பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம்


தற்காலிகமாய் நின்று போயிருக்கும் 'தமிழ்' மின் சஞ்சிகையின் கடைசி இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாகக் கடந்த ஆண்டு வெளியானது. அதில் அவரது பெரும்பாலான புத்தகங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இதழின் ஆசிரியரான‌ நான் தலையங்கம் தவிர ஏதும் எழுதக்கூடாது, ஒரே இதழில் ஒருவரது ஒரு படைப்புக்கு மேல் இடம்பெறலாகாது என்பன மின்னிதழுக்கு நான் பின்பற்றி வந்த முக்கிய விதிகள். ஆனால் அவ்விதழில் இரண்டையும் உடைத்திருந்தேன். நான் மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து விரிவானதொரு கட்டுரை எழுதியிருந்தேன். வந்து சேர வேண்டிய‌ கட்டுரை ஒன்று கடைசி நேரத்தில் கிட்டாமல் போக, வேறு வழியின்றி இருந்த அவகாசத்தில் பூக்குழி நாவல் குறித்து சுருக்கமாய் நானே ஒரு கட்டுரை எழுதினேன் - என் மனைவியின் பெயரில். இதுகாறும் புனைப்பெயரில் வெளியான என் ஒரே படைப்பு இது தான். அதை இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஓராண்டு கழித்து இதைத் தற்போது வெளியிடக் காரணம் 2016 தினகரன் தீபாவளி மலரில் வெளியாகி இருக்கும் சாரு நிவேதிதாவின் நேர்காணல் தான். அதில் அவர் பூக்குழி நாவல் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "அவருடைய பூக்குழி என்ற நாவலையும் படித்தேன்.  அதுவும் இலக்கியத் தரமற்ற குப்பை.  சினிமா நடிகை போன்ற தோற்றம் கொண்ட, வெள்ளை நிறத்து அழகி ஒருத்தியை பன்றிகளைப் போல் தோற்றம் கொண்ட (பெருமாள் முருகனின் வார்த்தை) ஒரு தாழ்ந்த சாதி இளைஞன் காதலித்துக் கூட்டிக் கொண்டு வருகிறான்.  அந்தத் தாழ்ந்த சாதியினர் அந்தப் பெண்ணை உயிரோடு கொளுத்தி விடுகின்றனர்.  இதுதான் பூக்குழிக்கு அர்த்தம்.  இப்படி எங்கேயாவது நடந்திருக்கிறதா?  தாழ்த்தப்பட்ட சாதியினர்தானே அடி வாங்குகிறார்கள்?  இதுவும் பொய். இலக்கியத் தரம் என்று பார்த்தால் விஜய்காந்த் சினிமா அளவு கூடத் தேராது.  அத்தனை மொக்கை." பூக்குழி நாவலின் இலக்கியத் தகுதி பற்றி அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் மேற்கண்ட கருத்தில் இருப்பது தகவல் அல்லது புரிதல் பிழை. நாவலில் நாயகனே உயர் சாதி; பெண் தலித். சாதி ஆணவப் படுகொலையைத் தான் நாவல் சித்தரிக்கிறது. சாரு அதைத் தலைகீழாய்ப் புரிந்து கொண்டு கருத்துச் சொல்கிறார்.

***

சாத்தான் மட்டுமே வேதம் ஓதும்

கூரையில் வைக்கப்பட்ட தீ
திகுதிகுவெனப் பரவி எரித்துக்கொண்டிருக்கிறது
என்வீட்டை

தசை கருகும் நெடியில் வெளி திணறுகிறது
தணலில் வெந்து கொண்டிருப்பது
படுக்கையாய்க் கிடந்த என்தாயாகவோ
நிறைசூலியான எனது மனைவியாகவோ இருக்கலாம்

நாங்கள் சேமித்துவைத்திருந்த விதைதானியஙகள்
வெடித்துத் தெறிக்கின்றன சோளப்பொரியைப்போல

என் அண்டைவீட்டார்
நீரையிறைத்துக் கொண்டிருக்கின்றனர் முன்ஜாக்கிரதையோடு
தத்தமது கூரைமீது

எவர்மீதும் சேதாரத்தை விசிறாமல்
தனக்குத்தானே குமைந்திறங்குகிறது சாம்பலாய் என்வீடு

யார்மனதும் தொந்தரவுக்காளாகாத வண்ணம்
இதுகுறித்த புகாரினை வெளிப்படுத்துவது எங்ஙனமென
ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கிறான்
கூரைக்கு தீ மூட்டியவன்.

- ஆதவன் தீட்சண்யா


*

இந்திய அரசால் பிற்படுத்தப்பட்ட சாதி என்று வகைப்படுத்தப்பட்ட - ஆனால் மண்டல அளவில் பண பலத்திலும், அரசியல் செல்வாக்கிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் - குறிப்பிட்ட இன மக்களின் வாழ்க்கை குறித்து தான் பெருமாள்முருகன் பிரதானமாய் எழுதுவார் என்றாலும் அதன் ஒரு பகுதியாக தலித்களின் மீது அந்த மேல் சாதியினர் செலுத்தும் அடக்குமுறையை அவ்வப்போது பதிவு செய்திடத் தவறியதில்லை.

ஏற்கனவே அவரது கூளமாதாரி நாவலில் தலித் சிறுவர்களின் அடிமைப்பட்ட வாழ்வியலைச் சொல்லி இருக்கிறார். அவரது எறுவெயில், கங்கணம், ஆளண்டாப்பட்சி நாவல்களிலும் தலித் பாத்திரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான ஆலவாயன் நாவலிலும் அப்படியே. தவிர, பொதுவாகவே அவரது புனைவுகளில் தலித்கள் பற்றிய பதிவுகள் இடம் பெற்று வருகின்றன. பூக்குழி அவ்வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்நாவல் பேசும் மைய விஷயமே சாதியமும் அதன் விஷமும் தான்.

ஒருவேளை காமம் சார்ந்து கூட வரக்கூடும், ஆனால் நல்ல காதல் சாதி பார்த்து வருவதில்லை.

அப்படிப்பட்ட காதலில் கலப்பு மணம் என்பது தவிர்க்க முடியாதது. உண்மையில் சாதியை ஒழிக்க இரண்டு மார்க்கங்கள் தாம் உண்டு. ஒன்று இட ஒதுக்கீடு; இன்னொன்று கலப்பு மணம். அதனால் தான் அது எப்போதும் மேல் சாதியினருக்குப் பிடிப்பதில்லை. அவர்களுக்கு எப்போதும் தங்களுக்குக் கீழ் நிலையில் சில மனிதர்கள் தேவை. அதுவே கௌரவம் என நம்புகிறார்கள். கலப்பு மணம் அதை உடைக்கிறது.


பூக்குழி நாவல் கலப்பு மணத்தில் விளையும் நடைமுறைச் சிக்கல்களைத் தான் பேசுகிறது. பெருமாள் முருகன் எழுதியிருக்கும் ஒரே தொடர்கதை இது தான். கல்கி இதழில் 2013ன் முற்பகுதியில் வெளியானது. நீங்கள் கவனித்தால் இதே காலகட்டத்தில் இன்னொரு முக்கியச் சம்பவம் நிகழ்ந்திருப்பது புலப்படும்.

அது தர்மபுரி இளவரசன் - திவ்யா காதல் விவகாரம். கிட்டத்தட்ட அவர்கள் நீதிமன்ற மற்றும் காவல்துறை படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்ததும் இதே காலகட்டத்தில் தான். ஜூலை 13 இளவரசன் அகால மரணம் அடைந்திருக்க, ஜூலை 28 தொடர் முடிந்திருக்கிறது! இந்த நாவல் கிட்டத்தட்ட அதே கதை தான்.

ஆனால் இதில் பெண் தலித். ஆண் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவன். அவன் அவளை வேலைக்கு வெளியூருக்குப் போன இடத்தில் சினேகித்து மணம் முடித்து ஊருக்கு அழைத்து வருகிறான். அவள் சாதி தெரிந்ததும் ஊர்க்காரர்கள் எதிர்க்கிறார்கள். இறுதியில் அவளைக் கொல்கிறார்கள்.

90களின் துவக்கத்தில் கதை நடக்கிறது. முருகனின் வழக்கமான கதைக்களத்தில். குமரேசன் - சரோஜா ஓடிப் போய் காதல் மணம் செய்தவர்கள் (இளவரசன் - திவ்யா என்று ஒலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா!). கல்யாணமான பின் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து விடுகிறான். அவன் ஊரில் தன் அம்மா உட்பட எவரிடமும் அவள் என்ன சாதி என்பதை மறைத்து விடுகிறான். ஆனால் காதல் திருமணம் செய்து வந்ததற்கே ஊரில் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.

பிற்பாடு அவளது சாதி தெரிய வர ஊரே சேர்ந்து திட்டமிட்டு - அதற்கு குமரேசன் தாயும் உடந்தை - அவளைப் புதருக்குள் வைத்து எரிக்கிறார்கள். (எரியத் தொடங்கும் வேளை குமரேசனின் சைக்கிள் சப்தம் கேட்பதாக முடித்து இருப்பதால் அவள் பிழைத்துக் கொள்வதாகவும் எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு தான்.)

சிறுநகர்ப்புறங்களின் காதல்கள் பெரும்பாலும் வேலை பார்க்குமிடத்தில் தான் முகிழ்க்கின்றன. இக்கதையில் சரோஜாவின் வீடு குமரேசன் வேலை செய்யும் சோடாக் கடையின் அருகில் இருப்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது. 90களில் பால்யத்தைக் கழித்தவர்களுக்கு நகர்ப்புறங்களில் இருந்த கோலி சோடா தயாரிக்கும் சிறுகடைகள் பரிச்சயமாகி இருக்கும். அது போன்ற ஒரு கடையில் தான் குமரேசன் பணிபுரிகிறான். அதைப் பற்றிய பின்புல விஷயங்கள் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஓடிப் போவதால் குமரேசனுக்கு வேலை போகிறது. அதுவரை கொண்ட அனுபவத்தை வைத்து ஒரு சோடா தயாரிக்கும் கடை போடலாம் என்பதே அவனது எதிர்கால வாழ்க்கைத் திட்டமாக இருக்கிறது.

இன்று தமிழகத்தின் இண்டு இடுக்கு வரையிலும் லெக்கிங்ஸ், ஜீன்ஸ் எல்லாம் பரவி நிற்கிறது. பெருநகரங்களில் பிரபலமான ஒரு ஃபேஷன் சில மாதங்களில் கடைக்கோடி கிராமத்தில் வந்து நிற்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் முன் கொசுவம் / பின் கொசுவம் என்ற விஷயத்தில் கூட கிராமம் - நகரம் மத்தியில் வித்தியாசம் இருந்ததை நாவல் பேசுகிறது. சரோஜா முன் கொசுவம் வைத்துப் புடவை கட்டுவதை குமரேசனின் கிராமத்துப் பெண்கள் அதிசயமாகப் (தவறாகவும்) பார்க்கிறார்கள்.

பொதுப்புத்திக்கு மாற்றாய் ஒரு விஷயத்தை இந்நாவலில் முன்வைக்கிறார் பெருமாள்முருகன். தலித் என்றாலே - அதுவும் குறிப்பாய் தமிழ்நாட்டில் - கருப்பு நிறத் தோல் கொண்டவர்கள் என்று தான் நாம் இதுவரை கண்ட படைப்புகள் நமக்குக் காட்டி வருகின்றன. குறிப்பாய் நமது சினிமாக்களில். உதாரணமாய் பாரதி கண்ணம்மா பார்த்திபன், தசாவதாரம் பூவராகன் கமல் ஹாசன். சமீபத்திய பா. ரஞ்சித் படங்கள் மட்டும் தான் விதிவிலக்கு. ஆனால் அதிலுமே பெண்களை மாநிறம் கொண்டவர்களாகவே சித்தரிக்கிறார்.

பூக்குழி நாவலில் வரும் தலித் பெண்ணான சரோஜா செந்நிறம் கொண்டவள். மேல் சாதியினரான குமரேசன் ஊர்க்காரர்களுக்கே அவளது தோலின் நிறம் ஆச்சரியம் தருவதாக இருக்கிறது. திரும்பத் திரும்ப அந்த விஷயம் பலராலும் பேசப்படுகிறது. அதுவே அவள் அந்நியள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியபடியே இருக்கிறது. அது அவர்களைத் தொந்தரவு செய்கிறது. அதனாலேயே அவள் நிறத்தைக் காண்பித்துத் தான் அப்பாவியான குமரேசனை மயக்கி விட்டாள் என்பதாகப் பேசுகிறார்கள்.

