விமர்சனம் அல்லது ஒரு புனைவின் கதை


இதில்தான்

ஆட்டுக்குக் காடு
மீனுக்கு நீர்
பறவைக்கு வானம்
தராத உலகம்

இதில்தான்
வாழ்ந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது.


- பெருமாள்முருகன் ('கோழையின் பாடல்கள்' தொகுப்பிலிருந்து)

ஆங்கிலத்தில் ஜார்ஜ் ஆர்வெல்லின் Animal Farm முதலான‌ பல உதாரணங்கள் உண்டு, ஆனால் நானறிந்த வரை நவீனத் தமிழிலக்கியத்தில் விலங்குகளே பாத்திரங்களாய் உலவும் ஒரு நாவலுக்கு முன்மாதிரி இல்லை. பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை தான் முதலாவது. ஒரு முக்கியமான வித்தியாசம் பொதுவாய் இந்த வகை நாவல்களில் விலங்குக் கதாபாத்திரங்களை நிஜ உலகின் மனிதர்கள், அமைப்புகள் அல்லது நிகழ்வுகளின் (குறிப்பாய் சர்வாதிகாரிகள், மக்களுக்கு எதிரான அரசுகள், இன ஒழிப்பு போன்ற வன்முறைகள்) உருவகமாக்கி காத்திரமான சமகால அரசியல் விமர்சனத்தை முன்வைப்பார்கள். இதை Allegory என்பார்கள். ஆனால் பூனாச்சி நாவல் அப்படி அல்ல. இது அசலாகவே ஓர் ஆட்டின் கதை தான். (ஆனால் இன்னொரு பக்கம் முழுக்க அப்படியான விமர்சனங்கள் ஏதுமே இல்லை என்றும் சொல்ல முடியாது.)


2015ல் தமிழ் மின்னிதழுக்கு அளித்த நேர்காணலில் யுவன் சந்திரசேகர் தமிழகத்தில் எழுத்தாளர்கள் படைப்புகளுக்காக பிற்போக்கு சக்திகளால் மிரட்டலுக்கு உள்ளாகும் போக்கு அதிகரித்து வரும் சூழலைச் சமகாலத் தமிழ் எழுத்தாளன் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்துக் கேட்ட போது ஒரு விஷயம் சொன்னார். யதார்த்தவாத எழுத்து அம்மாதிரியான இடர்களைக் கொண்டு வருகிறது என்றால் மேஜிகல் ரியலிசம் உள்ளிட்ட வேறு முறைகளை முயற்சித்துப் பார்க்கலாம் என்று சொல்லி ஈசாப் நீதிக்கதைகளை உதாரணம் காட்டினார். மனிதர்களின் இயல்புகளை மிருகங்கள் மீதேற்றி அவற்றை வாதம் செய்ய வைத்ததைக் குறிப்பிட்டு அக்கதைகள் எழுதப்பட்ட சூழலைக் காரணமாய்ச் சொன்னார். பெருமாள்முருகன் அதைப் படித்தாரா என்றறியேன். ஆனால் அன்று யுவன் சொன்னதைத் தான் இப்போது பூனாச்சியில் செய்திருக்கிறார்.

மாதொருபாகனால் விளைந்த‌ ஃபாஸிச அக்கப்போர்களுக்குப் பிந்தைய ஈராண்டு எழுத்துத் துறவிலிருந்து மீண்டெழுந்து பெருமாள்முருகன் எழுதியிருக்கும் பத்தாவது நாவல் பூனாச்சி. விலங்குகளை மையமாய் வைத்துப் புனைவெழுதத் தீர்மானித்தது பெருமாள்முருகனின் சமூகம் மீதான அடையாளக் கோபம் என்றே எடுத்துக் கொள்கிறேன் - ஒருவகையில் சாபம் என்று கூடச் சொல்லலாம். அதாவது  மனிதர்களை வைத்து எழுதினால் தானே எதிர்க்கிறீர்கள், ஒரு ஆட்டை வைத்து எழுதுகிறேன், என்ன செய்வீர்கள் பார்க்கலாம் என்பது மட்டுமல்லாது இப்படியான கீழ்மைநிறை  மனிதர்களைக் கருப்பொருளாக்கி நான் கதை சமைக்க முடியாது போ என்று சொல்வதாகவும் எண்ணுகிறேன். விலங்குகள் நோக்கி நகர்ந்ததால் ஒருவகையான இலக்கிய வனவாசம் எனலாம். ஊரைக் குறித்தால் தானே சாதி முன்னுக்கு வந்து நிற்கிறது என அந்த ஊரையே அசுரலோகம் என்று சொல்கிறார். அங்குள்ள கடவுளை மேசாசுரன் என்கிறார்கள், மேசைய்யா எனவும்! (ஆடுகளின் மேய்ப்பனாகிய இயேசு கிறிஸ்து எனும் மேசைய்யா எனவும் கொள்ளலாம் தான். மதம் எளிதில் விடுமா!)

பூனாச்சி என்பது ஒரு பெண் கருப்பு வெள்ளாடு. அதன் தாய்க்கு ஒரே பிரசவத்தில் ஜனித்த‌ ஏழு குட்டிகளுள் ஒன்று. அதன் வருகை தொடங்கி அதன் முழு வாழ்வையும் நாவல் பேசுகிறது. அதில் அந்த ஆட்டின் பயம், அன்பு, காதல், வெறுப்பு, விரக்தி முதலான எல்லா உணர்வுகளும் பேசப்படுகின்றன. மனிதர்களும் உண்டு என்றாலும் ஆடுகளும் அவர்களுக்கு இணையாய் (அவர்களை விடவும் ஒருபடி அதிகமாகவே) கதைவெளியில் நடமாடுகின்றன. வாசிப்பின் முடிவில் பூவன், ஊத்தன், உழும்பன், கடுவாயன், பீத்தன், பொருமி, அழகு மூக்கி, கள்ளி, செம்மி என ஆடுகளின் பெயர்களும் அவற்றின் குணங்களோடு மனதில் நிறைகின்றன. நாவலே மனித, மிருக இனத்திடையேயான சம பலமற்ற போராட்டம் தான்.

ஒரு புறம் தனக்குப் பிறக்காத குட்டிக்கு தாயாடு பால் தர மறுப்பது போன்ற இடங்கள் மனிதர்களை நினைவூட்டியதெனில் மறுபுறம் கிழவி தன் மகள் போல் பூனாச்சியைக் கவனித்துக் கொள்ளும் இடங்கள் மிருகப் பிரியத்தைப் பிரதியெடுத்தது போலிருந்தது. நாவலில் மனித குணமும், மிருக குணமும் மிருங்களிடமும், மனிதர்களிடமும் கலந்தே இருந்தன.

பட்டியில் மற்ற ஆடுகளுடன் இரவில் கட்டி வைக்கப்படும் பூனாச்சியும் பூவனும் இணையும் காட்சி மாதொருபாகனில் பொன்னா திருவிழாவில் மலைக்குப் போய்க் கலக்கும் இடத்தோடு ஏனோ இணை வைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. போலவே கடுவாயனின் அழகு மூக்கியுடனான இரு பகல், ஓர் இரவு ஆவேச போக வாழ்க்கை பொன்னா - காளியின் நெருங்கி இழையும் தாம்பத்யத்தை நினைவூட்டியது. அரத்தை மூடும் மூட்டாய் ஒப்பீடுகளைத் தவிர்க்க வேண்டும் போல!

ராசாங்கம் ஆடுகளுக்குக் காது குத்தும் பழக்கத்தைப் பற்றிப் பேசும் பகுதிகள் முழுக்க சமகாலத்தில் அரசு அலுவலகங்கள் செய்யும் அராஜகங்களைப் பகடி செய்கிறது. அரசாங்கத்துக்குத் தேவை கேள்வி கேட்காமல் தலையாட்டும் மனிதர்கள். அவர்களின் கடைநிலை ஊழியரை மெல்லிசாய் எதிர்த்துப் பேசினாலும் தேசத்தில் ந‌ம் இருப்பையே கேள்விக்குள்ளாக்க அவர்களால் முடியும் என்பது போல நடந்து கொள்வர். அவர்களை அனுசரித்து நடப்ப‌தில் ஊசலாடுகிறது நம் குடியுரிமை. மாதொருபாகன் விஷயத்தில் அரசு ஒருதலைபட்சமாய் நடந்து கொண்டு அளித்த‌ வலுவான வடு இதன் வழி துலங்குகிறது.

நாவலில் மனிதர்கள் மனிதர்களோடு பேசுகிறார்கள். ஆடுகள் ஆடுகளோடு பேசுகின்றன. இதுவரை சரி. ஆனால் மனிதர்கள் பேசும் பாஷை ஆடுகளுக்குப் புரிவது போல் நாவலின் பிற்பகுதியில் சில இடங்கள் உண்டு. அது தர்க்கத்துக்குப் புறம்பாக இருக்கிறது என்று தோன்றினாலும் அசுரலோகத்தின் தர்க்கங்களுக்கு அவை பொருந்தியும் இருக்கலாம், எவர் கண்டார்! (அரைப் பனை உயரம் கொண்ட பகாசுரர்கள் நடமாடும் அமானுஷ்ய உலகில் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாகா.)

எப்படி வாழ வேண்டும் என்று ஆடுகளுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அப்படி வாழ மனிதர்கள் அனுமதிப்பதில்லை. அவற்றை ஒரு லாப நஷ்டக் கணக்காகவே பார்க்கிறார்கள். கொடுத்தால் கொண்டாடுவார்கள்; அன்றேல் கொன்று போடுவார்கள். அவை அடிமைகள் மட்டுமே. ஆக, இதை ஒரு பெண்ணியப் பிரதியாகவோ, தலித் பிரதியாகவோ கூட வாசித்துப் பார்க்க முயலலாம் தான். எல்லாவற்றுக்கும் மேல் மேலே இருக்கும் கவிதையை முன்வைத்து தான் விரும்புவதைச் சுதந்திரத்துடன் ஆக்க‌ விரும்பும் ஒரு படைப்பாளியின் உரிமைக் குரலாகவும் இந்நாவலைக் காணலாம்.

ஆனால் யாவற்றையும் மறுதலித்து விட்டு எனக்கு இதை ஒரு நிஜ ஆட்டின் கதையாகவே கொள்ளப் பிடித்திருக்கிறது.

பெருமாள்முருகனின் மற்றைய நாவல்கள் போல் இதுவும் வாசிக்கச் சுவாரஸ்யாய் இருக்கிறது. "பேசற வாயும் திங்கற வாயும் ஒன்னுதான். ஆனாலும் எல்லாத்தயும் பேசீர முடியுமா? இல்ல, எல்லாத்தையும் தின்னர முடியுமா?" என்பது போன்ற அவரது பாணி நேட்டிவிட்டி வசனங்கள் நாவலில் ஆங்காங்கே உண்டு. அப்பகுதி மக்கள் என்ன நினைக்கிறார்களோ (அவர்களின் பிரதிநிதிகளாய்ப் பாவிக்கப்படும் அதிகார பீடங்களை விடுங்கள்), ஆனால் பெருமாள்முருகனின் மனதை அந்த‌ மண்ணிலிருந்து பிரிக்க முடியாது போல‌. அவர் அசுரலோகம் நாடினாலும் அது கொங்கு மண்ணிலேயே தான் துடிக்கிறது!

