அம்பேத்கர் யார்?


அம்பேத்கர் யார்? அவரது அடையாளம் என்பது என்ன? முதலில் அவர் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதானச் சிற்பி. இரண்டாவதாய் அவர் தலித்களின் விடுதலைக்காகச் சிந்தித்தவர், போராடியவர். அதாவது அவரை நவீன இந்தியாவின் பிதாமகர்களுள் ஒருவர் (One of the godfathers of modern India) என்று தான் பார்க்கிறேன்; தலித் தலைவராக மட்டுமல்ல.


அவரைத் தலித் தலைவர் என்று அடையாளப்படுத்தும் முயற்சி இரண்டு தரப்புகளில் நடக்கிறது. முதலாவது சாதி இந்துக்கள் ஒரு தலித்தை இந்தியாவின் முக்கியத் தலைவராகச் சொல்வதா என்ற காழ்ப்பில் அவரது பங்களிப்பைச் சுருக்கிக் காட்ட முயற்சிக்கிறார்கள். அடுத்தது தலித்கள் இந்தியா முழுக்கவுமே அவரைத் தங்கள் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவராக முன்னிருத்துகிறார்கள். (இந்த இரண்டாவதில் ஓர் உரிமை கொண்டாடல் மட்டுமே இருப்பதால் பிழையில்லை.) ஆனால் உணர்ச்சி வயப்படாது நோக்குங்கால் இன்று 120 கோடி இந்தியர்கள் வாழ்வின் தினசரிகளில் அம்பேத்கர் முன்னின்று உருவாக்கிய அரசியல் சாசனம் செல்வாக்கு செலுத்துவதை வைத்துப் பார்க்கும் போது அவரை நவீன இந்தியாவின் சிற்பி என்ற அடையாளத்துடன் குறிப்பிடுவதே சரி எனப்படுகிறது. அதுவே நியாயம். அதாவது ஒட்டுமொத்த இந்தியாவும் நிலம், சாதி, மதம், இனம், மொழி வித்தியாசமின்றி அவருக்குக் கடன்பட்டிருக்கிறது.

நேற்று மும்பையில் அம்பேத்கரின் சமாதி அமைந்துள்ள சைத்ய பூமிக்குப் போயிருந்தேன். நம்மூர் அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் போல் தாதரில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கே அவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரு தலைவராக அடையாளங்காணப்பட்டிருப்பார் என்றே எண்ணி இருந்தேன். ஆனால் ஒரு தலித் தலைவராகக் கூட அல்ல, ஒரு பௌத்த மதத் தலைவர் போலத் தான் அவர் முன்னிறுத்தப்படுகிறார் என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளித்தது. இன்னும் சொல்லப் போனால் அந்த இடத்தையே புத்த யாத்திரைக்கான ஸ்தலமாகவே பாவிக்கிறார்கள்.

அம்பேத்கர் இந்து மதம் சாதியத்தில் கட்டுண்டது என்பதால் பௌத்தத்தை அதற்கு மாற்றாகச் சொன்னதற்குள் நான் போக விரும்பவில்லை. ஏனெனில் அது முழுக்கச் சரியானதா என்பதில் எனக்கு அதில் குழப்பங்கள் இருக்கின்றன. (இப்போதைக்கு என் தனிப்பட்ட கருத்து அவ்வாறான சூழலில் நான் மதமற்றவனாக இருப்பதையே விரும்புவேன்.) ஆனால் அவர் பல ஆண்டுகளாக இந்து மதம் தவிர்த்த பிற மதங்களைப் பரிசீலித்து வந்தாலும், அது பற்றிய தன் சிந்தனைகளை விரிவாய் நூல்களில் பதிவு செய்திருந்தாலும் அவர் அதிகாரப்பூர்வமாக‌ புத்த மதம் மாறியது 1956ல் தான். அதிலிருந்து 50 நாட்கள் கூட முடியாத நிலையில் அவர் மரணமுற்றார். (அவர் வழிகாட்டலில் லட்சக்கணக்கான தலித்கள் பௌத்தத்தில் இணைந்தார்கள் என்பதும் உண்மையே. இன்றும் அம்பேத்கரையும் பௌத்தத்தையும் நெருக்கமாக‌ இணைத்துப் பார்ப்பவர்கள் கணிசம் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நான் சொல்ல வருவது வேறு.)


