கங்கள் என அவற்றின் வாழ்வு நம்முன் நீலமாய் விரிகிறது. அற்புதமான ஒளிப்பதிவும் ஒரு கதைசொல்லல் போன்ற அமைப்பும் இப்பகுதியை சுவாரஸ்யம் ஆக்குகிறது. நீரை விட்டு வெளியே துள்ளி எழுந்து பறக்கும் பறவையைக் கவ்வி உண்ணும் மீன் பற்றிய பகுதியில் ஒரு பறவைக்குஞ்சு தப்பிப்பதைக் காட்டும் இடமெல்லாம் மயிர் கூச்செரிகிறது. சில சமயம் அந்த உயிரினங்களை எப்படி அவ்வளவு அருகில் சென்று அவற்றுக்குத் தொந்தரவு தராமல் படம் பிடித்தார்கள் என ஆச்சரியமாய் இருக்கிறது. அதுவும் ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் காட்டுகிறார்கள் (உதாரணம்: சிப்பியை உடைத்து உண்ணும் மீன் பற்றிய காட்சிகள்). சிலவற்றுக்குப் பல மணி நேரம் அல்லது நாட்கள் காத்திருந்து எடுத்திருக்க வேண்டும். இப்பகுதியின் கடைசியில் புவி வெப்பமாதல் காரணமாய் சீல்கள் தம் குட்டிகளைப் பனிக்கரடிகளிடமிருந்து காக்கப் போதுமான ஆர்க்டிக் துருவப் பகுதியில் பனிப்பாளங்கள் இல்லாமல் தவிப்பதைக் காட்டுகிறார்கள். நம்மை அறியாமால் நம் முன்னேற்றத்துக்காக நம் சொகுசுக்காக எங்கோ சில உயிர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

The Deep பகுதி முழுக்க அண்டார்க்டிகாவின் ஆழ்கடலுக்குள் (ஐந்து கிமீ ஆழத்துக்கும் மேல்) இருக்கும் உயிரினங்கள் குறித்துக் காட்டுகிறார்கள். சூரிய ஒளி புகாத பிரதேசம்; உயர்ந்தபட்ச தண்ணீர் அழுத்தம்; அதீதமான குளிர்ச்சி கொண்ட நீர்; அப்படியான ஆழச் சூழலிலும் உயிரினங்கள் இருக்கின்றன. அப்படியான சூழல்கள் கொண்ட ஜூபிடரின் நிலாக்களிலும் உயிரினங்கள் வாழக்கூடும் என்ற எண்ணத்தை இவை வலுப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். வினோத ஒளி உமிழும் உயிரினங்கள், கருப்புத் திரவத்தைத் துப்பும் உயிரினங்கள் என அவை பலவிதம். இறந்த ஒரு பிரம்மாண்ட மீனை சுறா முதல் எட்டுக்கால் பூச்சி போன்ற நண்டு, மிகச்சிறு புழு போன்ற உயிரினங்கள் அந்த ஆழத்தில் வைத்து மாதக்கணக்கில் உண்கின்றன. சில சிற்றுயிர்கள் அதன் எலும்பைக் கூட விடாமல் அமிலம் துப்பி அதனுள் மிஞ்சியிருக்கும் கொழுப்பைத் தின்கின்றன. கடலின் ஆழத்தில் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் சேர்ந்த மண் / மணல் ஒரு கிமீ உயரத்துக்கு பாறைகளின் மீது படிந்திருக்கிறது. அந்த‌ மணற்பரப்பில் மீத்தேன் வெளிவரும் காட்சிகள் அற்புதம். சில இடங்களில் திரவங்கள் வெளியாகி அங்கே நச்சு ஏரிகள் உருவாகி விடுகின்றன. அதாவது கடலுக்குள் ஏரி. அதற்குள் போகும் பாம்பு மாதிரியான மீன்கள் துடிப்பதைக் காட்டுகிறார்கள். அப்புறம் கடலுக்குள் எரிமலை வெடிப்புகள், வெந்நீர் ஊற்றுகள். மரியானா ட்ரெஞ்ச் பற்றிச் சொல்கிறார்கள். எவரெஸ்ட் சிகரம் கடலுக்குள் இருந்தால் நீருக்கு வெளியே தெரியாது என்கிறார்கள். ஜெல்லி மீன்கள், ஸ்பாஞ்ச்கள், அதற்குள் குடியிருந்து கலவி செய்து குஞ்சு பொரிக்கும் உயிரினங்கள். இன்னும் சிலபல.

டேவிட் அட்டன்பரோ தான் குரல் கொடுத்து விவரிக்கிறார். பொதுவான ஆங்கிலப் படங்கள் போல் அல்லாமல் எல்லாச் சொற்களும் சராசரி இந்தியர்களுக்குப் புரியும் தெளிவான உச்சரிப்பு. ஹான்ஸ் ஸிம்மரின் பின்னணி இசை அபாரம். (குறிப்பாய் முதற்பகுதியில் அந்தப் பின்னணி இசை தான் ஆவணப்படத்துக்கு ஒரு திரைப்பட நாடகீயத்தை வழங்குகிறது!)

பார்க்க வேண்டிய படம். டாகுமெண்டரி, டிவி சீரிஸ் என்றெல்லாம் இளக்காரமாய் நினைக்காமல் ஒரு திரைப்படமாகவே அணுகலாம். நல்ல தரத்தில் எடுத்திருக்கிறார்கள். கடலுக்குள் இத்தனை துல்லிய ஒளிப்பதிவெல்லாம் பேராச்சரியம். குழந்தைகளை அழைத்துப் போய் வாருங்கள். அவர்கள் சுற்றுச்சூழலை ஒட்டியம் தம் தினசரிக் குற்றங்களின் விளைவுகளை அறிய வேண்டியது அவசியம்.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்