பெ. முருகனின் மிருகங்கள் பேரழகே. ஆனால் அடுத்த நாவலில் மறுபடி அவரது மனிதர்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிச‌ம்பர் 2016 | ரூ.170

*

Comments

வாங்கி வச்சிருக்கேன் ..படிக்கனும்... உங்களோட அர்த்தநாரி ஆலவாயன் வாசிப்பனுபவ கட்டுரைய விட இது கொஞ்சம் சுருக்கமா இருக்கு ...
என்ன தம்பி உபில உங்க ஆதரவு பமாஜ்பேதி கட்சியும் கூயாவதி கட்சியும் பச்சா ராக்கூழ் கட்சியும் மொத்தமா புட்டுகிச்சு போல!ஐயோ பாவம்!நீங்களும்தான் மாறி மாறி மதசார்பற்ற கட்சி கூவி பாக்குறீங்க!ஆனா என்ன பண்ணுறது தம்பி உங்களைப்போல so called அறிவு ஜீவிகள் முற்போக்கு முத்தண்ணாக்கள் நடு செண்டர்வாதிகள் ஆகியோருக்கும் சாமானிய மக்களுக்குமான தொடர்பே சுத்தமா இல்ல!சும்மா நீ இங்கையோ அல்லது தயிர்மை போன்ற டுபாக்கூர் பத்திரிக்கைலையோ பத்தி எழுதுனா ஊரே திரண்டு வரும்னு நெனக்காத!ஒழுங்கா ஐடி கம்பெனி வேலைய பாரு!சந்திராயன் இந்திராயன்னு புக்கு எழுது.போதும்.இந்த போராளி வேலை!ஆங்!பதினாறு வருஷம் உண்ணாவிரதமிருந்த ஐரோம் ஷர்மிலாவே வெறும் தொண்ணூறு ஓட்டுதான் வாங்கியிருக்கு!புரிஞ்சி நடந்துக்க!
Kumaran said…
தனிநபர் உரிமைகள் மீது கைவைக்கும் மோடியின் ஆதார் பாசிச நடவடிக்கைகளை தன் கற்பனாவாத புனைவுகளின் ஊடாக தோலுரிக்கின்றார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.....

பூனாச்சி (ஒரு வெள்ளாட்டின் கதை) நாவலில்....

"எதுக்காயா ஆடுவளுக்குக் காது குத்தறாங்க?" இளம் பெண் ஆயாவை பார்த்து ரகசியாமாக கேட்கின்றாள்.

"ஆடுவளுக்கு இது அடையாளம் பாத்துக்க....காதுகுத்தி அதில தொடு போட்டுடுவாங்க...
அதில என்னமோ ஒரு எண்ணு இருக்கும்...அத வச்சி எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்கலாம்.."....ஆயா

"அப்படியா ஆயா?"

"ஆடுகளுக்கு கொம்பு இருக்குது இல்ல.. அதுங்களுக்கு எப்பவாது கோவம் வந்து ராஜாங்கத்துக்கு எதிரா கொம்பை ஆட்டிட்டா? அப்ப அதுங்களை அடையாளம் கண்டு பிடிக்கோணும் இல்லையா? அதுக்கு தான் காது குத்து...."

"ஆமாமா, ஆடுங்க கூடுனா அபாயமுனு சும்மாவா சொல்றாங்க..?" என்றார் ஒருவர்

"என்னவேணு னாலும் சொல்லுங்கப்பா என்னிக்கி ஆடுவ கூடிச்சி..கொம்ப தூக்கிகிட்டு முட்ட வந்துச்சி? கொம்பு இருகிறதே சொறிஞ்சிக்க தானே? " மற்றவர்.

குறிப்பு : ஆடுகளை ஆறறிவு உள்ள மிருகங்களாக யாரேனும் கற்பனை செய்துகிட்டு எங்க இனத்தை சிறுமை படுத்துறாரு என்று பெருமாள் முருகன் மேல கேசு கிசு போட்டா உங்களுக்கு வரும் கனவுகளில் ஆடுங்களை விட்டு முட்டவைப்பேன் தெரிஞ்சிக்கிங்க! ஆமாம்.. நான் சொல்றத சொல்லிபுட்டேன்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்