Net Neutrality - ஓர் எளிய அறிமுகம்

சென்ற மாத மத்தியில் செய்திகளில் அதிகம் அடிபட்ட வண்ணமிருந்ததால் நெட் ந்யூட்ராலிட்டி குறித்து வாசிக்கவும் எழுதவும் விரும்பி இருந்தேன். என்னவென்றே புரியாமல் நிறையப்பேர் ஆதரித்துக் கொண்டிருந்தது தான் முக்கியக் காரணம். ஆனால் தமிழ் - சித்திரை இதழ் பணிகள், கொல்கத்தா, சென்னை, கோவை பயணம் எனத் தொடர் ஓட்டத்தின் காரணமாய் சமயம் கிட்டவில்லை. இப்போது மத்திய அரசு இவ்விஷயத்தில் முடிவெடுக்கவிருக்கும் கட்டத்தை எட்டி விட்டது. இடையில் ஜெயமோகன் இது பற்றி நான் எழுதி இருப்பேன் என நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த ஊக்கத்தின் நீட்சியாய் தாம‌தமானாலும் பரவாயில்லை என இது குறித்து எழுதத் தீர்மானித்தேன். அவருக்கு நன்றி.

*

நெட் ந்யூட்ராலிட்டி என்பதை இணையச் சமநிலை என்று பெயர்க்கிறேன். அது என்ன என்று அறியும் முன் இணையம் (internet) எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்வோம். ஒன்று அதன் விஞ்ஞானம். மற்றது அதன் பொருளாதாரம்.

இணையத்தில் நாம் தினசரி பயன்படுத்தும் கூகுள், ஜிமெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப், அமேஸான் அனைத்துமே வலைச் சேவைகள் (web services). இவற்றை கணிப்பொறி, ஸ்மார்ட்ஃபோன், டேப்லட் உள்ளிட்ட கருவிகளில் இரண்டு வழியில் பயன்படுத்தலாம் - இணைய உலாவி (web browser) வழி இணைய தளமாக‌ (website) அல்லது செயலியாக‌ (app).

தொழில்நுட்ப‌ ரீதியாக‌ இணையப் பயன்பாடு என்பது தரவுகளின் (data) பரிமாற்றம். இந்தத் தரவுகள் எழுத்துக்களாக இருக்கலாம் (ட்விட்டர்), புகைப்படங்களாக இருக்கலாம் (இன்ஸ்டாக்ராம்), ஒலிகளாக இருக்கலாம் (சவுண்ட்க்ளௌட்), அசைபடங்களாக இருக்கலாம் (யூட்யூப்), இன்னும் பலவித கோப்புகளாக இருக்கலாம், அல்லது இவற்றின் கலவையாக இருக்கலாம். இன்று உலகின் அனைத்து வலை தளங்களும் / செயலிகளும் இவற்றின் கலவையாகவே இருக்கின்றன‌.

இணையப் பயன்பாட்டில் தரவுகளை ஏற்றுதல் (upload) மற்றும் இறக்குதல் (download) நடைபெறுகிறது. ட்விட்டரில் நம் டைம்லைன் பார்க்கையில் தரவுகளை (பிரதானமாய்) இறக்குகிறோம். ஒரு ட்வீட் போடுகையில் (பிரதானமாய்) தரவுகளை ஏற்றுகிறோம். ஆக இணையத்தில் நாம் செய்வதெல்லாம் தரவுகளின் மின் பரிமாற்றம் மட்டுமே.

வலைச் சேவையின் சர்வர்கள் அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ இருக்கலாம். அதைப் பயன்படுத்த‌ இணையச் சேவை தேவை. அத்தொழில்நுட்பப் பாலத்தையே இணையச் சேவை வழங்குநர்கள் (ISP - Internet Service Providers) தருகின்றன. 2ஜி, 3ஜி, 4ஜி, ப்ராட்பேண்ட் ஆகிய நுட்பங்களின் மூலம் இணையத் தொடர்பை இந்நிறுவனங்கள் நமக்கு அளிக்கின்றன. இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது இந்த நிறுவனங்கள் தன் வழி பரிமாறப்படும் தரவுகளில் எவ்வகையிலும் கை வைப்பதில்லை. எந்தப் பாரபட்சமும் காட்டுவதில்லை. வாங்கி அனுப்புவதோடு சரி. திறமையான குருட்டுப்பாலம்.

அடுத்து இணையத்தின் பொருளாதாரம். அதற்கு இதில் யார் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம். 1. பயனராகிய நாம் 2. நாம் பயன்படுத்தும் வலை தளம் / செயலி (உதா: ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸாப்) 3. நம்முடைய‌ இணைய சேவை வழங்குநர் (உதா: ஏர்டெல், வோடாஃபோன், ரிலையன்ஸ்). இந்த நிறுவனங்கள் இச்சேவையை அளிக்க நம்மிடமிருந்து ஒரு தொகையைப் பெற்றுக் கொள்கின்றன. உதாரணமாய் என் மொபைல் 4ஜி இணைப்புக்கு 3ஜிபி தரவுக்கு மாதம் ரூ. 650 செலுத்துகிறேன். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். போஸ்ட்பெய்ட், ப்ரிபெய்ட் என்றும் மாறுபடும்.

மற்றபடி எந்த வலைச்சேவை, எதற்காகப் பயன்படுத்துகிறோம், உள்ளடக்கம் என்ன, எந்தக் கருவி, நாம் யார் என்பதை எல்லாம் பொறுத்து இந்த விலை மாறாது. பயன்படுத்திய தரவுக்கேற்ற காசு மட்டுமே. இது தான் இணையச் சமநிலை. மட்டுமல்லாது இணையச் சேவையின் வேகம், தரவுகளைக் கையாள்வது போன்ற விஷயங்களிலும் பாரபட்சம் கூடாது.

இதை எளிமையாக கேபிள் டிவியின் வணிக மாதிரியுடன் ஒப்பிடலாம். வலைதளம் / செயலி என்பது சன் டிவி, விஜய் டிவி போன்றது. இணையச் சேவை வழங்குநர் கேபிள் ஆப்பரேட்டர் போன்றது. கேபிள் டிவிகாரர் நாம் என்ன சானல் பார்க்கிறோம் என்பது பொறுத்து பணம் வசூலிப்பதில்லை. மாதம் ரூ. 200. நாம் 100 சேனல்கள் பார்த்தாலும் சரி, அல்லது ஒரு சேனலை மட்டும் பார்த்தாலும் சரி. அதே காசு தான். இணையச் சமநிலை என்பது இது தான். எவ்வளவு தரவுப் பரிமாற்றம் நிகழ்ந்தது (உதா: 300 எம்பி, 2 ஜிபி) என்பதை மட்டுமே இணையச் சேவை வழங்குநர் கணக்கிட வேண்டும்.

வலைச்சேவை நிறுவனங்கள் இலவசமாக எப்படி இந்தச் சேவைகளை நமக்கு அளிக்கின்றன? அது இலவசம் அல்ல, அது போல் தோன்றுகிறது. உதாரணமாய் கூகுள் நிறுவனம் ஜிமெயிலை நமக்கு இலவசமாக அளித்து விட்டு விளம்பரங்களை அதில் நுழைத்துப் பணம் பார்க்கிறது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கி விட்டு, அதே ஜிமெயில் சேவையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காசுக்குத் தருகிறது. இப்படி மறைமுகமாக நம்மிடமிருந்து காசு வலைச்சேவை நிறுவனங்களுக்குப் போய்க் கொண்டு தான் இருக்கிறது. நேரடியாக அவர்களுக்கு நாம் காசு கொடுப்பதில்லை என்பதால் இலவசப் பிம்பம்.

இன்று (சில விதிவிலக்குகள் தவிர) இந்தியாவில் இணையச் சமநிலை அமலில் இருக்கிறது. அதாவது எந்தச் சட்டமும் இல்லாமல் இயல்பாகவே நடைமுறையில் இருக்கிறது. நாம் எவ்வளவு தரவு பயன்படுத்துகிறோமோ அந்த அளவீட்டின் அடிப்படையிலேயே பணம் செலுத்துகிறோம். எனில் எல்லாமே சரியாகத் தானே இருக்கிறது, இப்போது என்ன‌ பிரச்சனை?

செல்பேசிச் சேவை வழங்கி வந்த நிறுவனங்களே இணையச் சேவை வழங்குநராகவும் இருக்கின்றன. ஏர்டெல்லின் செல்பேசிச் சேவையைப் பயன்படுத்தும் ஒருவர் அதன் இணையச் சேவையையும் பயன்படுத்தக்கூடும். அவரது செல்பேசி பில்லில் மாத வாடகை, வரிகள் தவிர்த்து கீழ்காணும் விஷயங்கள் இடம் பெறும்: தொலைபேசி அழைப்புக் கட்டணம் (phone calls), குறுஞ்செய்திக் கட்டணம் (SMS),  இணையப் பயன்பாட்டுக் கட்டணம், பிற சேவைக‌ள் (உதா: காலர் ட்யூன்).

கொஞ்ச காலம் முன் வரை இந்தியாவில் இதில் ஏதும் சிக்கல் இல்லை. ஆனால் தற்போது வாட்ஸாப் குறுஞ்செய்திக்கு மாற்றாக வந்து விட்டது. அதிலேயே அழைப்பு வசதியும் வந்து விட்டது. இது போக ஸ்கைப், லைன், வைபர், கூகுள் ஹேங்கவுட்ஸ் ஆகிவற்றிலும் வீடியோ அழைப்பு வசதி வரை வந்து விட்டது. முக்கியமாய் இவை யாவும் இலவசம். இவற்றைப் பயன்படுத்தினால் ஆகும் தரவுப் பரிமாற்றத்திற்கான கட்டணத்தை மட்டும் இணைய சேவை வழங்குநருக்கு செலுத்தினால் போதுமானது. வழக்கிலிருக்கும் தொலைபேசிக் கட்டணத்தோடு ஒப்பிடும் போது இந்த இணையப் பயன்பாட்டுக் கட்டணம் மிகக் குறைவு. இதனால் கணிசமானோர் தொலைபேசி அழைப்புகளையும், குறுஞ்செய்தி அனுப்புவதையும் தவிர்த்து விட்டு / குறைத்துக் கொண்டு இந்த வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதிவேக இணைய‌ வசதி (3ஜி, 4ஜி) வந்து விட்ட பிறகு இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இதனால் என்ன நடக்கிறது? கடந்த சில ஆண்டுகளாக மேலே குறிப்பிட்ட செல்பேசி பில்லில் முதல் இரண்டு விஷயங்கள் குறைந்து விடும். மூன்றாவது விஷயம் மட்டும் லேசாக அதிகரிக்கக்கூடும். இதனால் செல்பேசி சேவை / இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை. இது தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் கடுமையான நஷ்டத்தை இவர்கள் சந்திக்க வேண்டி இருக்கும். எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமான, தடையற்ற‌ தொலைபேசி உரையாடல்களுக்காக பல்லாயிரம் கோடி செலவு செய்து அவர்கள் நிறுவிய செல்ஃபோன் டவர்கள் வெறும் தரவு பரிமாற்ற தரகு கருவிகளாக மாறிப்போகும். அந்த முதலீடு எல்லாம் நட்டம் ஆகும். அதனால் தான் கதறுகின்றனர்.

இந்நஷ்டத்தைத் தவிர்க்க அவர்கள் முன்வைக்கும் உபாயம் தான் இணையச் சமநிலைக்கு எதிராக இருக்கிறது. இணையச் சமநிலையை உடைத்து லாபத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர். வாட்ஸாப் உள்ளிட்ட தங்களுக்குப் போட்டியான‌ (தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தியை ஒத்த வசதியை அளிக்கும்) தளங்கள் / செயலிகளைப் பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணம், மற்ற தளங்களைப் பயன்படுத்தும் போது வழக்கமான‌ கட்டணம் என்பது தான் அவர்களின் திட்டம்.

இதை அனுமதிக்கும் போது மேலும் விரிவடைந்து ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு கட்டணம் என்ப‌தாக மாறும். உதாரணமாய் வாட்ஸாப் 1 எம்பி ரூ10, ஸ்கைப் 1 எம்பி ரூ.7, ட்விட்டர் 1 எம்பி ரூ.5, ஜிமெயில் 1 எம்பி ரூ.2, யூட்யூப் 1 எம்பி ரூ.1 என்பது போல் விலை நிர்ணயிப்பார்கள்.அதிலும் அதிவேக தரவுப்பரிமாற்றத்துக்கு தனியாய் அதிக விலை. எளியவர்கள் தங்களுக்கு அவசியமான இணையச் சேவைகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இது மேலோட்டமாய் செட்டாப் பாக்ஸ் வணிக மாதிரியைப் போல். கேபிள் டிவி போலன்றி ஒவ்வொரு சானலுக்கும் வெவ்வேறு தொகை. (ஆனால் அதில் தொகையைச் சேனல் தான் நிர்ணயிக்கிறது என்பது வித்தியாசம். வலைதளம் பெரும்பாலும் இலவசம் என்பதால் தன் நஷ்டத்திற்கேற்ப‌ இணையச் சேவை வழங்குநர் தொகை நிர்ணயிக்கிறார்.)

இந்தியாவில் தொலைதொடர்பு தொர்பான விஷயங்களை முறைப்படுத்தும் TRAI-யிடம் (Telecom Regulatory Authority of India) இந்த இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள் இதற்கு முறையிட்டன. இதற்குத் தான் பொது மக்களிடத்தே பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதையொட்டியே ஊடகங்களில் இணையச் சமநிலை அடிக்கடி அடிபடுகிறது. அதனால் TRAI அமைப்பு பொது மக்களிடம் கருத்துக் கேட்டது. சுமார் பத்து லட்சம் மின்னஞ்சல்கள் குவிந்தன. அதைக் கொண்டு (அல்லது கொள்ளாமலும்) மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம் இதில் இறுதி முடிவை எடுக்கும்.

2010 முதலே சிலே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இணையச் சமநிலைக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றி வருகின்றன‌. பல்லாண்டு இழுபறிக்குப் பின் சென்ற ஆண்டு அமெரிக்காவும் இதற்கு ஆதரவாகவே சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

இடையில் இந்நிறுவனங்கள் வேறு திட்டங்கள் முயன்று பார்த்தன‌. ஏர்டெல் ஸீரோ என்ற திட்டம். அதாவது தளங்கள் / செயலிகள் ஏர்டெல்லுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி அத்தளங்கள் / செயலிகளுக்கான இணையப் பயன்பாடு பயனர்களுக்கு  இலவசம். இத்திட்டத்தில் இணையும் வலைச் சேவைகளுக்கு கூடுதல் தரவுப் பரிமாற்ற வேகமும் கிட்டும். (மற்றவற்றுக்கு வேகம் குறைவு என்பது இதன் இன்னொரு பொருள். இதன் மூலம் எல்லா வலைச் சேவைகளையும் இதில் இணைக்க வைக்கும் வற்புறுத்தலும் இருக்கிறது.)

ஃபிளிப்கார்ட் நிறுவனம் இதில் பங்கேற்பதாக முதலில் செய்திகள் வந்து பிறகு பின்வாங்கியது. இலவசம் என்பது மேலோட்டமாக பயனர்களுக்கு நல்லதாகத் தோன்றினாலும் இது மறைமுக இணையச் சமநிலைக் குலைப்புத் திட்டம். அதாவது ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் தளம் / செயலியைப் பயன்படுத்தினால் ஆகும் தரவுப் பரிமாற்றச் செலவு பூஜ்யம் என்பதால் எல்லோரும் வழக்கத்தை விட அதிகமாக அவற்றைப் பயன்படுத்துவர் (கூடுதல் வேகம் என்பதும் பயனர்களுக்கு உற்சாகமளிக்கும் விஷயம்). அதனால் அந்த வலைச் சேவை நிறுவனங்களின் வருமானம் பெருக வாய்ப்பு அதிகம். அந்த லாபத்தின் ஒரு பகுதியை இணையச் சேவை வழங்குநருக்கு அளிப்பதில் அவர்களுக்கு தயக்கமிருக்காது.

இலவசம் என்ற பெயரில் இதில் இணையச் சமநிலையை உடைத்ததைப் போல் வாட்ஸாப்பில் வேறு மாதிரி உடைப்பர். இங்கு தரவுப் பரிமாற்றத் தொகை பூஜ்யம். அங்கு தரவுப் பரிமாற்றத் தொகை பல‌ மடங்காக வைப்பர். அதனால் வாட்ஸாப் பயன்படுத்தி அழைப்பு / குறுஞ்செய்தி அனுப்ப நினைப்பவர் இணைய வழங்குநருக்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் தான் இணையச் சமநிலையை ஆதரிப்பவர்களை இதைக் கடுமையாக எதிர்த்தனர். அதனாலேயே வேறு வழியின்றி ஃப்ளிப்கார்ட் பின்வாங்க வேண்டியதாகி விட்டது. இலவசமாக அளிக்கப்படும் எதுவுமே அதன் பிற்பாடு அதற்கு இணையாய் இருமடங்கு தொகை வசூலிக்கும் ஒரு பெருந்திட்டத்தை ஒளித்து வைத்திருக்கும்.

ஏர்டெல்லில் கூகுள் இலவசம், ஏர்செல்லில் விக்கிப்பீடியா இலவசம், அதோடு ஃபேஸ்புக், வாட்ஸாப் இலவசம், ரிலையன்ஸில் ட்விட்டர் இலவசம் என வியாபார யுக்தியாக‌ ஏற்கனவே இணையச் சமநிலை மீறல்கள் இங்குண்டு.

இதே போல் வளரும் நாடுகளில் குறைந்த விலையில் "தேர்ந்தெடுக்கப்பட்ட‌" வலைச் சேவைகளை மக்களுக்கு அளிப்பது என்ற பெயரில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்த internet.org திட்டமும் இணையச் சமநிலைக்கு எதிரானது என இந்தியாவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதனால் க்ளியர்ட்ரிப் போன்ற சில நிறுவனங்கள் அதிலிருந்து விலகி விட்டன.

அடுத்து இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் வேறு விஷயத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. COAI (Cellular Operators Association of India) என்ற செல்பேசி நிறுவனங்களுக்கான சங்கம் மூலம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதாவது வாட்ஸாப் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களைப் போல் தொலைபேசிச் சேவையே அளிக்கின்றன, அதனால் தங்களுக்கான அத்தனை சட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்க TRAI அமைப்பை நெருக்குகின்றன. அதாவது இவர்கள் பெற்றது போல் அரசாங்கத்திடம் பெருந்தொகை செலுத்தி அவர்களும் லைசென்ஸ் பெற வேண்டும் என்கிறார்கள். அது நடந்தால் அவர்களும் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டி வரும். பிறகு அவர்கள் மாற்றுப் போட்டி என்பதாக அல்லாமல் நேரடிப் போட்டியாகிப் போவார்கள். அப்படி அவர்களைச் சந்திப்பதும் வெல்வதும் எளிது.

ஆனால் இந்த முறையை அமல்படுத்தினாலும் லைசென்ஸுக்குத் தகுந்தாற் போல் இணையத்தின் தன்மை அமையும் என்பதால் அது இணையச் சமநிலையைக் குலைப்பதாகவே ஆகும். அதனால் தான் TRAI இதற்கும் தயங்குகிறது.

இது போக இணையச் சமநிலையைக் குலைக்காமல் லாபமீட்ட இந்நிறுவனங்களுக்கு இன்னொரு வழி இருக்கிறது. இணையத் தரவுப் பரிமாற்றத்திற்கான கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி விடுவது. அதாவது ஒரு நிறுவனம் இதுவரை 1 ஜிபி ரூ.100க்குக் கொடுத்திருந்தால் இனிமேல் 1 ஜிபி ரூ.300 அல்லது ரூ.500 ஆக்கி விடுவது. அதன் மூலம் ஒருவர் வாட்ஸாப்பில் அழைப்பு மேற்கொண்டாலும் தொலைபேசி அழைப்பைப் பயன்படுத்தினாலும் இணையச் சேவை வழங்குநருக்கு பிரச்சனை இல்லை, காசு வந்து விடும். தொலைபேசி அழைப்போ, குறுந்தகவலோ செயலியிலும், செல்பேசியிலும் ஒரே மாதிரி விலை ஒன்றென்றாகி விட்ட பிறகு தரம் எதில் சிற‌ப்போ அதையே பயன்படுத்துவர். (ஏற்கனவே செல்பேசி நிறுவனங்கள் இணையக் கட்டணங்களை ஆறு மடங்கு உயர்த்தப் போவதாக மிரட்டியுள்ளனர்.)

ஆனால் இதன் பக்க விளைவு என்னவென்றால் ஜிமெயில் பயன்பாடு, ப்ளாக் வாசிப்பு போன்றவற்றிற்கும் இதே அதீத கட்டணம் வந்து விழும் (இணையச் சமநிலை!). அது அனாவசியச் சுமை. வாட்ஸாப் போன்ற அக்கப்போர்களைப் பயன்படுத்தாமல், இணையம் வருவது தகவல் தேடல், கல்வி, வாசிப்பு போன்ற காரணங்களுக்காக‌ மட்டும் தான் என்றிருப்பவர்கள் (குறிப்பாய் மாணவர்கள்) இந்தச் சூழலில் வறட்டு இணையச் சமநிலை வாதத்திற்குப் பலியாவர்.

தனிப்பட்ட முறையில் என் நிலைப்பாடு ஓர் எல்லை வரை இணையச் சமநிலையை ஆதரிக்க வேண்டும் என்பதே. இணையச் சமநிலைக் குலைவில் நான் பெரிதும் கவலையுறுவது அதனால் இணையச் சேவை வழங்குநர்களுக்கு அளிக்கப்படும் வானளாவிய அதிகாரம் குறித்துத் தான். அவர்களால் வலைச் சேவைகளுக்கான விலை அதிகரிப்பு / குறைப்பு மட்டுமல்ல, வேக அதிகரிப்பு / குறைப்பு, தணிக்கை செய்தல், தடை செய்தல் போன்றவற்றிலும் செய்ய முடியும். உதாரணமாக தனக்கு அரசியல் ரீதியாக / வர்த்தக ரீதியாக ஆகாத‌ ஒரு வலைச்சேவையை முடக்க முடியும் / மந்தப்படுத்த முடியும். கருத்துச் சுதந்திரத்துக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் எதிராக இது அமைந்து விடக்கூடும்.

உதாரணமாய் ஒரு இணையச் சேவை வழங்குநர் நினைத்தால் நரேந்திர மோடிக்கு எதிரான கட்டுரைகள் தாங்கி வரும் வலைதளங்களை இருட்டடிப்பு செய்ய முடியும், புதிதாகத் தொடங்கப்பட்டு முன்னேறி வரும் ஒரு சிறு இணைய வணிக நிறுவனத்தின் போக்குவரத்தை சீர்குலைக்க முடியும், குறிப்பிட்ட வலை தளத்தை மட்டும் அதிவேகத் தரவுப் பரிமாற்றம் செய்ய வைக்க‌ முடியும். அதனால் இணையச் சமநிலையிலிருந்து விலகும் முடிவு கவனமாகவே எடுக்க வேண்டும்.

