நான்காம் தோட்டா [சிறுகதை]


“பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள் உயிர் வாழவே உரிமையற்றவர்கள்.”

பொக்கை வாயவிழ்ந்து புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற் செய்யும் புன்னகை. துப்பாக்கியுடன் வரும் ஒருவனைத் தயங்கச்செய்யும் புன்னகை.

தில்லி டிஐஜியும் காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள்.

நேற்று போலீஸ் சூப்பரின்டென்டண்ட் காந்திக்குப்பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாம் முயற்சி.


ஏற்கனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடங்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு.

சென்ற வாரம் அங்கு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின்தான் இந்த முன்னெச்சரிக்கை. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. சுவர் மட்டும் சேதாரம் கண்டிருந்தது. பஞ்சாபி அகதி ஒருவன் காந்தியின் மீது சினமுற்று அதைச் செய்திருந்தான். போலீஸ் அவனைத் துருவிக்கொண்டிருக்கிறது. காந்தி சொன்னார்-

“அந்தப் பையனைத் துன்புறுத்தக்கூடாது. உண்மையில் நாம் அவன் மீது பரிதாப்பட வேண்டும். அவன் தவறான வழியில் செலுத்தப்பட்டு விட்டான். அவ்வளவுதான்.”

பிர்லா பவனுக்கு வருபவர்களைச் சோதனையிட வேண்டும் என டிஐஜி கோரினார்.

“அதைச் செய்வதற்குப் பதில் பிரார்த்தனைக்கூட்டங்களையே நிறுத்தி விடுவேன்.”

“…”

“என் வாழ்க்கை கடவுளின் கைகளில் இருக்கிறது. நான் சாக வேண்டும் என்றாகி விட்டால் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் என்னைக்காப்பாற்ற முடியாது.”

*

இந்திரா காந்தி விமான நிலையத்தின் 1சி டெர்மினலில் வந்திறங்கிய போது நீண்ட நாள் பிரிந்திருந்த காதலன் போல் புதுதில்லிக் குளிர் சபர்மதியை இறுகத்தழுவியது. சென்னையில் விமானமேறிய வேளை தோழமை காட்டிய ஸ்லீவ்லெஸ் தற்போது துரோகியாகி இருந்தது. மடித்து வைத்திருந்த ஜெர்கினை அணிந்து கொண்டாள்.

யாரோ ஓர் ஆர்வக்கோளாறு ஆசாமி உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு பத்திரிக்கைக் காரியான அவளை 1760 கிமீ தூரம் இழுத்து வந்திருந்தது. காந்தியின் படுகொலையில் கோட்ஸே தவிர்த்த இன்னொருவன் இருக்கிறான், அதனால் வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஆளின் வாதம். பரந்து விரிந்த இத்தேசத்தின் பெரும்பாலான பிரஜைகள் அதைப்பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் துரதிர்ஷடவசமாய் சமர்பதியின் முதலாளி அதை அத்தனை சுலபமாய் விடவில்லை.

அரசியல்.காம் என்ற செய்தி வலைதளம் அது. ப்ரேக்கிங் ந்யூஸுக்கு அலையாமல் தரமான கட்டுரைகளையும், நேர்காணல்களையும் வெளியிடுகிறார்கள். ஓராண்டில் கணிசமாய் வாசகர்கள் கூட, விளம்பர வருமானம் கொண்டே இயங்க முடிந்தது.

எண்பதுகளின் இறுதியில் அரசியல் செய்திகட்கென தனிப்பத்திரிக்கை துவங்கப்பட்ட போது அதில் சேர்ந்து இதழியில் தொழிலில் நுழைந்தவர் அவள் முதலாளி. பின் பல பத்திரிக்கைகள் மாறி, இப்போது ரிட்டயர்மெண்ட் காலத்தில் இந்த வலைதள முயற்சி.

சபர்மதி விகடன் மாணவ பத்திரிக்கையாளராகப் பயிற்சி பெற்றவள். அதனால் பிடெக் ஐடி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் இருந்த போது இந்தத்தளத்தில் நிருபர் பணியிடம் இருப்பது கேள்விப்பட்டு விண்ணப்பித்துச் சேர்ந்து விட்டாள். அது பெரிய நிறுவனம் எல்லாம் இல்லை. அவளைப்போல் இன்னும் மூன்று நிருபர்கள், ஒரு லேஅவுட் ஆர்டிஸ்ட், கணக்கு வழக்கு பார்க்க ஒருவர், அலுவலக நிர்வாகத்துக்கு ஒரு பெண், என முதலாளியோடு சேர்த்தே மொத்தம் எட்டு பேர்தான். ஆறு மாதம் முன்தான் தேனாம்பேட்டை கச்சடா சந்து ஒன்றில் அலுவலகம் பிடித்திருந்தார்கள்.

ஐந்திலக்கச் சம்பளம் மாதமொரு முறை பேண்டலூனில் வாங்கவும், க்ரீன்ட்ரென்ட்ஸ் போகவும், ஹிக்கின்பாதம்ஸ் வேட்டைக்கும் சபர்மதிக்குப்போதுமானதாய் இருந்தது.

“மதி, திஸ் இஸ் கெட்டிங் இன்ஸ்ட்ரெஸ்டிங். ரொம்ப நாளா இவுங்க சொல்லிட்டு இருக்கறதுதான். இப்ப அபெக்ஸ் கோர்ட்ல பெட்டிஷன் போட்டு பெருசு பண்றாங்க. காந்தி அசாசினேஷன்ல இன்னொரு ஆளு இருந்தான்னு, அவன் சுட்ட புல்லட்தான் அவரைப் பலி வாங்குச்சுன்னு. இதை விசாரிச்சு ஒரு ஸ்டோரி பண்ணலாம் நீ.”

“செய்யறேன் ஸார். எப்போ வேணும்?”

“அதை நீதான் சொல்லனும்.”

“ஐடி ரெய்ட்ஸ் பத்தி ஆர்ட்டிகிள் பண்ணிட்டு இருக்கேன். அது முடிஞ்சதும் தர்றேன்.”

புன்னகைத்தார்.

“மதி, நான் சொல்றது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸம். தில்லி போய் விசாரிச்சு, தகவல்கள் சேகரிச்சு எழுதனும்.”

சபர்மதிக்கு சிரிப்பு வந்து விட்டது. மரியாதை நிமித்தம் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஸார், காந்தி செத்து எழுபது வருஷமாச்சு. இப்பப்போய் அங்கே என்ன கேட்கறது? எங்கன்னு பார்க்கறது? யாரை விசாரிக்கறது? அப்ப விசாரிச்சவங்களும், தீர்ப்புக் கொடுத்தவங்களும் கூட இப்ப உயிரோட இருக்காங்களான்னு உறுதியில்ல.”

