ஒரு நன்னாள்


கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 9, 2016) அன்று 'ஞயம் பட வரை' கட்டுரைப் போட்டியில் வென்றதற்கான‌ முதல் பரிசினை புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் அவர்களிடமிருந்து சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடந்த நிகழ்வில் பெற்றுக் கொண்டேன். பரிசளிப்போடு தமிழ் குறித்த ஒரு கருத்தரங்காகவும் இவ்விழா நடந்தது. (என் முதல் கவிதை நூலான 'பரத்தை கூற்று' இங்கே தான் வெளியானது. ஐந்தரை ஆண்டுகள் கழித்து மறுபடி அங்கே.) "தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியில் தமிழ் மொழியின் தற்போதைய நிலை, அடைய வேண்டிய இலக்குகள்" என்ற தலைப்பில் மாலன் சிறப்புரை ஆற்றினார். தமிழ் இணையக்கல்வி கழக உதவி இயக்குனர் தமிழ்ப் பரிதி, நாடகவியலாளர் ஆர். அரவிந்தன், The Wagon இதழ் பதிப்பாசிரியர் சித்தன் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். போட்டியையும் நிகழ்வையும் நடத்திய பிரதிலிபி மற்றும் அகம் இதழ் குழுவினருக்கு வாழ்த்துக்கள். தகவல் தொடர்பை ஒருங்கிணைத்த திலீபனுக்கு நன்றி. என் வேண்டுகோளுக்கிணங்க என் கட்டுரையை வாசித்து மதிப்பீடு செய்த அனைவருக்கும் என் அன்பினைப் பதிகிறேன்.


ஆரம்பத்தில் இப்போட்டியில் கலந்து கொள்வது பற்றி எனக்குத் தயக்கங்கள் இருந்தன. காரணம் இது புதியவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதிலிபி முன்னெடுக்கும் முயற்சியாகப்பட்டது. நான் பிரபலமும் அல்ல; புதியவனும் அல்ல என்ற  இரண்டாங்கெட்டான் நிலை. ஆனால் மூன்று விஷயங்கள் என்னை எழுத உந்தின: 1) போட்டியின் தலைப்பு: "இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?" 2) நல்ல‌ பரிசுத் தொகை. அந்த ஊக்குவிப்பின் பேரில் ஆரோக்கியமான‌ படைப்புகள் வரும் என நம்பிக்கை. 3) கட்டுரைக்குச் சொல்லப்பட்டிருந்த சொல்லளவு. 1500 முதல் 2500. நீள்கட்டுரைகள் எழுதுதல் எனக்குப் பிரியம். வெ.இறையன்பு ஐஏஎஸ் கூட இப்போட்டியில் கலந்து கொண்டதாக நடுவர்களில் ஒருவரான அரவிந்தன் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் பகிர்ந்து கொண்டார். எனில் என் தயக்கம் அனாவசியமானது தான்.


விழா முடிவில் அரவிந்தன் என்னுடன் கொஞ்சம் பேசினார். உற்சாகமூட்டினார். கைதட்டல்களுக்கு ஏங்கும் மன‌நிலை கடந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஒரு நல்ல பாராட்டுக்கு நெகிழ்வதில் பிழையில்லை எனத் தோன்றுகிறது.

பரிசும் பணமும் தாண்டி அதனாலேயே அந்நாள் நன்னாள்!

*

போட்டிக்கான‌ என் கட்டுரை: http://tamil.pratilipi.com/c-saravanakarthikeyan/nyayam-pada-varai
போட்டிக்கு வந்த கட்டுரைகளின் தொகுப்பு: http://tamil.pratilipi.com/event/gnayam-pada-varai
பரிசு அறிவிப்பு: https://www.facebook.com/permalink.php?story_fbid=591324754377504&id=448203822022932
 
*

No comments: