இந்தி நம் தேசிய மொழியா?
பொது அறிவும் விழிப்புணர்வும் கொண்டவர்கள் நிறைந்ததாகக் கருதப்படும் எங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அசாத்தியத் திறமை கொண்ட மரியாதைக்குரிய சக ஊழியர்கள் சிலர் - குறிப்பாய் வட இந்தியர்கள் - மிகவும் தீர்மானமாக நம்பும் ஒரு விஷயம் “இந்தி நம் தேசிய மொழி” என்பது. தமிழர்களுக்கு இந்தி தெரியாது என்பதே அவர்களுக்கு பேராச்சரியமாக இருக்கிறது. எனக்கு ஜாவா தெரியாது என்று சொல்லி இருந்தால் கூட அத்தனை அதிசயித்திருக்க மாட்டர் எனத் தோன்றுகிறது.
இத்தனைக்கும் அவர்களில் கணிசமானோரின் தாய்மொழி இந்தி அல்ல. ஆனால் எல்லோருக்கும் இந்தியில் குறைந்தபட்சம் பேச மட்டுமாவது தெரிந்திருக்கிறது. இன்னும் சிலருக்குத் தம் தாய்மொழியைக் காட்டிலும் இந்தியே அதிகப் பரிச்சயம்.
சில சமயம் மீட்டிங் இடையே சரளமாக இந்தியில் பேசத் தொடங்கி விடுவார்கள். பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் இந்தி சொல்லிக் கொடுத்தார்கள் என்பதால் அடிப்படை இந்திச் சொற்கள் எனக்குப் புரியும். இந்திப் படங்களைப் பார்ப்பதும் புரிந்து கொள்வதும் அப்படித்தான். (அதிலும் காட்சிரூபமாக நகராமல் முழுக்க வசனங்களால் ஆன இந்திப் படம் எனக்கு உகந்ததல்ல. உதாரணமாய் A Wednesday படம் முழுக்கவே துல்லியமாய்ப் புரிந்தது. ஆனால் Bombay Velvet குத்துமதிப்பாய்த் தான் விளங்கியது.)
அப்படி அவர்களின் பேச்சைத் துண்டு துண்டாக ஒட்ட வைத்து இடஞ்சொற்பொருள் (Context) கொள்வேன். சாத்தியப்படாதபட்சத்தில் “சப்டைட்டில் ப்ளீஸ்” என அச்சூழலை மெல்லிய நகைச்சுவையால் எதிர்கொள்வேன். சட்டென உணர்ந்து ஆங்கிலத்துக்குத் தாவுவார்கள். சமயங்களில் எளிமையாகப் புரியும் சாதாரண சிறுவாக்கியங்களை யாராவது இந்தியில் பேசினால் கூட சிலர் என்னைச் சுட்டி அதை ஆங்கிலத்தில் திரும்பச் சொல்லச் செய்வர். அது குத்திக்காட்டலாகத் தோன்றியதும் உண்டு.
இதில் அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை என்றே நினைக்கிறேன். நானறிந்த வரை அவர்கள் ஒருபோதும் மொழி அல்லது இன வெறியை வெளிப்படுத்தியவர்கள் அல்லர். இந்தி தான் நம்முடைய தேசிய மொழி என்ற கருத்து சிறுவயதிலிருந்தே வட இந்தியர்களுக்குத் தொடர்ந்து ஊட்டப்படுகிறது. சில மாதங்கள் முன் ஹயாத் என்ற மும்பையைச் சேர்ந்த நான்கு வயதுப் பெண் குழந்தை இந்தியா மற்றும் அதன் மாநிலங்கள் தொடர்பான பொது அறிவுக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் சுமார் ஐந்து நிமிட நீளக் காணொளி ஒன்று - குழந்தை என்றால் அப்படி இருக்க வேண்டும் என்ற முன்குறிப்புடன் - ஃபேஸ்புக், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதில் ஒரு கேள்வி “இந்தியாவின் தேசிய மொழி என்ன?”. அந்தப்பெண் சொல்லும் பதில் “இந்தி”. அக்காட்சித்துண்டு எல்லாக்கதையையும் சொல்லிவிடுகிறது!
அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும், இங்கே தமிழகத்திலேயே சிலர் இந்தி தான் தேசிய மொழி என நம்புகின்றனர், மற்றவர்களையும் நம்ப வைக்க முனைகின்றனர். 2015 - 2016 கல்வியாண்டில் தமிழக அரசு பாடநூற்கழகம் வெளியிட்ட எட்டாம் வகுப்பு சமச்சீர்க்கல்வி சமூக அறிவியல் நூலில் “இந்தியாவின் தேசிய மொழி _______ ஆகும்” எனக் கேட்கப்பட்டு ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி இருந்தார்கள். பிறகு அது சுட்டிக்காட்டப்பட்டு பிரச்சனை எழுந்த போது அந்தக் கேள்வி “இந்தியாவின் அலுவல் மொழி _______ ஆகும்” என மாற்றப்பட்டது.
இதில் நுட்பமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று பதின்ம வயது கொண்ட தமிழ் மாணவர்களுக்கு இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று பதிய வைக்கப்படுவது போக, நிராகரிக்க வேண்டிய பதில்களில் ஒன்றாகத் தமிழைப் பட்டியலிடுவதன் மூலம் தமிழ் தேசிய மொழியல்ல என்றும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
*
ஒரு நாட்டின் தேசிய மொழி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவோ (De jure) இயல்பாகவே நடப்பில் இருப்பதாகவோ (De facto) இருக்கலாம். அதற்கு நாட்டின் மீப்பெரும்பான்மை மக்கள் அம்மொழி பேசக்கூடியவர்களாக இருத்தல் அவசியம். உத்தேசமாக 80 முதல் 90 விழுக்காடு வரை அப்படி இருந்தால் தான் தேசிய மொழி என்று ஒன்று அமைய முடியும். ஏனென்றால் அப்போது தான் மிகப் பெரும்பான்மை மக்களுக்கு அது பொதுத் தொடர்பு மொழியாக இருக்க முடியும். அப்படி அல்லாமல் வலிந்து திணிக்கப்படும் மொழி அதை அறியாதவர்களால் வெறுப்போடு அணுகப்படும். அது தேச ஒருமைப்பாட்டை பிரஜைகளே உடைக்குமளவு போகவும் சாத்தியமுண்டு.
உதாரணமாய் நேபாளத்தின் தேசிய மொழி நேபாளி, பாகிஸ்தானின் தேசிய மொழி உருது, பங்களாதேஷின் தேசிய மொழி வங்காளம் என்பது போல் இந்தியாவின் தேசிய மொழி இன்னதென எளிமையாகச் சுட்டி விட முடியாது. பல இனங்களும், கலாசாரங்களும், அதன் காரணமாகப் பல மொழிகளும் கொண்டியங்கும் கூட்டியக்கம் இந்தியா. அதில் ஒன்றை உயர்த்தி மற்றவற்றை மறுதலிப்பது துல்லியமுரட்டுத்தனம்.
இந்தியா என்பதை ஒரு மதமாகக் கொண்டால் இந்திய அரசியல் சாசனம் அதன் பைபிள். இந்தியாவில் நிகழும் அனைத்தும் சாசனத்தின் எல்லைகளுக்குள் வந்தாக வேண்டும். ஒரு விஷயத்தில் தன் நிலைப்பாட்டினை அது குறித்து சாசனம் என்ன சொல்லி இருக்கிறது என்பதைக் கொண்டே நமது நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. சாசனத்தின் ஒளியில் தான் ஒட்டுமொத்த இந்திய தேசமே பொழிந்து கண்டிருக்கிறது.
அப்படியான நம் அரசியல் சாசனம் தேசிய மொழி விவகாரத்தில் என்ன சொல்கிறது?
இந்திய அரசியல் சாசனத்தில் தேசிய மொழி பற்றி மட்டுமல்ல, இன்ன பிற தேசியச் சின்னங்களான அரசு முத்திரை, தேசியக் கொடி, தேசிய கீதம், தேசியப் பண், தேசிய விலங்கு, தேசிய மலர், தேசியப் பறவை, தேசிய மரம், தேசியக் கனி, தேசிய நதி, தேசிய நீர்வாழ் உயிரினம், தேசியப் பணம், தேசிய நுண்ணுயிர் (2012ல் அறிவிக்கப் பட்டது) என எதைப் பற்றியும் எந்தக் குறிப்பும் கிடையாது. பிறகு ஏன் இந்தி தேசிய மொழியா என அரசியல் சாசனத்தில் தேடுகிறோம்? பொதுவாக நாட்டிற்கு தேசிய மொழி என்ற ஒன்று இருந்தால் அது பற்றிய குறிப்பு அதன் அரசியல் சாசனத்தில் இடம்பெறுவது வழக்கு. அந்தப் பழக்கத்தின் அடிப்படையிலேயே நம் சாசனத்தில் தேசிய மொழி பற்றி எக்குறிப்பும் இடம்பெறவில்லை என்பது முக்கியமானதாகிறது.
ஆனால் அரசியல் சாசனம் இந்தியாவின் அலுவல் மொழி பற்றிப்பேசுகிறது. அலுவல் மொழி என்றால் அரசின் ஆவணங்கள், உத்தரவுகள், இன்ன பிற கோப்புகள் யாவும் என்ன மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கான அதிகாரப்பூர்வ வரையறை.
“The official language of the Union shall be Hindi in Devanagari script.” என்கிறது அரசியல் சாசனத்தின் 343(1)வது பிரிவு. தேவநகரி எழுத்துருவில் எழுதப்படும் இந்தியே இந்தியாவின் அலுவல் மொழி. இதில் கவனித்தால் ஒன்று புரியும். அதாவது அலுவல் மொழி என்ற விஷயமே எழுத்துப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமானது. மக்களின் பேச்சு மொழிக்கும் அதற்கும் தொடர்பில்லை. தேசிய மொழி என்ற அந்தஸ்தின் விஸ்தாரம் அலுவல் மொழி என்பதற்குக் கிடையாது. அது அரசு நிர்வாகம் குழப்பமின்றி நடைபெறச் செய்து கொண்ட ஓர் ஏற்பாடு மட்டுமே.