அவ்வூரின் பல ஆண்களுக்கு அவளது நிறம் கண்களை உறுத்துகிறது. அவர்கள் அவளைக் கேவலமாய்ப் பேசினாலும் அதைத் திறந்து பார்க்கும் ஆசை உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கிறது. இறுதியில் அவளை எரிக்க முனைகையில் கூட “அந்த செந்தோலத் தொட்டுப் பாத்திரலாமின்னு நெனச்சன்” என்கிறான் அதில் ஒருவன். எல்லாவற்றிலும் உச்சமாக குமரேசனின் உறவுக்காரப் பெண் ஒருத்தி “இவளுக்கு மட்டும் தங்கத்துல செஞ்சு வெச்சிருக்குதோ என்னமோ. ஒரச்சு வித்து பாற மேல பங்களா கட்டுவான்” என சாரோஜாவைப் பற்றிப் பொறாமையில் சொல்கிறாள். இவ்வளவு சிவந்து நிற்பவளின் யோனி என்ன நிறமாய் இருக்கும் என்ற கற்பனை அவர்கள் அத்தனை பேருக்கும் இருந்திருக்கிறது.

இன்றும் திருமணத்தில் நிறம் என்பது முக்கிய விஷயமாகப் பார்க்கிறார்கள். அதுவும் முக்கியமாய்ப் பெண்களுக்கு. கருப்புத் தோல் பெண் என்றால் பணக்காரியாகவோ, நல்ல வேலையில் இருந்தாலோ மட்டும் தான் நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். கருப்பு நிறத் தோல் கொண்ட ஆண்கள் கூட அவர்களைத் மணம் செய்யத் தயக்கம் காட்டுவதும் நிகழ்கிறது. அவர்களே சம்மதித்தாலும் சுற்றி இருப்போர் அவர் ஏதோ பெரும் இழப்பைச் சந்தித்து விட்டது போல் இரக்கத்துடன் துக்கம் விசாரிக்கின்றனர்.

அன்றைய தமிழக கிராமங்களில் காதல் என்பது எத்தனை மோசமான விஷயமாகப் பாவிக்கப் பட்டிருக்கிறது என்பதை இந்த நாவல் எடுத்தியம்புகிறது. இத்தனைக்கும் சரோஜா தாழ்த்தப்பட்ட சாதி என்று தெரிய வராத சந்தர்ப்பத்திலுமே கூட காதல் திருமணம், ஊருக்கு வெளியே வேறு சாதியில் கல்யாணம் செய்து கொண்டு வந்து விட்டதால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார்கள்.

இந்த 25 ஆண்டுகளில் உலகமயமாக்கலின் பக்கவிளைவாய் காதல் கல்யாணம் என்பது இயல்பாகி விட்டாலும் சாதி மாறிக் கல்யாணம் செய்வது, அதுவும் குறிப்பாய் தாழ்த்தப்பட்ட சாதியில் பெண்ணோ மாப்பிள்ளையோ எடுப்பது இன்றும் கேவலமாகவே கருதப்படுகிறது. முதலில் மறுக்கிறார்கள். மீறி செய்தால் இன்ன சாதி என மறைக்கிறார்கள். குமரேசனே கூட நாவலில் அதைத் தான் செய்கிறான்.

இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மாமியார் மருமகள் உறவும் குறிப்பிடத்தக்கது (குறிப்பிடத்தக்கது என்ற சொற்பிரயோகத்தைக் கேலி செய்பவர்கள் இவ்விடத்தில் வேறு சொல் ஏதேனும் போட்டுக் கொள்ளவும்). சாதாரணமாகவே மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற ரீதியிலேயே இருக்கும் விஷயம் அது. இதில் காதல் திருமணம், அதுவும் வீட்டுக்குச் சொல்லாமல், அதுவும் சாதி மாறி எனும் போது கேட்கவா வேண்டும். சொற்களால் மிகவும் கொடுமை செய்கிறார் குமரேசனின் தாயான மாராயி. இறுதி வரை அவர் மாறவே இல்லை. ஊர் தேடிப் போய்த் துப்பறிந்து சரோஜாவின் சாதியை கண்டுபிடிப்பது, அவள் உயிருக்கே உலை வைப்பது என்பது வரை போகிறார்.

இங்கே அவர் கணவனை இழந்து தனியாய் மகனை வளர்த்தவர் என்பதைக் கவனிக்க வேண்டும். ஊர் ஒரு சொல் தன்னைத் தவறாய்ப் பேசி விடலாகா என்பது தான் அவர் வாழ்வின் ஒரே நோக்காக இருக்கிறது. அதனால் சாதி மாறி திருமணம் செய்த மகனால் ஊர் வாயில் விழுவதை அவர் விரும்பவில்லை. அது வரை தன் சொல் மீறாத ஊமையாக இருந்து வந்த மகனை இன்று எவளோ ஒருத்தி முந்தானையில் முடிந்து கொண்டது பிடிக்கவில்லை. இவை சரோஜா மீதான தீராத பெருவன்மமாய் உருக்கொள்கிறது.

இன்றும் ஊர்ப்பக்கம் இதே உளவியல் கொண்ட பெண்களைக் காண முடியும். சாதி தொடர்பான நேரடி வன்முறைகளில் இறங்குவது ஆண்கள் தான் என்றாலும் சாதியுணர்வை சிறுவயதிலிருந்தே ஊட்டி வளர்ப்பதும், வீட்டுக்குள் அனுமதித்தல் முதல் திருமணம் செய்வது வரை ஒவ்வொரு விஷயத்திலும் அதைப் பேணுவதும் பெண்கள் தான் என்பது என் அவதானிப்பு. பூக்குழி அதைப் பதிவு செய்திருக்கிறது.

வெறும் பெயர்கள் மட்டுமல்லாது பல ஒற்றுமைகள் தர்மபுரி கதையுடன் பூக்குழிக்கு உண்டு. உதாரணமாய் தாயே அந்தக் காதலை எதிர்த்துப் பிரிக்கும் சூத்ரதாரியாக இருப்பது. அரசியல் கட்சித் தலையீடு நாவலில் சொல்லப்படவில்லை என்றாலும் ஊர்க்காரர்கள் ஒதுக்கி வைப்பது என்பதெல்லாம் கட்டப்பஞ்சாயத்து தான்.

சில ஆண்டுகளுக்கு முன் சாதி காரணமாய் பிரிக்கப்பட்ட ஒரு காதலை நேரடியாய் அறிவேன். சில்லாண்டுக் காதல். அவன் கல்லூரி முடித்ததும் தன் லட்சியத்துறையில் நுழைய முயற்சித்துக் கொண்டிருந்தான். பெண் வீட்டில் அவனுக்கு வேலை இல்லை என்று சொல்ல, அவன் தன் லட்சியத்தை ஒதுக்கி வைத்து அவளைக் கைபிடிக்கும் நோக்கில் வட நாட்டில் கிடைத்த வேலைக்குப் போனான்.

ஆனால் அதன் பிறகு சாதி மாறிக் கல்யாணம் செய்தால் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டி அவளுக்கு வேறு கல்யாணம் செய்து வைத்து விட்டனர். பெற்றோரும் சொந்தக்காரர்களும் வேற்று சாதியில் மணம் முடித்தால் எல்லாம் கெடும் என்று உதாரணங்கள் சொல்லி பேசிப் பேசி மூளைச்சலவை செய்து அவளை மனம் மாற்றி விட்டனர். லட்சியத்தையும் இழந்து காதலையும் இழந்து நிற்கிறான்.

இன்று கல்லூரிகளில், அலுவலகங்களில் சாதி பார்த்துக் காதலிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள்.

கலப்புத் திருமணங்களை எதிர்ப்பவர்களிடம் நெருங்கிப் பேசினால் பெரும்பாலும் அந்த எதிர்ப்புக்குச் சொல்லப்படும் காரணத்தைக் கேட்டால் ஒன்று தான்: “இப்படி சாதி மாறிக் கல்யாணம் பண்ணிட்டுப் போயிட்டாளே எனக் கேட்கும் சொந்தக்காரனிடம் தலை நிமிர்ந்து பதில் சொல்ல முடியாதே!” அதாவது மகளின் விருப்பம் தாண்டி அரை வாழ்க்கைக்கு மேல் வாழ்ந்து முடிந்த தன் ஈகோ துருத்தி நிற்கிறது.

“கண்ட நாயும் கேள்வி கேட்கும்னு அவளுக்கு எங்கே புரியுது!” என சொந்தக்காரரிடம் பதில் சொல்ல ஏன் அவருக்குத் தைரியம் வருவதில்லை? “உன்னை விட என் மகள் தான் முக்கியம், வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்ற தெனாவட்டு ஏன் வர மறுக்கிறது? அது தான் இங்கே இருப்பவர்களின் மனவியல்.

அவர்கள் வாழ்வதே ஊரார் நல்ல சொல்லுக்காகத் என்பதற்காகத் தான். அது போக வேறு லட்சியம் ஏதுமில்லை. பணம் சம்பாதிப்பது கூட பிற்பாடு தான். சொந்த திருப்தியும், சந்தோஷமும் ரெண்டாம் பட்சம். நியாயமும் தர்க்கமும் அவ்வரிசையில் கடைசி. கலாசாரம் என்ற பெயரில் இந்தியர்களின் மன அமைப்பே அப்படியிருக்கிறது. அதைப் பேண சிறுவயதிலிருந்தே சாதியையும் மதத்தையும் ஊட்டி வளர்க்கிறார்கள்.

கிராமங்கள் மாறி நகரங்கள் பெருகும் போது தான் இதெல்லாம் குறையும். இன்று தான் பிறந்த கிராமத்திலிருந்து நகர்ந்து போய் சென்னையிலோ பெங்களூரிலோ ஹைதராபாத்திலோ பணி நிமித்தம் நிரந்தமாய்க் குடியேறுபவன் மெல்ல மெல்ல இந்த சொந்தக்காரனுக்குப் பதிலளிக்கும் சிறையிலிருந்து வெளியேறுவான். அப்படித் தான் மாற்றம் நிகழும். ஆனால் நம் சாதியக் கட்சிகள், மதவாதக் கட்சிகள் அப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றன. 2012 தர்மபுரி கலவரம் அதற்கு ஓர் உதாரணம். உயர்சாதியினரைக் காதல் செய்தால் தலித்களின் குடிசைகளைத் தீக்கிரையாக்குவோம் என்பதே அவர்கள் அன்று அதன் மூலம் அறிவித்தது.

பிற்பாடு இளவரசன் மரணம், கோகுல்ராஜ் மரணம் எல்லாமே சாதியைத் தொட்டு விட்டான் என்பதாலேயே சிதைக்கப்பட்ட காதல்கள். “ஒருத்தி போனா பிடிச்சு வைக்கலாம், எல்லாருமே தாழ்த்தப்பட்டவனத் தேடி ஓடறாளுகளே!” என்றும் “அப்படி எங்க கிட்ட இல்லாதது தாழ்த்தப்பட்டவனுக கிட்ட என்னடி இருக்கு?” என்றும் “வேற சாதி நாயைக் கல்யாணம் பண்ணிட்டுப் போனா ரெண்டு பேரையும் சேர்த்து வெட்டுவோம்!” என்றும் பொதுவெளியில் தயக்கமின்றிப் பதிவிட இத்தகைய சாதி வீரர்கள் தவறுவதில்லை.

இவற்றை எல்லாம் வாசித்தால் இரக்கம் தான் வருகிறது. சமீபத்தில் ஃபேஸ்புக்கில் சாதி வெறியுடன் பதிவிட்ட ஒரு கல்லூரி மாணவன் அதற்கு எழுந்த பலத்த எதிர்ப்புகளால் அதை அழித்து வெளியேறினான். சாதி / மத அரசியலால் தடம் புரண்டு கெட்டுப் போகும் இளைஞர்களுக்கு அவன் ஒரு சோறு பதம்.

அந்தந்தச் சாதியிலிருந்தே நேர்மையான குரல்கள் இவற்றைக் கண்டித்து வெளிப்பட வேண்டும். அவர்களை ஒதுக்க வேண்டும். பண்பாட்டுக்கூறுகள் தாண்டி உயர்வு தாழ்வு பாராட்ட சாதி அடிப்படையில் ஏதுமில்லை என்பதை தம் மக்கள் மத்தியில் - குறிப்பாய் தம் குழந்தைகளிடம் - சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அது தான் மாற்றத்துக்கான வழி. பூக்குழி அத்தகைய ஒரு வலுவான நேர்மையான குரல்.

| பூக்குழி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2013 | ரூ.130 |

***

Comments

Ramya said…
அன்புள்ள சிஸ்கே,

நானும் சாதி, மதம் மாறி திருமணம் செய்ய போகிறவள். சென்னையில் வாழ்பவள். நான் என் விருப்பத்தை கூறிய போது, என்னை பெற்றவர்கள் கவலைப்பட்டது சுற்றத்தை பற்றி தான். இன்னும் ஒரு தலைமுறை காலமாகும் நகரத்தில் காதல் திருமணத்தை தைரியமாய் கூற. கிராமத்தில் இன்னும் நேரம் எடுக்கும் என்றே நினைக்கிறேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்