பரத்தை கூற்று : முனைவர் ஆய்வு

சுகன்யா தேவி ஒரு கல்லூரி மாணவி. கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு. சென்ற மாதம் கவர்னர் ரோஸய்யா கையால் டாக்ட்ரேட் பட்டம் பெற்றார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு 'சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள்'. அதற்கு அவர் தேர்வு செய்த பல கவிதை நூல்களுள் எனது பரத்தை கூற்றும் ஒன்று (தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரின் புத்தகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன). அதன் நிமித்தம் சுமார் ஓராண்டு முன் அவர் பெங்களூரில் என்னைச் சந்தித்து ஒரு சிறிய நேர்காணல் செய்தார். அவரது முனைவர் ஆய்வேட்டில் இது இடம் பெற்றுள்ளது. அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் பதிகிறேன்.

*

1. பரத்தை தொழில் மேற்கொண்டிருக்கும் பெண்களின் சிக்கல்களை மட்டும் மையமாக வைத்துக் கவிதை எழுதியிருப்பதேன்?

முன்னுரையிலேயே சொல்லி இருப்பதைப் போல் பரத்தை கூற்று நூலாக வெளியானது 2010ம் ஆண்டின் இறுதியில் தான் என்றாலும் இக்கவிதைகளை நான் எழுதியது 2006ன் தொடக்கத்தில். அப்போது கல்லூரி மாணவனாக சென்னை என்ற பெருநகரில் வசித்ததால் எந்த பிரயத்தனங்களுமின்றி பரத்தமை குறித்து தானாகவே அறிய வாய்த்தது. இது தவிர‌என் நண்பர்களுக்கு நேர்ந்த சில அனுபவங்கள் தந்த உடனடி உந்துதலின் விளைவாகவே இக்கவிதைகளை எழுதினேன்.

பிற்பாடு என் என் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரலாம் என்று முடிவெடுத்த போது காதல் தாண்டி சமூக பிரச்சனை சார்ந்து நான் எழுதிய ஒரே விஷயமாக பரத்தை கூற்று மட்டும் தான் இருந்தது. அதனால் அதையே பிரசுரிக்கத் தேர்ந்தேன். அப்போது அமைந்த பதிப்பாளரும் இத்தொகுப்பின் சமூக ப்ரக்ஞை கொண்ட உள்ளடக்கம் காரணமாக பதிப்பிக்க உடனடியாக சம்மதித்தார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி இத்தொகுப்பு தன்னகத்தே கொண்டிருக்கும் அதிர்ச்சி மதிப்பீடு சார்ந்த காரணமும் உண்டு. ஒரு கவிஞனின் முழு வீச்சிலான எழுத்துலகப் பிரவேசத்திற்கு அது தேவை எனக் கருதினேன்.


2. ஆரம்ப காலங்களில் பரத்தை தொழில் செய்த பெண்கள் நம் சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட்டனர். இன்னும் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். உங்கள் கவிதையைப் படிப்பதால் அப்பெண்களின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்வர் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. இலக்கியம் என்பதன் சாரம் சமூகத்தைத் திருத்துவதல்ல; பிரச்சனையில் தீர்ப்பளிப்பதல்ல. அது காலத்தின் கண்ணாடி. ஒரு விஷயத்தை நேர்மையுடன் பதிவு செய்வதுடன் அதன் எல்லை முடிந்து விடுகிறது. வாசிப்பவனுக்கு விஷயத்தைக் கடத்துவதே அதன் நோக்கம். அதன் நீட்சியாக அவன் சிந்தனையைத் தூண்டுவது. வழமையிலிருந்து விலகி நின்று அவனை யோசிக்க வைப்பது. அவ்வளவு தான்.

இன்று நவீனக் கவிதை நூல்கள் அதிகபட்சம் 1,000 பிரதிகள் விற்கின்றன. நூலகங்களில் படிப்பவர்களையும் கணக்கில் கொண்டால் அதிகபட்சமே 5,000 பேர் தான் வாசிக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டு சுற்றியுள்ளவர்களுக்கு இக்கருத்தை வழங்குகிறார்கள் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால் கூட அதிகபட்சம் 20,000 பேருக்கு அக்கருத்துக்கள் போய்ச்சேரக்கூடும். ஏழரை கோடி ஜனம் வசிக்கும் மாநிலத்தில் வெறும் 20,000 பேருக்கு விஷயம் போய்ச் சேர்வதால் என்ன நடைமுறை வித்தியாசம் இருக்க முடியும்? ஒன்றும் இராது.


3. பரத்தை கூற்று என்ற கவிதை நூலைத் தவிர வேறு ஏதேனும் கவிதைகள் எழுதியுள்ளீர்களா?

தேவதை புராணம் என்ற காதல் கவிதைத் தொகுப்பு ஒன்று எழுதி இருக்கிறேன். பேதை முதல் பேரிளம் பெண் ஈறாக ஏழு பருவங்களில் ஒரு பெண் தன் காதலனை நினைத்துப் பேசுவதாக அமைந்த சிறுகவிதைகள். இது போக‌தனித்தனியாக சில கவிதைகள் அச்சு ஊடகங்களிலும் எனது வலைதளத்திலும் வெளியாகி இருக்கின்றன.


4. ஆம் எனில் எவ்விதமான சமுதாயப் பிரச்சனைகளை மையமாக வைத்துக் கவிதை எழுதி உள்ளீர்கள்?

பரத்தை கூற்று, தேவதை புராணம் தவிர மற்ற கவிதைகள் பெரும்பாலும் அகவயமாக எழுதப்பட்டவை. குறிப்பிட்டுச் சொன்னால், காதலின் பாசாங்கு, காமத்தின் அரசியல், மரணத்தின் தத்துவம், நாகரிகத்தின் அபத்தம், மெல்லிய உணர்வுகள் போன்ற விஷயங்களை தொட்டுச் செல்கின்றன. பெண்சிசுக் கொலை, கெட்ட வார்த்தைகள், தொழில்நுட்பம் போன்றவையும் உண்டு. ஒருவகையில் இவை எல்லாம் இன்றைய தேதியில் சமூகப் பிரச்சனைகள் தாம்.


5. கவிதைகளில் ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது ஏன்?

பரத்தை கூற்றில் வரும் வேசி படிப்பறிவற்ற‌, ப‌டித்த என சகல பின்புலன்களிலும் இருப்பவள். அவர்களுள் சிலர் சங்கத்தமிழும் படித்திருப்பர், இன்னும் சிலர் நுனிநாக்கு ஆங்கிலமும் கொண்டிருப்பர். அதனால் அவர்கள் பேசும் போது தூய தமிழோ, ஆங்கிலச் சொல்லோ வருவது சகஜமே. “உலகம் யாவையும்” என்று எப்படி எழுத முடிகிறதோ அதே இயல்புடன் “and vice-versa” என்றும் அவளால் எழுத முடியும்.

சிலருக்கு ஏழ்மையும் சிலருக்கு செழுமையும் வாய்த்திருக்கும். அந்தப் பின்புலமும் அவர்கள் அனுபவங்களை, அதன் வழியே அவர்கள் சிந்தனை முறையைத் தீர்மானிக்கும். இப்படித் தான் ஒருவரின் மொழியும் அதன் உள்ளடக்கமும் உருவாக முடியும். கலவியும் பேஸ்பால் விளையாட்டும் குறித்த ஒப்பீட்டுக் கவிதை இதன் அடிப்படையில் எழுதப்பட்டது தான். பேஸ்பால் பார்க்கும் படித்த உயர்குடி வேசி!


6. காரணமின்றி பிற ஆண்களுடன் பேசக்கூடிய பெண்களும் பரத்தையருக்கு ஒப்பானவர்கள் என்று தாங்கள் கூறியிருப்பது சரியா?

காரணமின்றி அல்ல, சுயலாபத்துக்காக தம் பார்வை, புன்னகை, பேச்சு, ஸ்பரிசம் ஆகியவற்றை ஓர் எல்லை வரை ஆண்களிடம் பயன்படுத்தும் பெண்கள் வரலாறு நெடுக இருந்தே வந்திருக்கிறார்கள். இன்று நம் அக்கம்பக்கத்தில் பார்க்கும் பல பெண்களும் அப்படி இருக்கிறார்கள். இதில் பெண்களைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. அவர்கள் அப்படித் தான் வார்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஆண்களைச் சார்ந்து வாழும் நிலை இருப்பதால் தம் திறமை கொண்டோ அறிவு கொண்டோ சாதிப்பதை விட அழகு கொண்டு சாதிக்கும் குறுக்கு வழி தட்டுப்படும் போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீண்ட வரிசையில் நிற்காமலே டிக்கட் எடுப்பது முதல் அலுவலகத்தில் தகுதியின்றி பணி உயர்வு பெறுவது வரை இது பலதரப்பட்டதாக இருக்கிறது. தரும் விலையும் அதற்கேற்ப மாறுபடும்.


7. ஐவகை நில அடிப்படையில் பிரித்துக் கவிதை எழுதியிருப்பதன் காரணம் என்ன?

முன்னுரையில் இது பற்றி லேசாகச் சொல்லி இருக்கிறேன். சங்க இலக்கியங்களின் பால் எனக்கு மிகுந்த காதலுண்டு. அதனாலேயே தொகுப்பின் பெயரையே அதில் பயிலும் பதமான பரத்தை கூற்று என சூட்டினேன். அகத்திணையில் அமைந்த சங்கப்பாடல்கள் அனைத்தையும் ஐவகை நிலத்தில் ஒன்றுடன் தொடர்புபடுத்துவது வழக்கம். என் கவிதைகளையும் அந்த அடிப்படையிலேயே பிரித்திருக்கிறேன்.

புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி - கலவி தொடர்புடைய கவிதைகள் அதில் இருக்கும். பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை - சோகம் இழையோடிய கவிதைகள் இதில் வரும். இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை - தன் சாபம் விடியக் காத்திருக்கும் கவிதைகள் இவை. ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம் - சமூகத்தின் மீதான கோபத்தை இதில் காட்டுவாள்.  இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் - தன் நிலை மீதான வருத்தம் இக்கவிதைகள். இது தான் அடிப்படை.

இவை யாவும் மேலோட்டமான‌ அகத்திணை கருப்பொருள் பிரிப்புகளே!

*

Comments

Anonymous said…
del del del

one song:

one by ed sheeran...குரல் அருமை...மெட்டு சுமார்...

download at myfreemp3 dot eu

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்