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை குறிப்பிட்ட வலைச்சேவைகளின் தரவுப் பரிமாற்றக் கட்டண நிர்ணயத்துக்கென நெறிகளை உருவாக்க வேண்டும். அதில் செல்பேசிச் சேவைக்குப் போட்டியாக இருக்கும் வாட்ஸாப் உள்ளிட்ட வலைச் சேவைகள் மட்டுமே இடம் பெற வேண்டும். தேவைப்படும் போது புதிய‌ வலைச் சேவைகளும் அதற்குரிய வலுவான காரணங்களை முன்வைத்து இப்பட்டியலில் சேர்க்கலாம். மற்றபடி, இதர வலைச் சேவைகள் யாவும் பொதுவான தரவுப் பரிமாற்றக் கட்டணங்களையே பின்பற்ற வேண்டும். இது தவிர வேறு எந்த அடிப்படையிலும் எந்தப் பாரபட்சமும் கூடாது.

செல்பேசிச் சேவையோ, வலைச் சேவை செயலியின் வழியோ தொலைபேசுவதற்கும், குறுந்தகவல் அனுப்புவதற்கும் அதற்குரிய விலையைக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்? எப்படி இலவசமாய்க் கிட்டும்? செல்பேசிச் சேவையில் வரும் இலவச குறுந்தகவல்கள் கூட குறிப்பிட்ட பேக்கேஜைக் காசு கொடுத்து வாங்குவதன் வழியாகக் கிட்டுவதே. அதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ எல்லாவற்றுக்கும் நாம் கட்டணம் செலுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். 

மற்றபடி இந்தியாவில் மேற்கு நாடுகள் போல் இணையச் சமநிலையை அதன் தற்போதைய வடிவில் (விலையேற்றம் இன்றி) கொண்டு வந்தால் இணைய சேவை நிறுவனங்கள் மெல்ல மெல்ல நஷ்டத்தில் அழியும் என்பதே என் கணிப்பு.

உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. அமேஸான், மைக்ரோசாஃப்ட், ட்விட்ட‌ர், யாஹூ, ஈபே, டம்ளர், எட்ஸி, க்ரீன்பீஸ் ஆகிய நிறுவனங்கள் இதை ஆதரிக்க, ஏடி&டி, வெரைஸான், ஐபிஎம், இன்டெல், சிஸ்கோ, க்வால்காம், ஜுனிபர், ஆல்காடெல் லூசெண்ட், பேனாசோனிக், எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் இதை எதிர்க்கின்றன. இரு தரப்பிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் பல காரணங்கள் இருக்கின்றன.

நிதானமாய் யோசித்தால், இணையச் சமநிலை என்பதை இலவச தொலைபேசி அழைப்பு / குறுஞ்செய்தி வசதி என்பதாக நாம் புரிந்து கொண்டால் நிச்சயம் ஏமாறப் போகிறோம். இந்த இலவசப் பறிப்பு என்பதற்கு எதிரான நம் நடுத்தர வர்க்க மனநிலையே இணைய சமநிலைக்கான பரவலான ஆதரவாக வெளிப்படுவதாகப் படுகிறது. எதுவுமே இலவசமாகக் கிட்டாது. அப்படிக் கிட்டினால் அதை விட மோசமாய் ஒன்றை விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றே அர்த்தம்.

டிம் வூ 2003ல் Network Neutrality பற்றிய தன் பேப்பரை முதன் முதலில் வெளியிட்ட போது அவரது நோக்கம் செல்பேசி இலவச‌ வசதிகள் எனக் குறுகலானதாய் இருக்கவில்லை. இணையத்தை அதன் முழு வீச்சுடன் பயன்படுத்த சமநிலை வேண்டும் என்பது தான் அவர் கருத்து. அதை இலவசத்துடன் தொடர்புபடுத்தி மலினப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இணையத்தைக் கண்டுபிடித்த டிம் பெர்னர்ஸ் லீ அதைக் காப்புரிமை செய்யவில்லை. எல்லோரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாகவே அளித்தார். அவர் விஞ்ஞானி. அதற்குரிய மனம் அவரிடம் இருந்தது. ஆனால் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் பெருநிறுவனங்களிடம் அதை எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. அவர்களின் கொழுத்த பொருள் முதலீடு அதை அனுமதிக்காது. அதிகபட்சம் அவர்களும் லாபமடைந்து இணையச் சமநிலையை இழக்காத ஓர் ஏற்பாட்டை மட்டுமே நாம் செய்து கொள்ள முடியும். அதையே அரசாங்கம் செய்யும் என நம்புகிறேன்.

*

Comments

Anonymous said…
//உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. அமேஸான், மைக்ரோசாஃப்ட், ட்விட்ட‌ர், யாஹூ, ஈபே, டம்ளர், எட்ஸி, க்ரீன்பீஸ் ஆகிய நிறுவனங்கள் இதை ஆதரிக்க, ஏடி&டி, வெரைஸான், ஐபிஎம், இன்டெல், சிஸ்கோ, க்வால்காம், ஜுனிபர், ஆல்காடெல் லூசெண்ட், பேனாசோனிக், எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் இதை எதிர்க்கின்றன. இரு தரப்பிலும் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அடிப்படையில் பல காரணங்கள் இருக்கின்றன
//
''உண்மையில் பெருநிறுவனங்கள் கூட இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன.'' இந்த வரிக்கு தேவை என்ன? ஒப்பீட்டில் உள்ள நிறுவனங்கள் ஒரே வகையறாவாக இருந்தால் இந்த வரி சரியான பொருளைத்தரும். தாங்கள் குறிப்பிட்ட இணைய சமநிலையை எதிர்க்கும் நிறுவனங்கள் அனைத்தும் தொலைப்பேசி சேவை சம்பந்தப்பட்டவை. சிறிதோ பெரிதோ அவை எதிர்க்கத்தான் செய்யும்.
Kapalee said…
ஒரு முக்கியமான தலைப்பு, எளிய நடையில், அழகிய தமிழில் விளக்கப் பட்டிருக்கிறது. ஆசிரியருக்கு ஆழ்த்துக்கள்
V Rajendran said…
Brilliant write-up. Very well written., Clear and easily understandable.
மிக எளிதாகப் புரியும்படி எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகளும் நன்றிகளும்.

எம்.கே.குமார்
A.SESHAGIRI said…
நல்ல பயனுள்ள விவரமான விளக்கத்திற்கு மிக்க நன்றி.
K.G.ARUNRAJ said…
Gave a good understanding on the topic. thank u
Anonymous said…
எங்கிருந்து வேண்டுமானாலும் துல்லியமான, தடையற்ற‌ தொலைபேசி உரையாடல்களுக்காக பல்லாயிரம் கோடி செலவு செய்து அவர்கள் நிறுவிய செல்ஃபோன் டவர்கள் வெறும் தரவு பரிமாற்ற தரகு கருவிகளாக மாறிப்போகும். அந்த முதலீடு எல்லாம் நட்டம் ஆகும்

I disagree to your point that service providers may end up in loss.The infrastructure for wired / wireless communications is built only once.Even nowadays infrastructures are shared. For ex, the same tower shared by two carriers (Service providers). One of the leading service provider published 10K crore profit last week only on its mobility division. Even there were plans to introduce a free wifi within the Bangalore city.If they are facing loss, how this would be possible.

வாட்ஸாப் 1 எம்பி ரூ10, ஸ்கைப் 1 எம்பி ரூ.7, ட்விட்டர் 1 எம்பி ரூ.5, ஜிமெயில் 1 எம்பி ரூ.2, யூட்யூப் 1 எம்பி ரூ.1

If the service providers target particular applications, new apps will be emerged. Then it is difficult to regulate these amendments.


இணையம் வருவது தகவல் தேடல், கல்வி, வாசிப்பு போன்ற காரணங்களுக்காக‌ மட்டும் தான் என்றிருப்பவர்கள் (குறிப்பாய் மாணவர்கள்) இந்தச் சூழலில் வறட்டு இணையச் சமநிலை வாதத்திற்குப் பலியாவர்.

Most (all) of the students use data on social networking apps.


On the other hand, data consumption doubling every year because of the introduction of smart devices. Cost to be focused at Bandwidth on demands.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்