மேலே சொல்லப்பட்ட அரசியல் சாசன விதி மத்திய அரசுக்கு மட்டுமே பொருந்தும். மாநில அரசுகளுக்கும், நீதிமன்றங்களும் வேறு விதிகள். மாநில அரசுகள் தம் சட்டமன்றங்கள் மூலம் ஒன்றோ அதற்கு மேற்பட்ட மொழிகளையோ அலுவல் மொழியாகத் தெரிவு செய்து கொள்ளலாம் [பிரிவு 345]. இரு மாநில அரசுகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் மத்திய - மாநில அரசுகளுக்கிடையேயான தொடர்புகளுக்கு தேசிய அலுவல் மொழி (இந்தி / ஆங்கிலம்) பயன்படும். [பிரிவு 346].
உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர்நீதிமன்றங்களிலும் அனைத்து விஷயங்களும் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் [பிரிவு 348(1)]. கவர்னர் அனுமதியுடன் ஒரு மாநில உயர்நீதிமன்றம் வழக்கு விஷயங்களை தனக்கு வசதியான மொழியில் மேற்கொண்டாலும் தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் [பிரிவு 348(2)]. மாநில அரசுகள் கொண்டு வரும் சட்டங்கள் அம்மாநில மொழியில் இருந்தாலும் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரசிதழில் வெளியிட வேண்டும் [பிரிவு 348(3)].
அரசியல் சாசனத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் தேசிய மொழியைத் தீர்மானிக்கப் பல கட்டங்களாக மிகத் தீவிர விவாதங்கள் நிகழ்ந்தன.
இந்தியை ஆதரித்து கேஎம் முன்ஷி, புருஷோத்தம் தாஸ் டாண்டன், ரவிஷங்கர் சுக்லா, சேத் கோவிந்த் தாஸ், சம்பூர்ணானந்த், அல்கு ராய் சாஸ்திரி, பாபுநாத் குப்தா, ஹரி விநாயக் படாஸ்கர் ஆகிய வடக்கத்தியர்கள் பேசினர். மாறாக ஆங்கிலத்தைக் கொள்ளலாம் என டிடி கிருஷ்ணமாச்சாசி, ஜி. துர்காபாய், டிஏ ராமலிங்கம் செட்டியார், என். கோபாலஸ்வாமி அய்யங்கார், வி. கிருஷ்ணமூர்த்தி ராவ், என்ஜி ரங்கா ஆகிய தென்னிந்தியர்கள் பேசினார்கள். அம்பேத்கர் சமஸ்கிருதத்தை ஆதரித்தார். நேரு, அபுல் கலாம் ஆசாத், ஆர்வி துலேகர் ஆகியோர் ஹிந்துஸ்தானிக்கு - அதுவும் இந்தியின் இன்னொரு வடிவம் தான் - ஆதரவாக இருந்தனர். அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இருந்த காயில்தே மில்லத் முகமது இஸ்மாயில் தமிழைத் தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று வாதிட்டார்.
ஒரு கட்டத்தில் இன்றைய ஹெச். ராஜா பாணியில் ஆர்வி துலேகர் “ஹிந்துஸ்தானி அறியாதவர்கள் இந்தியாவில் வசிக்கவே உரிமையற்றவர்கள். அரசியல் சாசனத்தை இயற்ற இந்த அவையில் இருப்பவர்களில் ஹிந்துஸ்தானி தெரியாதவர்கள் அரசியல் நிர்ணயச் சபையில் இருக்கவே தகுதியற்றவர்கள். அவர்கள் வெளியேறுவதே நல்லது" என்று மொழி வெறியை வெளிப்படுத்தினார். மூன்றாண்டுகள் இழுபறியில் போனது.
1949ன் இறுதியில் சபை ஒரு சமரசத்தை எட்டியது. முன்ஷி - அய்யங்கார் கொள்கை என வர்ணிக்கப்படும் இம்முடிவின்படி அரசியல் சாசனத்தில் தேசிய மொழி பற்றிய எந்தக் குறிப்பும் இராது. பதிலாக அலுவல் மொழிகள் பற்றிய விளக்கம் இடம்பெறும்.
இப்படித்தான் தேச ஒற்றுமை கருதி தேசிய மொழி என்ற சொற்பிரயோகத்தையே இந்திய அரசியல் சாசனத்தில் அன்றைய தலைவர்கள் தவிர்த்து விட்டார்கள்.
