கருப்பு மாளிகை [சிறுகதை]


நள்ளிரவின் பூரணை ஆக்ராவின் மீது வெண்ணமுதினைப் பொழிந்து கொண்டிருந்தது.

முதுமையும் குளிரும் யமுனை நதியின் மீது துடுப்புப்படகேறியிருந்த ஷாஜஹானை நடுக்கியது. அதை உணர்ந்தாற்போல் ஜஹனாரா பேகம் அவர் உள்ளங்கையைப் பற்றி அழுத்தினாள். ஷாஜஹான் திரும்பி தாடியினுள்ளே வாஞ்சையுடன் புன்னகைத்தார்.

“ரொம்பக் குளிர்கிறதா, அப்பா?”

“உன் அம்மாவுக்காக இதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டேனா!”

ஜஹனாரா மேலும் அழுத்தமாய் அவர் கையைப் பற்றிக் கொண்டாள். உண்மையில் அம்மாவுக்காக இந்தக் குளிரை மட்டுமா எதிர்த்துக் கொண்டிருக்கிறார், அதை விட ஆபத்தான வேலையில் உயிரைப் பணயம் வைத்தல்லவா இறங்கி இருக்கிறார்!

அதுவும் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போய் விட்ட ஒருத்திக்காக!

அம்மா மும்தாஜ் தன் பதினாலாவது குழந்தையைப் பெற்றுப் போட்டு விட்டு இறந்த போது முதல் மகளான ஜஹனாராவுக்கு பதினேழு வயது. புனித ரமலான் மாதமது. சிசுவுக்கு ஆபத்து நேருமெனில் கர்ப்பவதி நோன்பிருக்க வேண்டியதில்லை என்பதை மார்க்கம் சுட்டி இருந்தாலும் மும்தாஜ் பிடிவாதமாய்த் தொடர்ந்து நோன்பிருந்தாள். ஏற்கனவே சோகையான பூஞ்சை உட லை விரதத்தின் பாரமும் சேர்ந்தழுத்தியது.

இரு விடியல்கள் பிரசவ வலியுடன் போராடியவளுக்கு மிகுரத்தப்போக்கு எமனானது.

சேவகன் ஒருவன் அலறியடித்து வந்து சேதி சொன்ன போது தினப்படி வழக்கமாக தந்தையுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள் ஜஹனாரா. ஷாஜஹானின் ராணி வெட்டுப்பட இருந்ததை ஒத்திப் போட்டு விட்டு அவசரமாய் அம்மாவைக் காண விரைந்தவளுக்கு அங்கு செய்ய அதிகம் வேலையிருக்கவில்லை, அவள் சடலத்தின் மீது படர்ந்து அழுவதைத் தவிர. அது நல்மதி நிறைந்ததொரு பௌர்ணமி தினம்.

ஷாஜஹான் அதனை உண்மையில் எதிர்பார்க்கவில்லை. பிரசவ வேதனை என்பது மும்தாஜ் பொதுவாக எதிர்கொள்வது தான். அவள் உடல் அத்தனை மென்மையானது. ஒவ்வொரு முறையும் அது ஷாஜஹானுக்குக் குற்றவுணர்வை அளிக்கும். தன் தேகச் சுகத்துக்காக அவளை ஆண்டுதோறும் வருத்துகிறோமே என. ஔரங்கஸீப் பிறந்த போதிலிருந்தே இனி குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார்.

ஆனால் மும்தாஜ் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டாள். இன்னும் இன்னும் எனக் குழந்தைகளை ஆசையாய்ப் பெற்றுக் கொண்டாள். குழந்தைப்பேறை வெற்றியாகவே அவள் கருதி வந்தாளோ என்னவோ! விட்டிருந்தால் இன்னும் பத்து பெற்றிருப்பாள்.

தன் குற்றவுணர்வின் காரணமாகவே அவர் பிரசவம் நிகழும் அறையின் பக்கமே போக மாட்டார். ஆள் அங்கில்லை என்றாலும் மனம் முழுக்க அங்கேயே தான் சுற்றிக் கொண்டிருக்கும். இம்முறையும் அப்படித்தான் காத்திருந்தார். இதுவரையிலும் எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறாள். பிரசவத்தில் குழந்தைகள் கூட இறந்து போயிருக்கின்றன. அதெல்லாம் ஷாஜஹானை அத்தனை பாதித்ததில்லை.

ஷாஜஹான் சில மாதங்கள் வரையிலும் நடைப்பிணமாகவே ஆகிப் போனார். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் அவரை அறியாமல் சுரந்து உதிர்ந்து கொண்டே இருந்தது.

அப்போது தான் ஜஹனாரா அவரோடு மிக நெருக்கமாகிப் போனாள். அவளே அவரை ஆற்றுப்படுத்தினாள். தேற்றித் தயார் செய்தாள். ஒரு சக்கரவர்த்தியாக அவர் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டினாள். மெதுவாய் அவர் கண்கள் வறண்டன.

ஜஹனாராவின் கைகள் மீது விழுந்த நீர்த்துளி அவள் நினைவுகளைக் கலைத்தது.

வான் துளியோ என அண்ணாந்து பார்த்தாள். வான வெளி மேகமற்று நிர்மல்யமாய் இருந்தது. சட்டென உணர்ந்தவளாய் ஷாஜஹானின் முகத்தைப் பார்த்தாள். அவரது கண்கள் பனித்து தான் தன் கரத்தில் துளியாய் வீழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்தாள்.

“என்னப்பா?” - கேட்டபடி அவரை நளினமாய் உலுக்கினாள்.

“ஒன்றுமில்லை ஜஹனாரா. பழைய நினைவுகள் தாம்.”

“அழாதீர்கள். அழுது ஆகப் போவது ஒன்றுமில்லை.”

“உண்மை தான். ஆனால் கண்ணீரையோ புன்னகையையோ வரவழைக்கவியலாத சம்பவங்கள் ஏதும் நம் நினைவில் தேங்குவதில்லை. அதுவும் என் விஷயத்தில் ஞாபகம் என்பதே கண்ணீர்க்கிடங்கு தானோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது!”

ஆமோதிப்பாய்ப் பெருமூச்செறிந்தாள் ஜஹனாரா.

ஆம். சொந்த மகனைக் கொல்லத் திட்டம் தீட்டுவதும், அதே மகனால் வீட்டுச் சிறை வைக்கப்படுவதும் இவ்வுலகில் எத்தனை தந்தைக்கு நிகழும். அதிகாரத்தை அடைதல், அல்லது தக்க வைத்தல் என்பதற்கு மனிதர்கள் கொடுக்கும் விலை கொடூரமானது.

சொந்தக் குடும்பத்தைப் பலி ஈந்து தானே தேச நலனை ஈட்ட வேண்டியிருக்கிறது!

ஆனால் அப்பாவின் வாழ்வில் சந்தோஷமான நிகழ்வுகளே இல்லையா என்ன! இப்போது யாருக்காகப் போய்க் கொண்டிருக்கிறோமோ அந்த மும்தாஜ் அவரது வாழ்வின் வசந்தம். அவள் தானே வரலாற்றில் அவர் பெயரைச் செதுக்கியவள்.

ஷாஜஹான் ஆக்ராவில் இருந்த நாளெல்லாம் அந்தப்புரத்தில் தான் இருப்பார் என ஜஹனாரா காதுபடவே சேடிப் பெண்டிர் கேலி பேசுவார்கள். காரணம் தன் தாய் மும்தாஜ் தான் என்பது ஜஹனாராவுக்குப் புரிந்திருந்தது. அவளது அழகு அப்படி என்று தான் ஆரம்பத்தில் நினைத்திருந்தாள். அவள் இறந்த பின் தான் மெதுவாய் அவள் அழகையும் தூக்கிச் சாப்பிடும் அவள் புத்தியே காரணம் எனப் பிடிபட்டது.

ஷாஜஹானுக்கு இணையாய் மும்தாஜின் கை மொஹலாய தேசத்தின் ராஜ்ஜிய முடிவுகளில் இருந்தது. ஷாஜஹானுக்கிருந்த ஏராள மனைவிகளுடன் ஒப்பிட்டால் மும்தாஜை பொன்னாலும் ரத்தினங்களாலும் இழைத்திருந்தார் ஷாஜஹான். ஆக்ரா கோட்டையில் அவள் அறைக்கென விஷேச, விலையுயர்ந்த அலங்காரங்கள் செய்ய ஏற்பாடு செய்தான். அவள் குளிப்பதற்கென பிரத்யேகமாய்ச் சில பன்னீர் ஊற்றுகள் அமைத்திருந்தான். இத்தனைக்கும் மும்தாஜுக்குப் பின்பும் பல பெண்களை மணம் முடித்தார் ஷாஜஹான். அந்த மணங்கள் யாவும் அரசியல் காரணங்களுக்கானவை.

எத்தனை பேர் அவளுக்குப் பின் அந்தப்புரத்துக்கு வந்து சேர்ந்தாலும் மும்தாஜின் மீதிருந்த பிரேமமும் மோகமும் மட்டும் அவருக்கு இறுதி வரை தீரவே இல்லை.

தன் ராஜமுத்திரையையே அவளுக்குப் பயன்படுத்த வழங்கி இருந்தார் ஷாஜஹான். ஷாஜஹானிடம் இத்தனை செல்வாக்குப் பெற்றிருந்தும் அவள் தன்னை ஒருபோதும் அரசியலில் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. இத்தனைக்கும் அவளுக்கு முன்னுதாரணமாய் அவளது மாமியார் நூர் ஜஹானே இருந்திருக்கிறாள். ஆனால் மும்தாஜ் அடக்கியே வாசித்தாள். ஒருபோதும் ஷாஜஹானிடம் தனக்கென ஏதும் கேட்டுக் கொண்டதில்லை என்று சொல்வார்கள் - கடைசி ஒரே ஒருமுறை தவிர.

அனுபவத்தின் சிதைவேறிய ஷாஜஹானின் குரல் அவளை நலவுலகத்திற்கு மீட்டன.

“இந்தத் தாஜ் மஹாலின் சிறப்பு என்னவென்று தெரியுமா ஜஹனாரா?”

அவள் அறிவாள். ஆனால் அவரது ஆர்வமான பேச்சுக்கு அணையிட விரும்பாமல்,

“சொல்லுங்கள் அப்பா!” என்றாள் குரலில் குழந்தைத்தனத்தைக் குழைத்துக் கொண்டு.

“இருபக்கச் சமச்சீர்மை! இந்த வெண்மாளிகையின் மத்தியில் ஒரு கோடு வரைந்தால் அது கல்லறை மாடத்தை மட்டுமல்ல, இந்த வளாகத்தினுள் இருக்கும் பள்ளி வாசல், விருந்தினர் மாளிகை, சார்பா என்ற மொஹலாயத் தோட்டம், தர்வாஸாயி ரௌஸா எனப்படும் பிம்மாண்ட நுழைவாயில், இன்ன பிற கட்டிடங்கள் எல்லாவற்றையுமே சரிசமமாய் இரண்டாய்ப் பிளக்கும். மாடத்திலிருக்கும் மும்தாஜின் சமாதி உட்பட.

ஜஹனாரா முதல் முறை கேட்பது போல் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.


“இது பாரசீக - மொஹலாயக் கட்டிடக்கலை மரபின் மாபெரும் சாதனை. இதுவரை இப்படி முழுமையான சீர்மை கொண்ட ஒரு கட்டிடத்தை பூலோகம் கண்டதில்லை.”

“உண்மை தான் அப்பா. இதுவரை என்ன, இனிமேலும் காணப் போவதில்லை.”

“இல்லை ஜஹனாரா. அது நடக்காது.”

முகம் இறுகிப் போய் அவர் சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனிக்காது ஜஹனாரா தாஜ் மஹால் என்ற அரும்பெரும் அதிசயம் கட்டப்பட்ட தினங்களுக்குத் தாவினாள்.

பர்ஹான்பூரில் மும்தாஜ் இறப்பதற்கு முன் தன்னைச் சந்திக்க வந்த ஷாஜஹானிடம் அவள் இரண்டு வரங்கள் கேட்டாள் என மொஹலாய சாம்ராஜ்யமே கிசுகிசுத்துக் கொண்டது. ஒன்று அவள் உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மீது உலகம் கண்டிராத அழகுடன் ஒரு மாளிகை எழுப்ப வேண்டும். மற்றது ஆண்டுதோறும் தான் இறந்த தினத்தில் ஷாஜஹான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தவறாமல் அங்கே வந்து தன்னை நினைத்துக் கொள்ள வேண்டும். மற்ற நாளெல்லாம் மறப்பேனோ என ஷாஜஹான் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள் ஜஹனாரா.

முதலில் பர்ஹான்பூரிலேயே தோட்டத்தில் மும்தாஜைப் புதைத்தார்கள். பிறகு அவள் கல்லறைக்கு மாளிகை எழுப்ப யமுனை நதிக்கரையில் இடம் பார்த்துத் தீர்மானித்த பின் ஷாஜஹானின் மேற்பார்வையிலேயே அவள் கல்லறையைத் தோண்டி எடுத்து, பிரேதத்தைத் தங்கப் பேழையொன்றில் வைத்து ஆக்ரா எடுத்து வந்து புதைத்தார்கள்.

அதன் மீது பிரம்மாண்டமாய் தாஜ் மஹால் எழும்பியது. தலைமை அரசக் கட்டிடக் கலைஞர் அஹமது லாகோரியின் மேற்பார்வையில் சுமார் இருபதினாயிரம் பேர் கிட்டத்தட்ட இருபத்தி இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்து அதைக் கட்டி முடித்தனர்.

முழுக்க வெண் பளிங்கினால் ஆன அக்கட்டிடம் முழுக்க பல வர்ணங்களில் குறை மணிக்கற்கள் பதித்திருந்தார்கள். சரித்திரத்தில் இடம் பெற்று விட்ட உலகின் எந்தப் பேரழகிக்கும் நிகரான கண் பறிக்கும் வசீகரம் கொண்டதாய் இருந்தது தாஜ் மஹால்.

ஆக்ராவிலிருந்து மட்டுமல்லாது மொத்த மொஹலாய சாம்ராஜ்யப் பரப்பிலிருந்தும், தூர தேசங்களிலிருந்து கூட மக்கள் வந்து அதை விழி விரியப் பார்த்துப் போயினர்!

ஜஹனாரா தலையை உயர்த்திப் பார்த்தாள். படகின் ஒய்யாரத்தில் தாஜ் மஹாலை நெருங்கிக் கொண்டிருந்தனர். காரிருளிலும் பளபளத்தது அந்த வெள்ளை மாளிகை.

“இன்னுமொரு மஹால் இதே போல் உருவாகும் ஜஹனாரா. உருவாக வேண்டும்.”

அதைக் கேட்டு அதிர்ந்தவள் தான் சரியாய்த் தான் கேட்டோமா அல்லது நினைவு, நிஜக் குழப்பமா என உறுதிப்படுத்த எண்ணி “என்னப்பா சொல்கிறீர்கள்?” என்றாள்.

“ஆம். தாஜ் மஹால் கட்டிய கணிதர்கள், கலைஞர்கள், சிற்பிகளின் கைகளை அது போல் இன்னொரு மாளிகை உருவாகக்கூடாது என நான் வெட்டி விட்டதாக ஒரு வதந்தி நாடெங்கும் உலவுகிறது. நீயும் கேட்டிருக்கலாம்; நம்பியிருக்கவும் கூடும்.”

“கேள்விப்பட்டேன். கேள்விகள் கொண்டேன். நம்பவில்லை. நம்ப விரும்பவில்லை.”

“யார் தொடங்கியதோ, அது பொய். அவர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். இன்னுமொரு மாளிகை இதே போல் கட்டும் திடாத்காரத்துடன். கட்டுவார்கள்!”

“இன்னொரு மாளிகையா?” - மறுபடியும் குழப்பத்துடன் வினவினாள் ஜஹனாரா.

“ஆம். நான் இறந்தால் தாஜ் மஹாலுக்கு நேர் எதிரே, யமுனை நதியின் அந்தப்புறம் நான் உருவாக்கி வைத்திருக்கும் தோட்டத்தில் என்னுடல் புதைக்கப்பட வேண்டும். அதன் மீது அச்சு அசலாய்த் தாஜ் மஹால் போலவே ஒரு மாளிகை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் கருப்பு நிறத்தில். கருப்பு வண்ணப் பளிங்குக் கற்கள் கொண்டு. அதில் வெண்ணிறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட வேண்டும். கருப்பு மாளிகை!”

“இப்போதேனப்பா மரணம் பற்றிய பேச்சு?”

“பேச்சு மரணம் பற்றியதல்ல. ஷா மஹால் என்ற கருப்பு மாளிகை பற்றியது.”

“…”

“தாஜ் மஹாலிலிருந்து அந்த மாளிகைக்குப் போக யமுனை நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட வேண்டும். அதாவது ஒரு ஜோடி பிரியத்தின் பிணைப்பில் கைகள் பிடித்துக் கொண்டிருப்பது போல் இரு மாளிகைகளும் இணைந்திருக்க வேண்டும்!”

“ஆஹா! அழகான, கவித்துவமான கலாப்பூர்வமான கற்பனை அப்பா!”

“கற்பனை நிஜமாக வேண்டும் ஜஹனாரா!”

“நிச்சயம் ஆகும்.”

“நான் இதை வேறெவரிடமும் சொல்ல முடியாது. உன்னிடம் கூட இதைச் சொல்ல மற்றொரு சந்தர்ப்பம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. அது தான் இப்போதே.”

“…”

“மும்தாஜின் இறுதி விருப்பங்கள் போல் என் இறுதி விருப்பம் இது, ஜஹனாரா.”

ஜஹனாராவின் நினைவுகள் மறுபடி மும்தாஜின் இறுதி விருப்பங்களுக்குப் பாய்ந்தன.

மும்தாஜின் இறுதி விருப்பங்களில் முதலாவதைக் காசையும் காலத்தையும் செலவு செய்து நினைவேற்றி விட்டார் ஷாஜஹான். இரண்டாவதற்குத்தான் இத்தனை சிரமம். இத்தனைக்கும் உண்மையில் இரண்டில் செய்ய எளிமையானது இரண்டாவது தான்.

தாஜ் மஹால் உருவாகும் போதும், உருவான பின்பும் தொடர்ச்சியாய் இருபத்தியேழு ஆண்டுகள் ஷாஜஹான் ரமலான் மாதத்தின் பௌர்ணமி இரவில் அங்கு வந்து அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஓராண்டு கூட தவறியதில்லை.

ஆண்டுதோறும் அவள் கல்லறைக்கு வந்து இரண்டு நிமிட மௌனம் அனுஷ்டிப்பது அத்தனை கஷ்டமான வேலையா என்ன! ஆனால் விதி அதையும் கடினமாக்கியது.

ஷாஜஹான் ஆக்ரா கோட்டையில் தன் சொந்த மகன் ஔரங்கஸீப்பால் வீட்டுச் சிறை வைக்கப்பட்டு ஏழாண்டுக்கு மேலாகிறது. அவ்விஷயம் நாடறிந்த ரகசியம்.

பிரச்சனை எளிமையானது. தனக்குப் பின் மயிலாசனத்தில் அமர்த்தி சாம்ராஜ்யத்தை ஆள வைக்கும் உத்தேசத்துடன் ஷாஜஹான் இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தது தன் பிரியத்துக்குரிய மூத்த மகன் தாரா ஷிக்கோஹிற்கு. ஆனால் போட்டியில் எங்கோ இருந்த ஔரங்கஸீப் அரசனாக விரும்பினான். முரடனான அவன் தந்தையையும் தமையனையும் மிரட்டிப் பார்த்தான். எதுவும் வேலைக்காகவில்லை என்றானதும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் சதி வேலைகளில் ஈடுபடத் தொடங்கினான்.

அதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஷாஜஹான் முதலில் அவனைக் கடுமையாக எச்சரித்தார். பயனில்லை எனத் தெரிந்ததும் ஔரங்கஸீப்பைத் தீர்க்கும் கடினமான முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தும் நோக்கில் தக்காணத்தில் ஆட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த அவனுக்கு குடும்பப் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம் எனத் தில்லி வரச் சொல்லி ஓலை அனுப்பினார் ஷாஜஹான். அங்கே வைத்து அவனைச் சிறைப் பிடிப்பது தான் திட்டம். அப்புறமாய் அவன் உயிரை எடுப்பது.

ஜஹனாராவுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் அது ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதாக புரிந்து கொண்டிருந்தாள். தவிர, அவளும் மூத்தவனான தாரா அடுத்த அரசனாவதையே நியாயம் என நம்பி இருந்தாள். ஆனால் அவளது இளைய சகோதரியான ரோஷனாராவுக்கு ஔரங்கஸீப்பின் மீது தனிப் பிரியம். அவளுக்கு ஷாஜஹானின் திட்டம் தெரிய வந்ததும் உடனடியாய் அதை ஔரங்கஸீப்பிற்குத் தெரியப்படுத்த தூதனை அனுப்பினாள். தில்லி புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ஔரங்கஸீப் சுதாரித்துக் கொண்டான். அவன் மனதில் அண்ணன் மற்றும் தந்தையின் பால் கொண்டிருந்த கொஞ்சம் நஞ்சம் அன்பும் மறைந்து வஞ்சத்தால் நிரம்பியது.

தன் சதித்திட்டங்களைத் துரிதப்படுத்தினான். தனக்குத் தடையாய் இருந்த தன் மூத்த சகோதரர்கள் மூவரையும் கொன்றான். தந்தையைக் கோட்டையில் சிறையிட்டான்.

அப்போது முதல் அவர் எங்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. கோட்டை மேல் தளத்திலிருக்கும் விஸ்தாரமான அவரது அறை, அங்கிருந்து நடக்கிற தொலைவில் சற்று மேலேறியது போலிருக்கும் சிறிய பள்ளிவாசல் தவிர அவருக்குச் செல்ல வேறு இடமில்லை. அது தான் அவரது எல்லை. பெரிய கட்டுக்காவல் ஏதும் இல்லை என்றாலும் தான் தொடர் கண்காணிப்பில் இருப்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

அவரது அறையிலிருந்து சாளரத்தின் வழி பார்த்தாலே யமுனை நதிக்கு அந்தப்புறம் வீற்றிருக்கும் தாஜ்மஹாலின் பின்புறம் பிரம்மாண்டமாய் கண்ணில் விரியும். அந்த ஒட்டுமொத்த வீட்டுக் காவலில் அவருக்கு ஆறுதலாயிருந்த ஒரே விஷயம் அதுதான்.

ஷாஜஹான் தழுதழுப்பான குரலெடுத்து அவள் யோசனைகளை இடைமறித்தார்.

“இந்த வயதில் நான் என்னுடைய ஆசைகளைப் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ என்னோடு இருந்து கொண்டு உன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறாய்.”

“எனக்கெனத் தனியாய் வாழ்க்கை ஒன்றில்லை, அப்பா. இது தியாகமும் இல்லை.”

“நீ அப்படித் தான் சொல்வாய். நான் ஏன் அன்று அதற்குத் தலையாட்டினேனோ?”

ஜஹனாரா தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள அவருடனே ஆக்ரா கோட்டையில் இருந்து கொள்ள அனுமதி கோரினாள். நீண்ட யோசனைக்குப் பின் அவள் விருப்புக்கு ஔரங்கஸீப் ஒப்புக் கொண்டான். அதில் நன்மை, தீமை இரண்டும் இருந்தது என்பதே அவன் யோசனைக்குக் காரணம். இரண்டையும் எடை பார்க்க வேண்டி இருந்தது.

அதுவரை ஜஹனாரா தான் மொஹலாய சாம்ராஜ்யத்தின் ஷாசதி - பெண் தலைவி. இளவரசிகளின் அரசி என்பார்கள். வாழ்ந்த வரை மும்தாஜ் தான் அந்த இடத்தில் இருந்தாள். சகோதரன் தாராவுக்கு ஆதரவாய் இருந்த ஜஹனாராவை அப்பதவியில் நீடிக்க விட ஔரங்கஸீப்பிற்கு விருப்பமில்லை. தவிர, தனக்குத் தக்க சமயத்தில் தகவலனுப்பித் தன் உயிரை ரட்சித்த ரோஷனாராவுக்கு நன்றிக்கடன் பட்டிருந்தான்.

ஜஹனாராவை அவள் கோரிக்கையை நிறைவேற்றும் சாக்கில் ஆக்ரா கோட்டைக்குள் வளைத்து விட்டால் ரோஷனாராவை அப்பதவியில் அமர்த்தலாம். சந்தோஷிப்பாள்.

இன்னொரு பக்கம் ஜஹனாரா புத்திசாலி. தன் தந்தையுடன் அவளைத் தனித்திருக்க அனுமதித்தால் அவர் ஏதேனும் திட்டம் தீட்டி அவரை விடுவிக்கவும் அவனைப் பழி வாங்கவும் முயற்சிக்கலாம். அதற்கு இடம் தந்ததாகி விடும். ஆனால் அப்பிரச்சனை கையாளக்கூடிய ஒன்றாகவே அவனுக்குத் தோன்றியது. அதனால் அனுமதித்தான்.

ஆனால் ஔரங்கஸீப் ஒரு நிபந்தனை விதித்தான். ஷாஜஹானைக் கவனித்துக் கொண்டு அங்கேயே இருக்க வேண்டுமெனில் ஜஹனாராவும் அங்கேயே வீட்டுச் சிறையில் தான் இருக்க வேண்டும். அவளுக்கும் ஆக்ரா கோட்டைக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. ஜஹனாராவோ துளியும் யோசிக்காமலேயே ஏற்றாள்.

சட்டென வீசிய யமுனைப் பனிக் காற்றுக்கு விரோதமாய் ஜஹனாரா மேலாடையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவள் கழுந்திருந்து மார்பு தொடங்குமிடத்திலிருந்த பெருந்தழும்பு ஒரு கணம் அவரது கண்களுக்கு மின்னலாய்ப் புலனாகி மறைந்தது.

“உனக்கு ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன்.”

“தேச அரசியல் மட்டுமல்ல, என் மனமும் உடலும் கூட அதற்கு ஒத்துழைக்காதே!”

ஜஹனாராவின் முப்பது வயதில் அவளது பிரியத்துக்குரிய நடன நங்கையொருத்தி ஆடுகையில் விளக்கில் உடையுரசித் தீப்பற்றிக் கொள்ள, அணைத்துக் காப்பாற்ற ஓடோடி வந்த ஜஹனாராவின் மாரில் தீப்பிடித்துக் கொண்டது. தீக்காயங்களுடன் படுத்த படுக்கையானாள். அவளுக்குக் குணமாக அல்லாவிடம் வேண்டி ஷாஜஹான் சிறைக் கைதிகளை விடுவித்தார்; ஏழைகளுக்குப் பொருளுதவி செய்தார்; தொடர் பிரார்த்தனைகள் சாம்ராஜ்யமெங்கும் நிகழப் பணித்தார். மருந்தாலோ மனதாலோ குணமானாள் ஜஹனாரா. அந்தச் சம்பவம் மேலும் அவர்களை நெருக்கமாக்கியது.

ஜஹனாரா திருமணம் செய்து கொள்ளவில்லை. மொஹலாய ராஜ வழக்கம் அது. அரசனின் மகள்களுக்குத் திருமணமாகி வாரிசு கருவானால் அது இளவரசனுக்கு அதிகாரப் போட்டியாக ஆகி விடக்கூடும் என்பதால் அதைத் தவிர்த்து விடுவார்கள்.

முலையில் நெருப்பின் தழும்புகள் கொண்ட தன்னை எந்த ஆண்மகனும் மணம் செய்யத் தயாராகவும் இருக்க மாட்டான் என்பதும் அவள் எண்ணமாக இருந்தது.

ஷாஜஹான் விசிப்பது போல் இருந்தது. ஜஹனாரா அவரை அதட்டி அடக்கினாள்.

படகோட்டி மௌனமாக துடுப்பை வலித்துக் கொண்டிருந்தான். அவனால் அப்படி மட்டுமே செய்ய முடியும். வாய் பேச முடியாது; காது கேட்காது; கண்கள் மட்டும் திடகாத்திரம். கடந்த சில ஆண்டுகளாக வருடந்தோறும் இதே நாளில் அவன் தான் ஷாஜஹானுக்குப் படகோட்டுகிறான். ஜஹனாரா தான் அவனைத் தேர்ந்தெடுத்தாள்.

வீட்டுச் சிறை வைக்கப்பட்டதும் ஷாஜஹான் மும்தாஜின் நினைவு நாளன்று தாஜ் மஹாலுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அது அவரைச் சோர்வாக்கியது. இதைப் புரிந்து கொண்ட ஜஹனாரா தான் அந்த செவிட்டு ஊமைப் படகோட்டியை ரகசியமாக ஏற்பாடு செய்தாள். ரமலான் மாதத்தின் பௌர்ணமி முன்னிரவில் அவன் ஆக்ரா கோட்டையின் மறைவான இடத்தில் யமுனை நதிக்கரையில் காத்திருக்க வேண்டும்.

கோட்டையிலிருக்கும் காவலை மீறி ஷாஜஹான் அவ்விடத்துக்கு வந்து படகில் ஏறிக் கொண்டால் அவரை தாஜ்மஹால் அழைத்துப் போய் சற்று நேரத்தில் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து அதே இடத்தில் விட்டு விடுவான். அதுவரை கோட்டைக்குள் ஏதும் சந்தேகம் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஜஹனாராவின் வேலை.

அதற்குரிய சன்மானத்தை ரகசியமாய் அப்படகோட்டிக்குச் சேர்ப்பித்து விட ஏற்பாடு செய்திருந்தாள் ஜஹனாரா. போதையில் கூட அவன் இதை உளறி விடக்கூடாது என்று தான் விசுவாசமானவன் என்பதைத் தாண்டி ஓர் ஊமையைத் தேர்ந்திருந்தாள். அவனுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. இஸ்லாமியனும் அல்ல; இந்து. பஞ்சமன்.

இது வரை ஆறு முறை இப்படிப் போய் வந்து விட்டார். இது ஏழாவது. இம்முறை அவருக்கு என்ன தோன்றியதோ ஜஹனாராவையும் உடன் அழைத்தார். அவள் அது ஆபத்து என்று சொல்லியும் விடாமல் அவர் வற்புறுத்தியதால் வரச் சம்மதித்தாள்.

“உன் தாயின் நினைவிடத்தைப் பார்க்க வேண்டும் என உனக்கு ஆசையில்லையா?”

“ஆசையை விட, வேறெதையும் விடப் பாதுகாப்பு முக்கியம் அல்லவா, அப்பா!”

படகு தாஜ் மஹாலில் கரையை நெருங்கியது. படகோட்டி முதலில் நீரில் இறங்கி படகை இழுத்து வந்து மண்ணில் நிலைநிறுத்தினான். ஜஹனாரா இறங்கினாள். பிறகு அவள் கை கொடுத்து மெல்ல ஷாஜஹானையும் கீழே இறக்கினாள். எழுபத்தி நான்கு அகவை அவரைச் சுயமாய் எதுவும் செய்யவிடாமல் பயமுறுத்தி வைத்திருந்தது.

படியேறி நுழைந்து கல்லறை மாடத்துக்குப் போனார்கள். முன்பெல்லாம் பெரிய முன் வாசல் வழி வந்து பூங்காவினை ரசித்தபடி நடந்து, பள்ளி வாசல் போய் விட்டு, பிறகு கல்லறை மாடத்துக்குச் சென்று விட்டு, இறுதியாய் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்து விட்டுச் செல்வார். இப்போது இந்தத் திருட்டு விஜயம் தொடங்கிய பின் நதி வழியே பின்வாசல் மூலம் நுழைந்து அப்படியே திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறார்.

கீழ்த்தளத்திலிருந்த கல்லறைக்குச் சென்று தனிமையில் கம்பீரம் வீசியபடி இருந்த மும்தாஜ் கல்லறையின் முன் அமைதியாய் நின்றார்கள். மொத்த பத்தொன்பது ஆண்டு கால இல்லறமும் அவர் கண் முன் வந்து போனது. தன்னை விடுத்து அவள் மட்டும் போனதற்காய்ச் சபித்தார். பின் முழங்காலிட்டு அமர்ந்தார். அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. நெடுநேரம் அப்படி உட்கார்ந்திருந்தார். போக வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்த்த ஜஹனாரா அவர் தோளின் மீது மெல்லத் தொட்டாள்.

புரிந்துகொண்டு எழுந்தார் ஷாஜஹான். மீண்டும் படகேறி கோட்டைக்குக் கிளம்பினர். நதியில் மிதந்தபடி தூர நகர நகர தாஜ் மஹால் விலகி விலகி பரிமாணம் அருகியது.

திரும்பும் வழிநெடுக ஷாஜஹான் ஏதும் பேசவேயில்லை. சிந்தனை வயப்பட்டவராக இருந்தார். ஜஹனாராவும் அவரது அம்மௌனத்தை மதித்தவளாய் அமைதி காத்தாள்.

படகு ஆக்ராக் கோட்டையின் பக்கவாட்டில் இருந்த ரகசிய இடத்தை அடைந்த போது மொஹலாயப்படை அவர்களுக்காகக்காத்திருந்தது. படகோட்டியைக் கைது செய்தனர்.

சக்ரவர்த்தியான ஔரங்கஸீப்பிடம் ஷாஜஹானையும் ஜஹனாராவையும் அழைத்துப் போனார்கள். அவன் கடுங்கோபத்தில் இருந்தான். கண்களில் தீயெரிய அவர்களைப் பொசுக்கி விடுபவன் போலப் பார்த்தான். அவர்கள் இருவரும் அமைதியாய் நின்றனர்.

“எத்தனை நாட்களாக இது நடக்கிறது?” - பல்லைக் கடித்தபடி கேள்வி தொடுத்தான்.

“நாட்கள் அல்ல; மாதங்கள் அல்ல; வருடங்கள். இது ஏழாவது ஆண்டு. இன்று அம்மாவின் நினைவு நாள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது என்றறிவேன்.”

எந்தப் பதற்றமுமின்றி ஜஹனாரா தான் தைரியமாய்ப் பதில் சொன்னாள்.

“இது துரோகமில்லையா ஜஹனாரா?” – அடிக்குரலில் கர்ஜித்தான் ஔரங்கஸீப்.

“ஔரங்கஸீப், அரசியலில் எதுவும் துரோகமில்லை என்பதை நான் உனக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை. இங்கே எல்லாவற்றிற்கும் பெயர் ராஜதந்திரம் மட்டும் தான். ஆனால் நாங்கள் செய்தது அப்படிப்பட்ட ராஜதந்திரம் கூட இல்லை.”

“பிறகு அதன் பெயர் என்ன? தேச பக்தியா?” – எள்ளலாய், எகத்தாளமாய்க் கேட்டான்.

“வன்முறைக்காரர்களின் இறுதிப்புகலிடம் தேசபக்தி தான். இதில் வன்முறை இல்லை. அம்மாவிற்குச் செய்து கொடுத்த எளிய சத்தியம் ஒன்றிற்கு மதிப்பளிக்கவே அப்பா இதைச் செய்தார். அது நியாயம் என்று தோன்றியதால் நான் அதற்கு உதவினேன்.”

“உனக்குப் பேசக் கற்றுக் கொடுக்கவும் வேண்டுமா?” - ஏளனமாய்ச் சொன்னான்.

“இல்லை ஔரங்கஸீப். நன்றாக நீயே யோசித்துப் பார். அப்பா தப்ப வேண்டும் என நினைத்திருந்தால் இத்தனை முறை போன போது செய்திருக்க மாட்டாரா? தப்பி என்ன செய்வார்? உன்னைத் தவிர ஆட்சியில் அமர்த்த வேறு வாரிசும் இல்லை.”

“ஓ! ஒருவேளை இருந்திருந்தால் ஆட்சி பீடத்தில் அமர்த்தி அழகு பார்த்திருப்பாரோ!”

“வாதமோ விவாதமோ செய்யத் திராணி இல்லை எனக்கு. இதில் விதண்டாவாதம் செய்வது பெருஞ்சிரமம். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். நம்புவதும் ஒறுப்பதும் உன் முடிவு. எனக்கு நான் செய்ததில் எந்தப் பிழையும் தென்படவில்லை. அது என்னுடைய கடமை. அப்பாவும் அவ்வாறே நினைப்பார் என நம்புகிறேன்.”

“…”

“உண்மையில் இதற்கு மேல் நீ அவரைத் துன்புறுத்தவும் ஏதுமில்லை ஔரங்கஸீப். ஒரு முதியவரைத் தன் மனைவியின் கல்லறைக்குத் திருட்டுத்தனமாய்ப் போய்ப் பார்க்கும் அளவு செய்ததை விட பெருந்தண்டனை என்ன இருந்து விடப் போகிறது? அந்நிலைக்கு அவரைத் தள்ளியவர்கள் அல்லவா குற்றவுணர்வு கொள்ள வேண்டும்!”

“விசாரணை முடிந்தது. நீங்கள் கிளம்பலாம்.” - கிளம்ப ஆயத்தமானான் ஔரங்கஸீப்.

அப்போது ஜஹனாரா அவனிடம் தயக்கமாய்த் தாழ்மையான குரலில் சொன்னாள்.

“அந்தப் படகோட்டியை ஏதும் செய்ய வேண்டாம் ஔரங்கஸீப். அவன் குற்றம் இதில் ஏதுமில்லை. சுல்தானின் மீதிருந்த விசுவாசத்தில் இதில் ராஜதுரோகம் ஏதுமில்லை என்று உணர்ந்தே இதைச் செய்ய ஒப்புக் கொண்டான். அவனுக்கு அளிக்கப்பட்ட சன்மானம் கூட அவன் கேட்டதில்லை. அவன் மறுத்தும் நான் அளித்தது தான்.”

“அரச குடும்பத்தினர் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடத்தான் செய்வர். ஆனால் அரசனின் விருப்பத்திற்கெதிரான நடவடிக்கைகளில் - அதில் அதிகார பீடத்துக்கு ஆபத்தோ இல்லையோ - எளியவர்கள் ஈடுபடுவதை நான் விரும்புவதில்லை. அதற்குக் கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என நினைக்கிறேன்.”

“…”

“அந்தப் படகோட்டி இந்நேரம் சிரச்சேதம் செய்யப்பட்டிருப்பான்.”

“நீ குரூரம் நிறைந்தவன் ஔரங்கஸீப்”

“ஆம். அப்படி இல்லையென்றால் என் தலையில் மிளகாய் அரைத்திருப்பீர்கள்.”

“…”

“உங்களை நம்பி விட்டு வைத்தது என் பிழை. ஜஹனாரா, இனி நீ அவருடன் இருக்க வேண்டியதில்லை. அப்பா, இனி உங்களுக்குத் தனிமை தான் துணை. வாழ்த்துக்கள்.”

முதல் முறை ஷாஜஹான் பேச வாய் திறந்தார்.

“ஔரங்கஸீப், உன் அன்பிற்கு நன்றி. ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஒரு மகனாய் நீ எனக்குச் செய்ததை விட அந்தப் படகோட்டி எனக்கு அதிகம் உதவி செய்திருக்கிறான். அவன் ஆன்மா அமைதியடையட்டும். அவன் நிச்சயம் சொர்க்கத்தை அடைவான்.”

“பூமியை விடப் பெரிய நரகம் ஏதுமில்லை தந்தையே! போய் ஓய்வெடுங்கள்.”

இம்முறை ஷாஜஹான் ஜஹனாராவை அழைத்துப் போனதே மாட்டிக் கொள்ளக் காரணமாகி விட்டது. ஜஹனாரா வழக்கமாய் உறங்கும் நேரத்திற்கு வெகு முன்பே அவள் அறையின் விளக்குகள் அணைக்கப்பட, தலைமைக் காவலாளி சந்தேகம் கொண்டு விசாரித்திருக்கிறான். அவளுக்கு உடல் நலமில்லை எனத் தோழிமார்கள் பதற்றத்தில் உளற, அவனுக்கு ஏதோ தவறாய்ப் பட, தளபதிக்குத் தகவல் சொல்லி விட்டான். தளபதி சேனையுடன் வந்து ஆக்ரா கோட்டையைத் துப்புரவாய்ச் சலித்து, ஷாஜஹானும் ஜஹனாராவும் இல்லை என்பதை ஔரங்கஸீப்பிற்கு அறிவித்தனர்.

நோன்பு துறந்து பின்னிரவில் மொஹலாய அமைச்சர் பிரதானிகள் சிலருடன் இளம் வெள்ளாட்டு தம் பிரியாணி, குறுமிளகிட்ட நாட்டுக்கோழி கெபாபுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஔரங்கஸீப் அப்படியே பாதியில் விட்டுக் கை கழுவி எழுந்தான். அவன் கிளம்பி வரவும் இவர்கள் படகில் திரும்பவும் சரியாக இருந்தது.

ஊமை படகோட்டியின் தலையை அந்த இரவில் சீவியதும் தாயற்ற அவன் தனயன் தலையற்ற முண்டத்தின் மீது விழுந்து கதறியதாக வந்து பணிப்பெண்கள் சொல்லக் கேட்டு ஜஹனாரா கண்ணீர் உகுத்தாள். பல்லாண்டுகள் முன் தன் நெஞ்சில் நெருப்புப் பட்ட போது அடைந்த அதே வலியை உணர்ந்தாள். அவனுக்காகப் பிரார்த்தித்தாள்.

அடுத்த சில நாட்களில் ஷாஜஹான் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்.

ஷாஜஹானுக்கு ஒரே கவலை தான் மனதை அழுத்தியது. மும்தாஜின் அடுத்த நினைவு நாளுக்கு தாஜ் மஹாலுக்குச் செல்ல முடியாதே என்பது தான் அது.

இப்போதெல்லாம் ஷாஜஹான் யாரிடமும் பேசுவதே குறைந்து விட்டது. தினப்படிக் கடன்களுக்கே ஏவலடிமைகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையும் வந்தது.

வாரமொருமுறை ஜஹனாரா போய்ச் சந்திக்க அனுமதியளித்தான் ஔரங்கஸீப். பின் ஒருகட்டத்தில் அவர் பிடிவாதமாய் இருவேளை உணவுகளை மறுக்கத்தொடங்கினார்.

நாள்பட தந்தையின் நிலைமை மோசமடைவதைக் கண்டு பழையபடி ஜஹனாராவை அவருடனே வந்து இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லி விட்டான் ஔரங்கஸீப்.

அன்று அதிகாலையிலேயே எழுந்து தன்னைக் குளிப்பாட்டச் செய்து தயாரானார் ஷாஜஹான். தன் நடுங்கும் கிழட்டுக் குரலில் கலிமா - ஷஹாதா சொன்னார்.

"லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்"

பிறகு திருக்குரானிலிருந்து சில வரிகள். சொல்லி முடித்த போது இறந்திருந்தார்.

ஔரங்கஸீப்புக்குச் செய்தி பறந்தது. உடனடியாய் ஆக்ரா கோட்டை வந்தடைந்தான். ஷாஜஹான் பூதவுடலின் காலடியில் ஜஹனாரா மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தாள்.

ஜஹனாரா அவரது உடலை பிரம்மாண்ட அரச மரியாதையுடன் பெரும் பொதுமக்கள் ஊர்வலத்துடன் எடுத்துச் சென்று புதைக்க விரும்பினாள். அவரது கனவுப்படி தாஜ் மஹாலுக்கு நேரெதிரே யமுனை நதிக்கு இப்புறம் அவரது சமாதி அமைய வேண்டும்.

ஔரங்கஸீப்பிடம் மெல்லத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள் ஜஹனாரா. அவன் கூர்ந்து அவள் கண்களுள் பார்த்தான். பின்னர் நிர்தட்சண்யமாய் மறுத்து விட்டான்.

அவனது உத்தரவுப்படி ஷாஜஹானின் உடல் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி யமுனை நதி வழியே ஓர் ஆடம்பரமற்ற படகில் தாஜ் மஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. படகோட்டியது ஷாஜஹானின் ஆஸ்தான ஊமைப் படகோட்டியின் மகனே தான்.

அங்கே ஏற்கனவே புதைக்கப்பட்ட மும்தாஜுக்கு இடப்புறம் அவர் புதைக்கப்பட்டார்.

ஷாஜஹானின் மரணத்தைக் காட்டிலும் அவரது இறுதி ஆசை நிறைவேற்றப்படாததே ஜஹனாராவை மிக உலுக்கியது. அவள் கலங்கிப் போனாள்; ஆனால் காத்திருந்தாள்.

அதே காலகட்டத்தில் இளவரசிகளின் அரசியான ரோஷனாரா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல ஊழல்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்தது. ராஜ குலத்துக் கட்டுப்பாட்டினை மீறி அவளுக்குச் சில காதல்கள் இருப்பதாக வதந்திகள் கிளம்பின.

அவளும் முன் போல் ஔரங்கஸீப்பிடம் பிரியத்துடன் இருக்கவில்லை. அவன் உயிரே தானிட்ட பிச்சை தான் என்றெண்ணினாளோ என்னவோ! ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் முற்றவும், அவளது ஷாசதி பதவியைப் பறித்து ஜஹனாராவுக்கு வழங்கினான். ஜஹனாராவுக்கு அதில் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் ஔரங்கஸீப்போடு நல்லுறவைப் பேண விரும்பினாள். அதன் மூலம் அவனைக் கருப்பு ஷா மஹால் கட்ட வைத்து விடலாம் என நினைத்தாள்.

ஔரங்கஸீப் மற்றும் ஜஹனாராவிடையே இணக்கம் அதிகரித்தது. கிட்டத்தட்ட வாரமொரு முறையேனும் அவர்கள் சந்தித்து அரசியல் பற்றிப் பேசிக் கொண்டனர். ஆனால் கறுப்பு மாளிகை குறித்த பேச்சை அவன் எப்போதும் தவிர்த்தே வந்தான்.

மாதங்கள் வேகமாய்ப் புரண்டோட, மும்தாஜின் நினைவு நாள் வந்தது. அதிசயமாய் ஔரங்கஸீப்பே அவளைத் தயாராய் இருக்கச் சொல்லி சேதி அனுப்பினான். அவன் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட தன் சொந்தத் தாயின் சமாதிக்கு வந்ததே இல்லை என்பது ஜஹனாராவுக்கு அப்போது உறைத்தது. யோசித்தபடி தயாரனாள்.

அன்றைய பௌர்ணமி நள்ளிரவில் அவர்கள் யமுனை ஆற்றைக் கடந்து தாஜ் மஹால் போனார்கள். ஊமைப் படகோட்டியின் மகன் தான் துடுப்பு வலித்தான்.

சென்ற ஆண்டு இதே போல் ஆற்றைக் கடந்து போனதற்கும் இந்த முறைக்கும் இடையே எத்தனை வித்தியாசம் என நினைத்துக் கொண்டாள் ஜஹனாரா.

வழக்கத்துக்கு மிக மாறாய் அன்று பேரமைதியுடன் இருந்தான் ஔரங்கஸீப்.

கரையின் மறுபுறம் இறங்கியதும் ஜஹனாரா முதலில் அவனை இடது புறமிருந்த மசூதிக்கு அழைத்துச் சென்றாள். அங்கு தொழுகைக்குப் பின் உட்பக்கச் சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓர் ஓவியத்தைக் காண்பித்தாள். அதில் இரண்டு தாஜ்மஹால்கள் வரையப்பட்டிருந்தன. இடையே ஒரு கோடு. அது யமுனை நதியாக இருக்கக்கூடும்.

“நம் தந்தை தனக்கென தாஜ்மஹால் எதிரே ஒரு கல்லறையும் அதன் மீது தாஜ் மஹாலை ஒத்த ஒரு மாளிகையும் கட்டத் திட்டமிட்டிருந்தார். தாஜ் மஹால் போலவே ஆனால் கருப்புப் பளிங்கினால் கட்டப்பட வேண்டும் என நினைத்தார்.”

ஔரங்கஸீப் ஏதும் பேசவில்லை. மசூதியிலிருந்து மெதுவாய் வெளியேறி நடந்தான். ஜஹனாராவும் அவனைத் தொடர்ந்தாள். அடுத்து கல்லறை மாடத்தினுள் சென்றனர்.

உள்ளே சமாதிகள் வைக்கப்பட்டிருக்கும் கீழ்தளத்திற்குப் படிகள் இறங்கிச் சென்றன.

அங்கு நின்றிருந்த காவற்பணியாளன் பணிந்து நீட்டிய நெருப்புப் பந்தத்தை வாங்கிக் கொண்டு முதலில் ஔரங்கஸீப் இறங்க, ஜஹனாரா அவனைப் பின் தொடர்ந்தாள்.

வெளிச்சத் தீற்றல் பரவ மும்தாஜ் மற்றும் ஷாஜஹானின் கல்லறைகள் புலனாகின.

ஔரங்கஸீப் முழந்தாளிட்டு முதலில் தன் தந்தையை வணங்கினான். பிறகு தாயை. மௌனம் கனமாய் அங்கே அடர்ந்தது. சிறிது நேரங்கழித்து எழுந்து நின்று பார்த்தான்.

அவன் கண்கள் கலங்கி இருந்ததாய்த் தோன்றியது ஜகனாராவுக்கு. அவள் கேட்டாள்.

“இதிலிருக்கும் அபத்தமான உறுத்தல் உனக்கு உறைக்கிறதா ஔரங்கஸீப்?”

அவன் புரியாமல் பார்த்தான். அதை எதிர்பார்த்தவள் போலத் தொடர்ந்தாள்.

“ஒட்டுமொத்த தாஜ் மஹாலின் கட்டிடக்கலை அமைப்பில் துருத்திக் கொண்டிருப்பது ஒன்று தான். நம் அப்பாவின் சமாதி. இதன் மத்தியில் ஒரு கோடு வரைந்தால் அது மொத்தக் கட்டிடத்தையும் சரிசமமாய் இரண்டாய்ப் பிரிக்கும். சமச்சீர்மை! உலகில் எந்தக் கட்டிடமும் இத்தனை துல்லியமானதில்லை என்கிறார்கள். நீ அதைத் தான் சிதைத்திருக்கிறாய். அப்பாவின் சடலத்தை இங்கே கொண்டு வந்து புதைத்ததன் மூலம். அது மட்டும் தான் இந்த அற்புதமான கேத்திர கணிதத்தில் ஒரே பிசகு.”

“…”

“மொத்த அழகியலிலும் ஒரு திருஷ்டி அது. ஒருவேளை அப்பா இருந்திருந்தால் கூட தன்னை இங்கே புதைப்பதை விரும்பியிருக்க மாட்டார். அது உனக்குப் புரிகிறதா?”

ஔரங்கஸீப் பதிலுரைக்காமல் அங்கிருந்து வேகமாய் நடக்கத் துவங்கினான்.

“ஔரங்கஸீப், நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். அந்தக் கருப்பு மாளிகை. அது அப்பாவின் இறுதி ஆசை என்றே சொல்வேன். தலைமுறை தாண்டி வந்து வந்து விட்ட நமக்கு அது ஒரு வெட்டிச் செலவாகக் கூடத் தோன்றக்கூடும். ஒருவகையில் அது உண்மையும் கூட. ஆனால் அந்தத் தர்க்கத்தை எல்லாம் விட நம் தந்தையின் ஆசை பெரிதில்லையா? உனக்கு அவர் மீது மதிப்பு இல்லாதிருக்கலாம். அவர் உன்னைக் கொல்லச் சதித் திட்டம் கூடத் தீட்டி இருக்கலாம். ஆனால் அவர் நம் தந்தை. அவரது ஆன்மாவைத் திருப்திப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அது நடக்கவில்லை எனில் அவரது சாபம் இந்தத் தேசத்தையே காவு வாங்கும் என்பதை மறந்து விடாதே. இதை ஒரு வேண்டுகோளாகவே உனக்கு வைக்கிறேன்.”

ஔரங்கஸீப் அப்போதும் பேசவில்லை. அதற்குள் அவன் நதிக்கரையை அடைந்து விட்டிருந்தான். விடுவிடுவென கீழே இறங்கி வந்து படகில் ஏறிக் கொண்டான்.

கையறுநிலை கண்களில் நீராய்க் கோர்க்க அவனைப் பிந்தொடர்ந்து ஜஹனாராவும் படகேகினாள். ஆக்ரா கோட்டையை நோக்கி அது தழும்பியபடி நகரத் தொடங்கியது.

ஓர் உரையாற்றத் தொடங்குபவன் போல் தொண்டையைச் செருமியபடி ஔரங்கஸீப் பேசத்தொடங்கினான். அவன் சொற்களுடன் குரலும் கனிந்திளகி இருந்தது தெரிந்தது.

“தந்தையார் ஒவ்வொரு வருடமும் தாஜ் மஹாலுக்கு வர விரும்பினார். அதற்குத் தடை என்று ஒன்று வந்ததும் திருட்டுத்தனமாய்ப் போகத் தொடங்கினார். அதற்கும் பாதகம் வந்த போது உயிரிழந்தேனும் அங்கே போக நினைத்தார் என்றே எனக்குத் தோன்றியது. அதனால்தான் அன்னையின் அருகிலேயே புதைக்க உத்தரவிட்டேன்.”

“…”

“அவர் முதலில் நதிக்கு அந்தப்புறம் தாஜ் மஹாலுக்கு நேர் எதிரே தனக்கென ஒரு கல்லறை ஒருவாக்க நினைத்திருக்கலாம். அதன் மீது ஒரு கருப்பு மாளிகையும் கட்ட நினைத்திருக்கலாம். ஆனால் அவருக்கு நேர்ந்த மரணம் இயற்கையானதல்ல. அவர் வரவழைத்துக் கொண்டது. ஒருவகையில் அது தற்கொலை தான். அவர் உயிருடன் இருக்கும் வரை அம்மா நினைவு நாளின் பௌர்ணமியில் தாஜ்மஹாலுக்குச் செல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். அதனால் தான் அவர் இறந்து போனார்.”

“…”

“அவர் விருப்பம் மும்தாஜுடன் இணைவதே என்பதாகவே புரிந்து கொள்கிறேன்.”

“…”

“ஒருவகையில் அவரைக் கொன்றவன் நான். என்னைக் கொல்ல அவர் சதி செய்த போது கூட அவரைக் கொல்ல நான் நினைக்கவில்லை. ஆனால் இன்று என்னை அறியாமலேயே என் வறட்டுப் பிடிவாதத்தால் அவரைக் காவு வாங்கியவனானேன். அந்தக் குற்றவுணர்ச்சியைக் கொஞ்சமேனும் சீர்செய்யும் நோக்கில் தான் அவரது ஆன்மாவைத் திருப்தி செய்ய அவரை அம்மாவின் அருகில் சமாதி செய்தேன்.”

“…”

“அன்னை மட்டும் அங்கு இருப்பது முழுமையற்ற காதல் என்பதாகத் தோன்றியது. அதனால் தான் தந்தையை அங்கு அவரோடு சேர்த்தேன். எனக்கு அது மகிழ்ச்சியே!”

“…”

“தாஜ் மஹாலின் சீர்மை குலைந்திருக்கிறது என இன்று இந்தப் பூவுலகில் இருக்கும் மனிதர்கள் ஒவ்வொருவரும் சொல்வார்கள். தலைமுறை தலைமுறையாய் அது பரப்பப்படக்கூடும். எதிர்காலத்தில் வரலாறும் அப்படியே என்னைத் தூற்றும். ஆனால் ஒரே ஒருவருக்கு மட்டும் எனது செயல் தான் இந்த வெண்மாளிகைக்கு பரிபூரணச் சீர்மையை வழங்கி இருக்கிறது என்பது தெரியும். அது நம் தந்தை ஷாஜஹான்!”

ஜஹனாரா படகின் வெளியே சிற்றலைகள் மேவியபடி ஓடிக்கொண்டிருந்த யமுனை நதியைப் பார்த்தாள். வெண்ணிலவில் குளித்த தாஜ் மஹாலின் நிழல் பேரிரவைப் பூசிக் கொண்டு பிரம்மாண்டக் கருப்பு மாளிகையாக அதில் விழுந்து தவழ்ந்தது.

***

1 comment:

Sundar said...

A different perspective of Aurangazeb. Nice