சுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்
டியர் ஜெயமோகன்,
நலம் தானே?
சுஜாதா விருது பற்றிய - குறிப்பாய் இணைய விருது குறித்த - உங்கள் கருத்து கண்டேன் (http://www.jeyamohan.in/98187): "இணைய விருதுகள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷான்கருப்பசாமி, சரவணக்கார்த்திகேயன் ஆகியோர் இணையதளங்களை நடத்துகிறார்களா, தொடர்ந்து எழுதுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம். அது என் இடமல்ல என நினைக்கிறேன்." அது பற்றிய சில விளக்கங்கள் தர விழைகிறேன்.
1) "சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம்"
எனக்கு அளிக்கப்பட்ட விருது எனது வலைதளத்துக்காகவே; சமூக வலைதளங்களில்
எழுதியதற்காக அல்ல. நீங்கள் பகிர்ந்திருக்கும் விருது விழா
அழைப்பிலிருக்கும் பட்டியலிலேயே வலைதளச் சுட்டி சுட்டப்பட்டிருப்பதைக்
காணலாம்.
2) "இணையதளங்களை நடத்துகிறார்களா"
2007ல் தொடங்கிய வலைதளத்தை இன்று வரை தொடர்ந்து நடத்துகிறேன். தொடர்ந்து எழுதவும் செய்கிறேன். 2010க்குப் பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களின் வருகையினால் பொதுவாய் வலைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவற்றில் எழுதுவதில் உலக அளவில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது. அது தமிழ்ச் சமூகத்துக்கும் பொருந்தும். அன்று பரபரப்பாய் எழுதிய பலரது வலைதளங்கள் இன்று நூலாம்படை படர்ந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் ஃபேஸ்புக்கிலோ ட்விட்லாங்கரிலோ எழுதி விடுகின்றனர். சாரு நிவேதிதா போன்ற பிரபல எழுத்தாளர்களே அத்திசை நோக்கி மெல்ல நகரத் தொடங்கியுள்ளதைப் பார்க்கிறேன். வாசக பலம் இங்கே தான் பன்மடங்கு என்பதும் இங்கே கிட்டும் உடனடி எதிர்வினையும் முக்கியக் காரணம். அதனால் வலைதளம் தொடர்ந்து நடத்தப்படுகிறதா என உங்களுக்கு எழுந்த சந்தேகம் நியாயமானதே.
ஆனால் நான் சமூக வலைதளத்தில் கணிசமாய்ச் செயல்பட்டு வந்தாலும் பிடிவாதமாய்த் தொடர்ந்து வலைதளத்தில் எழுதி வருகிறேன். உள்ளடக்கம் முக்கியமானதாகவோ, அடர்த்தியானதாகவோ, நீண்டதாகவோ இருந்தால் அப்பதிவை வலைதளத்தில் எழுதுவது என் வழக்கம்; மற்றவை சமூக வலைதளங்களில். ஒரு நல்ல சிறுகதையை அல்லது ஓர் ஆய்வுக் கட்டுரையை ஃபேஸ்புக்கில் எழுதுவது பெரும்பாவம் என்றே எண்ணுகிறேன். நான் நேரடியாய் ஃபேஸ்புக்கில் எழுதும் ஒரு பதிவை விட வலைதளத்தில் எழுதும் பதிவுக்கு பத்தில் ஒரு பங்கு எதிர்வினை தான் கிட்டும். அது தெரிந்தும் அது என் பிரச்சனை அல்ல என்பதால் விடாப்பிடியாய் இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறேன். ஒருவகையில் இந்தப் பாணி ஒரு வாசக வடிகட்டியாகவும் பயன்படுகிறது. வா. மணிகண்டன், ஆர். அபிலாஷ், யுவகிருஷ்ணா எனத் தொடர்ந்து அப்படி வலைதளத்தைப் பயன்படுத்தி வருவோர் மிகக் குறைவே. அதன் பொருட்டே சுஜாதா விருதுகள் ஃபேஸ்புக் பதிவர் என்ற வகைமையையும் இணைய விருதுப் பரிசீலனையில் சமீப ஆண்டுகளில் அனுமதிக்கிறது என நினைக்கிறேன்.
(ஓராண்டு முன் Net Neutrality பற்றிய என் கட்டுரையை எதிர்பார்த்ததாய் நீங்கள் சொன்ன போது நான் கட்டுரை எழுதியது என் வலைதளத்தில் தான். இப்போது உங்களுக்கான இவ்விளக்கத்தைக் கூட அதிலேயேதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.)
3) "தொடர்ந்து எழுதுகிறார்களா"
விருது எனக்குத் தரப்பட்டிருப்பது 2016ம் ஆண்டில் நான் எழுதிய பதிவுகளுக்காக. அவை தகுதியுடையவையவா என்பது பற்றிய கருத்து ஆளாளுக்கு மாறுபடக்கூடும். அதனால் அதற்குள் நான் போகவில்லை. இங்கே நான் பதிவுகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் சொல்கிறேன். 2016ல் மட்டும் 22 பதிவுகள் எழுதி இருக்கிறேன். இவை போக 6 சிறுகதைகளை நேரடியாக என் வலைதளத்தில் தான் எழுதினேன். (நூலாக்கம் பெற்றதால் அவற்றைத் தற்போது தளத்திலிருந்து நீக்கி இருக்கிறேன். விருதுப் போட்டியிலும் அவை இல்லை.) அவற்றையும் சேர்த்தால் சென்ற ஆண்டில் மொத்தம் 28 பதிவுகள். இவற்றில் புத்தக அறிவிப்பு, இதழில் பிரசுரமானவை போன்றவற்றைக் கழித்தாலும் 22 முதல் 25 வரை பதிவுகள் வரும்.
ஒரு தளத்தில் ஓர் ஆண்டில் இத்தனை பதிவுகள் என்பதை "தொடர்ந்து எழுதுவது" எனச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
4) "இணைய விருதுகள் குறித்து"
உயிர்மை இணைய விருது எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறது என ஒரு விண்ணப்பதாரராக என் புரிதலைச் சொல்கிறேன். விருதுக்கு விண்ணப்பிப்பது பற்றிய அறிவிப்பு இப்படிச் சொல்கிறது: "5-வது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு, Facebook பதிவர் அல்லது இணையத்தளத்திற்கு வழங்கப்படும். அந்த இணையத்தளத்தை, Facebook பதிவை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் 2016இல் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்ப வேண்டும்." அதாவது 2016ல் எழுதிய பத்து ஆக்கங்களை மட்டுமே விருதுக்கு அனுப்ப முடியும். ஆக அவ்வருடம் தான் எழுதிய சிறந்த 10 பதிவுகள் என நினைப்பதை ஒருவர் விருதுக்கு அனுப்பி வைக்க முடியும். அது போல் பலரும் அனுப்பிய 10 ஆக்கங்களும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடுவர்களால் மதிப்பெண் அளிக்கப்பட்டு விருதுக்கான வலைதளம் தீர்மானிக்கப்படுகிறது என்பது என் புரிதல்.
விண்ணப்பிக்காதவர் கணக்கில் கொள்ளப்பட மாட்டார் என்பது ஒரு விஷயம். விண்ணப்பித்தோரிலும் குறிப்பிட்ட பத்து பதிவுகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்பது அடுத்தது. (விருது அமைப்பினரும், நடுவர் குழுவினரும் இதைக் காட்டிலும் துல்லியமாய் விவரிக்க முடியும். நான் புரிந்து கொண்ட வரை இப்படியான தேர்வு முறை தான் இருக்கிறது.)
5) "ஒன்றும் சொல்வதற்கில்லை"
நானே ஆண்டுக்கு சுலபமாய் 50 பதிவுகளுக்கு மேல் எழுதிக் கொண்டிருந்த காலம் உண்டு தான். அவற்றில் சில பேசப்பட்ட பதிவுகளாகவும் இருந்தன. அப்போது அல்லாமல் இப்போது கொடுத்திருப்பது உங்களுக்கு இப்படியான ஓர் எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கலாம். அப்போதெல்லாம் நான் விண்ணப்பித்திருந்தேனா, விண்ணப்பிருந்திருந்தாலும் எந்த பத்துப் பதிவுகளைச் சிறந்ததெனக் கருதினேன், அப்போது விண்ணப்பித்திருந்த மற்றவர்கள் யார், நடுவர் குழுவின் அளவுகோல் என்ன என எல்லாமும் சேர்ந்து தானே விருதைத் தீர்மானிக்கிறது! இரா. முருகன், பாஸ்கர் சக்தி, கேஎன். சிவராமன் ஆகிய மரியாதைக்குரிய படைப்பாளிகள் இணைய விருதுக்கான நடுவர் குழுவில் இம்முறை இடம் பெற்றிருந்தார்கள். அவர்கள் தீர ஆராய்ந்து மதிப்பிட்டே தேர்ந்தெடுத்திருப்பார்கள் என நம்புகிறேன். அதனால் உங்களைப் போல் எதையும் ஆய்ந்தணுகும் ஓர் ஆளுமை "சொல்ல ஒன்றுமில்லை" எனக் கருதிக் கடக்குமளவு அடர்த்தி குறைந்ததா இத்தேர்வு என்பதே என் ஆதங்கம்.
சி.சரவணகார்த்திகேயன்
www.writercsk.com
*
Comments