G2K2K - உதவும் கரங்கள்

குஜராத் 2002 கலவரம் நூலுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து உதவிகள் வந்த வண்னம் இருப்பதாய் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதோ இன்னொன்று.

முருகன் பெங்களூர்காரர். மென்பொருள் துறையைச் சேர்ந்தவர். இரு வாரங்கள் முன் குஜராத் 2002 கலவரம் நூலைப் படித்து விட்டு அதிலிருந்த ஒரு சிறிய கவனப்பிசகை சுட்டிக் காட்டி இருந்தார். பொதுவாக அப்படி யாரும் சொல்வதில்லை. ஒன்று தயக்கத்தின் காரணமாக ஏதும் சொல்லாமல் கடந்து விடுவர். அல்லது நூலின் நோக்கை விடுத்து அதைப் பூதகரமாக்கி குற்றம் சாட்டுவார்கள். அந்த வகையில் அவர் நேரடியாய்த் தகவல் தெரிவித்தமைக்கு நன்றி சொல்லி விட்டு கிழக்கு ஆசிரியரிடம் சொல்லித் திருத்த அதைக் குறித்துக் கொண்டேன். புத்தகம் பற்றி அவருடனான உரையாடல் அத்தோடு முடிந்தது என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் பிறகு அவரே மறுபடி தொடர்பு கொண்டார். கிழக்கு ஆன்லைனில் (nhm.in) விற்கும் எல்லா குஜராத் 2002 கலவரம் புத்தகங்களின் தபால் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகக் கேட்டார். பொதுவாய் கடைகளுக்குப் போய் நூல்கள் தேடி வாங்காமல் இணையத்தில் ஆர்டர் செய்யும் சொகுசுவாசி(ப்பாளர்)களுக்கும், கிழக்கு பதிப்பக புத்தகங்களை நேரடியாய்க் கொள்முதல் செய்ய வாய்ப்பில்லாத தூர பிரதேசங்களில் இருப்பவர்களுக்கும் குஜராத் 2002 கலவரம் புத்தகம் சென்று சேர கூடுதலான அதன் தபால் செலவு ஒரு தடையாக / தயக்கமாக இருந்து விடக்கூடாது என்பதால் நூலிற்கு அந்த உதவியை அதைச் செய்ய நினைத்தார்.

ஐந்து நூல்கள் எழுதி விட்டபடியால் புதிய எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் சமீப காலமாய் எனக்குத் தயக்கங்கள் இருக்கின்றன என்ற போதிலும் இது போல் எல்லாம் என் எந்த நூலுக்கும் உதவிகள் கிட்டியதில்லை. புத்தக வெளியீட்டு விழாக்கள் ஏதும் பிரம்மாண்டமாய் நடந்ததில்லை (சாரு நிவேதிதா தான் என் நூல் வெளியீட்டு நிகழ்வை அலங்கரித்த அதிகபட்ச பிரம்மாண்டம்!). யாரும் என் நூல்களை காந்தி புன்னகைக்கும் ஆயிரங்களை வீசி ஏலம் எடுத்ததில்லை. எந்தப் பெண் கவிஞருக்கும் என் மீது கோபம் வந்து வசை பாடியதில்லை. இளம் பெண்கள் யாரும் மார்பில் அல்ல பஸ் டிக்கெட் பின்புறம் கூட ஆட்டோகிராஃப் கேட்டதில்லை.

அதனால் முருகன் அதைத் தான் சொல்ல வருகிறாரா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின் சற்று உற்சாகம் ஆகி பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியிடம் பேசினேன். புத்தகம் விரைவில் அமேஸானில் தபால் செலவின்றி விற்பனைக்கு வரவிருப்பதால் இதற்கான அவசியமில்லை என்று அவர் சொல்லி விட்டார்.

இப்போது முருகன் அவரைச் சுற்றி இருக்கும் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு குஜராத் 2002 கலவரம் புத்தகத்தின் கணிசமான பிரதிகளை வாங்கி எந்தப் 'பிரதி'பலனும் எதிர்பாராது வாசிக்கக் கொடுத்திருக்கிறார். எனக்கு எத்தனையோ ஆதர்சப் புத்தகங்கள் இருக்கின்றன. அதில் எந்த நூலையும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்லி என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கொடுத்ததில்லை. அதனால் அவரது இந்த உதவி எனக்கு நெகிழ்ச்சி விதைக்கிறது.

அவருக்கு என் நன்றிகளையும் ப்ரியத்தினையும் இத்தளத்தின் வழி பதிகிறேன். அவருக்கும் தேசத்துக்கும் நல்லது நடக்கட்டும். முருகனின் ட்விட்டர் ஐடி: @Ganshere

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்