“பத்திரிக்கையாளன் நினைச்சா எல்லாத்தையும் தோண்டலாம்.”

“போலீஸை விடவா?”

“நிச்சயமா. காரணம் பத்திரிக்கைக்காரன்கிட்ட முக்கியமா இருக்கும் ஒரு விஷயம் போலீஸ்காரன்கிட்ட இல்ல. க்யூரியாஸிட்டி.”

“ஆனா இந்த விஷயத்தில் இது வெட்டிவேலை, ஸார்.”

“எப்பவாவது நான் சொல்றதக் கேட்ருக்கியா நீ”

“சேச்சே, அப்படியில்லை ஸார். இது இண்டர்நெட் யுகம். எல்லாத்தகவல்களும் விரல் நுனியில் வந்து விழுது. அதை வெச்சே கனமான கட்டுரை ஒண்ணு எழுதிட முடியும். ஏற்கனவே நிறைய செஞ்சிட்டாங்க. நான் புதுசா என்ன கண்டுபிடிக்கப் போறேன்!”

“காந்தி கொலையைப் பற்றி காந்தியே எழுதி இருக்க முடியாது. அப்படி அவரே எழுதி இருந்தா வேணா அதை ஆதாரமா எடுக்கலாம். தேடிப்பார்க்கறயா இண்டர்நெட்ல?”

“ஸார், டெல்லி போனா மட்டும் என்ன காந்தியேவா என்கிட்ட பேசிடப்போறார்?”

“இந்த ஜெனரேஷனே டெஸ்க்டாப் ஜர்னலிஸத்தில் சுகங்கண்டுருச்சு. டேபிள்லயே எல்லாம் முடியனும். ஃபீல்ட்ல இறங்கவே முடை. நோகாம நுங்கு திங்கனும்.”

சபர்மதி ஏதும் பேசவில்லை. பேசித்தீரும் முரண் எதுவுமில்லை; வளரவே செய்யும்.

“சரி, நாளைக் காலைக்குள் உன் டெசிஷனைச் சொல்லு. போக வர ஃப்ளைட் டிக்கெட் உண்டு, ஸ்டார் ஹோட்டலில் ரெண்டு நைட்டுக்கு ஸ்டே ஏற்பாடு பண்றேன். உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னா பதிலா ஜோசஃப்பையோ செந்திலையோ அனுப்புவேன். நீ கொஞ்சம் சென்சிபிள்னு நினைச்சுதான் உன்னை இதுக்கு செலக்ட் பண்ணினேன்.”

சபர்மதிக்கு உண்மையில் இதில் விருப்பமே இல்லை. அவர் சொல்லும் விஷயங்கள் எல்லாமே இன்று இணையத்தில் அல்லது புத்தகங்களில் தேடி எடுத்து விடலாம். அல்லது சம்மந்தப்பட்டவர்களை தொலைபேசியில், மின்னஞ்சலில், தேவைப்பட்டால் ஸ்கைப்பில் பிடித்துக்கேட்டு விடலாம். இதற்காக ஓர் ஆள் தில்லி வரை செல்வது சிறுபிள்ளைத்தனம். அந்நேரத்தில் உருப்படியான வேறு வேலைகள் செய்யலாம்.

எல்லாவற்றுக்கு மேல் காந்தி அவள் அரசியலுக்கு ரொம்ப வேண்டியவரும் அல்ல.

தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி – கோவை சூலூர் விமான தளத்துக்குத் தீ வைத்த வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர் - என்பதால் காந்தியின் மீதான அபிமானத்தில் பேத்தி பிறந்த போது சபர்மதி எனப்பெயரிட்டது தவிர காந்தியுடன் எந்தப் ப்ராப்தமும் அற்ற அவள் ராவெல்லாம் யோசித்துச்சம்மதம் சொன்னாள்.

ஃப்ளைட் டிக்கெட்டும், ஸ்டார் ஹோட்டலும் ஆசை காட்டின என்பது வேறு விஷயம்.

*

ஜனவரி 30, 1948.

காந்தி அன்று மூன்றரை மணிக்கே துயிலெழுந்தார். வழக்கத்தை விட அது சீக்கிரம்.

சஞ்சலமுற்றவராகக் காணப்பட்டார். பிரிவினையின் ஓலங்கள், உட்கட்சி உரசல்கள் எனக் காரணங்கள் இருந்தன. அசந்துறங்கிக் கொண்டிருந்த ஆபா தவிர எல்லோரும் அவசரமாய்ப் பிரார்த்தனைக்குத்தயாரானார்கள். பகவத் கீதை ஸ்லோகங்களை மனு வாசித்தாள். பின் தனக்குப் பிடித்த குஜராத்தி பஜன் ஒன்றை பாடச்சொன்னார் காந்தி.

“சோர்வடைகிறாயோ இல்லையோ, ஓ மனிதா! ஓய்வெடுக்காதே, நிறுத்தாதே. உன் போராட்டத்தை நீ தனியொருவனாய் நிகழ்த்துகிறாய் எனில் அது தொடரட்டும்…”

மனு கண்கள் மூடி முதிராமல் கனிந்த தன் பதின்மக்குரலில் பஜனை இசைத்தாள்.

அதன் பின் வெந்நீரில் தேனும் எலுமிச்சைச்சாறும் கலந்து காந்திக்குக்கொடுத்தாள் மனு. அப்போது வரையிலும் ஆபா எழுந்திருத்திருக்கவில்லை. காந்தி சொன்னார்-

“நெருங்கியவர்கள் மீதான என் செல்வாக்கே சரிந்து வருகிறது. இவற்றை எல்லாம் காண நெடுங்காலம் கடவுள் என்னை இங்கு விட்டுவைக்க மாட்டாரென நம்புகிறேன்.”

*

சபர்மதி முதலில் போனது தேசிய காந்தி அருங்காட்சியகத்திற்கு. ராஜ்காட்டிலிருந்து - காந்தி சமாதி – கூப்பிடு தூரத்தில் இருந்தது. அருங்காட்சியக இயக்குநரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்ட போது காத்திருக்கச்சொன்னார்கள். அது அரசு அலுவலகம் என்பது நினைவு வர, ம்யூஸியத்தைச் சுற்றிப்பார்த்து விடுவோம் எனக்கிளம்பினாள்.

ராட்டைகள், ஆசிரமங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், காந்தியும் கஸ்தூர்பாவும் பயப்படுத்திய பொருட்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துக்காட்சிப்படுத்தியிருந்தனர்.

காந்தியின் உரைகளை அவர் குரலிலேயே இந்தியில்/ ஆங்கிலத்தில் ஒலிக்கும் ஆறு தொலைபேசிகள் இருந்தன. அவற்றில் இரண்டு வேலை செய்யவில்லை என்பதைத் தவிர அருங்காட்சியகம் முழுக்கப்பொதுவாக ஒரு நேர்த்தி இருந்தது. காந்தியம்!

மார்டிர்டம் கேலரி என்ற பெயரில் அவரது படுகொலை தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்தி இருந்தார்கள். குருதி தோய்ந்த அவரது வேட்டி, சால்வை, அவரைச் சுட்ட தோட்டா, அவர் அஸ்தியைப்பல இந்திய நதிகளில் கரைக்க எடுத்துச்சென்ற கலசங்கள் இருந்தன. 9 மிமீ விட்டம் கொண்ட அந்தத்தோட்டா ஒரு நூற்றாண்டின் சிறந்த மனிதனின் உயிரைப்பருகியதற்கான சுவடின்றி சமத்காரம் காட்டியது.


மேலும் காத்திருப்புக்குப்பின் வந்த தாட்டியான ஆள் தன்னை ம்யூஸியம் டிரக்டர் என அறிமுகம் செய்து கொண்டார். வாயில் ஏதோ மென்று கொண்டிருந்தார். எந்த நொடி வேண்டுமானாலும் எதிராளி மீது தெறிக்கலாம் என்பது மாதிரியான குதப்பல்.

சமர்மதிதான் வந்த வேலையைச் சொன்னாள். நேர்காணல் போல் எடுத்துக்கொண்டு பின் அத்தகவல்களைக்கட்டுரைக்குப் பயன்படுத்திக்கொள்வதாய்த் தெரிவித்தாள்.

“காந்தியைச் சுட்ட புல்லட் எல்லாம் இங்கதான் வெச்சிருக்கீங்க, இல்லையா?”

“ஆமா.”

“மொத்தம் எத்தனை?”

“மூணு.”

“ஆனா இங்க காட்சிக்கு ஒண்ணுதான் இருக்கு?”

“ஆமா, மீதி ரெண்டை பத்திரப்படுத்தி இருக்கோம். அது ம்யூஸியத்தோட ப்ராப்பர்ட்டி தான். ஹிஸ்டாரியன்ஸ், உங்கள மாதிரி மீடியா பீபுள் வந்து கேட்டா காட்டறோம்.”

“நாலாவது புல்லட்னு ஒண்ணு இல்லவே இல்லையா?”

“எனக்குத்தெரிஞ்சு இல்ல.”

“ஆனா மனு தன் டைரில காந்தியின் உடலைக் குளிப்பாட்ட அவரது வேட்டியைக் களைந்த போது அதிலிருந்து தோட்டா ஒண்ணு விழுந்துச்சுனு எழுதி இருக்காங்க.”

“அது இந்த மூணுல ஒண்ணுதான்.”

“எப்படி?”

“பிர்லா ஹவுஸ்ல காந்தி சுடப்பட்ட இடத்துக்குப்பின் பூஞ்செடிகளில் போலீஸால் கண்டெடுக்கப்பட்டது முதல் தோட்டா. காந்தியை எரியூட்டிய சாம்பலிலிருந்து கண்டெடுக்கப்பட்டது ரெண்டாவது தோட்டா. நீ சொல்ற தோட்டா மூணாவது.”

“அப்ப நிச்சயமா கோட்ஸே சுட்டதுலதான் காந்தி செத்தாரா?”

“ரெண்டடி தூரத்துல நின்னு மூணு முறை சுட்டும் 78 வயசுக் கிழவர் சாகலைன்னு நம்பறதே முட்டாள்தனம். மூணும் நெஞ்சைச்சுத்தி மூணு இஞ்ச் தூரத்துக்குள்ள.”

“காந்தியோட பாடில எத்தனை குண்டுக்காயம் இருந்துச்சு?”

“மொத்தம் அஞ்சு. மூணு காயம் குண்டு பாய்ஞ்சதால, குண்டு வெளிய வந்ததால ரெண்டு. ஒரு குண்டு உள்ளயே தங்கிடுச்சு. அதுதான் அவர் அஸ்தியில எடுத்தது.”

“பாடியை ஏன் போஸ்ட்மார்டம் செய்யல?”

“காந்தியின் குடும்பம் அதை விரும்பல.”

“ஆச்சரியமா இருக்கு ஸார்.”

“வேற ஏதும் கேள்வி இருக்கா?”

நன்றி சொல்லி விடைபெற்றாள். அவர் வாய்க்குதப்பலைத் துப்பிய சப்தம் துரத்தியது.

*

தினப்படி காலை உணவான ஒரு கோப்பை ஆரஞ்சுப்பழச்சாற்றை அருந்தியபின் களைப்பில் உறங்கிப்போன காந்தி, தானாக எழுந்து கழிவறை நோக்கி நடந்தார்.

“மிக வினோதம், பாபுஜி!”

“ஏன் மனு?”

“சமீப நாட்களில் நானன்றித்தனியாய் எங்கும் நீங்கள் நகர்ந்ததே இல்லை.”

“அது நல்லதல்லவா! தாகூர் சொல்லி இருக்கிறார்- தனியே நட, தனியே நட…”

மனுவுக்கு முந்தைய நாள் பிற்பகலில் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வந்தது.

பிரிவினையை ஒட்டிய மதக்கலவரங்களால் வீடிழந்த சில கிராம மக்கள் காந்தியைச் சந்திக்க வந்திருந்தார்கள். காந்தி அவர்களை ஆற்றுப்படுத்தினார். பழிதீர்ப்போம் என்று சொன்ன ஓர் இளைஞனை அதட்டி அடக்கினார்-

“பழிவாங்கலுக்கு முடிவே இல்லை, மகனே. கண்ணுக்குக்கண் என்பது உலகையே குருடாக்கும். ஒருவரது தவறுக்கு வேறு யாரையோ தண்டித்தல் என்ன நியாயம்?”

சட்டென வெகுண்ட அந்த இளைஞன் வெடித்துப் பேசினான்-

“இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் எங்கள் கைகளைக் கட்டிப்போட்டீர்கள். இப்படித் தான் எங்களை முழுமையாக அழித்தொழித்து விட்டீர்கள். இந்த தேசத்தை, இதன் அரசியலை விட்டு விட்டு எங்கேனும் இமயமலைப்பக்கம் போய் விடுங்களேன்…”

உடன் வந்திருந்தவர்கள் அவனை அடக்கி, அமைதிப்படுத்தி அழைத்துப்போனார்கள்.

மனு அச்சொற்களில் அதிர்ந்திருந்தாள். காந்தி நெடுநேரம் பேசாமல் யோசனையாக இருந்தார். அன்று இரவு உறங்கப்போகும் முன் மனுவிடம் காந்தி சொன்னார்-

“இவர்களின் அழுகுரல் கடவுளின் ஆணை போன்றது. இது எனக்கான மரண ஓலை!”

*

“புல்ஷிட்.”

சொன்ன சௌரப் மிஸ்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியர். நவீன இந்திய வரலாறு அவரது ஆர்வம். முதலாளிக்கு நண்பர் என்ற வகையில் சபர்மதிக்கு நேரம் ஒதுக்கி இருந்தார். வார இறுதி என்பதால் பல்கலைக்கழகத்தில் அல்லாமல் அவரது வீட்டிற்கே வரச் சொல்லி இருந்தார்.

“காந்தியைச்சுட்ட துப்பாக்கி எம்1934 பெரெட்டா. செமிஆட்டோமேட்டிக் மாடல். அதன் சீரியல் நம்பர் 606824. அதே சீரியல் நம்பரில் இன்னொரு துப்பாக்கியும் இருக்குன்னு காந்தி கேஸை ரிஓப்பன் பண்ணக்கேட்கற ஆள் சுப்ரீம் கோர்ட் மனுவில் சொல்லி இருக்கார். அது பத்திச்சொல்லுங்க.” என்ற கேள்விக்குத்தான் அப்படிச்சொன்னார்.

“அது ஒண்ணும் நாட்டுத்துப்பாக்கி இல்ல. இட்டாலியன் மேட். ராணுவத்துக்கு ஆயுதம் செய்யறவங்க. சீரியல் நம்பர் ட்யூப்ளிகேட் ஆக வாய்ப்பே இல்லை.”

“அப்புறம் இப்படி ஒரு தியரி எப்படி வந்திருக்கும்?”

“606824 சீரியல் நம்பர் கொண்ட துப்பாக்கி ஒண்ணுதான். காந்தியைச் சுட்ட அன்னிக்கு கோட்ஸே கிட்ட இருந்து அதை சீஸ் பண்ணினாங்க. விசாரணை முடிஞ்சு தீர்ப்பு வந்ததும் நேஷனல் காந்தி மியூசியத்துக்கு அதைக்கொடுத்துட்டாங்க. அங்க அதுக்கு ட்யூப்ளிகேட் தயார் பண்ணி காட்சிக்கு வெச்சிருக்காங்க. ஒரிஜினலைப்பத்திரப்படுத்தி இருக்காங்க. அந்தவகைல வேணும்னா ரெண்டு துப்பாக்கின்னு சொல்லலாம்.”

“கோட்ஸேவுக்கு எப்படி அந்தத்துப்பாக்கி கிடைச்சுது?”

“காந்தி கொலைக்கு ரெண்டு நாள் முன்ன வரை கோட்ஸே க்ரூப்புக்குக்கிடைச்ச துப்பாக்கி ஏதுமே சரியா வேலை செய்யல. அதனாலதான் ஜனவரி 20 அன்னிக்குக் கையில் துப்பாக்கி இருந்தும் அவுங்களால அவரைக்கொல்ல முடியல. நல்லதா ஒரு துப்பாக்கி தேடிட்டு இருந்தாங்க. தத்தாத்ரேயா பார்ச்சூர்னு ஒரு டாக்டர். குவாலியர்ல ரைட் விங் பாலிடிக்ஸ்ல பெரிய கை. அவர்கிட்ட பெரெட்டா துப்பாக்கி இருக்குன்னு கேள்விப்பட்டு கோட்ஸே க்ரூப் அவர் வீட்டுக்குப்போனாங்க. தன் துப்பாக்கியை அவர் கொடுக்கல. கங்காதர் தண்டவதேன்னு ஒருத்தன் கிட்ட துப்பாக்கி ஏற்பாடு பண்ணச் சொன்னார். கடைசியில் ஜகதீஷ் பிரசாத் கோயல்னு ஒரு கள்ளத்துப்பாக்கி வியாபாரி மூலமா இந்த பெரெட்டா கிடைச்சுது. ஐந்நூறு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்காங்க.”

“பார்ச்சூர் வெச்சிருந்த பெரெட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்மந்தமில்லையா?”

“இல்லை. காந்தி கொலைக்கு அப்புறம் பார்ச்சூரை விசாரிக்கப் போன போலீஸ் அவர் வீட்டுல இருந்த பெரெட்டாவைக் கைப்பற்றினாங்க. அதோட சீரியல் நம்பர் 719791.”

“அப்படின்னா நாலாவது தோட்டா அப்படிங்கறதே இல்லையா?”

“இருக்கு. குவாலியர்ல பார்ச்சூர் வீட்டுத்தோட்டத்துல சுடப்பட்ட ஒரு தோட்டாவைப் போலீஸ் எடுத்தாங்க. தண்டவதே கோட்ஸேவுக்கு முதலில் வேற துப்பாக்கிதான் ஏற்பாடு செஞ்சு, அதைத் தோட்டத்தில் வெச்சுச் சுட்டு டெமோ காட்டி இருக்கான். அடுத்து கோட்ஸே ட்ரை பண்ணினப்ப அது ஒழுங்காச்சுடல. அதனாலதான் தண்டவதே துப்பாக்கி தேடி அடுத்து ஜகதீஷ் பிரசாத் கோயல்கிட்ட போனான்.”

“அதாவது அந்தத் தோட்டாவுக்கும் காந்தி கொலைக்கும் சம்மந்தம் இல்லை?”

“ஆமா!”

“இன்னொரு விஷயம் நியூஸ்பேப்பர் ஆதாரங்கள். டைம்ஸ் ஆஃப் இந்தியா, The Dawn, லோக்சட்டா மாதிரி சில பத்திரிக்கைகள் நாலு குண்டுன்னு சொல்லி இருக்காங்க.”

“அதே சமயம் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், த டெய்லி டெலகிராஃப் மாதிரி நிறைய பத்திரிக்கைகள் மூணு குண்டுனும் எழுதினாங்க. வரலாறுங்கறது அங்கும் இங்கும் கிறுக்கப்பட்ட சில வரிகளை ஆதாரமா வெச்சு எழுதப்படறதில்ல.”

“தி இந்து பத்திரிக்கை காந்தி படுகொலைக்கு அடுத்தநாள் வெளியிட்ட புகைப்படம் ஒண்ணு இருக்கு. அதில் நான்கு குண்டுக்காயங்கள் காந்தி நெஞ்சுல தெரியுதே.”

“சரியாப்பாருங்க, அதில் மூணுதான் குண்டுக்காயம். இன்னொண்ணு ரத்தக்கறை. பக்கத்துல இன்னொரு சின்ன ரத்தக்கறையும் தெரியும். அஞ்சாவது தோட்டாவா!”

“சரி, இத்தாலித் துப்பாக்கி எப்படி இந்தியா வந்துச்சு?”

“அந்த மாடல் முசோலினியோட ஆர்மிக்காக பெரெட்டா கம்பெனி தயாரிக்கறது. வடக்கு ஆஃப்ரிக்கா அபிசினியாவில் இத்தாலியப் படைகள், ப்ரிட்டிஷ் படையோட - ஃபோர்த் க்வாலியர் இன்ஃபான்ட்ரி - மோதுனப்பத் தோத்து சரண்டர் ஆனாங்க. அதுக்கு அடையாளமா இத்துப்பாக்கியை லெஃப்டினன்ட் கர்னல் ஜோஷிகிட்ட கொடுத்தாங்க. போர் முடிஞ்சு அவர் க்வாலியர் திரும்பினார். அப்படித்தான் துப்பாகி இங்க வந்துச்சு.”

“ஆனா அது எப்படி கள்ளமார்க்கெட் போச்சு?”

“தெரியல.”

“தண்டவதேவைப்பிடிச்சு விசாரிச்சாங்களா?”

“அவன் போலீஸில் கடைசி வரை சிக்கவே இல்லை.”

“பார்ச்சூர்?”

“அவர் அப்ப ப்ரிட்டிஷ் சிட்டிசன். அதனால அவரை ஒண்ணும் பண்ண முடியல.”

“அப்ப ஜகதீஷ் பிரசாத் கோயல்?”

“அவனை இந்தக் கேஸ்ல அக்யூஸ்டாவே போலீஸ் சேர்க்கல.”

“ஏன்?”

“தெரியாது.”

“அந்த பெரெட்டா துப்பாக்கியில எத்தனை குண்டு போட முடியும்?”

“மொத்தம் ஏழு ரவுண்ட் சுடலாம்.”

“கோட்ஸே துப்பாக்கி வாங்கின போது எத்தனை குண்டு இருந்துச்சு?”

“முழுக்க லோட் பண்ணித்தான் கொடுத்திருக்காங்க. பார்ச்சூர் சாட்சி இருக்கு.”

“கொலைக்குப்பின் துப்பாக்கியைக் கைப்பற்றினப்போ?”

“நாலு குண்டு இருந்துச்சு.”

“அப்ப மூணு தடவ சுட்டான்ங்கற கணக்கு சரியா வருது.”

“ஆமா. எனக்கு அதில் எப்பவும் சந்தேகம் இல்லை.”

“ஸ்பாட்ல கோட்ஸேகிட்ட இருந்து துப்பாக்கியைக் கைப்பற்றினது யாரு?”

“ஹெர்பெர்ட் டாம் ரீனர் அப்படின்னு யூஎஸ் எம்பஸி அதிகாரி ஒருத்தர்.”

“அவர் வாக்குமூலம் இருக்கா?”

“அவர் இந்தக் கேஸ்ல விட்னஸே இல்லை.”

“ஏன்?”

“தெரியல.”

“சுருக்கமா இந்த விஷயத்தில் உங்க ஸ்டேண்ட் என்ன?”

“கபூர் கமிஷன் மூணு வருஷம் உழைச்சுச்சொன்ன முடிவுகளை நம்பறேன்.”

“ஃபைன், கேஸோட எஃப்ஐஆர், சார்ஜ்ஷீட் எல்லாம் பார்க்கனுமே நான்.”

“துக்ளக் ரோட் போலீஸ் ஸ்டேஷன்லதான் கேஸ் பதிவாச்சு. அங்க போனா கிடைக்கலாம். ஆனா அதில் புதுசா என்ன கிடைக்கப் போகுது? ஃபன்னி.”

“தெரியல. ஆனா பார்க்கனும். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்.”

*

உண்ணாநோன்பின் உபபலனாக காந்திக்கு இருமல் மோசமாகி இருந்தது. பெனிசிலின் போன்ற மேற்கத்திய வைத்திய முறைகளை அவர் நம்புவதில்லை. அதற்குப்பதிலாக, பனை வெல்லத்துடன் பொடித்த கிராம்பு சேர்த்து எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். அன்று காலை கிராம்புப்பொடி தீர்ந்து போயிருந்தது. அதனால் மனு அவருடன் காலை நடைக்குச்செல்லாமல் அதைச்செய்யும் வேலையில் ஈடுபட்டாள்.

“இரவு விழும் முன் என்ன நடக்கும் என யாருக்குத்தெரியும், மனு? நான் உயிருடன் இருப்பேனோ என்னவோ! ஒருவேளை இருப்பின் செய்துகொள்ளலாம். இப்போது வா!”

காந்தியின் சொற்கள் சுட, மனு அவசரமாய் வந்து அவரை அணைத்தபடி நடந்தாள்.

*

ப்ரிட்டிஷ் காலத்துக் கட்டிடம் என்பது துக்ளக் சாலை காவல் நிலையத்தில் நுழையும் போதே புலப்பட்டது. ப்யூட்டி பார்லரிலிருந்து வெளியே வரும் கிழவி போல் காலம் ஈந்திருந்த சிதிலங்களை சமகாலப்பயன்பாட்டுக்குச் சீர் செய்ய முயன்றிருந்தார்கள்.

இந்திரா காந்தி கொலை வழக்கையும் கூட அங்கேதான் விசாரித்தார்கள் என அதன் செஞ்சுவற்றில் பதிக்கப்பட்ட வெண்கல்லில் பொறிக்கப்பட்ட குறுவரலாறு சொன்னது.

பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டவுடன் இந்திரா காந்தி பற்றிய ஆவணங்கள் வேண்டுமா மஹாத்மாவுடையதா என ஆர்வம் காட்டினார் ஸ்டேஷன் ரைட்டர். அது ஒரு குட்டி சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது எனப்புரிந்தது.

