ஞாநி: அஞ்சலி


எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞாநி இன்று அதிகாலை மரணமுற்றார். மதிப்பிற்குரியோருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தொலைவில் தான் லௌகீக வாழ்வ‌ழுத்தங்கள் என்னை வைத்திருக்கின்றன.


சரியாய் மூன்றாண்டுகள் முன் இதே நாளில் தான் - அது ஒரு தைப் பொங்கல் தினம் - பத்திரிக்கையாளர் ஞாநி முதல் இதழை வெளியிட்டு 'தமிழ்' மின்னிதழைத் துவக்கி வைத்தார். அப்போது அது குறித்து "என் மகனை விட ஒரு மாதம் மட்டுமே மூத்தவரான சரவணகார்த்திகேயன் தமிழ் எழுத்துலகில் துடிப்போடும் செறிவாகவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவரை ஆசிரியராகக் கொண்டிருக்கும் தமிழ் இதழ், மாற்பட்ட கருத்துக்களை ஆழமாகவும் நாகரிகமாகவும் விவாதிக்கும் களமாகவும், வெவ்வேறு ரசனைகளை மதிக்கும் படைப்புக்களுக்கான இடமாகவும் அதே சமயம் தன் வாசகர் யார் என்ற‌ புரிதலோடு அவர்களை நோக்கி இயங்குவதாகவும் செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்." என்று சொல்லி இருந்தார். பேரன்புடன் எழுதப்பட்ட வரிகளாக அவை என்னை நெகிழ்த்தின.

ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு ஆசான். லட்சக்கணக்கானோருக்குப் போல் ஆனந்த விகடன் மற்றும் குமுதத்தில் வெளியான‌ 'ஓ பக்கங்கள்' தொடரில் தான் அவர் எனக்கு அறிமுகம். குறைந்தது பதினைந்து வருடங்களாக அவரது வாசகன் நான். சமநிலை குலையாத, அதே சமயம் கறாரான அரசியல் விமர்சனங்கள் எழுதுவது தமிழ்ச் சூழலில் அரிது. ஞாநி சமரசங்கள் ஏதுமின்றி அதைத் தொடர்ச்சியாய்ச் செய்த சாதனைக்காரர். நான் எழுத வந்த ஆரம்ப ஆண்டுகளில் பல அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் என் நிலைப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள அவர் எழுத்துக்கள் உதவிகரமாய் இருந்தன. உதாரணமாய் இன்று நோட்டா எனப் பரவலாய் அறியப்பட்ட விஷயத்தை இரு தசாப்தம் முன்பே 49-ஓ என்ற பெயரில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அவரே. 2009 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் போது அது குறித்து நான் ஓர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதிவு எழுத அவரே தூண்டுதல். 'ஓ பக்கங்கள்' தொகுதிகளை தமிழின் சிறந்த நூறு புத்தகங்களுள் ஒன்றாகப் பத்தாண்டுகள் முன் குறிப்பிட்டிருந்தேன். தவிப்பு முதலான அவரது புனைவுகளை வாசித்ததில்லை. அய்யா முதலான அவர் அரங்கேற்றிய‌ மேடை நாடகங்களையும் கண்டதில்லை. அறிந்தும் அறியாமலும் போன்ற பிற முயற்சிகளையும் படித்ததில்லை. அதனால் கலாப்பூர்வமாய் என்னால் அவரை மதிப்பிட முடியாது. ஆனால் சில தடுமாற்றங்கள் தாண்டியும் ஓர் அரசியல் விமர்சகராய் அவரது இடம் தமிழகத்தில் அசைக்க முடியாதது.

அவருடைய கருத்துக்களின் வீச்சு விஸ்தாரமானது. பல ஆண்டுகளாக குறிப்பிடத்தகுந்த எல்லா அரசியல் நிகழ்வுகளிலும் தன் நிலைப்பாட்டை வலிமையாகப் பதிவு செய்து வருகிறார். அது ஒரு முக்கியமான சமூகப் பங்களிப்பு. சமகாலத்து அரசியல் விமர்சகர்களில் அவரளவுக்கு வெகுஜனத்தைச் சென்றடைந்த வேறு ஒருவர் இல்லை என்பேன். ஐம்பதுகளில் பிறந்த பிராமணர் என்ற போதிலும் எந்தச் செயலிலும் பார்ப்பனியத்தை வெளிப்படுத்தியவரோ இந்துத்துவத்தை ஆதரித்தவரோ இல்லை. ஆரம்ப காலம் முதல் பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளை விமர்சித்து வருகிறார் என்ற அடிப்படையில் ஓர் ஒரிஜினல் செக்யூலர் ஆசாமியாக அவர் மீது பெருத்த மரியாதை உண்டு. அவரது நிலைப்பாடுகளில் பிசகுகள் இருக்கலாம். ஆனால் ஒருபோதும் அவர் தன் நேர்மையைக் கைவிட்டதில்லை. ஆன்மசுத்தியுடன் தான் நம்பும் சித்தாந்தங்களின் அடிப்படையில் எந்த விஷயத்திலும் தர்க்கரீதியாக சமரசமின்றி தன் கருத்தைப் பதிவு செய்தவர்.

அவருடைய 'ஏன் நான் கலைஞர் கருணாநிதியை எதிர்க்கிறேன்?' என்ற கட்டுரை எனக்குப் பிடித்தமான ஒன்று. 'தீம்தரிகிட' வழியாக அவர் வெளியிட்ட பாரதியின் 'அன்பென்று கொட்டு முரசே!' என்ற கோட்டோவிய சுவரொட்டி நெடுநாட்கள் என் அறையை அலங்கரித்திருந்தது. சென்னை புத்தகக் காட்சிகளில் பலமுறை அவரை நேரில் பார்த்தும் என் தயக்க சுபாவத்தினால் அவருடன் பேசாமல் விலகி நடந்திருக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் என் முதல் கவிதைத் தொகுதியான 'பரத்தை கூற்று' வெளியான போது அவருக்கு அனுப்பி இருந்தேன்.

அரசியலிலுமே கூட‌ நான் அவரோடு முரண்படும் புள்ளிகள் உண்டு தான். ஆனாலும் அவற்றில் ஏன் அவர் எதிர்நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது முக்கியமானதாய் இருந்தது. அவ்வகையில் ஒரு கட்டத்தில் அவரை ஓர் இணைப் பயணியாகவே பார்க்க முடிந்தது. "என் பார்வைகளை உங்கள் முன் வைப்பது என் உரிமை. அவற்றை நீங்கள் ஏற்பதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை. ஏற்பு குறித்த மகிழ்ச்சி, நிராகரிப்பு பற்றிய வருத்தம் ஆகிய மன நிலைகளை இப்போது நான் கடந்து விட்டேன். பகிர்தல் மட்டுமே என் இன்றைய மனநிலை." என்று பத்தாண்டுகள் முன் தன் இணையதளத்தைத் துவங்கிய போது சொல்லி இருந்தார். இப்போதும் அத்தகைய மனநிலையை அடைவதே என் இலக்காக இருக்கிறது. அப்படியான ஒரு பத்திரிக்கையாளர் கையால் தான் என் மின்னிதழ் துவக்கப்பட வேண்டும் என்பதால் தான் அவரை முதல் இதழை அவரை வெளியிடக் கேட்டுக் கொண்டேன். என் மகனுக்கு ஞானி எனப் பெயர் சூட்ட அவர் மீதான மதிப்பும் முக்கியக் காரணம். ஒரு கட்டத்தில் என் மனதுக்கு அத்தனை நெருக்கமானவராக அவர் ஆகி விட்டிருந்தார்.

கோலம் திரைப்பட இயக்கத்தை அவர் துவக்கிய போது பணம் செலுத்தி இணைந்தேன். அது குறித்த சில கேள்விகளை எழுப்பினேன். அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. எஸ்ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் படம் அவரை விடப் பெரிதாகப் போட்டது, ஷ்ருதி ஹாசன் தோழிகளுடன் மதுவருந்திக் கொண்டிருக்கும் படம் பற்றியது என அவரோடு நிறையச் சந்தர்ப்பங்களில் நீண்ட விவாதங்கள் நிகழ்த்தி இருக்கிறேன். விவாதங்களின் போது சம்மந்தமற்று திசை திருப்புவதோ, தனி மனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவதோ அவரிடம் காணவே முடியாது. அது மிக முக்கியமான பாடம்.

சிறுநீரகம் பழுதடைந்து டயலாலிசிஸ் செய்து உயிர் வாழத் துவங்கியதிலிருந்து அவர் தன் ஆயுள் பற்றித் தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்து உணர்ந்திருந்தேன். சுற்றி நிகழும் அவர் பழகிய, அவர் வயதொத்தவர்களின் மரணத்திற்கு அவர் எதிர்வினையாற்றிய போதெல்லாம் இது குறித்த‌ பதற்றம் அதிகரித்ததாய்ப் பட்டது. அதைத் தன் அதீதத் தன்னம்பிக்கை மூலம் எதிர்கொண்டிருந்தார். எவரது பிறந்த நாள் என்றாலும் "மேலும் வளம், மேலும் மகிழ்ச்சி , மேலும் அமைதி, மேலும் படைப்பாற்றல் பெருகிட வாழ்த்துகள்" என்று தான் வாழ்த்துவார் என்பதை யோசிக்கும் போது அவரது அந்த‌ மனநிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

2014ல் ஆலந்தூர் சட்டமன்றத் தேர்தலில் அவர் நின்றது கூட அதன் பக்கவிளைவாகவே பார்க்கிறேன். அவருக்குத் தான் ஏற்படுத்திய சமூக மாற்றங்கள் குறித்து திருப்தியின்மை இருந்ததாகப்படுகிறது. நேரடியாக, அதிகாரம் கொண்ட‌ மக்கள் பணியில் ஈடுபட்டாலாவது ஏதாவது செய்ய முடியுமா என இறங்கிப் பார்த்தார் என்றே புரிந்து கொள்கிறேன். தினமலர் பட்டம் இதழில் பங்கேற்கத் துவங்கியதும் அதையொட்டியே எனக் கருதுகிறேன். அதாவது அரசியல் தெளிவற்ற இந்தத் தலைமுறை போய்த் தொலையட்டும், அடுத்த தலைமுறையையேனும் அது விளையும் போதே வலுவான குடிமக்களாக ஆக்க முடியுமா என விழைந்தார். தன் பணிகளின் வெற்றி குறித்த ஆதங்கம் தொடர்ந்து அவருக்கு இருந்தது.

தேர்தல் நிதியளித்தது போக‌ ஆலந்தூரில் அவரை ஆதரித்து விரிவாய் ஒரு கட்டுரை எழுதினேன். 'என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!' என்பது அதன் தலைப்பு! ஜெயித்தால் ஞாநியால் தொகுதிக்கான நலப்பணிகளைத் திறம்பட முன்னெடுக்க முடியும் என நினைத்தேன். சட்டமன்றத்தில் அவரது குரல் தனிப்பட்டு ஒலிக்கும், சமூக வலைதளங்களில் முடங்கி விட்ட கலகக் குரல்கள் அரசாங்கத்திடம் கம்பீரமாய் ஒலிக்க இது ஒரு வாய்ப்பு என்பதாக என் எதிர்பார்ப்பு இருந்தது. அக்கட்டுரையை இப்படி முடித்திருந்தேன்: "அவர் தன் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையோடு இருக்க வேண்டும். தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதிலும் சமரசம் கூடாது. அரசியலில் ஜெயிப்பது தோற்பது தாண்டி நெடிய ஆயுளோடு பல்லாண்டுகள் அவர் ஓர் எழுத்தாளராக, சமூக அரசியல் விமர்சகராக உற்சாகமாகப் பங்காற்ற வேண்டும்."

எந்தக் கட்சியோடும் அமைப்போடும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற என் சுயக்கட்டுப்பாடு தாண்டி ஆலந்தூர் தொகுதி பூத்தில் ஞாநியின் போலிங் ஏஜெண்டாக பணி செய்ய விரும்பி அவரைக் கேட்டேன். பூத் ஏஜண்ட்டாக அந்தந்த பூத்தில் வாக்காளர்களாக இருப்போர் மட்டுமே பணி புரியலாம் என்பது தேர்தல் விதி என்று பதிலளித்தார். நான் பூத் ஏஜெண்ட்களுக்கான தேர்தல் ஆணையத்தின் கையேட்டிலிருந்து மேற்கோள் காட்டி அப்படி அவசியமில்லை என்பதைச் சுட்டினேன். ஏனோ அவருக்கு அதைச் செய்ய‌ தயக்கங்கள் இருந்தன. பூத்துக்கு வெளியே 200 மீட்டர் தொலைவில் வேட்பாளர்கள் அமைக்கும் உதவி பூத்களில் யாரும் பணியாற்றலாம் என்று சொல்லி அதைச் சிபாரிசு செய்தார். பிறகு ஏதும் சரிவராததால் நான் போகவில்லை. 2016 தேர்தலில் அவர் மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்தது தான் அவரது இயல்பான நிலைப்பாடு. ஆனால் அதன் பின்னிருந்த வைகோவின் சதியை அவரும் கூட உணராதது தான் வருத்தம்.

சமீப ஆண்டுகளில் என் மீது அவருக்கு அதிருப்தி இருந்தது. குறிப்பாய்ப் பெண்கள் பற்றிய என் சில நிலைத்தகவல்களைக் கண்டித்திருந்தார். அதன் உச்சமாய் "பட்டாசு என்பது காசைக் கரியாக்குவதெனில் உணவு என்பது பணத்தைப் பீயாக்குவது தானே!" என்ற என் நிலைத் தகவலுக்கு "உணவு பணத்தைப் பீயாக்குவது என்று சிந்திக்க ஒரு பீ மனம்வேண்டும். உணவு தான் உயிர்வாழச் செய்கிறது என்ற அடிப்படை அறிவியல் உண்மையை புரிந்துகொள்ளாத மனங்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியில் பட்டினியில் சாகட்டும்." எனக் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். உண்ட உணவு மறுதினம் மலமாய்ப் போவதால் போட்ட காசு வீண் என்று நினைப்பதில் அர்த்தமில்லை. இடையில் உடல் அதிலிருந்து சக்தியை உறிஞ்சிக் கொள்கிறது, சுவையை அனுபவிக்கிறது. அது மாதிரி தான் பட்டாசுகள் காசைக் கரியாக்கும் விஷயமும். கரியாகும் முன் பட்டாசு புலன்களை - கண், காது, மனம் - மகிழ்விக்கிறது என்பது தான் நான் உத்தேசித்த பொருள். "பட்டத்திற்கு நன்றி. ஆனால் நான் சொல்வது வேறு. சொல்பவன் மீது அடிப்படையாய் ஒரு நம்பிக்கை இருந்தால் விளக்கமின்றி அவற்றை நீங்களே புரிந்து கொள்ள முடியும். அப்படி இல்லாதவர்களுக்காய் இரு பொழிப்புரைகள் எழுதி உள்ளேன். அப்புறம் புரிதல் அவரவர் விருப்பம் தான்." என்று சொல்லி இருந்தேன். அவரது எதிர்வினை கசப்பூட்டியது என்பது உண்மை தான்.

இரு மாதங்கள் முன் கிண்டிலில் வெளியான 'கமல் ஹாசனின் அரசியல்' என்ற அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நூலை அவருக்கே சமர்ப்பித்திருந்தேன். அது குறித்து அவருக்கும் தெரியப்படுத்தினேன். அப்போது அவர் உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. அது என் மீதான கோபமா அல்லது நிஜமாகவே கவனிக்கவில்லையா என்றறியேன். இனி ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது என்பது தான் சோகம்.

சிஎஸ்கே என்ற எழுத்தாளனை, கருத்தாளனை திட்டவும், நிராகரிக்கவும் வெறுக்கவும் ஞாநி அவர்களால் முடியலாம். ஆனால் சி.சரவணகார்த்திகேயன் என்ற‌ அவரது வாசகனை சீடனை அவரால் மறுதலிக்க முடியாது என நம்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் நன்றி, அய்யா! உங்கள் பணியைத் தொடர உங்கள் மாணாக்கர்கள் முயல்வோம். சென்று வாருங்கள்.

***

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்