இந்துத்துவ ஜிகாத்

48 பக்கங்களே கொண்ட சிறுநூல் நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம். The Believer என்ற தலைப்பில் ஃபிப்ரவரி 2014 Caravan இதழில் லீனா கீதா ரெங்கநாத் என்பவர் புலனாய்வு செய்து ஆங்கிலத்தில் எழுதிய அட்டைப்பட நீள்கட்டுரை (Reportage என்கிறார்கள்) தான் தற்போது நரேன் ராஜகோபாலன் முயற்சியில் முறையான அனுமதி பெற்று, எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநியின் மொழிபெயர்ப்பில் தமிழில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது.


ஓரிரு மணி நேரத்தில் படித்து முடித்து விடக்கூடிய சுவாரஸ்ய நடையில் த்ரில்லர் போல் பரபரவென தடதடக்கிறது இந்நூல். தலைப்பில் மோடி என்பது பிரதானமாய்க் காட்டப் பட்டாலும் உண்மையில் மோடி இந்தப் புத்தகத்தில் மிகச் சில இடங்களில் மட்டுமே வருகிறார். இவை எல்லாம் குஜராத்தில் திட்டமிடப்படுகிறது என்பது தான் லிங்க். இறுதியில் மோடி பிரதமர் ஆனால் இந்துத்துவ தீவிரவாதம் வலுப்பெறும் என்று சம்மந்தப்பட்டவர்களே நம்பிக்கையுடன் சொல்லும் வாக்குமூலத்துடன் முடிகிறது.

அடிப்படையில் இந்தப் புத்தகம் அசீமானந்த் என்ற தனி மனிதரின் வாழ்க்கை தான். ஆனால் அதனூடாக இந்துத்துவ தீவிரவாதத்தின் முகம் வெளிச்சப்படுத்தப்படுகிறது. இந்துத்துவத்தின் பெயரால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், பிஜேபி மற்றும் இன்ன பிற சங் பரிவார் அமைப்புகள் கிறிஸ்துவத்துக்கு எதிராக பழங்குடியினரை இந்துக்களாக மதமாற்றம் செய்வது முதல் முஸ்லிம்களை குண்டு வைத்துக் கொள்வது வரை எவ்வளவு தூரம் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறது.

அசீமானந்த் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு வயதான துறவி. முதலில் வடகிழக்கு மாகாணங்களிலும், பின் அந்தமானிலும், கடைசியாக குஜராத்திலும் இருக்கும் பழங்குடி இனத்தினரை இந்து மதத்துக்கு மத மாற்றம் செய்யும் வேலைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் இயங்கும் வனவாசி கல்யாண் ஆசிரத்தின் வழியாக செய்கிறார். இதன் நோக்கம் மருத்துவம், கல்வி ஆகியவற்றுக்காக பழங்குடிகள் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறுவதைத் தடுக்கும் பொருட்டே அன்றி வேறெந்த சேவை மனப்பான்மையும் இல்லை (இதைப் பற்றி என் குஜராத் 2002 கலவரம் நூலின் தலித்கள், ஆதிவாசிகள் பற்றிய அத்தியாயத்தில் கொஞ்சம் பேசி இருக்கிறேன்). புத்தகத்தின் ஓரிடத்தில் பசியில் உயிர் போகும் நிலையில் இருந்த கைக்குழந்தையுடன் வந்த கிறிஸ்துவத்துக்கு மாறிய பழங்குடித் தாய்க்கு கறாராய்ப் பால் தர மறுத்ததைப் பெருமையுடன் சொல்கிறார் அவர்.

கிறிஸ்துவர்கள் இந்துக்களை மதம் மாற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் இந்து அன்பர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என அறிய விழைகிறேன்.

