ஆண்டாளும் பத்மாவதியும்


இந்திய யூனியன் என்பது கருத்துரிமை கொண்ட தேசம் என்கிறார்கள். நிஜம் தானா?

சமீபத்தில் வலதுசாரி உதிரி அமைப்புகள் படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரத்துக்குச் சவால் விடும் வகையில் மேற்கொண்டுள்ள அராஜகச் செயல்கள் இந்திய அரசியல் சாசனம் நம் குடிமக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளையே கேள்விக்கு உட்படுத்துபவை. மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தில் இருப்பதையும் இந்த அத்துமீறல்களையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் சமூக மற்றும் கலாசாரச்சகிப்பின்மை வலுத்து வருகிறது.

இரு உதாரணச் சம்பவங்கள். ஒன்று தென்னிந்தியாவில்; மற்றது வட இந்தியாவில்.

*

முதலில் வைரமுத்துவின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரை. முதலில் ஓர் உரையாக நிகழ்த்தப்பட்டு பின் தினமணி நாளேட்டில் வெளியானது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் என்ற கோதை நாச்சியார் பற்றிய இதில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாராயணன், கேசவன் என்ற வரலாற்றுப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட Bakthi Movement in South India என்ற ஆய்வுக் கட்டுரையில் ஆண்டாள் திருவரங்கம் கோயிலில் தேவதாசியாக வாழ்ந்தவர் என்ற குறிப்பு வருவதைச் சுட்டுகிறார் (“Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple”). அதுவே அவர் மீதான கொலைவெறி எதிர்ப்பிற்குப் போதுமானதாகி விடுகிறது. (சுபாஷ் சந்திர மாலிக் என்பவர் தொகுத்த Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform என்ற நூலில் இடம் பெற்ற இக்கட்டுரை இண்டியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது என்கிறார்.)


ஆண்டாள் கட்டுரையின் தொனி உண்மையில் ஆண்டாளின் இறை பக்தியையோ, காதல் ரசத்தையோ தமிழ்ப் புலமையையோ பிரதானப்படுத்தவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை அதன் குவியம் ஒரே விஷயம் தான். ஆண்டாளின் மரபுகளின் மீதான அத்துமீறல் எவ்வாறு நிகழ்ந்திருக்க முடியும் என்ற வியப்பு! மணமாகாத கன்னிப் பெண் சமூக வரையறைகளை உடைத்து இவ்வளவு வெளிப்படையாய் எப்படிக் காமத்தை எழுதினார் என்ற கேள்வி அவருக்கு இயல்பாய் எழுகிறது. சுற்றிச் சுற்றி அதே விஷயத்துக்குத் தான் வைரமுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இண்டியானா பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை வரிகளை மேற்கோள் காட்டுகிறார். அதையும் அது தான் இறுதி உண்மை என அவர் சொல்லவில்லை. போகிற போக்கில் மேலோட்டமாக அப்படியொரு செய்தியும் இருக்கிறது எனச் சொல்லிச் செல்கிறார்.

அவர் நாத்திகர் என்பதும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியது. இது ஒரு தரப்பு. அதற்கான இடம் இந்திய ஜனநாயகத்தில் உண்டு. இந்து சிந்தனை மரபிலும் உண்டு.

பிற்பாடு ஆண்டாளை வணங்கும் பிராமண சமூகத்தினர் இதையொட்டி பிரச்சனை கிளப்பியதும் மன்னிப்புக் கேட்டு விட்டு வெளியிட்ட விளக்கக்குறிப்பில் தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை என்றும் கடவுள் சேவைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த பெண்களைக் குறிக்க மட்டுமே பயன்பட்டது என்றும் அதே பொருளிலேயே தானும் பயன்படுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் அது சர்ச்சையிலிருந்து விலக அவர் சொல்லும் பொருள் என்றே எடுத்துக் கொள்கிறேன். காரணம் அவரது கட்டுரையில் “கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்”, “பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” ஆகிய வரிகள் தேவதாசி என்பதைப் பற்றி வருகின்றன. அச்சொல்லை நற்பொருளிலேயே முன்வைத்தால் இச்சொற்றொடர்கள் பயில்வது பொருத்தமில்லை. ஆக, இன்று புரிந்து கொள்ளப்படும் பொருளிலேயே வைரமுத்து தேவதாசி என்ற சொல்லை அக்கட்டுரையில் பிரயோகித்திருக்கிறார் என்பது தெளிவு.