*
இந்தியாவின் அலுவல் மொழி இந்தி என்பதோடு கதை சுபமாய் முடியவில்லை. அது தொடர்பாய் மேலும் சில விஷயங்களையும் அரசியல் சாசனம் சொல்கிறது. 1) (இந்தி நாடு முழுக்க இருக்கும் மக்களுக்குப் பரிச்சமான ஒன்றில்லை என்பதால்) அரசியல் சாசனம் அமலுக்கு வரும் தேதியிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமே அலுவல் மொழியாக இருக்கும் [பிரிவு 343(2)]. 2) அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 5 முதல் 10 ஆண்டுகளில் இந்தியின் பயன்பாட்டை அரசு நடைமுறைகளில் அதிகரிக்கவும், ஆங்கிலத்தின் பயன்பாட்டைக் குறைக்கவுமான வழிவகைகளை ஆராய்ந்து சொல்ல அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, தோகிரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 22 மொழிகளிலிருந்து பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் ஆணையத்தை ஜனாதிபதி அமைக்க வேண்டும் [பிரிவு 344(1)]. அது அலுவல் மொழி தொடர்பான எதிர்காலச் சிபாரிசுகளை ஆய்ந்தளிக்கும். 3) தேசத்தின் தொழில், கலாசார மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களை உத்தேசிக்கும் அதே நேரம் இந்தி பேசாத மாநில மக்களின் அபிப்பிராயத்தையும் இவ்வாணையம் கணக்கில் கொள்ள வேண்டும். [பிரிவு 344(3)].
அரசியல் சாசனக் குழு உறுப்பினர்களின் விருப்பம் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஆக்க வேண்டும் என்பதாக இருந்தது என்பதும் ஆனால் அன்றைய தேதியில் கூட ஆங்கிலமே இந்தியை விடப் பொதுத் தொடர்பு மொழியாக இருக்க அதிக தகுதி பெற்றிருந்தது என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அரசியல் சாசனமே ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டது என்பது இதற்கு ஓர் உதாரணம்.
இன்னொரு விஷயம் தேவநகரி எழுத்து வடிவிலான இந்தியே ஒப்பீட்டளவில் அப்போது புதிய மொழி தான். 1881ல் தான் பிஹார் மாநிலம் அலுவல் மொழியாக இந்தியைத் தேர்ந்தெடுத்திருந்தது. சாசனம் அமலுக்கு வந்த போது இந்திக்கு என பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஓர் இலக்கணம் இருக்கவில்லை. மத்திய அரசு 1954ல் ஒரு குழு அமைத்து 1958ல் இந்தி இலக்கணத்தை வரையறுத்து அறிக்கை வெளியிட்டது. அது மாதிரி வளர்ந்து கொண்டிருந்த மொழியைத் தான் பல்வேறு மொழிவாரி மாகாணங்களின் கூட்டமைப்பான ஒரு பெருந்தேசத்தின் அலுவல் மொழியாக ஆக்கிட பதினைந்து ஆண்டு கெடுவை அரசியல் சாசனம் விதித்தது!
இச்சூழலை உணர்ந்த ஜவஹர்லால் நேரு 1963ல் அலுவல் மொழிகள் சட்டத்தைக் கொணர்ந்தார். “Notwithstanding the expiration of the period of fifteen years from the commencement of the Constitution, the English language may, as from the appointed day, continue to be used, in addition to Hindi,” என்று அது சொன்னது. அதாவது கெடு முடிந்தாலும் இந்தியுடன் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும். ஆனால் அதிலிருந்த ‘may’ என்ற வார்த்தை ‘தொடரலாம்’ என்று நிச்சயமின்மையைக் குறிப்பதாக இருந்தது என்பதால் அதற்கு எதிர்ப்பு எழுந்தது (குறிப்பாய் தமிழகத்தில் திமுக). அது ‘shall’ என்ற பொருளில் ‘தொடரும்’ என்று கொள்ள வேண்டும் என நேரு தெளிவுபடுத்தினார்.
1965ல் சாசனம் சொன்ன அந்த பதினைந்து ஆண்டு காலம் முடிந்த போது நேரு மறைந்து லால் பகதூர் சாஸ்திரி பாரதப் பிரதமராய் இருந்தார். திட்டமிட்டது போல் இந்தியை அப்போது நாடு முழுமைக்கும் பொதுமொழி ஆக்க முடிந்திருக்கவில்லை. ஆனால் சாஸ்திரியே இந்தி மொழி ஆர்வலர் தான். அவரது அமைச்சரவையிலிருந்த செல்வாக்கு மிக்க மொரார்ஜி தேசாய், குல்சாரிலால் நந்தா ஆகியோரும் இந்தி ஆதரவாளர்கள். அவர்கள் அனைவரும் 1965ம் ஆண்டின் குடியரசு நாளில் இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவித்து விடுவது எனத் தீர்மானித்தனர்.
ஆனால் வெளியிலிருந்து இந்திக்கு வலுத்துக் கொண்டிருந்த எதிர்ப்புகள் போக காங்கிரஸ் கட்சியே இவ்விஷயத்தில் இரண்டாய்ப் பிரிந்து நின்றது. வட இந்தியத் தலைவர்கள் இதற்கு ஆதரவாக இருக்க, தமிழகத்தின் காமராஜர், மைசூர் முதல்வர் நிஜலிங்கப்பா, பெங்கால் காங்கிரஸ் தலைவர் அதுல்யா கோஷ், மத்திய அமைச்சர் சஞ்சீவ ரெட்டி ஆகிய தென்னிந்திய காங்கிரஸ்காரர்கள் இதை எதிர்த்தனர். 1937ல் இந்தியைத் தமிழகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க அரசாணை பிறப்பித்த ராஜாஜி கூட மனம் மாறி இதனை எதிர்த்தார். ஆனால் சாஸ்திரி விடாப்பிடியாக நின்றார்.
தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. போராட்டங்கள் தமிழகமெங்கும் வெடித்தன. கல்லூரி மாணவர்கள் தெருவிலிறங்கிப் போராடினர். தமிழகம் பற்றியெரிந்து கொண்டிருந்த போது சாஸ்திரி அவசரமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டினார். ஆங்கிலம் அல்லாத இந்திய மொழி ஒன்றினை தேசிய மொழி (National Language), அலுவல் மொழி (Official Language), பொதுத் தொடர்பு மொழி (Lingua Franca) ஆகிய மூன்றாகவும் தீர்மானித்து அறிவிக்க வேண்டும் என்பது தான் நோக்கம். இந்தியே அதற்கு அருகில் வரக்கூடிய மொழியாக இருந்தது.
தம் சாத்வீகப் போராட்டங்களுக்குப் பலனில்லை என்பதை உணர்ந்த தமிழக இளைஞர்கள் தம்மைத் தீக்கிரையாக்கிக் கொண்டனர். குடியரசு தினத்தன்றே அம்மாதிரி இருவர் உயிர்த்தியாகம் செய்தனர். நிலைமை இப்படி மோசமாகவும் அப்போது மத்திய அமைச்சரவையிலிருந்த தமிழர்களான சி. சுப்ரமணியமும், ஓவி அழகேசனும் ராஜினாமா செய்தார்கள். பிரதமர் சாஸ்திரிக்கு அழுத்தம் அதிகரித்தது.
அன்று மாலையே சாஸ்திரி ஆல் இந்தியா ரேடியோவில் உரையாற்றினார். நான்கு விஷயங்களை அறிவித்தார்: 1) எல்லா மாநிலங்களும் அவை விரும்பும் மொழியை அலுவல் மொழியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 2) மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகள் ஆங்கிலத்திலோ ஆங்கில மொழிபெயர்ப்புடனோ நிகழலாம். 3) இந்தி பேசாத மாநிலங்கள் மத்திய அரசுடன் ஆங்கிலத்திலேயே தொடர்பு கொள்ளலாம். 4) மத்திய அரசில் ஆங்கிலத்தின் பயன்பாடு தொடரும். பிற்பாடு இன்னொரு விஷயமும் சேர்த்தார் - அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் ஆங்கிலமும் தொடரும்.
இதையொட்டி 1968ல் அலுவல் மொழித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படியாக இந்திய முழுக்க நிகழவிருந்த இந்தித் திணிப்பைத் தமிழகமே முன்னின்று தடுத்தது.
மொழிச் சிறுபான்மையினரின் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டும் [பிரிவு 350(A)] என்பது வரை அக்கறை காட்டும் அரசியல் சாசனம் கடைசியில் இந்தியை இந்தியாவில் பரவலாக்கம் செய்து பொது மொழி ஆக்க மத்திய அரசு முனைய வேண்டும் என்றும் சொல்கிறது [பிரிவு 351]. இதை முன்னிட்டுத் தான் மத்திய அரசுகள் அன்று முதல் இன்று வரை அவ்வப்போது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க நேரம் பார்த்தபடி இருக்கின்றன.
1968ல் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்திரா காந்தி அரசு இந்தியைத் திணித்த போதும், 1986ல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி அரசு இந்தியைத் நுழைக்க முயன்ற போதும் 2014ல் நரேந்திர மோடி அரசு நாடு முழுக்கஅரசு ஊழியர்களிடம் இந்தியை வலியுறுத்திய போதும் தமிழகம் வெகுண்டெழுந்தது.
கவனித்துப் பார்த்தால், தமிழகக் கட்சிகள் - குறிப்பாய் திமுக - மத்திய அரசில் பங்கு வகித்திருந்த எப்போதும் இம்மாதிரி இந்தித் திணிப்பு நிகழ்ந்ததில்லை. கடிவாளம் நம்மிடம் இல்லாத போதெல்லாம் குதிரை தறிகெட்டுப் பாய்கிறது என்பதே வரலாறு.
இப்போது இந்தியா - இந்தி - இந்து என்ற கோஷத்துடன் மதத் தேசியவாதத்தின் ஒரு பகுதியாகவும் மத்தியில் ஆளும் பாஜக அரசு இங்கு இந்தித் திணிப்பைச் செய்கிறது.
*
2009ல் சுரேஷ்பாய் பி கச்சாடியா என்பவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்கையில் அவற்றின் விலை, தேதி, உள்ளடக்க விவரம் ஆகியவற்றை தேசிய மொழியான இந்தியில் அச்சிடுவதைக்கட்டாயமாக்க வேண்டும் எனக் கோரி இந்திய அரசு மீது பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார் (Special Civil Application No. 2896 of 2009). அதை விசாரித்த அப்போதைய குஜராத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்ஜே முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஆனந்த் எஸ் தாவ் இருவரும் இந்திய அரசியல் சாசனம் தேசிய மொழி என்று எதையும் குறிக்கவில்லை என்றும் இந்தி, ஆங்கிலம் இரண்டையும் அலுவல் மொழிகளாக மட்டும் சொல்கிறது என்றும் பொட்டலம் செய்து விற்கப்படும் பொருட்களுக்கான 1977ம் ஆண்டின் Standards of Weights and Measures (Packaged Commodities) Rules சட்டத்தின் 9(4), 33(3A) பிரிவுகளும் அதையே சொல்கின்றன என்றும் சுட்டி, இந்தியில் எழுதுவதா ஆங்கிலத்திலா என்பது உற்பத்தியாளர் சுதந்திரம், ஆக இந்தி கட்டாயம் என உத்தரவிட முடியாது என்றும் தீர்ப்பளித்தனர். இந்தி தேசிய மொழியா என்ற விவாதத்தில் இது மைல்கல் தீர்ப்பு.
பெரும்பான்மை இந்தியர்கள் இந்தியைப் பேசவும் எழுதவும் செய்தாலும், தேசிய மொழியாக ஏற்றாலும், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் எதிலும் அப்படிக் குறிப்பிடப் படவில்லை என்கிறது தீர்ப்பு: “Normally, in India, majority of the people have accepted Hindi as a national language and many people speak Hindi and write in Devanagari script but there is nothing on the record to suggest that any provision has been made or order issued declaring Hindi as a national language of the country.” அதாவது பெரும்பான்மையினர் அப்படி நம்புவது சட்டத்திற்கு ஒரு பொருட்டல்ல. பேசுபவர்களின் எண்ணிக்கை தான் பொருட்டு என்றால் உலகப் பொதுமொழியாக ஆங்கிலமல்ல; சைனீஸ் தான் வந்திருக்கும். தேசிய மொழி பற்றிய விவாதத்தில் எண்ணிக்கை தான் கணக்கென்றால் தேசியப் பறவையாக மயில் அல்ல; காக்கையே இருக்க முடியும் என காயிதே மில்லத் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.
கோரக் பிரசாத் ஜெய்ஸ்வால் (பகுஜன் சமாஜ்), யஸ்பந்த் நாராயன் சிங் லாகுரி (பிஜு ஜனதா தள்) ஆகிய இரண்டு எம்பிக்கள் மக்களவையில் இந்தியைத் தேசிய மொழியாக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்று எழுப்பிய கேள்விக்கு (Unstarred Question No. 6184) மே 4, 2010 அன்று அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உள்துறை (மாநிலப் பொறுப்பு) அமைச்சராக இருந்த அஜய் மாகென் (காங்கிரஸ்) இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க அரசியல் சாசனத்தில் எந்த வழிவகையும் இல்லை என்று திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
இந்தியைத் தேசிய மொழி என்று சொல்லிக் கொள்வது “எங்கப்பா எவ்ளோ பலசாலி தெரியுமா” என்பது போன்ற புன்னகைக்குரிய குழந்தைத்தனம் தான். சட்டமெல்லாம் அறிந்த மதிப்பிற்குரிய அறிவுஜீவிகள் கூட இதற்கு விலக்கல்ல. சமீபத்தில் முன்னாள் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு தான் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் சாசனத்தின் 348(1)வது பிரிவை கண்டிப்புடன் பின்பற்றியதில்லை என்றும் இந்தி, ஆங்கிலம் இரண்டையும் பயன்படுத்தியதாகவும் (சமயங்களில் தேவைக்கேற்ப தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பேசியதாகச் சொல்கிறார்) குறிப்பிட்டு பெரும்பான்மை மக்களுக்கு இந்தி தெரியும் என்பதாகச் சுட்டி இந்தியே தேசிய மொழி என்கிறார்.
இது போல் தொடர்ந்து இந்தியைத் தேசிய மொழி ஆக்கும் ஆர்வங்கள், முயற்சிகள் இந்தியாவின் வெவ்வேறு மூலையிலிருந்து எழுந்தவாறு இருக்கின்றன. எல்லா முறையும் அரசியல் சாசனத்தைக் கைகாட்டியே நீதிமன்றங்களும் மத்திய அரசுகளும் பதில் சொல்லி வந்திருக்கின்றன. சாசனம் இறுதி செய்யப்பட்டதல்ல. காலத்திற்கேற்ப மாற வேண்டிய ஒன்றே. ஆனால் அதற்குரிய வலுவான தேவை தென்பட வேண்டும்.
மாறாக, பின்வாசல் வழி நுழைய முற்படுவது அம்மொழிக்குச் செய்யும் அவமதிப்பு.
*
இன்று இந்தியாவில் பரிவர்த்தனைக்கான பொதுமொழி பெரும்பாலும் ஆங்கிலம் தான். அதாவது தாய்மொழியாக இந்தியாவில் எவரும் ஆங்கிலத்தைக் கொள்ள வில்லை என்றாலும் இருவேறு மொழிக்காரர்கள் தொடர்பு கொள்ள முனைகையில் உதவும் மூன்றாம் மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதுவும் குறிப்பாய் கார்ப்பரேட் நிறுவனங்கள், உயர்கல்வி, ஆராய்ச்சி, மேலாண்மை போன்றவற்றில் ஆங்கிலத்தின் இன்றியமையாமை அளப்பரியது. இன்னும் சொல்லப் போனால் தமிழர்கள் 1965ல் ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்க வேண்டும் என்று போராடிய காலகட்டத்தை விட இன்று அம்மொழி மீதான சார்பு பன்மடங்கு அதிகம். உள்நாட்டில் மட்டுமல்லாது முதலாம் உலக நாடுகளுடனான நம் தொடர்பு அனைத்திற்குமே ஆங்கிலம்தான் வழி.
அப்படியான ஆங்கிலத்தை நீக்கி விட்டு அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து திணிப்பது என்பது ஓர் அனாவசிய சமூக அறுவை சிகிச்சை. ஒருவனுக்கு ஏற்கனவே நன்றாக இயங்கி வரும் இதயத்தை நீக்கி விட்டு வேறு ஓர் இதயத்தைப் பொருத்திப் பார்க்கும் பரிசோதனை முயற்சி. தற்கொலை முயற்சி என்றும் கூட சொல்லலாம்.
இன்று இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில் 10 மாநிலங்களில் மட்டுமே இந்தி பிரதான அலுவல் மொழியாக உள்ளது. மேலும் 2 மாநிலங்களில் கூடுதல் அலுவல் மொழி. எப்படிப் பார்த்தாலும் மொத்த மக்கட்தொகையில் பாதிக்கும் குறைவான நபர்களுக்கே இந்தி தெரியும். அதனால் அதைத் தொடர்புக்கான பொதுமொழியாகத் தென்னியந்திர்களும், வடகிழக்குக்காரர்களும் ஏற்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அது திணிப்பாகவே கருதப்படும். மாறாக, ஆங்கிலம் இயல்பாகவே இன்று இந்தியர்கள் வாழ்வோடு கலந்து விட்டது. அதை மேலும் சீர்படுத்திச் செம்மை செய்தால் போதும். இதில் ஆங்கிலம் அந்நிய மொழி என்ற பிடிவாதம் அனாவசியம்.
வட இந்தியாவில் இந்தி மட்டுமே அறிந்தவர்கள் இருப்பது போல், தமிழகத்திலும் தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் உண்டு தான். இங்கும் அவர்கள் ஆங்கிலம் கற்பது சிரமம் தான். ஆனால் தேவை என்று வரும் போது வேறு வழி இல்லை. அதைத் தான் நாம் வடக்கத்தியர்களுக்கும் சொல்கிறோம். அவர்களுக்கு மட்டும் தெரிந்ததை நம் மீது திணிப்பதை விட இருவருக்கும் சமமாகத் தெரிந்த ஒன்றை இருவருமே கற்றுக் கொள்வோம் என்ற சமரசம். இதில் மொழி தொடர்பான அகங்காரத்தைச் சற்றே ஒதுக்கி வைத்து யோசிக்கலாம். அப்போதுதான் எல்லோர் நியாயமும் புரியும்.
இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருப்பதற்கு இடையே Zee News தொலைகாட்சியில் ஏதோ நிகழ்வில் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். கவனித்த 15 நிமிடங்களில் அந்த இந்தி உரையில் பாதிக்குப் பாதி ஆங்கிலச் சொற்கள். Jobs என்பதைக் கூட அப்படியே சொன்னார். அத்தனை தூரம் ஆங்கிலம் சார்ந்து தான் இந்த மொழி இயங்குகிறதா? காலத்திற்கேற்ப கலைச்சொற்கள் உண்டாக்கப்படவில்லையா? அல்லது அப்படி உருவான சொற்களை இந்தி மொழி பயன்படுத்துவதில்லையா?
இந்த இந்தியைத் தான் தேசத்தின் Lingua Franca ஆக்க மத்திய அரசு முயல்கிறது. ஆங்கிலம் கணிசமாய்க் கலந்தது தான் இன்று நடைமுறையிலுள்ள யதார்த்த இந்தி எனில் அதற்கு பதிலாக முழுக்க ஆங்கிலத்தையே பொதுமொழியாகக் கொள்ளலாமே!
தென்னகம் மீது இந்தியைத் திணிக்க முயன்று, தோற்று அரை நூற்றாண்டாகிறது. இந்தியை விலக்கிய இந்த ஐம்பதாண்டு திராவிட ஆட்சியில் முன்னேற்றம் என்ற அடிப்படையில் பார்த்தால் தமிழகம் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறது. நாம் இந்தி கற்காமல் போனதால் எதை இழந்தோம் என்பதற்கு அவர்களிடம் பதிலேதும் இல்லை. இந்திக்காரர்களின் வழக்கு பலவீனமாகிக் கொண்டே தான் வருகிறது.
