மருத்துவமனையில் பின்காலனிய நாட்டின் கவிஞன்


"ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்"

- ரமேஷ் பிரேதன் (காந்தியைக் கொன்றது தவறுதான் தொகுப்பிலிருந்து)

*

ரமேஷ் பிரேதன் தமிழின் முக்கியமான பின்நவீனத்துவப் படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரேம் என்பவருடன் சேர்ந்து ரமேஷ் : பிரேம் என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதினார். உயிர்மையின் சுஜாதா விருதை முதல் ஆண்டிலேயே காந்தியை கொன்றது தவறுதான் கவிதைத்தொகுதிக்குப் பெற்றார். அவரது எழுத்துக்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன்.


அவர் பிரேமுடன் இணைந்து எழுதிய சில படைப்புகளை கல்லூரிக் காலகட்டத்தில் படித்திருக்கிறேன். இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் என்ற அபுனைவு நூலில் தான் தொடங்கினேன். அப்போதைய என் வாசிப்புப்படியில் சிக்கலான மொழியமைப்பில் இருந்தாலும் அது பிடித்திருந்தது. பிறகு கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற குறுநாவல் தொகுப்பு. அதில் கணிசமான பகுதிகள் புரியவில்லை. மீத இடங்களில் காமம் வழிந்தது. அதைத் தொடர்ந்து சொல் என்றொரு சொல் என்ற அவர்களின் நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்து முடிக்கவியலாமல் திருப்பினேன். முழுக்கப் புரியவில்லை என்ற அடிப்படையிலேனும் அவரை கோணங்கியின் நீட்சியாகவே பார்க்கிறேன்.

கடந்த ஆறேழு ஆண்டுகளாக கருத்து வேறுபாட்டினால் பிரேமைப் பிரிந்த பின் ரமேஷ் பிரேதன் என்ற பெயரில் தனியாக‌ எழுதுகிறார். பிற்பாடு அவரது கட்டுரைகள், விவாதங்கள் வாசித்த போது அவை ஈர்த்தன. அவ்வப்போது காலச்சுவடு, உயிர்மை, தீராநதி இதழ்களில் அவரது கவிதைகள் பரிச்சயம். அதன் தொடர்ச்சியாகவே ரமேஷ் : பிரேமின் சிறுகதைத் தொகுப்பான மகாமுனியை இந்த 2014 புத்தகக்காட்சியில் வாங்கினேன். இவ்வளவு தான் ரமேஷ் உடனான என் உறவு.

*

ரமேஷ் பிரேதனின் சில எழுத்துக்கள்:
  1. கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் - ரமேஷ் : பிரேம் (சிறுகதை)
  2. மூன்று பெர்னார்கள் - பிரேம் : ரமேஷ் (சிறுகதை)
  3. நிலவறைப் பாட்டைகள் - ரமேஷ் : பிரேம் (கட்டுரை)
  4. உடல் அரசியல் - ரமேஷ் : பிரேம் (கட்டுரை)
  5. தமிழ் அறிவுஜீவிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள் - ரமேஷ் : பிரேம் (நேர்காணல்)
  6. அந்தர நதி - ரமேஷ் பிரேதன் (கவிதைகள்)
  7. 'உப்பு' தொகுப்பிலிருந்து சில கவிதைகள் - ரமேஷ் : பிரேம்
  8. மேலும் சில கவிதைகள் - ரமேஷ் : பிரேம்
  9. தமிழ்ப் பெண் கவிதைகளை எதிர்கொள்வதெப்படி? - ரமேஷ் பிரேதன் (விவாதம்)
  10. 'பைத்தியக்காரியின் பட்டாம்பூச்சி' முன்னுரை - ரமேஷ் பிரேதன்
*

நேற்று மாலை ரமேஷ் பிரேதன் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக 'புது எழுத்து' இதழின் ஆசிரியர் மனோன்மணியின் ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக அறிகிறேன். ஒருபக்கம் உடல் செயலிழந்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல்சிகிச்சைக்கு சென்னை அழைத்துப் போக வேண்டும் எனத் தெரிகிறது. எந்தவொரு தீவிர தமிழ் எழுத்தாளனைப் போலவும் சிகிச்சைக்கு இயலாத பொருளாதார சிரமத்துடன் தான் இருக்கிறார் ரமேஷ் பிரேதனும்.

'புது எழுத்து' அவருக்கு உதவ நிதி திரட்டும் பணியில் இறங்கி இருக்கிறது. ரூ. 500/- நன்கொடை வழங்குபவர்களுக்கு ரூ. 200/- மதிப்புள்ள அவரது மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் என்ற கவிதைத் தொகுப்பு தபால் / கூரியரில் அனுப்பித் தரப்படும் (லிங்கரூபிணி, மனக்குகையில் சிறுத்தை எழும், மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் ஆகிய மூன்று தொகுப்புகளின் பெருந்தொகை இது). இது போக பொதுவாக  அந்த நூலின் விற்பனைத் தொகை முழுவதையும் ரமேஷின் மருத்துவ செலவிற்கு வழங்கவும் 'புது எழுத்து' முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
'புது எழுத்து' வங்கிக் கணக்கு விபரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். விரும்புபவர்கள் / முடிந்தவர்கள் அவருக்கு உதவுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாவலின் முதல் பிரதியை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கும் வள்ளல்கள் நிறைந்த தேசத்தில் ஓர் எழுத்தாளன் உடல் நலம் பெறவும் தாராளமான உதவி கிட்டும் என நம்புகிறேன்.

*

Name : Pudhu Ezuthu
A/C No. : 867 999 265
Bank : Indian Bank
Branch : Kaveripattinam
IFSC Code : IDIB000K031

தொகை செலுத்திய பின் 90421-58667 என்ற எண்ணிற்கு உங்கள் முழு முகவரியை SMS செய்தால் புத்தகம் அனுப்பப்படும்.

*

No comments: