ராஜ காவியம்

சென்ற ஆண்டு இதே நேரம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வசன கவிதையில் எழுதும் நோக்கில் ஓர் அத்தியாயம் எழுதிப் பார்த்தேன். சிற்சில எத்தனங்களுக்குப் பின் அது அச்சுக் காணும் அதிர்ஷ்டம் அமையவில்லை. அதனால் அம்முயற்சியைத் தொடரவில்லை. அவரை வாழ்த்தி சற்றே வருத்தத்துடன் அதை இங்கே பகிர்கிறேன்.


1. தோற்றுவாய்

கம்பிக‌ள் பிரசவிக்கும் கற்பகம்
காற்றில் பரவும் மின்சாரம்
கண்கள் கசியும் பரவசம்
கன‌ங்கள் கரையும் வினோதம்

மனித குலம் கண்டறிந்த
மகத்துவங்களில் முதன்மை
காதலுக்கு இணையாய்
ஆவியசைக்கும் உயிர்மை

சோகமோ மோகமோ
ராகம் அதைக் கூவிடும்
கீதையோ போதையோ
கீதம் அதைப் பாடிடும்

காட்சியில் உச்சம் பெண்
கற்பனை உச்சம் கடவுள்
மொழி உச்சம் கவிதை
ஓசையின் உச்சம் இசை

ஒரு குருடனை விடவும்
ஓர் ஊமையை விடவும்
இசை துய்க்கா செவிடனே
துரதிர்ஷ்டம் தோய்ந்தவன்.

*

இசை என்பதற்கு மிக
இசைவாய் மிளிரும்
அருஞ்சொற்பொருள்
உருவ விளைந்தால்

சுரம் சுரக்கும் கானமுலை
வரமளிக்கும் ராகதேவன்
காதினிக்கும் நாதமுனி
எவரென வினவினால்

காலாட்டியபடியே இசை
கேட்டிருந்த தேசத்துக்கு
தாலட்டுப் பாடிய தாய்
ஒருவரைச் சுட்டினால்

இசை இயலில் ஞானியென‌
இயல் இசை நாடகமறிந்த
கலைஞர் நா மலர்ந்திட்ட
கலைஞனைத் தேடினால்

ஏழு கோடி குரல்களில்
எழும் பதில் ஒன்றாய்
ஒற்றைச் சொல்லாகும் -
அது இளையராஜா!

*

அன்னக்கிளி வானேகி
அஞ்சலியில் ஐந்நூறாகி
தாரை தப்பட்டையுடன்
பாரை அளந்து நிற்கிறது

ஆயிரம் திரைப்படங்கள்
ஆரும் இசைத்ததுண்டோ!
ஆர்மோனியத்தில் பாடிய
கோடம்பாக்கத்துப் பரணி

நான்கு நீள்தசாப்தங்கள்
நான்கு தேசிய விருதுகள்
மத்திய அரசாங்கம் சூடிய
பத்ம பூஷண் அலங்காரம்

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி
கமல் என நால்வருக்கு
மெட்டமைத்த மூலவர்
மெல்லிசையின் உற்சவர்

இசையுண்டு வாழ்வோர்க்கு
இசையுண்டு அவரிடம் என்றும்
அவர் இசைக்கு இறை - நாமோ
அவர் இசைக்கு இரை. நமோ!

*

ஒருபுறம் தியாகராஜர்
சியாமா சாஸ்திரிகள்
முத்துசாமி தீட்சிதர்
உடன் நான்காவதாய்

மறுபுறம் மோஸார்ட்,
பாக், பீத்தோவன் என
மேற்கத்திய சங்கீத
விற்பன்னர்க்கிணை

பின்னணி இசையில்
இந்தியா முழுமைக்கும்
முன்னணி இடமென
ஆளுமைகள் வாக்கு

இசையமைத்தவர் படம்
பசையிட்ட ஒலிநாடா
வெளிவரத் துவங்கியது
இவரது முகத்துடன்தான்.

ஆனால் அவரோ தன்னை
முந்தைய இசைஞர்கள்
துப்பிய எச்சில் என்றார்
அமரருள் உய்த்தார்.

*

கருநாடக செம்மங்குடி
சயன அறையிலிருந்த
படமொன்றே என்பர்
அது இளையராஜா

இசைக்கோர்ப்புக்கென
அதிகார மையமுண்டு
எனிலது இவரென்றார்
பாலமுரளி கிருஷ்ணா

பல பிறவிகளில் செய்ய
முடிந்த இசைச்சாதனை
இவருடையவை என்றார்
லால்குடி ஜெயராமன்

இவர் இசையமைக்கும்
வரை மட்டுமே தான்
படம் இயக்குவேன்
என்ற பாலு மகேந்திரா

வேறொருவராய்ப் பிறக்க
நேர்ந்திருந்தால் இவராய்
இருந்திருக்க வேண்டும்
என்றார் கமல் ஹாசன்.

*

புராணங்கள் கடவுளர்க்கு
புறத்திணை மானிடர்க்கு
இடைப்பட்ட சித்தர்கட்கு
இயற்றப்படும் காவியம்

பக்தனோ ரசிகனோ
கடலை நக்கிக் குடிக்கப்
புறப்பட்டிருக்கிறது
இன்னொரு பூனை

பாற்கடலுக்கு பதிலாய்
இம்முறை பாக்கடல்
கரை மணற்துகளாய்
சிதறிய ஸ்வரங்கள்

வாலியை வாசித்தாலே
வசப்படும் வசன கவிதை
வைகுண்ட திசை நோக்கி
வணங்கித் தொடங்குகிறேன்

எதிரிகளிடம் சேகரித்த சக்தியில்
உதிரியாய் வீசம் கிள்ளி வீசுங்கள்
சின்னத் தாயவள் தந்த ராசாவை
வண்ணத் தமிழில் வனைவதற்கு.

*

டேனியல் ராசய்யா
இசை ரசவாதத்தில்
The Music Messiah
ஆன சரித்திரம் இது

ஒரு நிலப்பரப்புக்கு
ஒரு நூற்றாண்டுக்கு
ஒரு கலைஞனை
அருளும் இயற்கை

தமிழ் மாநிலத்துக்கு
போன முறை பாரதி
இன்றைய திகதியில்
இந்த இசைச்சாரதி

எட்டயபுரத்தில் பிறந்தது
கவிராஜன் கதையெனில்
பண்ணைபுரத்தில் உதித்த
இஃது இசைராஜன் கதை

ராஜாயணம் ராஜ இதிகாசம்
ராஜாதிகாரம் ராஜ காப்பியம்
ராஜாங்கம் - ராஜ விசுவாசம்
அஃதே இந்த ராஜ காவியம்!

***

(தொடரக்கூடும்)

Comments

Sundar said…
அருமை, அருமை!
aishwaryan said…
காலம் கனியும்போது தானாய் அச்சேறும். அழகான படைப்பு தொடரட்டும் ; ஆத்ம திருப்தி சித்திக்கட்டும்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்