திணிக்கும் எதுவும் துப்பப்படும் - அது உணவோ, மொழியோ, வேறெதுவோ. மத்திய அரசுகள் அதை மட்டும் புரிந்து கொண்டால் சரி. அதற்கான பெரும் உதாரணம் இந்தித் திணிப்பை முனைந்த 1965ல் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. அதற்கு அடுத்து 1967ல் வந்த தேர்தலில் காங்கிரஸ் இங்கு துடைத்தெறியப்பட்டு திமுக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் தலையெடுக்கவே முடியவில்லை. தேசியக் கட்சிகளுக்கு இது ஒரு பாடம்.
அரசியல் சாசனம் சொல்லும் இந்தி மொழிப் பரவலாக்கம் என்பது கத்தி முனையில் மிரட்டி இந்தி கற்பிப்பது அல்ல. அது ஒரு பாலியல் வல்லுறவுக்குச் சமானம். மாறாக இந்தியைத் தென்னிந்தியர்கள் நாடிப் படிக்குமளவு அதன் லௌகீகத் தேவையை, அந்தஸ்தை அதிகரிக்க வேண்டும். அது தான் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.
அது நடந்தால் தானாய்த் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் இந்தியைத் தேடிப் படிப்பார்கள். மக்களை இப்படிக் கொஞ்சவும் கெஞ்சவும் மிஞ்சவும் வேண்டியிருக்காது. ஆங்கிலத்தில் தொடங்கி இன்று ஜெர்மன், ஃப்ரெஞ்ச், சைனீஸ், ஜப்பானீஸ், கொரியன் வரையிலும் எல்லாம் அப்படித்தான் தேடிச் சிரமப்பட்டுக் கற்றுக் கொண்டிருக்கிறோம்.
இந்தியை ஒரு தமிழன் கற்கவே கூடாதா? அப்படி இல்லை. நிச்சயம் கற்கலாம். ஆனால் இன்று ஒரு தமிழன் இந்தியை கற்றுக் கொள்வதற்கான தேவை என்ன?
கார்பரேட் நிறுவனம் அல்லாமல் வட இந்தியாவில் பொதுமக்களிடம் அல்லது ஆங்கில அறிதலற்ற ஊழியர்களுடன் நேரடியாய்ப் புழங்கி வேலை பார்க்க நேரும் ஒரு தமிழன் இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தி இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர் அல்லது இந்தி மக்களின் வாழ்வியலை ஆராயும் ஒருவர் இந்தி கற்றல் அவசியம். இந்தி பேசும் குடும்பத்துடன் திருமண பந்தம் செய்து கொள்ள முடிவெடுக்கும் ஒரு தமிழன் இந்தி அறிய வேண்டும். இந்தச் சந்தர்ப்பங்களில் அல்லது இவற்றை எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகிறவர்கள் இந்தி படிக்கட்டும்.
இம்மாதிரி சிறுபான்மைக் காரணங்கள் தவிர்த்து தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான அத்தியாவசியம் ஏதும் இல்லை என்றே எண்ணுகிறேன்.
இன்று தமிழகத்தில் இந்தி படிக்கத் தடை ஏதுமில்லை. ஆர்வமும் முனைப்பும் இருப்பவர்களுக்குப் பல வழிகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கற்பார்கள். மாறாக அரசுப் பள்ளிகளில் இந்தியைக் கற்பித்தால் தான் ஆயிற்று, அன்றேல் அடுத்த வேளைக்குச் சோறில்லை என்கிற தொனியில் பேசுவதெல்லாம் அயோக்கியத்தனம்.
மற்றபடி, இந்தியில் வெளியானதால் தான் பாகுபலி-2 நாட்டிலேயே அதிகம் வசூல் செய்த படமாயிற்று, அதனால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று எஸ்வி சேகர் சொல்வதெல்லாம் அவரது நாடக நகைச்சுவைகள் போன்றே சிரித்துக் கடக்கலாம்.
என்னைக் கேட்டால் இந்திக்கு பதிலாக ஜாவா படியுங்கள் என்று தான் சொல்வேன்.
***
(உயிர்மை - ஜூன் 2017 இதழில் வெளியானது)
Comments
அழுத்தமாக சொல்ல வேண்டிய விஷயம்.
என்னைக் கேட்டால் ஜாவாவுக்கு பதில் ஜாவாஸ்கிரிப்ட் படியுங்கள் என்று தான் சொல்வேன். #NodeJs
I agree when NON BJP in power no HINDI issue. only when BJP saffron scoundrels come to power the issue crops up! fanatics!!
.
Pls go through the following write-up.
.
https://www.facebook.com/notes/தாமரை-செல்வன்/article-14-15-16/1855558308051540/
.
So:
#StopHindiChauvinism
#StopHindiImposition
#PromoteLinguisticEquality ( https://www.facebook.com/groups/267959529959067 )
#AmendArticles_14_15_16_120_343to348_351
.
Article 14: https://indiankanoon.org/doc/367586/
Article 15: https://indiankanoon.org/doc/609295/
Article 16: https://indiankanoon.org/doc/211089/
.
Thanks
ThaaChe