துப்பறியும் சுதா
ஒரு நெடுங்கதையும் இரு சிறுகதைகளும் அடங்கிய அம்பையின் தொகைநூல் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு.
எனக்குப் பிடித்த ஒரே பெண் புனைவெழுத்தாளர் என்று அம்பையைத் தான் சொல்ல முடிகிறது. (கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி இருப்பவர்களின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் தவிர அவ்வளவாய்ப் படித்ததில்லை.)
அவரின் வழமை போல் இக்கதைகளும் பெண்களின் பிரச்சனைகளைத் தான் பேசுகின்றன. (கவனிக்கவும். பெண்ணியம் அல்ல; பெண்களின் பிரச்சனைகள்.) அவரது மற்ற சிறுகதைத் தொகுதிகள் போல் அல்லாமல் இந்நூலின் கதைகள் ஒரே கதாபாத்திரங்களைக் கொண்டவை. சுதா குப்தா என்ற மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ் துப்பறியும் பெண் கையாளும் சில வழக்குகளே இக்கதைகள். இவற்றில் நெடுங்கதையான மைமல் பொழுது மட்டும் அசலான துப்பறியும் கதையின் ஒழுக்கில் அமைந்துள்ளது. மற்றவை நகர்ப்புற சமூகக் கதையில் நடமாடும் துப்பறியும் கதாபாத்திரம் மட்டும் என்பேன்.
மைமல் பொழுது கதை மிகச் சிறப்பாக இருந்தது (மைமல் என்றால் மாலை). நல்ல த்ரில்லர் கதை. ஆனால் திகில் கதைகளுக்குரிய மேலோட்டமான கதை சொல்லலாக அல்லாமல் இலக்கியப் பிரதியாக எளிதில் உயர்ந்து விடுகிறது. ஆனால் ஒரு பெண்ணே பிரச்சனை தருபவள் எனும் போது கொலைகாரன் ஏன் மூன்று பெண்களையும் கொலை புரிய வேண்டும் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. (சொல்லப் போனால் மற்ற இரு பெண்களும் அவனுக்குக் கூடிய சீக்கிரம் பயன்படக்கூடியவர்கள்.) இக்குழப்பத்தைத் தவிர கதை வாசிப்புச் சுவாரஸ்யத்துடன் பரபரவென நகர்கிறது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் முதன் முதலில் துப்பறியும் கதை எழுதுபவர்கள் சஸ்பென்ஸைக் காக்க முடியாமல் கோட்டை விடுவார்கள். தேர்ந்த வாசகர்கள் பாதியிலேயே குற்றவாளியை ஊகித்து விடுவர். (அம்பை எழுதும் முதல் த்ரில்லர் இது தான் என நினைக்கிறேன்.) ஆனால் இதில் கொலைகாரனை அவராக வெளிப்படுத்தும் இடம் வரையிலும் நான் ஊகிக்கவில்லை. அவ்வளவு கட்டுக்கோப்பாக கதையை நகர்த்துகிறார். இத்தனைக்கும் அவர் மைமல் கதையின் அடிநாதமாகச் சொல்ல விழைவது இந்த திகில் அம்சத்தை அல்ல; பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த முக்கியச் செய்தியை - குறிப்பாக தாய்மார்கள் பெண் குழந்தைகள் சொல்லும் விஷயங்களை அலட்சியப்படுத்தலாகா என்பதை.
அனுராக் கஷ்யப் இயக்கி, கல்கி கொச்சலின் நடித்த That Girl in Yellow Boots படத்தின் கதையும் கிட்டத்தட்ட இதே! அதன் திரைக்கதையை இருவரும் இணைந்து எழுதி இருந்தார்கள். (மைமல் பொழுதும் திரைப்படமாக்கத் தோதான கதையே.)
இன்னொரு விஷயம் இந்நெடுங்கதை ஆர். அபிலாஷின் கதை முடிவிற்கு வந்து விட்டீர்கள் நாவலை நினைவூட்டியது. (அம்பையுடையதே முதலில் எழுதப்பட்டது. ஆனால் என் வாசிப்பு வரிசை மாறி விட்டது.) இவ்விரு கதைகளும் பேசும் மையச் சரடான பிரச்சனை ஒன்று தான். ஒருவேளை இரண்டுக்குமான விதைச் செய்தியும் ஒன்றாக இருந்திருக்கலாம். கதை சொல்லும் விதத்திலும் ஒற்றுமை உண்டு. (க.மு.வ.வி. நாவல் பற்றிய என் விமர்சனத்தை இங்கே வாசிக்கலாம்.)
அதற்கடுத்து எனக்குப் பிடித்தது தலைப்புக் கதையான அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு. அதுவும் தன் கணவனை அதீதமாய்க் காதலித்துக் கொண்டே தனக்குரிய கனவை அறுபது வயதில் அடைய ஒருத்தி புறப்படுகிறாள். அம்பை சொல்வது போல் அவள் கணவனுக்கு அவள் எழுதும் கடிதம் அவளை நம் மனதில் ஒரு ராஜபறவையாக்கி விடுகிறது.
மீதமுள்ள கதையான காகிதக் கப்பல் செய்பவனில் இறுதியில் சிங்காரவேலனைத் திருமணம் செய்யத் தீர்மானித்ததற்கு ஸ்டெல்லா சொல்லும் காரணம் அத்தனை கவித்துவமாக இருந்தது. அவள் சொல்லும் காட்சி அப்படியே நம் கண் முன் விரிந்து குழந்தைகளைப் பொறுமையாய் அன்புடன் கையாளும் ஒருவன் பெண்ணையும் பிரியமாக நடத்துவான் என்பதை நுண்மையாய் உணர்த்தி விடுகிறது. சிங்காரவேலனையும் நமக்குப் பிடித்தமானவனாக்கி விடுகிறது. இப்படி நமக்குப் பிடித்தமானதாகத் தோன்றும் படி ஒரு ஃபீல்குட் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அம்பை இன்னொரு ஆதவன். இத்தொகுப்பிலும் சுதா, ஸ்டெல்லா, அருணா என எல்லோரும் நமக்கு மனதில் இணக்கமான நபர்களாகிப் போகிறார்கள்.
அன்புக்குரிய அம்பை வாய்ப்புக் கிடைக்கையில் சுதா குப்தா துப்பறியும் கதைகளைத் தொடர்ந்து எழுத வேண்டும்.
*
| அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு | சிறுகதைகள் | அம்பை | காலச்சுவடு பதிப்பகம் | நவம்பர் 2014 | ரூ.100 |
Comments