உள்ளம் கவர் கள்வன்


என் பதின்மம் முழுக்க நிரம்பிக் கிடந்த எழுத்தாளர் பாலகுமாரன். சுஜாதா கூட பிற்பாடு நுழைந்தவர் தான். அந்த இரண்டும் கெட்டான் வயதில் அவரை வாசிப்பது ஒரு கொடுப்பனை என்றே சொல்வேன். கோடை விடுமுறையின் போது கோவையில் தொலைபேசியகத்தில் பணிபுரியும் என் அத்தை அவரது அலுவலக நூலகத்திலிருந்து எடுத்து வந்த நாவல்களின் மூலம் தான் அவரை நிறைய வாசித்தேன். குமுதம், விகடனில் அவரது எழுத்துக்கள் வந்தால் வெட்டிச் சேகரிக்கும் வழக்கம் சில ஆண்டுகள் இருந்தது.


பல்சுவை நாவல் வடிவில் அவரது பெரும்பாலான நூல்கள் என்னிடம் இருக்கின்றன. (நாகர்கோவிலிலிருந்து என் மாமியாரின் தங்கை வாங்கி அனுப்பியது.) அவற்றில் கணிசம் படித்தும் விட்டேன். அவரது நல்ல முன்பனிக்காலம் நாவலைப் போல் என் வாழ்வில் நடக்க வேண்டும் என விரும்பி இருக்கிறேன். இனியெல்லாம் சுகமே தான் அவரது எழுத்துக்களில் எனக்குப் பிடித்த நாவல். சினிமாகவே எடுக்க உகந்த நாவல். யாரும் கண்டுகொள்ளவில்லை. மெர்க்குரிப் பூக்கள் அடுத்தது (அதே தலைப்புப் பாணியில் பிற்பாடு எழுதிய கரையோர முதலைகள், இரும்புக் குதிரைகள், கடலோரக் குருவிகள் ஏதும் அந்தளவுக்கு ஈர்க்கவில்லை). அப்புறம் கல்லூரிப் பூக்கள். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவும் சுவாரஸ்யம். உடையார் நாவலும் குறிப்பிடத்தக்க முயற்சியே. அவரது எழுத்துக்கள் படித்துத் தான் தஞ்சை பெரிய கோயில் காண வேண்டும் என்ற உந்துதல் வந்தது. சிவன் பிட்டுக்கு மண் சுமந்த கதையை அவர் எழுத்தில் வாசித்ததை மறக்கவே முடியாது. அவரது நாவலொன்றில் வரும் "ஜெயிப்பேன், ஜெயிப்பேன், இனி சகல இடங்களிலும் ஜெயிப்பேன்." என்ற வாக்கியத்தை நெடுநாட்கள் என் புத்தகங்களில், நோட்டுக்களில் என‌ ஆங்காங்கே எழுதி வைத்திருந்தேன்.

தூர்தர்ஷனில் அவரது நாவல்கள் சில நாடகங்களாக ஒளிபரப்பாகின: மூக்கணாங்கயிறு, பச்சை வயல் மனது, சேவல் பண்ணை. எதையும் தவறவிடவில்லை. சுஜாதாவுக்குப் பிறகு சினிமாவில் எழுத்தாளராய் அதிகம் சாதித்தது அவர் தான். முகவரி, சிட்டிசன், மன்மதன், சிவசக்தி, ரகசிய போலீஸ் போன்ற படங்களை எல்லாம் அவரது வசனம் என்பதற்காகவே பார்த்தேன்.
யோகி ராம் சுரத்குமார் மீது ஆரம்பம் முதலே அபிமானம் கொண்டவர் என்றாலும் பிற்பாடு அவர் ஆன்மீகத்தில் மிகத் தீவிரமாய் இறங்கியதிலிருந்து அவரிடம் இயல்பாகவே ஒரு மனவிலக்கம் எனக்கு வந்து விட்டது என நினைக்கிறேன். எழுத்துச் சித்தர் வெறும் சித்தராக மாறத் தொடங்கிய புள்ளி அது. என் வாசிப்பின் திசை மாறத் தொடங்கியதும் காரணமாக இருக்கலாம். அடுத்ததாய் சமீப ஆண்டுகளில் ஃபேஸ்புக்கில் அவரது செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றம் அளித்தன. எழுத்தாளன் எப்போதும் வாசகர்களிடமிருந்து தள்ளியே இருப்பது நல்லது என்ற என் நெடுநாள் எண்ணத்தை அது மேலும் வலுவாக்கியது.

சென்னைப் புத்தகக்காட்சியில் ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். பேசவில்லை. எழுத்துக்கு எழுபது என விசா பதிப்பகம் அவரது எழுபதாவது பிறந்த நாளுக்கு வெளியிட்ட சிறப்பு மலரை கொஞ்ச காலம் முன் பொன்.வாசுதேவன் அனுப்பித் தந்தார். மிக நீர்த்துப் போன தொகுப்பு அது. அவரைப் பற்றி அல்லது அவர் எழுதியதைக் கடைசியாய் வாசித்தது அதுவே.

பாலகுமாரன் நிறைய படித்த‌ நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு ஆதர்சம். அவர் அவர்களுக்கு ஒரு எழுத்தாளராக மட்டுமின்றி மறைமுகமாக ஒரு மனநல மருத்துவராகவும் இருந்தார். (நேரடியாக கேள்வி பதில்களில் அவர் அதைச் செய்து வந்தார் எனினும் அவர் நாவல்கள் மூலமும் அதையே செய்தார்.) இரு திருமணங்கள் செய்து, இரண்டு மனைவியருடனும் ஒரே வீட்டில் சிக்கலின்றி வசித்தது என்ற வஷயம் அவர் மீது ஓர் இனம் புரியாத வசீகரத்தைப் பலருக்கும் - குறிப்பாய்ப் பெண்களுக்கு - அளித்தது என்பதாக உணர்கிறேன். அப்படியான லட்சக்கணக்கான பெண்களுக்கு அவர் உள்ளம் கவர் கள்வன்.

நல்ல எழுத்தாளனாக என்ன செய்ய வேண்டும் என்று அவர் சொன்னதில் இன்னமும் ஒரு விஷயத்தைச் செய்யாமல் ஆனால் செய்ய வேண்டும் என்ற TODO லிஸ்டில் வைத்திருக்கிறேன்: கம்பராமாயணம் வாசிப்பது. "நான் எத்தனையோ பேருக்கு எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஆனால் கற்றுக் கொண்டது ஒரு பாலகுமாரன் தான்" என்று சுஜாதா எங்கோ சொன்னாதாய் அறிந்த போது பாலகுமாரன் மீது நிறையப் பொறாமை எழுந்தது. சுஜாதாவின் வாரிசு பாலகுமாரன், பாலகுமாரனின் வாரிசு நான் என்றெல்லாம் புத்தகங்களில் ஃப்ளோசார்ட் வரைந்து வைத்த நினைவு இருக்கிறது. ஆனால் ஏனோ என் எழுத்தில் அவரது தாக்கம் வரவே இல்லை. அதே சமயம் என் ஆளுமையில் என் சிந்தையில் என் வாழ்வியலில் நிச்சயம் அவரது தாக்கம் இருக்கிறது என உணர்கிறேன்.

அவரை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய என் ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியை தனலெட்சுமியை நினைத்துக் கொள்கிறேன். அவர் எங்கேனுமிருந்து இதை வாசித்துக் கொண்டிருந்தால் இத்தருணத்தில் கைகள் பற்றிப் பேச விரும்புகிறேன்.

பாலகுமாரனுக்கு அஞ்சலி!

*