ஒரு Pleasant நாவல்

இன்று செல்லமுத்து குப்புசாமி எழுதிய இரவல் காதலி என்ற நாவலைப் படித்து முடித்தேன். எனக்கு மிகப் பிடித்திருந்தது. பொதுவாய் நான் நிறைய புத்தக விமர்சனம் எழுதுபவனில்லை. சினிமா மற்றும் நாடகங்களோடு சரி. ஆனால் இந்த நாவல் தந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. சுருக்கமாகவேனும் அதைப் பற்றி எழுதும் விழைவிலேயே இப்பதிவு. இந்த நாவல் தமிழ் புனைவுலகுக்கு ஒரு முக்கியமான வரவு. எந்த அடிப்படையில் என்று கடைசியில் சொல்கிறேன்.


புத்தகக்காட்சிக்கு முன் அவரது ஒரு சிறுகதையை வெளியிட்டு இதே போன்று பல மடங்கு நாவல் இருக்கும் என் கட்டியம் கூறி இருந்தார் மனுஷ்ய புத்திரன். அண்ணியில் அணைப்பில்... என்பது அக்கதையின் பெயர். நடை, உள்ளடக்கம் என எல்லாவற்றிலுமே அது ஒரு சரோஜா தேவி கதை. உண்மையிலேயே அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஆனால் புத்தகக் காட்சியில் என்னை இந்த நூலை வாங்க வைக்க அந்த "ஒன்றுமில்லை" என்ற கவர்ச்சியே போதுமானதாய் இருந்தது என்பது வேறு விஷயம்.

ஆனால் நாவல் அந்த சிறுகதை போல் இல்லை. உண்மையிலேயே மிக யதார்த்தமாகவும் மிக சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. ஒரே மூச்சில் படித்தேன் என்றால் க்ளீஷே!

நாவல் உண்மையில் Borrowed Girlfriend என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு மின்னூலாக வந்திருக்கிறது. பிறகு அவரே இதைத் தமிழில் மொழிபெயர்த்து உயர்மை வெளீயீடாக தற்போது வெளியாகி இருக்கிறது. ஆங்காங்கே மொழிபெயர்ப்பு நூல் என்ற ஃபேக்ட் லேசாய் துருத்திக் கொண்டு எட்டிப் பார்க்கிறது. ஆனால் அது பிழையான மொழிபெயர்ப்பு என்பதாக அல்லாமல் கொஞ்சம் அவசர அடி என்பது போல் தெரிகிறது. அதே காரணத்தினால் கணிசமான இடங்களில் எழுத்துப் பிழைகளும்.

நாவல் அடிப்படையில் ஒரு காதல் கதை தான். அதன் பின்புலம் ஐடி - சர்வீசஸ் இண்டஸ்ட்ரி. அதனால் அத்துறை பற்றி போகிற போக்கில் சொல்லிப் போகிறார். ஆனால் மிகத் துல்லியமாக. அவ்வகையில் இந்த இரவல் காதலி நாவல் ஆதவனையும் பாலகுமாரனையும் கலந்து செய்த எழுத்தாக அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது. அதே போல் சமகாலத்தவர்களில் சாரு நிவேதிதாவும், வா.மு.கோமுவும் எழுதியதை விட காமத்தை, காதலை, அவற்றின் அரசியலை அபாரமாக எழுதி இருக்கிறார்.

நாவல் எந்த இடத்திலுமே தொய்வடையவில்லை. குறிப்பாய் நாவலின் நடை மிக அழகானதாக அமைந்திருந்தது. ஒரு மாதிரி போதையூட்டும் நடை. நாவலில் வரும் வசனங்களோ மனவோட்டமோ வர்ணிப்போ எதுவாக இருந்தாலும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சமீபத்தில் இத்தனை வாசிப்பின்பம் கொடுத்த படைப்பு வேறில்லை.

இந்த நாவலின் அவ்வப்போது இது பல்ப் நாவலா இலக்கியப் படைப்பா என்ற சந்தேகம் வந்தது. இதே கதையை இன்னும் கொஞ்சம் விரிந்த தளத்தில் எழுதி, பின்புலமாய் மட்டும் நிற்கும் மென்பொருள் துறையை இன்னும் ஆழக் கிளறி இருந்தால் ஒரு மறக்க முடியாத க்ளாஸிக் கிடைத்திருக்கும் எனத் தோன்றுகிறது. என் வரையில் இது பல்ப் எழுத்து, தீவிர இலக்கியம் இரண்டுக்கும் இடைப்பட்ட நாவல். அதுவே இதை முக்கியமான படைப்பாக ஆக்குகிறது. இது போல் நிறைய வர வேண்டும்.

 அகோகமித்திரனின் ஒற்றன் நாவல் படிக்கும் போது கிடைத்த pleasant-ஆன மனநிலையை இந்நாவலும் கொடுத்தது. இதற்கு மேல் இதை நான் பாராட்டி விட முடியாது.

Comments

Sankar said…
You give books for oc ? (of course with a guarantee to return)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்