ஆண்டாள் யார்? ஆழ்வார்களுள் ஒருவரான திருவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்து வளர்த்த பெண் குழந்தை. சிறுவயது முதலே தந்தையின் வழி பெருமாளின் பெருமைகள் கேட்டு அவர் மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்தவள் பருவமெய்தியதும் பெருமாளைத் தவிர எவரையும் மணம் புரியேன் என்ற பிடிவாதத்தில் இருந்து இறுதியில் திருவரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகிறாள். இது தான் வைணவம் நமக்குப் போதிக்கும் ஆண்டாளின் வரலாறு. ஒரு நாத்திக மனதிற்கு இதில் ஆண்டாளின் ஆரம்பத்திலும் முடிவிலும் பகுத்தறிவுக் கேள்விகள் வருவது இயல்பே. அதைத் தான் வைரமுத்து செய்தார். அது கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதி. அதை இன்னொரு கட்டுரையின் மூலம் விரிவாக ஆழமாகத் தரவுகளின் துணை கொண்டு ஒருவர் மறுத்து எழுதலாம். அது தான் இச்சுதந்திர நாட்டில் எவரும் செய்ய வேண்டிய விஷயம். ஆனால் நடந்தது என்ன?

ஹெச். ராஜா என்ற பிஜேபிகாரர் வைரமுத்துவின் வீட்டுப் பெண்டிரைக் கொச்சைப் படுத்தும் மிகத் தகாத மொழியில் அவரைத் தாக்குகிறார். அதே கட்சியைச் சேர்ந்த இன்னோர் ஆசாமி நயினார் நாகேந்திரன் வைரமுத்துவின் நாவை அறுத்து வந்தால் ரூபாய் பத்து லட்சம் பரிசுத்தொகை என அறிவிக்கிறார். திருவில்லிப்புத்தூர் ஜீயர் வைரமுத்து ஆண்டாள் சந்நதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற வலதுசாரிக் குரல்கள் வலுக்கின்றன. பிராமண சங்கம் உள்ளிட்ட இந்து / இந்துத்துவ உதிரி அமைப்புகள் போராட்டத்தில் இறங்குகின்றன. சமூக வலைதளங்களில் பார்ப்பனர்களும் நவபார்ப்பனர்களும் விடம் கக்குகிறார்கள். பண்பட்ட சமூகம் எனக் கருதப்படும் ஓர் இனத்தில், ஒரு மதத்தில் ஒரு படைப்பாளியின் கருத்து இப்படித்தான் மிருகத்தனமாய் எதிர்கொள்ளப்படுகிறது.

ஒரு படைப்பை எழுதும் போது அது எந்தச் சமூகத்தைப் புண்படுத்தும் என்று யோசித்து யோசித்து எழுத முடியுமா? ஆண்டாள் என்பவரை லக்ஷ்மி தேவியின் அவதாரமாகப் வைணவ பிராமணர்கள் பார்க்கிறார்கள். அதே போல் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்ன அவசியம்? ஒருவர் அவரை மாபெரும் தமிழ்க்கவியாக மட்டும் காண முடியும். இன்னொருவர் பெருங்காதல் மனங்கொண்ட தேவதையாக மட்டும் பார்க்க முடியும். அப்படியான மற்றொரு பார்வை ஒன்றையே வைரமுத்து முன்வைத்திருக்கிறார். யதார்த்தச் சிக்கல் கருதி வைரமுத்து வேறு பொருள் சொல்லிச் சமாளிக்கவும் மன்னிப்புக் கோரவும் செய்யலாம். அதனால் அவருக்கு இருக்கும் கருத்துரிமையை யாரும் இல்லை என்று சொல்லி விட முடியாது.

ராஜாஜி ஆண்டாள் என்று ஒரு பெண்ணே உண்மையில் கிடையாது, பெரியாழ்வாரின் மனோபுத்ரி அவள், ஆண்டாள் என்ற புனைப்பெயரில் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் எழுதியதே பெரியாழ்வார்தான் என்று சொல்கிறார். அது ஒரு பார்வை. பா. ராகவன் ஒரு கட்டுரையில் ஆண்டாளின் பாடல்கள் ரசனையான பார்ன் எழுத்து என்கிறார். அது மற்றுமொரு பார்வை. டிகேசி, ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் ஆண்டாள் குறித்த தம் மாறுபட்ட கோணத்தை முன்வைத்திருக்கின்றனர். நவீன இலக்கியச் சூழலில் தமிழவனும், பிரேமும் ஆண்டாள் குறித்த பின்நவீனத்துவ, அமைப்பியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவர்களுக்கு எல்லாம் அந்தக் கருத்துரிமை இருக்கும் போது வைரமுத்துவுக்கு மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி எழுகிறது.

“ஓர் ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டவே செய்தேன், அது என் கருத்தல்ல” என்று சொல்லி இது சம்மந்தமாய் சென்னை உயிர்நீதிமன்றத்தில் வைரமுத்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்எஸ் ரமேஷ், அவரது செய்கையில் பிழை இல்லை என்று சொல்லி வைரமுத்து மீதான சட்ட நடவடிக்கைகளுக்குத் இடைக்காலத் தடை விதித்தார். இது முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்புகிறது.

ஒருவேளை வைரமுத்து இது தன் கருத்து என்று சொல்லி இருந்தால் குற்றமாகுமா என்பதே அது. இந்தத் தீர்ப்பு கருத்துச் சுதந்திரத்திற்கான மறைமுகப் பின்னடைவே.

தமிழ் நாடு அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையே ஆண்டாள் உறைந்திருக்கும் திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் என்பதும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அவரைக் கடவுளாகக் கும்பிடுகிறார்கள் என்பதும் உண்மை என்றாலும் புராணங்களை மீள்வாசிப்புச் செய்து கடவுள் பாத்திரங்களையே மீட்டுருவாக்கம் செய்து பார்ப்பது தான் இலக்கிய வழக்கு. அதற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் அக்கப்போர்களை மக்கள், ஊடகங்கள், அரசு, நீதித்துறை என யார் செய்தாலும் அது கருத்துரிமையின் கழுத்து நெரிப்பாகவே முடியும். அவ்வகையில் தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சந்நதிக்குப் போய் “வைரமுத்துவின் கட்டுரையைப் பதிப்பித்துத் தவறு செய்து விட்டேன்” என்று சொல்லி மன்னிப்புக் கேட்டிருப்பது மிக மோசமான முன்னுதாரணம். (ஏற்கனவே தினமணி வலைதளத்தில் வெளியாகி இருந்த ஆண்டாள் கட்டுரை நீக்கப்பட்டு வைரமுத்துவின் மன்னிப்புச் செய்தியை அவ்விடத்தில் போட்டிருந்தார்கள்) அடுத்து எந்த நம்பிக்கையில் இனி படைப்பாளிகள் தினமணியில் எழுதுவார்கள்? அவர் செய்தது தவறு என மனப்பூர்வமாய் அவரே உணர்ந்தாலும் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடம் தினமணி பத்திரிக்கையிலா திருவில்லிப்புத்தூர் கோயிலிலா? கருத்துரிமையின் குரூரத் தற்கொலை இது.