எஃப்ஐஆர் காப்பி கேட்டாள். 68 என்ற எண் கொண்ட காந்தி படுகொலையின் முதல் தகவலறிக்கை உருது மொழியில் எழுதப்பட்டிருந்தது. உதட்டைப்பிதுக்கியபடி அதை வாசிக்க ரைட்டரின் உதவியைக்கோரினாள். ஆங்கிலத்தில் பெயர்த்துச்சொன்னார்-

“… Narayan Vinayak Godse, stepped closer and fired three shots from a pistol at the Mahatma from barely 2 / 3 feet distance which hit the Mahatma in his stomach and chest and blood started flowing.”

மூன்று முறை சுட்டதாகத்தான் இதிலும் பதிவாகி இருக்கிறது. நிகழ்வை நேரில் கண்ட சாட்சியான நந்த்லால் மேத்தா என்ற குஜராத்தியின் வாக்குமூலம் அது.

“கோட்ஸே தவிர அன்னிக்கு காந்தியை வேற யாரும் சுட்டிருக்க வாய்ப்பு உண்டா?”

“அன்னிக்கு பிர்லா ஹவுஸ்ல ப்ரேயர்ல முன்னூறு பேருக்கு மேல இருந்திருக்காங்க. இன்னொருத்தன் சுட்டுட்டு அவுங்களை மீறித்தப்பிச்சிட்டான்ங்கறத நம்ப முடியல.”

“கொலையில் பங்கேற்ற நாராயண் ஆப்தேவும், விஷ்ணு கார்கரேவும் அன்னிக்கு அங்க வந்துட்டு தப்பிச்சாங்க இல்லையா? பிற்பாடுதானே பிடிக்க முடிஞ்சுது?”

“இல்ல, அவுங்க நேரடியா கொலையில் பங்கேற்கல தானே? அவுங்க கோட்ஸே கூட வந்தாங்க, அவ்வளவுதான். சுட்டது கோட்ஸேதான். அவனைப பிடிச்சிட்டாங்க. அதே மாதிரி இன்னும் ஒருத்தன் சுட்டிருந்தா அவனையும் பிடிச்சிருப்பாங்கனு சொல்றேன்.”

“கோட்ஸேவைப் பிடிச்சது யாரு?”

“ரகு நாயக்னு பிர்லா ஹவுஸ்ல தோட்டக்காரனா இருந்தவன்.”

“அவனைப் பத்தி கூடுதல் தகவல் ஏதும் இருக்கா?”

“அவன்தான் காந்தியின் அறையைப்பராமரிச்சு வந்தவன். அவருக்கு ஆட்டுப்பால் கொடுத்துட்டு இருந்ததும் அவன்தான். அதுக்கு மேல வேற ஏதும் தகவல் இல்ல.”

“இப்ப உயிரோட இருக்கானா?”

“இல்ல, செத்துட்டான். 1983லயே.”

“காந்தியோட பாடிகார்ட்னு யாருமே இல்லையா?”

“இருந்தார். ஏ.என். பாட்டியான்னு ஒரு போலீஸ்காரரர் மஃப்டியில் எப்பவும் காந்தி கூடவே இருந்தார். ஜனவரி 20 குண்டுவெடிப்புக்குப்பின் எடுத்த நடவடிக்கை இது.”

“அவரை மீறியா கோட்ஸே சுட்டான்?”

“இல்ல. அன்னிக்கு அவர் அங்க இல்லை. வேற இடத்தில் ட்யூட்டி.”

“ஏன் அப்படி? யார் இதை முடிவெடுத்தது?”

“தெரியாது.”

“நிறைய ‘தெரியாது’ இருக்குதே ஒரு முக்கியமான கேஸ்ல!”

ரைட்டர் மண்டையைச்சொறிந்தார். அவருடைய எல்லை அவ்வளவுதான்.

“காந்தி சடலத்தின் வேட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குண்டு பத்தி சொல்லுங்க.”

“காந்தியின் கடைசி மகன் தேவ்தாஸ் காந்திதான் இங்க வந்து அந்த மூணாவது புல்லட்டைக்கொடுத்தார். மனு காந்தி அதை அவர்கிட்ட கொடுத்திருக்காங்க.”

“இங்கன்னா இந்த ஸ்டேஷனா?”

“ஆமா. அப்ப கோட்ஸேவை அரெஸ்ட் பண்ணி துக்ளக் ரோட் ஸ்டேஷன்லதான் வெச்சிருந்திருக்காங்க. தேவ்தாஸ் வந்தப்பா அவரைப்பார்க்கனும்னு கலாட்டா பண்ணிருக்கான் கோட்ஸே. ஆனா போலீஸ் விடல. என்ன பேச நினைச்சானோ!”

கேஸ் சார்ஜ்ஷீட் பார்க்க வேண்டும் எனக்கேட்ட போது எல்லாக்கோப்புகளையும் தேசிய ஆவணக்காப்பகத்தில் முன்பே ஒப்படைத்து விட்டதாகச்சொன்னார்கள்.

*

மதியம் லைஃப் சஞ்சிகையின் பிரபலப் புகைப்படக்கலைஞரான மார்க்கரெட் வைட் காந்தியை நேர்காணல் செய்ய வந்திருந்தார்: “நீங்கள் 125 வயது வரை வாழ்வேன் என எப்போதும் சொல்லி வந்திருக்கிறீர்கள். அந்த நம்பிக்கையைத்தருவது எது?”

“அந்த நம்பிக்கை இப்போது இல்லை.”

“ஏன்?”

“உலகின் பயங்கர நிகழ்வுகள் காண்கையில் இந்த இருளில் வாழ விரும்பவில்லை.”

*

ஜன்பத் மற்றும் ராஜ்பத் சாலைகள் இணையும் புள்ளியில் நேஷனல் ஆர்க்கைவ்ஸ் ஆஃப் இந்தியா அமைந்திருந்தது. காந்தி கொலை வழக்கு தொடர்பான சில அரசு ஆவணங்களை அங்கே பார்த்தாள் சபர்மதி. தில்லி போலீஸ் வழக்கு விசாரணையை முடித்த பின் எழுதிய ஃபைனல் சார்ஜ்ஷீட்டைக்கேட்டாள். அடுத்து கோட்ஸேவுக்குத் தூக்கு தண்டனை வழங்கிய வடக்கு தில்லி செங்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவைப் பார்க்க வேண்டும் எனக்கேட்டாள். இரண்டுமே அங்கே இருக்கவில்லை.

அங்கே பொறுப்பிலிருந்த அழகான ஆனால் மீசையற்ற இளைஞனிடம் கேட்டாள்-

“அப்ப இரண்டாம் துப்பாக்கி, நான்காம் தோட்டா இதெல்லாமே பொய் தானா?”

“எல்லாம் கற்பனை. அப்படி எல்லாம் சொல்வதன் பின் தனிமனித கவன ஈர்ப்போ அரசியல் உள்நோக்கங்களோதான் இருக்கின்றன. பட் ப்ளீஸ் டோன்ட் க்வோட் மீ.”

*

முந்தைய தினம் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மனுவின் மனதிலோடியது. இந்திரா தன் நான்கு வயது மகன் ராஜீவுடன் காந்தியைப் பார்க்க வந்தார். கொணர்ந்த மலர்களை காந்தியின் கால்களில் வைத்தான் சிறுவன். தீன்மூர்த்தி பவனின் நந்தவனத்தில் அவனே பறித்துச்சேகரித்தது. காந்தி அவனை மடியில் அள்ளியமர்த்திக்கொண்டு-

“நீ இதைச்செய்யக்கூடாது. இறந்தவர்களின் கால்களில்தான் ஒருவர் பூ வைப்பார்.”

*

அறைக்குத் திரும்பிய போது சபர்மதி மிகக்களைத்திருந்தாள். ஒருபுறமாய்த் தலை விண்ணெனத் தெறித்தது. மிதச்சூட்டில் நீர் வழியவிட்டு நெடுநேரம் ஜக்கூஸியில் கிடந்தாள். மதிய உணவுக்குப்பின் ஹோட்டலை செக்கவுட் செய்தாள். இரவு பத்து மணிக்குத்தான் ஃப்ளைட். அதுவரை என்ன செய்வது என யோசித்த போது காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தைப்பார்க்கவே இல்லை என்று உறைத்தது.

*

மாலை வல்லபாய் படேல் தன் மகள் மணியுடன் காந்தியைச்சந்திக்க வந்தார். அரசில் நேருவுக்கும் அவருக்குமான முரண்கள் முற்றியிருந்தன. 5 மணிக்கு சந்திப்பு முடிந்து படேல் கிளம்ப வேண்டியது. ஆனால் 5:10 ஆகியும் உரையாடல் நீடித்திருந்தது.

பிரார்த்தனைக்கு நேரமாகி விட்டது என்பதை ஆபா சைகையில் காட்டியதை காந்தி கவனிக்கவில்லை. மனு மணியிடம் கண்கள் காட்டித்தாமதமாகி விட்டதென்றாள். புரிந்து கொண்ட மணி படேலிடம் அதைக்கிசுகிசுக்க, அவர் விடை பெற்றெழுந்தார்.

காந்தியைச்சந்திக்க கதியவாரிலிருந்து முக்கியத் தலைவர்களான யூஎன் தேபரும் ராசிக்லால் பரேக்கும் காத்திருந்தனர். மனு அதை காந்திக்குத்தெரியப்படுத்தினாள்.

“பிரார்த்தனைக் கூட்டத்துக்குப்பின் பார்க்கிறேன் என அவர்களிடம் சொல். அதுவும் நான் உயிரோடு இருந்தால்…”

மனுவுக்குத் திக்கென்றது. இரும்பு மனிதரான படேலே அச்சொற்களில் ஆடிப்போனார்.

*

தில்லியின் பெண்மைமிக்க குளிர் செந்தரையில் பரவிப்பிரதிபலித்துப் பாதங்களில் சில்லிட்டது. காந்தி இறுதியாய் நடந்த பாதையில் பாத அடையாளங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். பரதன் வாங்கிச்சென்ற ராமனின் பாதரட்சை போல் அவை ஒவ்வொன்றும் காட்சியளித்தன. சபர்மதி அதை அடியொற்றி நடந்து சிலிர்த்தாள்.

பிர்லா ஹவுஸ் காந்தி ஸ்ம்ரிதி ஆகிவிட்டது. அச்சாலையின் பெயரே இப்போது தீஸ் ஜனவரி மார்க் தான். தோட்டத்தில் காந்தி சுடப்பட்ட இடத்தில் சிறுமண்டபம் எழுப்பி இருந்தார்கள். அந்த ஞாயிறு மாலையிலும் அங்கே கூட்டமே இல்லை. சென்னை காந்தி மண்டபம்போல் ஆகாத வரை சந்தோஷம்தான் என எண்ணிக்கொண்டாள்.

முக்கால் காற்சட்டை அணிந்து தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தவர் காலணியைக் கழற்றி விட்டுப் போ என்று சைகையால் சொன்னார். தன் முகத்தைப்பார்த்து இந்தி தெரியாதவள் என்று தீர்மானித்திருக்க வேண்டும். செருப்பைப்பிரிந்து நடந்தாள்.

மண்டபத்தின் முன் ஒரு மூதாட்டி மண்டியிட்டுக்கண்கள் மூடி இருந்தாள். அழுது கொண்டிருக்கிறாளோ எனத்தோன்றியது. எப்படியும் எண்பது வயதிருக்கும். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் மெல்ல அடியெடுத்து வைத்து மண்டபத்தைச்சுற்றி வந்தாள். சற்று நேரம் நின்று பார்த்தாள். கிழவி கண் திறப்பதாய்த்தெரியவில்லை.

பொறுமை இழந்து நகர எத்தனித்த போது, “எனக்காகக்காத்திருக்கிறாயா பெண்ணே?”

திடுக்கிட்ட சபர்மதி சன்னமாய்ச்சங்கடப்பட்டாள். இன்னுமவள் கண் திறக்கவில்லை.

“இல்ல… சும்மாதான்…”

இப்போது கண் திறந்து இவள் பக்கம் திரும்பிப்புன்னகைத்தாள். எழுந்து கொண்டாள்.

“குடும்பத்துடன் தில்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ராஜ்காட்டுக்குச்செல்வார்கள், ஐம்பது ரூபாய் கொடுத்து இன்ஸ்டண்ட் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள், இந்தப் பக்கம் வர மாட்டார்கள். என் போல் முதியவர்கள்தான் வருவார்கள். காந்தி பக்தர்கள், வினோபா பாவேவால் ஈர்க்கப்பட்டவர்கள், காந்தியை விட முரட்டு காந்தியரான மொரார்ஜி தேசாயைப்பிடித்தவர்கள் என. இளைஞர்கள் வருவது அபூர்வம். சில சமயம் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து மாணவர்களைக்கட்டாயமாய் அழைத்து வருவார்கள். தில்லி டூரிஸத்தின் பட்டியலிலும் இது பிரதானம் இல்லை. காந்தி கொல்லப்பட்ட இடம் மதவாதம் வென்றதன் குறியீடு என்றோ மதத்தீவிரவாதம் வெளிப்பட்டதன் சாட்சி என்றோ எண்ணி அரசுகள் மாறிமாறி மறைக்கின்றனவோ!

“நான் ஒரு ஜர்னலிஸ்ட். வேலை நிமித்தமாய் இங்கே வந்தேன்.”

“அதுதானே பார்த்தேன்!”

நிச்சயம் அதில் ஏளனம் இருந்தது. ஆனால் மறுத்து என்ன பேச எனத்தெரியவில்லை.

“இஃப் யூ டோன்ட் மைண்ட், என்ன வேலைன்னு தெரிஞ்சுக்கலாமா?”

கிழவி தன் வேலையையும் ஏளனம் செய்வாளோ என அசூயை தோன்றினாலும் இவளிடம் நமக்கான தகவல் ஏதேனும் தேறுமோ என்ற நப்பாசையும் எழுந்தது.

“காந்தி கொலையில் இரண்டாவதாய் ஓர் ஆள் இருக்கிறான் என்கிறார்கள். அவன் சுட்ட தோட்டாதான் அவர் உயிரைக்குடித்ததாம். அதை விசாரித்து எழுத வந்தேன்.”

வாய் விட்டுச் சரித்தாள் கிழவி, “நாம் இங்கே சந்திக்க நேர்ந்தது ஆச்சரியம்தான்.”

“ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்?”

“காந்தி சுடப்பட்ட போது நான் இங்கேதான் இருந்தேன். பிரார்த்தனைக்கூட்டத்தில் ஒருத்தியாய். என் தந்தையின் தோளின் மீதேறி நின்றிருந்தேன். அப்போது எனக்கு ஐந்து வயது. என் தந்தை அப்போதெல்லாம் வாரம் ஒரு முறையேனும் இங்கே பிரார்த்தனைக்கு வந்து விடுவார். காந்தியைப்பார்க்க, அவர் பேசுவதைக்கேட்க.”

கிழவி பொய் சொல்கிறாளோ என முளைத்த சந்தேகத்தை மீறி சபர்மதி பரபரத்தாள்.

“என் தேடலுக்கு உங்ககிட்ட ஏதேனும் தகவல் இருக்கா?”

“மூன்று குண்டுகள் சுடப்பட்டதாய்த்தான் என் ஞாபகம். நினைவில் பதிந்திருப்பதை விட வரலாற்றில் எழுதப்பட்டவற்றை படித்துப்படித்து, அவையே பதிந்து விட்டன.”

“இறக்கும் போது காந்தி ‘ஹே ராம்’னு சொன்னாரா?”

“அப்போ ஒரே கூச்சல், குழப்பம். களேபரம். ஒண்ணுமே தெளிவில்ல. அப்ப நான் சின்னப் பிள்ள வேறயா. பயந்து போனேன். அதனால சரியாச்சொல்ல முடியல.”

ஏமாற்றமாய்க் கிழவியைப்பார்த்தாள் சபர்மதி.

“ஆனா ஒரு விஷயம். அவர் விரும்பினது போலத்தான் அவரோட சாவு இருந்துச்சு.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“இறப்பதற்கு ரெண்டு நாள் முன் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் அதைப்பேசினார்- நான் நோய் வந்து இறந்தால் நீங்கள் வீட்டுக்கூரைகள் மீதேறி நான் ஒரு பொய்யான மஹாத்மா எனச்சொல்ல வேண்டும். அப்போதுதான் எங்கிருந்தாலும் என் ஆன்மா அமைதியடையும். ஒரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து அல்லது ஒருவரால் சுடப்பட்டு வெற்று மார்பில் தோட்டாக்கள் வாங்கி, ராமனின் பெயரை உச்சரித்தபடி மரணித்தால் தான் நீங்கள் என்னை ஓர் உண்மையான மஹாத்மா என்று சொல்ல வேண்டும்.”

“…”

“அவர் மஹாத்மா ஆக விரும்பினார் என்றுதான் தோன்றுகிறது. அதனால் உள்ளூர இப்படியான ஒரு மரணத்தையே எதிர்பார்த்திருந்தார். அதற்காகக் காத்திருந்தார்.”

திடுக்கிட்டாள் சபர்மதி. திரும்பும் வழியெங்கும் திரும்பத் திரும்ப அச்சொற்களையே யோசித்துக் கொண்டிருந்தாள். தில்லி வந்த வேலை முடிந்தது போல் தோன்றியது.

*

படேல் கிளம்பியதும் கழிவறை சென்று வந்த காந்தி பிரார்த்தனைக்கூட்டத்துக்குப் பதினைந்து நிமிடங்கள் தாமதமாகி விட்டதை உணர்ந்தார். மனுவையும் ஆபாவையும் தன் இருபுறங்களிலும் ஊன்றுகோலாக்கி கூட்டத்தை நோக்கி நடக்கத்தொடங்கினார்.

“இன்று தாமதமாகி விட்டது. இதெல்லாம் எனக்குப்பிடிக்காது எனத்தெரியாதா? நீங்கள்தான் என் கடிகாரம். என் நேரத்தைப்பார்த்துக் கொள்ள வேண்டியவர்கள்.”

மனு மெல்லச்சொன்னாள்- “முக்கியப் பேச்சு என்பதால் முறிக்கத்துணியவில்லை.”

“ஒரு செவிலியின் கடமை சரியான நேரத்தில் நோயாளிக்கு மருந்து தருவதுதான். அது தாமதமானால் நோயாளி இறந்து போகவும் கூடும்.”

“இன்று முழுக்க மரணம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள் பாபுஜி. என் மனம் சஞ்சலம் கொள்கிறது. ஏற்கனவே உங்கள் உயிரைக்குறி வைத்திருக்கிறார்கள்.”

“மனு, என் மகளே! ஒன்றைப்புரிந்து கொள். என் அனுமதியின்றி யாரும் என்னைக் கொல்ல முடியாது. என் விருப்பப்படிதான் என் மரணம் நிகழும்.”

சிரித்தார் காந்தி. உடம்பெங்கும் ஓர் அதிர்ச்சியோடியது மனுவுக்கு. குருக்ஷேத்ரத்தில் பீஷ்மர் அம்புப்படுக்கையில் கிடக்கும் காட்சி மனதில் வாணமாய்த் தெறித்தழிந்தது.

காந்தி இடுப்பில் கட்டியிருந்த இங்கர்சால் கடிகாரத்தின் முட்கள் 5:17 எனக்காட்டின.

***

(13.12.2017 ஆனந்த விகடன் இதழில் வெளியானது)

Comments

மிக அருமை. விமர்சிப்பதற்கு வார்த்தைகள் வரவில்லை.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்