அப்படி இருக்க அவரை முழுக்க ஒரு புத்த மதத் தலைவர் என்பதாகச் சித்தரிப்பதை ஏற்கவே முடியவில்லை. அவர் சமாதியில் அவரது உருவத்தருகே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; ஒரு புத்தத் துறவி அமர்ந்து வருபவர்களுக்கு ஆசி வழங்குகிறார்; நுழைவாயிலில் சாஞ்சி ஸ்தூபி உள்ளது; உள்ளே அசோகர் தூண்; அங்கிருக்கும் கடைகள் முழுக்க புத்தர் சிலைகள் அல்லது படங்கள் அல்லது பிற அடையாளங்கள் விற்கப்படுகின்றன. எல்லாமே பௌத்த அடையாளங்கள். அரசியல் சாசனம் பற்றி ஒரு வரி எங்கும் இல்லை. அவர் சாதியம் பற்றியும் தலித் எழுச்சி பற்றியும் பேசிய‌ ஒன்றும் காணோம். இது மாதிரி அவர் சுருக்கப்பட வேண்டும் என்று தான் அரசும் மக்களும் விரும்புகிறார்களா?

அம்பேத்கர் தலித்களின் நிலை உயர இந்து மதத்தை விட்டு வெளியேறவும் புத்த மதத்தில் இணையவும் வேண்டும் எனக் கருதினார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அது அவரது ஒரு முகம் மட்டுமே. அதன் மீது நாம் விமர்சனங்கள் வைக்கலாம் அல்லது முழுமையாகவும் ஏற்கலாம். ஆனால் அதை மட்டுமே எடுத்துக் கொண்டு அவரை புத்த மதத்துக்கு மட்டுமே நெருக்கமாக்க முயல்வது சரியானது தானா? அவர் பௌத்தர்களுக்கு மட்டும் தான் சாசனம் செய்தளித்தாரா? அவர் போராடிய தலித்கள் பௌத்தத்துக்குப் பெயர்ந்தவர்கள் மட்டும் தானா? நிச்சயம் அம்பேத்கரின் பௌத்த‌ முகமும் இடம் பெறட்டும். தவறில்லை. ஆனால் அண்ணலின் மற்ற முகங்களை இருட்டடிப்பு செய்வது சரிதானா?


மோடி அரசு அம்பேத்கர் நினைவக‌ம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இருக்கிறது. இந்துத்துவ அம்பேத்கர் என்று நூல் எழுதியது போல் அவரை இந்து மதத்துக்கு நெருக்கமானவர் என அந்த நினைவகத்தில் திரித்தால் நமக்குக் கோபம் வராதா? அம்பேத்கரின் பௌத்த ஆதரவு முகம் என்பது திரிபு வேலையோ, ஆகாத விஷயமோ இல்லை என்பதைப் புரிந்துள்ளேன். ஆனால் அரை உண்மை என்பதும் பொய்க்குச் சமானம் தான். அதனால் தான் இதை இவ்வளவு ஆதங்கத்துடன் பதிகிறேன்.

அம்பேத்கர் பௌத்த ஆதரவாளராக அல்லது தலித் தலைவராக 'மட்டும்' அவரைச் சார்ந்தவர்களே, அவரை மதித்து விரும்புபவர்களே திரும்பத் திரும்ப முன்வைக்கும் வரை அவரை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கொண்டு சேர்க்க முடியாது. ஏற்கனவே அவரை இட ஒதுக்கீட்டின் மூலம் தலித் அல்லாதோருக்கு துரோகம் செய்தவர் என்று பார்ப்போர் கணிசம். (அது கேணைத்தனமான புரிதல் என்றாலும், அதை மாற்றுவது முக்கியம்.) நாமாக எதையும் இட்டுக்கட்டி வலிந்து அவரைப் பொது ஆகிருதி ஆக்க வேண்டியதில்லை. இருப்பதை உரத்துச் சொன்னாலே போதுமானது.

*

1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

உங்கள் ஆற்றாமை மிகவும் சரியானது. அம்பேத்கர் தலைசிறந்த போராளி! ஆகச் சிறந்த சிந்தனையாளர்! இந்திய சமூகத்தின் கீழ்மைகளுக்கு எதிரான அவர் குரல் வரலாற்றில் மிக முதன்மையானது. அப்பேர்ப்பட்டவரை வெறும் பௌத்தத் தலைவராகப் பார்ப்பது என்பது அப்துல் கலாம் அவர்களை வெறும் இசுலாமியராகப் பார்ப்பதைப் போன்றது.