அவரை மன்னிப்புக் கேட்க வைத்து விட்டு ஜீயர் கொக்கரிப்பது அப்பட்ட ஃபாஸிசம். தமிழகத்திலிருக்கும் செயலற்ற அரசும் மத்திய சர்வாதிகாரியுமே இதற்குப் பொறுப்பு.

சற்று முன் கூட கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "எங்களாலும் கல்லெறியவும் சோடா பாட்டில் வீசவும் முடியும்" என்று குறிப்பிட்டு ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்புக் கேட்க கெடு விதித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இப்பிரச்சனையில் ஒரே ஆறுதல் வைரமுத்து மீதான தாக்குதல்கள் மிரட்டல்களுக்கு எதிராக சா.கந்தசாமி, பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட தமிழ்ப்படைப்பாளிகளின் கூட்டறிக்கை வெளியானதே.

பெருமாள்முருகனின் மாதொருபாகன் நாவலை எதிர்த்து திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த கொங்கு சாதிச் சங்கங்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டங்கள், மிரட்டல்கள் என்று இறங்கிய நிகழ்வோடு இந்தப் பிரச்சனையை ஒப்பு நோக்கலாம்.

எதிர்த்த சாதி தான் வேறு, இரண்டிலுமே தாக்குதலுக்குள்ளானது கருத்துரிமையே!

*

அடுத்து Padmaavat திரைப்படம். 16ம் நூற்றாண்டின் மத்தியில் சூஃபிக் கவிஞர் மாலிக் முகமது ஜயஸி என்பவரால் அவாதி என்ற மொழியில் எழுதப்பட்ட பத்மாவத் என்ற காவியத்தைத் தழுவி சஞ்சய்லீலா பன்ஸாலி இயக்கியுள்ள வரலாற்றுத் திரைப்படம்.


ஆண்டாள் பிரச்சனையாவது வைரமுத்து கட்டுரை வெளியான பிறகு தொடங்கியது. படப்பிடிப்பில் இருக்கும் போதே பத்மாவத் படத்துக்குப் பிரச்சனை தொடங்கி விட்டது.

ஸ்ரீராஜ்புத் கர்னி சேனா என்ற வலதுசாரி உதிரி அமைப்பு படத்தில் ராஜபுதன ராணி பத்மாவதியைத் தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் அது ராஜபுத்திரர்களுக்கு இழுக்கு என்றும் சொல்லி படத்தின் படப்பிடிப்பில் புகுந்து ரகளை செய்தது. அடுத்த நிகழ்வில் படப்பிடிப்பிலிருந்த இயக்குநர் பன்சாலி தாக்கப்பட்டார். மூன்றாம் முறை படத்தில் பத்மாவதிக்கும் அலாவுதீர் கில்ஜிக்கும் நெருக்கமான கனவு டூயட் பாடல் ஒன்று இருப்பதாகக் கிளப்பப்பட்ட வந்ததியை ஒட்டி (உண்மையில் படத்தில் இருவரும் ஒரு ஃப்ரேமில் கூட சேர்ந்து வரவில்லை!) படத்திற்குப் போடப்பட்ட பிரம்மாண்ட செட்கள் மற்றும் விலையுயர்ந்த உடைகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி அழித்தார்கள். அப்புறம் படத்தின் முதல் போஸ்டருக்காக 48 மணி நேரம் செலவிட்டுப் போடப்பட்ட பிரம்மாண்ட ரங்கோலிக் கோலத்தைக் கலைத்தார்கள். பத்மாவதியின் அரண்மனை என நம்பப்படும் சுற்றுலா ஸ்தலத்தில் அலாவுதீன் கில்ஜி பத்மாவதியைப் பார்க்கப் பயன்பட்டதாய்ச் சொல்லி வைக்கப்பட்டிருக்கும் நிலைக்கண்ணாடிகளை உடைத்தனர்.

பிஜேபிகாரர்களும் பிரச்சனையில் இணைந்து கொண்டனர். அக்கட்சியின் அகிலேஷ் கந்தெல்வால் பன்சாலியின் மீது செருப்பு வீசுபவர்களுக்குப் பரிசு அறிவித்தார். அதே கட்சியைச் சேர்ந்த ராஜ் புரோகித் என்ற ஆள் ராஜபுதன ராணி எப்படி முக்காடின்றி நடனமாடுவாள்? இது ராஜபுத்திரர்களுக்கான அவமதிப்பு என்று பேசி பொதுமக்களைத் தூண்டி விட்டார். பிஜேபி ஆதரவுடன் கர்னி சேனா பல இடங்களில் போராட்டத்தில் இறங்கியது, படம் வெளியாகும் திரையங்குகளைக் கொளுத்துவோம் என மிரட்டியது.
ஹரியானா பிஜேபியைச் சேர்ந்த சூரஜ் பால் அமு இயக்குநர் பன்சாலி மற்றும் பத்மாவதியாய் நடித்த தீபிகா படுகோன் தலைகளுக்குத் தலா பத்து கோடி விலை வைத்தார். இருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலையானது.

பிஜேபி ஆளும் ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேச மாநில அரசுகள் தம் மாநிலத்தில் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தன.

இதற்கிடையே படத்திற்கு மத்திய தணிக்கைத் துறை யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தணிக்கை செய்யப்பட்ட படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லியது. 2011ல் நடந்த பிரகாஷ் ஜா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இந்திய யூனியனுக்கிடையேயான வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு மாநில அரசின் கடமை என்பது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பதாகும். படம் எங்கே, எப்போது திரையிடப்படுகிறதோ அங்கே போலீஸ் பந்தோபஸ்து உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் மூலம் இதைச் செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை; வெளியீட்டைத் தடுப்பதல்ல என்று சொன்னது.

மாநில அரசுகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது இதே தீர்ப்பை உறுதி செய்து புண்படக்கூடியவர்கள் அப்படத்தைப் பார்க்காமல் தவிர்ப்பதே சரியானது என்று சொல்லி இருந்தார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. (அவர் சில வழக்குகளில் மத்திய அரசுக்கு ஆதரவாகப் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகாரளித்த சமயம் தான் அது என்றாலும் இவ்வழக்கை நேர்மையாகவே அணுகியிருப்பதாகத் தோன்றுகிறது.)

மாதொருபாகன் வழக்கில் (அப்போதைய) சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அளித்த தீர்ப்பு வரிகளை இதோடு ஒப்பு நோக்கலாம்: “கலை என்பது சில சமயம் ஆத்திரமூட்டக்கூடியது. அது எல்லோருக்குமானதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்தையும் பார்க்கக் கட்டாயப்படுத்துவதும் இல்லை. பார்க்க வேண்டுமா என்ற முடிவு பார்வையாளனிடமே இருக்கிறது. குறிப்பிட்ட மக்கள் குழு புண்படுவதால் அவர்களின் எதிர்ப்பை பகையுணர்வுடன் திணிக்கும் உரிமை வந்து விடுவதில்லை. அரசு அதைக் கையாள முடியாததால் அதை ஆதரிக்கக்கூடாது.”

சரி பத்மாவதி யார்? உணர்ச்சிவசப்படாமல் தேடி வாசிக்கும் போது ஆண்டாள் கதையை விடவும் ஆதாரம் மிக மலிந்ததாகவே பத்மாவதியின் கதை இருக்கிறது. பத்மினி அல்லது பத்மாவதி என்ற பெயரிலான ஒரு ராணி இருந்ததற்கு நேரடி வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அலாவுதீன் கில்ஜியின் அரசவையில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான அமீர் குஷ்ரூ தன் குறிப்புகளில் அப்படி ஒரு பெயரையே உச்சரிக்கவில்லை. 1303ம் ஆண்டு சித்தூர் கோட்டையை அலாவுதீன் கில்ஜி முற்றுகையிட்டு வென்றது உண்மையே என்றாலும் அது பத்மாவதிக்காக என்று எங்கும் குறிப்பில்லை. அதற்கு இருநூற்றுச் சொச்சம் ஆண்டுகளுக்குப் பின் பத்மாவத் காப்பியத்தில் தான் அவள் பிறக்கிறாள். மாலிக் முகமதுவின் கற்பனைப் பாத்திரமாகவே கொள்ள வேண்டி இருக்கிறது. இளங்கோவடிகளின் கண்ணகி போல்.

ரத்தன் சிங் போர்க்களத்தில் மரணமுற்ற பின் அவனது மனைவி பத்மாவதி இன்ன பிற ராஜபுதன பெண்களுடன் நெருப்பில் நுழைந்து உயிரை மாய்த்துக் கொள்தல் அந்தக் காவியத்தின் உச்ச தருணம். சிலப்பதிகாரத்தில் மதுரையைக் கண்ணகி எரிப்பது போல். படத்தில் அத்தருணங்கள் அப்படியே எடுத்தாளப் பட்டிருக்கின்றன.

படம் உண்மையில் ராஜபுத்திரர்களை வானளாவப் புழகவே செய்கிறது. திரையரங்கில் வடக்கத்தியர்கள் பல இடங்களில் உணர்ச்சி மிகுதியில் கரகோஷம் எழுப்புகிறார்கள். ஒருவகையில் ராமாயணத்தின் நேரெதிர் கதை இது. இதில் அடுத்தவன் மனைவி மீது மோகங்கொண்டவன் அவளது கணவனைக் கடத்திச் செல்கிறான். மனைவி போய் அவனை மீட்டு வருகிறாள். பத்மாவதியும் ரத்தன் சிங்கும் இஸ்லாமிய ஆதிக்கத்துக்கு எதிரான இந்து மதத்தின் குறியீடாகவே வரலாறு நெடுக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் ராஜபுத்திர வம்சத்தினர் மத்தியில் அது பதிய வைக்கப்பட்டுள்ளது. படம் அதை வழிமொழியவே செய்கிறது. மொத்த படத்தையும் தலைகீழாகப் புரிந்து கொண்டு தான் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் அவர்கள்.

உண்மையில் கில்ஜி சந்ததியர் தான் படத்தை எதிர்த்திருக்க வேண்டும். அலாவுதீன் கில்ஜியை காமாந்தகப் பித்தனாக, இரக்கமற்ற கொடூரனாக, முதுகில் குத்துபவனாக சித்தரித்திருக்கிறார்கள். அலாவுதீன் தன் மாமன் ஜலாலுதீனைக் கொன்று அரியணை ஏறியது உண்மை தான் என்றாலும், மாலிக் கபூர் என்ற நபும்சகனோடு நெருக்கமாய் இருந்தான் என்றாலும் ரத்தன் சிங்கைச் முதுகில் குத்திக் கொன்றதற்கு வரலாற்று ஆதாரமுண்டா எனத் தெரியவில்லை. (கில்ஜியின் சித்தூர் முற்றுகைக்கு முன்பே ரத்தன் சிங் மற்றொரு போரில் கொல்லப்பட்டு விட்டார் என்றும் ஒரு குறிப்புண்டு.)

பத்மாவதிக்கு பிற்போக்கு சக்திகள் இத்தனை எதிர்ப்புக் காட்டிய போது பாலிவுட்டே திரண்டு படக்குழுவுக்கு ஆதரவாய் நின்றது. சல்மான் கான் தொடங்கி அனுராக் கஷ்யப், கரன் ஜோகர், சேகர் கபூர், நானா படேகர், ஹ்ரித்திக் ரோஷன், ரிஷி கபூர், ஷ்யாம் பெனகல், ப்ரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, கங்கனா ரணாவத், ஷப்னா அஸ்மி, ஜாவித் அக்தர் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தம் ஆதரவை வெளிப்படுத்தினர். நம்மவர் கமல் ஹாசனும் தன் ஆதரவைப் பதிவு செய்தார்.

வழக்கம் போல் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கல்லூளி மங்கனாய் நின்றார். அந்தமௌனம் என்பது கள்ளத்தனமாய் அநியாயத்துக்கு ஆதரவளிப்பதே என்பது தெளிவு.

படம் வெளியாகி பெரும்பாலான இந்திய நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய இடங்களில் கர்னி சேனா அமைப்பினர் படத்திற்கு எதிராகப் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்கிச் செய்யும் அட்டூழியங்கள் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் இக்கணம் வரை ஓய்ந்த பாடில்லை. இதன் மூலம் நீதித்துறையையே அசைத்துப் பார்க்க நினைக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். அரசியல் சாசனத்தையே தூக்கிலிட முயல்கிறார்கள்.

*

ஆண்டாள், பத்மாவதி இரண்டு பிரச்சனைகளிலுமே சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டுமே வரலாறு முழுமையாய் ஒப்புக் கொள்ளாத ஒரு பெண்ணை முன்வைத்து நிகழ்ந்தவை. இரண்டிலுமே புண்பட்டதாய்ச் சொல்லப்பட்டது குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே. இரண்டிலுமே வலுவற்ற வலதுசாரி உதிரி அமைப்புகள் தம் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டன. இரண்டிலுமே அரசுகள் படைப்பாளிக்கு எதிராகவே இருந்தன. இரண்டிலுமே நீதித்துறை கலைஞனுக்கு ஆதரவாய்த் தீர்ப்பளித்தது. இரண்டிலும் சக படைப்பாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இவற்றுக்கு மேல் இரு நிகழ்விலுமே படைப்பாளியின் கருத்துரிமை மோசமாய் நசுக்கப்பட்டது.

இந்திய அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பற்றிப் பேசுகிறது. அதில் ஒன்று சுதந்திரத்திற்கான உரிமை (Right to Freedom). 19 (1) (a) பிரிவு பேச்சு மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது (Freedom of Speech and Expression). இது எல்லையற்ற சுதந்திரம் இல்லை என்பதை பிரிவு 19 (2) சொல்கிறது (நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைபாடு, தேசப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நீதிமன்ற அவமதிப்பு, மானநஷ்டம், குற்றத்தைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் தவிர) என்றாலும் இன்றும் அரசியல் சாசனம் நமக்குத் தந்திருக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் வலுவானது.

அதை நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசும் சில மாநில அரசுகளும் அதிலிருந்து வழுவி விட்டன. அதன் விளைவு தான் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி ஒவ்வொரு படைப்பையும் ஏதேனும் காரணம் சொல்லி கழுத்தை நெரிக்கிறான்.

பிள்ளைப்பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைத்தது போல் ‘தமிழ்ப் பெண்கள் Vs கேரளப் பெண்கள்’ என்ற தலைப்பிலான விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் ஒளிபரப்பை எல்லாம் சில பெயர் தெரியாத லெட்டர்பேட் பெண்ணிய அமைப்புகளால் காவல் துறை புகாரைக் காட்டி மிரட்டித் தடை செய்ய முடிகிறது.

நச்சிகேதா வால்ஹேகருக்கும் மத்திய தணிக்கைத் துறைக்குமான வழக்கில் 2017ல் வழங்கப்பட்ட தீர்ப்பில் இருக்கும் வரிகள் இவை: “ஒரு படமோ, நாடகமோ, நாவலோ, புத்தகமோ கலைப்படைப்பாகும். ஒரு கலைஞனுக்கு தன் கருத்தை (சட்டத்தால் தடை செய்யப்படாதது) வெளிப்படுத்தும் சுதந்திரம் உண்டு. அந்தத் தடைகள் கூடப் படைப்பு மனத்தைக் கொன்று போடும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. சொற்கள், சொற்றொடர்களைச் சுயமான தேர்வு செய்து தம் கருத்துக்களை வெளிப்படுத்தும் எத்தனையோ எழுத்தாளர்களை மானுட சரித்திரம் பார்த்திருக்கிறது. அவர்களின் கதாபாத்திரங்கள் கூட சாதாரண மனிதர்களின் கற்பனையிலிருந்து மிக வேறானவை. சிந்தனையைத் தூண்டும் ஒரு படமானது நல்லொழுக்கங்களைப் போதிப்பதாகவே இருக்க வேண்டும் எனச் சொல்ல முடியாது. பார்வையாளனின் ப்ரக்ஞை மற்றும் ஆழ்மனதைத் தூண்டுவதாக அது இருக்கலாம். கட்டுப்பாடு என்ற ஒன்று அதற்கு இருக்க வேண்டுமெனில் அது சட்டப்பூர்வமானதாக மட்டுமே இருக்க வேண்டும்.”

வடக்கு, தெற்கு இரு பிரச்சனைகளுமே இன்னும் அடங்கிய பாடில்லை. இனி அவை எத்திசை எடுக்கும் என்று தெரியவில்லை. அப்படைப்புகள் இனி வாழுமோ சாகுமோ!

உலகப் புகழ் பெற்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரான வால்டேரின் வாழ்க்கைச் சரிதத்தை (The Friends of Voltaire) S.G. Tallentyre என்ற புனைப்பெயரில் 1906ல் எழுதிய Evelyn Beatrice Hall ஓரிடத்தில் கருத்துச் சுதந்திரம் குறித்த அவரது எண்ணவோட்டமாக இப்படிச் சொல்கிறார்: “I disapprove of what you say, but I will defend to the death your right to say it.”. அதாவது “நீ சொல்லும் ஒரு விஷயத்தை நான் மறுக்கலாம். ஆனால் நீ அதைச் சொல்வதற்கான உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தேனும் காப்பேன்.”

உண்மையில் கருத்துரிமை என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். எந்த வித விதிவிலக்குகளும் இன்றி கருத்துச் சுதந்திரம் பேணப்பட வேண்டும். ஒரு கருத்து வெளிப்படுத்தப்பட்ட பின் அதை ஏற்பதும், எதிர்ப்பதும், நிராகரிப்பதும் அவரவர் தேர்வு. ஆனால் கருத்து வெளியாக விடாமல் கருவிலேயே கொல்வது அறமற்ற செயல்.

கருத்துரிமை இல்லாத தேசம் ஒருபோதும் முன்னேறாது. மாறாக விரைந்தழியும். இந்துத்துவ அரசுகள் இந்தியத் தேசத்தை, அதன் மாநிலங்களை அரசாளும் வரை இந்த ஆபத்திலுருந்து நமக்கு விடிவில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் நமது மக்களுக்கு அதைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை இருப்பதாய்த் தெரியவில்லை.

இனி நாம் எழுதும் ஒவ்வொரு எழுத்தையும், எடுக்கும் ஒவ்வொரு ஃப்ரேமையும் அதிகார அல்லக்கைகளிடம் காட்டி அனுமதி வாங்க வேண்டும் போலிருக்கிறது!

ஆனால் ஒன்றை மறவாதீர் - அழுத்தப்படும் எதுவும் வீரியமாய் வெடித்தெழும்.

***

(உயிர்மை - ஃபிப்ரவரி 2018 இதழில் வெளியானது) 

Comments

Anonymous said…
விஸ்வரூபம் படத்துக்கு மதவெறி பிடித்த பெருங்கும்பல் எதிராக நின்றபோது அது கருத்துரிமைக்கு ஆதரவா ?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்