இதன்பின் முஸ்லிம் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக அசீமானந்த் குண்டுவைப்பில் ஈடுபடுகிறார். மொத்தம் ஐந்து குண்டு வெடிப்புகள். அதில் 119 பேர் மரணம். அதில் பெரும்பான்மை முஸ்லிம்கள். இதற்கு சில ஆர்எஸ்எஸ் உயர் தலைவர்கள் வரை கூட்டு சேர்ந்திருக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சியூட்டும் அவரது வாக்குமூலம். இதற்காக அவர் அம்பாலா சிறையில் கைதியாக இருக்கிறார். தொடர்புடைய பல வழக்குகளில் பிரதான குற்றவாளி. விசாரணை நடைபெற்று வருகிறது (ஆரம்பத்தில் இதில் சில குண்டுவெடிப்புகளை விசாரித்தவர் ஹேமந்த் கார்கரே. 2008 நவம்பர் 26 அன்று மும்பை தீவிரவாதத் தாகக்குதலில் பலியான அதே ஆசாமி தான்!)

தீவிரவாதம் என்பது ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்துத்துவத்திலும் சிலர் புனிதப்போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

*

துணிச்சலாக அசீமானந்தைப் பல முறை சிறையில் சந்தித்து சுமார் பத்து மணி நேரங்களுக்கு விரிவாய்ப் பேட்டி எடுத்த லீனா கீதா ரெங்கநாத் அடிப்படையில் ஒரு வழக்குரைஞர். முன்பு  தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதிக் கொண்டிருந்தவர். தற்போது கேராவன் இதழின் ஆசிரியர் இலாகாவில் மேலாளர்.


புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள ஓர் ஆச்சரியமான விஷயம் சுவாமி விவேகானந்தர் இந்துத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார், ஆனால் அவரை இந்துவாக முன்வைத்தால் அரசு நிதி உதவி கிடைக்காது என்பதால் ராமகிருஷ்ண மடம் அவரை மதம் தாண்டியவராக சித்தரிக்கிறது. கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் கூட இந்துத்துவ வேலைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஓர் ஆர்எஸ்எஸ் தலைவரின் முயற்சியில் தான் அண்ணா காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது.

அசீமானந்த் குஜராத்தில் இருந்த சமயத்தில் அவரது இந்து மதப் பரவலாக்கம் போன்ற முயற்சிகளுக்கு முதல்வராக இருக்கும் மோடி ஆதரவாக இருந்திருக்கிறார். அதற்கு வசதியான வகையில் சில புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வருமளவு உதவி இருக்கிறார். அரசு உதவிகளை, நிதிகளை, திட்டங்களை பாரபட்சத்துடன் இந்த மதமாற்றத் திட்டங்களுக்கு உதவும் வகையில் திருப்பி இருக்கிறார். சில முறை நேரிலும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். புத்தகத் தலைப்பிற்குக் காரணம் இந்தத் தொடர்பு தான்.

இதில் முக்கியமான விஷயம் அசீமானந்த் ஒருபோதும் தன் செயல்களுக்கு வருந்தவில்லை. அதை எல்லாம் பெருமையாக, தன் கடமையாக எண்ணுகிறார். இப்போதும் நரேந்திர மோடி பிரதமரானதும் தான் சிறையிலிருந்து வெளியே வந்து விடலாம். தன் இந்துத்துவ நடவடிக்கைகளைத் தொடரலாம் என்பதே அவரது நம்பிக்கை.

முஸ்லிம்களுக்கு வைத்த வெடிகுண்டில் சில இந்துக்களும் சாகிறார்கள். அதற்கு ஒரு இந்துத்துவ ஆசாமி சொல்லும் விளக்கம்: "புழுக்கள் அரைபடும் போது கொஞ்சம் தானியமும் சேர்ந்து வீணாகும்". இவர்களை ஆதரிக்க வேண்டுமா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். நாளை இதில் சாகப் போவது நாமாகவும் இருக்கலாம்.

*

நிறையப் பேருக்கு சென்று சேர வேண்டும் என்பதால் அச்சுப்பிரதியின் விலை ரூ.10 மட்டுமே. தொடர்புக்கு: https://www.facebook.com/narain.rajagopalan

இது போக புத்தகத்தின் மின்னூலும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை இலவசமாகவே தரவிரக்கிக் கொள்ளலாம்: http://nomo4pm.com/book/

*

No comments: