இனி தான் ஆரம்பம் ...மேலே இருப்பது தொகுதிவாரியாக 2014 மக்களவை தேர்தல் முடிவுகளை இந்திய வரைபடத்தில் குறித்து NDTV இணையதளம் வெளியிட்டிருக்கும் படம். பாருங்கள். ஒரே காவி நிறம். இந்தியா முழுக்க காவி நிறம். இந்துத்துவத்தின் காவி நிறம். வெளிக்கட்சிகள் மட்டுமல்ல, தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே கூடத் தேவையின்றி பிஜேபி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவிருக்கிறது. ஆம். நரேந்திர மோடி தான் பிரதமர். 2002 குஜராத் கலவரங்களில் ரத்தக்கறை படிந்த கரங்கள் கொண்ட மோடி.

அந்தக் குற்றங்களை மறந்தோ அல்லது அந்த குற்றங்களுக்கு ஆதரவாகவோ தான் மக்கள் மோடியைப் பிரதமராகத் தேர்ந்திருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோடி பிஜேபியின் தேசிய தேர்தல் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுக்க இருக்கும் நிஜமான மதச்சார்பற்ற சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் கடந்து எட்டு மாதங்களாய் அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும், வலைதளங்களிலும் அவருக்கு எதிராக நிகழ்த்திய முழு வீச்சிலான கருத்துரீதியான, கோட்பாட்டு ரீதியான யுத்தம் மகத்தான தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆழப் பதிந்திருக்கும் இந்துத்துவ மோகமோ, முந்தைய ஆட்சியின் மீதான கோபமோ, வளர்ச்சி விளம்பரங்கள் அளித்த மயக்கமோ எது காரணம் எனினும் இன்றைய தேர்தல் முடிவுகள் "மக்களிடம் பேசிப் புரிய வைக்க முடியும்" என்கிற எளிய நம்பிக்கைக்கு அடிக்கப்பட்ட ஆப்பு தான். அல்லது ஒருவேளை சரியான முறையில், தேவையான வீச்சில் எங்கள் எதிர்ப்புக் குரல் ஒலிக்கவில்லையோ என்னவோ!

நான் மகேசனை நம்புவதில்லை; அதோடு சேர்த்து மக்களையும் கூட நம்ப வேண்டியதில்லை என்பதைத் தான் இந்த Anti-Modi Mission கற்றுக் கொடுத்திருக்கிறது.

*

ஏதாவது செய்

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்யமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்சவாயர்கள் மீது
எரிந்து விழச் செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத் தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்.


- ஆத்மாநாம்

இக்கவிதையில் சொல்லப்பட்டுள்ளதைப் போல ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் விழைந்தேன். ஒரு கலவரக்காரக் கூட்டம் இந்த தேசத்தை ஆளும் சூழலைத் தடுக்க முயன்றேன். என்னிடமிருந்த ஒரே ஆயுதம் எழுத்து. அதைப் பயன்படுத்தி முடிந்த அளவு பரப்புரை செய்தேன். புத்தகம், கட்டுரைகள், பதிவுகள் என அத்தனை வழிகளிலும் முழு மூச்சுடன் இயங்கினேன். ட்விட்டரில் பிரச்சாரம் மேற்கொண்டேன். நண்பர்களிடம் பேசினேன். என்னால் இயன்றதை எல்லாம் செய்தேன். இந்த முயற்சிகளால் என்ன மாற்றம் நிகழ்ந்தது எனக் கணிக்க இயலவில்லை.  என் மனசாட்சி சற்றும் வழுவாது இவற்றைச் செய்தது ஒருபுறம் திருப்தியைத் தந்தாலும் அவற்றின் நேரடிப் பலனின்மை வருத்தமளிக்கவே செய்கிறது. ஆனால் ஒருவேளை இதைச் செய்யாது போயிருந்தால் கடமை தவறியவனாகவே ஆயிருப்பேன். என் மனம் என்னைச் சும்மா விட்டிருக்காது.

"முட்டாள்தனம் பெரும் வெற்றியே பெறட்டுமே, அதில் பங்குகொள்ளவில்லை என்பது தானே சுயமரியாதை." என்ற என் நண்பனின் சொற்களை நினைத்துக் கொள்கிறேன்.

*

தேசம் முழுக்க வீசியதாய்ச் சொல்லப்பட்ட மோடி அலையில் சிக்காமல் தமிழகத்தில் இரண்டு தொகுதிகள் மட்டுமே அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருப்பது பெரியாரின் வாசனை இந்த மண்ணிலிருந்து ஒருபோதும் மறையாது என ஓங்கிச் சொல்லி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மற்றுமொரு முறை பிஜேபி நேரடியாக ஒரு லோக்சபா தொகுதியில் காலூன்றி விட்டது என்பதும், சாதி வெறிக் கட்சியான பாமகவின் அன்புமணி ராம்தாஸ் வென்றிருப்பதும் கவலைக்குரியது. மோசமாகக் கூட்டணிகள் தாவி இறுதியில் தம் கொள்கைகளுக்கு நேர்மாறாக மோடி ஜோதியில் ஐக்கியமான வைகோ தோற்றிருப்பது ஆறுதல். திமுகவுக்கும் கூட சரியான பாடம் கிடைத்திருக்கிறது.

படிப்பறிவில் முன்னணியில் இருக்கும் நீலகிரி தொகுதியில் மிக அதிக அளவில் (46,559) நோட்டா பதிவாகி இருப்பது முக்கியமான வெற்றி. போலவே இந்தியா முழுக்கவே நோட்டா ஓட்டு ஓப்பீட்டளவில் அதிகரித்திருக்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அதிகபட்சமாக மேகாலயாவில் 2.8% பேர் நோட்டா போட்டிருக்கிறார்கள்.

தமிழகத்திலும் புதுவையிலும் இருவர் தவிர (வசந்த குமார், நாராயண சாமி) மற்ற அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் டெபாஸிட் தொகையை இழந்திருக்கிறார்கள். ஒரு மாநிலக் கட்சிக்கும் தனக்கும் வெறும் 7 தொகுதிகள் தான் வித்தியாசம் என்பதை விடப் பேரவமானம் காங்கிரஸுக்கு இருக்கவே முடியாது. சரியான தண்டனை தான். அதே போல் ஆம் ஆத்மியின் மோசமான தோல்வியும் (வெறும் 4 தொகுதிகள்) சீன் க்ரியேட் செய்யும் அரசியல் சிரித்துக் கடக்கப்படும் என்பதை நிரூபித்திருக்கிறது. ஒரு தொகுதி கூட ஜெயிக்காத பகுஜன் சமாஜ் கட்சி தான் பிஜேபிக்கும் காங்கிரஸுக்கும் அடுத்தபடியாக தேசிய அளவில் அதிகமான ஓட்டு சதவிகிதம் (4.2%) பெற்றிருக்கும் கட்சி! ஜெயலலிதா (37), மம்தா பேனர்ஜி (34), நவீன் பட்நாயக் (20) எனப் பிரம்மாண்டமாய் ஜெயித்தும் தமிழ் நாடு, மேற்கு வங்கம், ஒரிஸாவுக்கு எந்த நேரடிப் பயனும் இல்லை.

கம்யூனிஸ்ட்களுக்கெனெ ஒரு ஓட்டு வங்கி இந்த தேசத்தில் இருந்தது. உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் அவர்களின் ஊடுருவல் அளப்பரியது. ஆனால் அதை அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளில் மோசமாகச் சீரழித்து விட்டார்கள். அவர்கள் தங்கள் அணுகுமுறையை தீவிரமாக மறுபரிசீலனை செய்தாக வேண்டிய இக்கட்டில் இன்று இருக்கிறார்கள். இப்போதும் கூட தேசிய அளவில் அதிக ஓட்டு சதவிகிதம் பெற்ற நான்காவது கட்சிகளாக கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள் (4.1%). அதிலும் திரிபுராவில் கிட்டத்தட்ட ஆப் கி பார் மாணிக் சர்க்கார்! ஆனால் இப்போதும் அவர்கள் புரிந்து விழித்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்தடுத்த தேர்தல்களில் காணாமல் போவார்கள்.

தமிழகத்தில் முக்கியமான ஆச்சரியம் எஸ்பி உதயகுமார் உள்ளிட்ட மூன்று கூடங்குளம் போராளிகளும் 5ம், 6ம் இடங்களைத் தான் பிடிக்க முடிந்திருக்கிறது என்பது தான்.

*

உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் இந்திய முடிவுகள், தமிழக முடிவுகள் இரண்டும் எனக்கு ஆச்சரியம் தான். மத்தியில் பிஜேபி கூட்டணி சுமார் 200 வரையிலான தொகுதிகளைப் பெறும், தொங்கு பாராளுமன்றத்தின் காரணமாக மூன்றாம் அணி ஆட்சியமைக்க வாய்ப்பு உண்டாகும் என்றே நினைத்திருந்தேன். அதே போல் தமிழகத்தில் திமுக கூட்டணியும், அதிமுகவும் சரி பாதி தொகுதிகள் பெறும் என நம்பி இருந்தேன். தமிழக முடிவுகளில் வருத்தம் அதிகமில்லை. இந்திய முடிவுகள் தாம் பிரச்சனை.

பிஜேபிக்கு மொத்தம் 282 தொகுதிகள். தெளிவான அறுதிப் பெரும்பான்மை. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மோடி தனிக்காட்டு ராஜா. கேட்க ஆளே இல்லை. கட்சிக்குள் இருந்து முணுமுணுப்பவர்களும் கூட ஓரம் கட்டப்படுவார்கள். கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் பார்த்தால் பிஜேபி கொண்டு வரும் எந்த சட்ட மசோதா என்றாலும் தடையின்றி சுலபமாய் நிறைவேறும். மோடியின் பழைய வரலாற்றை, பிஜேபியின் கொள்கைப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக ஆபத்தான சூழல்.

காலையில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழம் இதழின் ஆசிரியர் மருதனிடம் பேசிக் கொண்டிருந்த போது தேர்தல் முடிவுகள் வருத்தமும், பயமும் தருவதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அது 100% நியாயமான கவலை. இனி இந்தியாவில் வலதுசாரிகளின் ஆதிக்கம் பெருகும் - பொருளாதார வலதுசாரிகள் மட்டுமல்ல; அரசியல் வலதுசாரிகளும் தான். இப்போதே நேர்ப்பேச்சுகளிலும், சமூக வலைதளங்களிலும் "இனி தேசம் எங்களுடையது, இனி என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்ற கொக்கரிப்புப் பேச்சுகள் துவங்கி விட்டன. பேச்சோடு நிற்காது. மேலும் செய்வார்கள். தனிப் பகைகளை இதன் வழி தீர்ப்பார்கள். எதிர்ச்சாரியும் நடுநிலையாளர்களும் தாங்க வேண்டி இருக்கும்.

எக்ஸிட் போல் ரிசல்ட்களுக்கே சென்செக்ஸ் தாறுமாறாய் எகிறி இன்று நிஜ முடிவுகளின் போது கால் லகரத்தைத் தொட்டு விட்டது. அடானி, அம்பானி என பிஜேபியின் செல்ல முதலாளிகளுக்கு சில மணி நேரங்களில் சில ஆயிரம் கோடி ரூபாய்கள் கொள்ளை லாபம். இதெல்லாம் தான் கவலைக்கும் பயத்திற்கும் காரணம். சென்செக்ஸ் எவ்வளவு ஏறினாலும், நாடு எவ்வளவு வளர்ச்சி கண்டாலும், சாமன்யன் முன்னேற வேண்டும். அவன் பாதுகாப்பாய் உணர வேண்டும். அவன் தானே இங்கு பெரும்பான்மை!

*

ஜனநாயகத்தில் மக்களின் தகுதிக்கேற்ப தான் அரசு அமையும். இம்முறையும் அதுவே நடந்திருக்கிறது. இச்சூழலில் எப்போதும் சிறுபான்மையினர் பாடு தான் திண்டாட்டம். சிறுபான்மையினர் என நான் இங்கே குறிப்பிடுவது எந்தக் குறிப்பிட்ட மதத்தையும் அல்ல. சிந்திப்பவர்களை. நேர்மையாக சிந்திப்பவர்களை. அவர்கள் மட்டுமே தம் விருப்பு வெறுப்புகள் தாண்டி தேசத்துக்காகக் கவலைப்படுபவர்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றத்தையே அளித்திருக்கும்.

ஆனால் வேறு வழியே இல்லை. பலவீனர்களுக்கும் சேர்த்து அறிவுஜீவுகளே சிந்திக்க நேரிடுகிறது. அப்புறம் தோற்கவும். மக்களாட்சியின் மகத்தான சாபக்கேடு அது.

மதவெறிக்கு எதிரான போராட்டம் உண்மையில் இதோடு முடிந்து விடவில்லை. உண்மையில் அது இன்றிலிருந்து தான் இன்னும் தீவிரமாய்த் தொடங்குகிறது. ஏதேனும் மோசமாய் நடந்து விடுவதைத் தடுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த ஆட்சிக்கான வேகத் தடையாக, தவறுகளின் தளையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இனி வரவிருப்பவை கடினமான தினங்களாக இருக்கலாம். ஆனால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை எந்தவிதச் சமரசமும் இன்றி, தீராத மனஉறுதியுடன் எதிர்கொள்வோம். வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னதைப் போல "Do not let us speak of darker days: let us speak rather of sterner days."

முக்கியமாய் இந்த நாட்களில் என் பிரச்சாத்துக்கு உறுதுணையாய் இருந்த என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், இதழாளர்களுக்கும், வாசகர்களுக்கும் உளப்பூர்வ நன்றிகளை உரித்தாக்குகிறேன். அவர்கள் இல்லை என்றால் என்னால் நம்பிக்கையுடன் இதைத் தொடர்ந்திருக்க இயலாது. எதிர்காலத்திலும் அதையே எதிர்பார்க்கிறேன்.

*

"2002ல் இருந்த மோடி அல்ல இன்று இருப்பது, இப்போது அவருக்கு நாட்டின் வளர்ச்சி மட்டுமே நோக்கம்" என்பது இந்துத்துவம் அல்லாத காரணங்களுக்காக அவரை ஆதரிக்கும் மிதவாதிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. என் அலுவலக நண்பன் ஒருவனே "2002ஐ ஏன் பார்க்கிறாய், 2020ஐப் பார், இந்தியா வல்லரசாகும்" என்கிறான். கிழக்கு பதிப்பக அதிபர் பத்ரி சேஷாத்ரி இன்று மோடியின் வெற்றி பற்றிய தன் ஃபேஸ்புக் பதிவில் "தேவையற்ற விஷயங்களில் நேரத்தைச் செலுத்தி, சறுக்காமல்" என்கிறார். ராமர் கோயில், கலவரம் போன்றவற்றையே அவர் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். இவர்கள் எல்லாம் நம்புவது போல் சமூக, சிந்தனைத் தளங்களில் எந்த வலதுசாரி இந்துத்துவ செருகலும் இன்றி உண்மையிலேயே தேச முன்னேற்றத்தை மட்டும் உத்தேசித்து ஒருவேளை மோடி ஆட்சி நடத்தினால் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் மிகச் சமீபத்திய பேச்சுகள், செயல்கள் வரையிலும் அவரைக் கவனித்தவரையில் இப்போதைக்கு அது போலொரு நம்பிக்கை எனக்கு வரவில்லை. சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம்.

இது இந்தியா. ஹிந்துஸ்தானம் அல்ல. எல்லோருக்குமான தேசம். காந்தியும், நேருவும், அம்பேத்கரும் சொன்னது அதைத் தான். அதை அப்படியே நீடிக்கச் செய்வோம்.

*

Comments

Sustainer said…
மோடியை ஹிட்லர் போல காட்ட தாங்கள் எடுத்துக்காட்ட நீங்கள் எடுத்துள்ள சிரமத்திற்கு வாழ்த்துக்கள்... இந்த மண்ணுல பொறந்த முஸ்லீம்கள் மோடிக்கு ஓட்டு போட்டிருக்கிறார்களே http://www.reuters.com/article/2014/05/16/us-india-election-muslims-idUSBREA4F0ET20140516

இப்போது இந்நாட்டில் ஹிட்லரின் ஆட்சி தேவைப்படுகிறாரோ!
krishnakumar said…
csk.
be open minded and do not develop mere contempt towards the majority
thinking
அருமையான பதிவு. பெரும்பாலானவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக எதுவும் சரியாகிவிடாது என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிந்துள்ளீர்கள்.:)
Anonymous said…
இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் சொல்றது போல "ஏமாந்துட்டியாடி???"
மூஞ்சில செம கரி போல...சரி சரி தொடச்சிகிட்டு அடுத்த எலெக்ஷன் வரைக்கும் ஏன் மோடி வரக்கூதுன்னு புக்கு போட்டு காசு பாக்குற வழிய பாரு,.அப்படியும் முடியலியா?வேற நாட்டுக்கு போ ராசா!!ஹீ ஹீ செம சிப்பு சிப்பா வருது உன்ன பாத்தா...
தம்பி இருப்பா..மொதல்ல பல்பு வாங்கிக்க பதினாறாம் தேதி முதல் தினம் பல ஆயிரம் பேருக்கு பல்பு சப்ளை பண்ணியே என் கை வலிக்குது..உஸ்ஸ்...சப்பா...சரி ஒன்னும் அவசரமில்லை...அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர்.எனவே நிதானமா ஆற அமர விமர்சிக்கலாம்.உனக்கு சில ஐடியாக்கள்...
.
1. மிருக புத்திரனோடு பார்ட்னர் ஷிப் போட்டுக்கிட்டு தயிர்மை பதிப்பகம் மூலம் மாசம் ஒரு புக்கு மோடிக்கு எதிரா எழுது

2. இல்லை பெங்களூரில் ஐடி அடிமை வேலையை ராசினாமா செஞ்சிட்டு கேசரிவால் போல ஒரு கட்சி ஆரம்பிச்சி கலகம் செய்.ஜெயிக்கிரியோ இல்லையோ தினம் உன் முகம் டிவி பத்திரிகை இணையத்தில் வரும்

3. பெரிய பல்பா வாங்கியிருக்கும் உன்னோட ஒத்த கருத்துள்ள முலாயம் சிங்கு மாயாவதி மற்றும் படு டேமேஜான இடதுSORRYகளை ஒன்றிணைத்து மோடிக்கு எதிரா ஒரு முடியையாவது அசைக்க முடியுமான்னு பாரு...YOU ARE FREE TO TRY....

4. இல்லை வினவு அமைப்பில் சேர்ந்துகொண்டு குண்டூசி முதல் அணுகுண்டு வரையான விமர்சனங்களை நோகாமல் உட்கார்ந்த இடத்தில் கீ போர்டு தேய புரட்சி செய்யலாம்..சைடுல நீ பன்னாட்டு கம்பெனியில் வேலை பாத்துக்கலாம்..நோ அப்ஜக்ஷன்.,.ஏன்னா வினவு குரூப்பே அப்படித்தானே?புரட்சி செய்ய நல்லா நாலு டிவிஎஸ் கீபோர்டு அனுப்பட்டா?

5. இதையெல்லாம் விட ஈசியா தினம் உன் பிளாகிலேயே மோடி தும்மியதால் ஆயிரம் இசுலாமியன் பலி மோடி இருமியதால் ஆயிரம் கிறிஸ்தவர்கள் செவிடானார்கள் மோடி உச்சா போனதால் புவி வெப்பமானது இப்படி தினம் ஒரு கட்டுரை அடுத்த பதினஞ்சி வருஷத்துக்கு எழுதிகினே இரு...எது ஆகுதோ இல்லையோ உனக்கு வயசாகிடும்...கோட்டா சீனிவாசராவ் ஸ்டைலில் சிரிக்கணும்னா கீக்கீக்கீ....வர்ட்டா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்