கடவுளாகும் கணங்கள்

தெய்யம் என்பது கேரளத்தின் வடக்கு மலபார் பிரதேசங்களில் நிகழ்த்தப்படும் ஓர் இந்து மதச்சடங்கு. தெய்யம் என்றால் மலையாளத்தில் தெய்வம் என்று பொருள். அரிதாரம் பூசி அலங்காரம் பூண்டு அவதாரம் எடுப்பதே தெய்யம் எனும் இந்த நடனச் சடங்கு. மனிதன் சில கணங்கள் தன்னைத் தானே கடவுளாக பாவித்துக் கொள்ளும் விந்தைப் பழக்கம்/ நம்பிக்கை. கிட்டத்தட்ட நம்மூர் கோயில் வழிபாடுகளின் சாமியாடுதலை ஒத்த ஒரு நிகழ்வு. ஆனால் இன்னும் கொஞ்சம் procedural.


கடந்த வாரம் எங்கள் அலுவலகத்திலிருந்து குடும்ப சகிதமாய் கேரளாவின் வயநாட்டில் இருக்கும் வைத்ரி வில்லேஜ் ரெஸார்ட்டிற்கு மூன்று நாள் பயணம் போயிருந்தோம். வயநாடு வடக்கு மலபாரில் தான் இருக்கிறது. அங்கு தான் ஓர் இரவு இந்த‌ தெய்யம் சடங்கைக் காண ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் கண்டது நரசிம்ம அவதாரமாய் தன்னை உருவகித்துக் கொண்ட ஒரு நடனக்காரரை. செவ்வண்ண ஆடை தரித்து அதன் மேல் சில ஆபரணங்கள் சூடி சுற்றித் தென்னை ஓலைகள் தொங்க விட்டிருந்தார். முகத்தில் சிங்க‌ முகமூடி அணிந்து, தலைக்கு கவசம் சூடி இருந்தார். இரு கைகளிலும் தன்னைச் சுற்றியும் நெருப்பெரியும் கழிகளை வைத்த‌படி சுற்றிச் சுழன்று நடனமாடினார். இடை இடையே கர்ஜனைகள் வேறு செய்தார். வந்திருந்த குழந்தைகள் மிரண்டு அழுமளவு உக்கிரமாய் இருந்தது அவரின் ஆட்டம்.

இந்த நடன‌த்துக்கு இணையாய் இதற்குப் பின்னணியாய் ஒலிக்கப்படும் இசையும் ரௌத்ர நாதமாய் அமைந்திருந்தது.


இறுதியில் காசு பெற்றுக் கொண்டு பிரசாதமும் வழங்கினார். பொதுவாய் மக்களிடையே நிகழ்த்தப்படும் போது குறி சொல்வார் என்றார்கள். அந்தப் பகுதிகளை விடுத்துப் பார்த்தால் இந்த நிகழ்வை ஒரு மதச்சடங்கு என்பதை விட ஒரு கூத்துக்கலையாகவே பார்க்க முடிகிறது. மனிதன் கடவுளாக எத்தனிக்கும் கணங்கள் தாம் எத்தனை அற்புதமானவை!

தெய்யம் நடனத்தை கேரளாவின் மலைவாழ் சாதியினர் மட்டுமே ஆட அனுமதி. அதுவும் ஆண்களுக்கு மட்டும் தான். ஈராயிரம் ஆண்டுகளாக நீடித்து வரும் பாரம்பரியம் இது என்று சொல்கிறார்கள். கேரளாவின் சாதி மீறிய‌ சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இதை முன்வைக்கிறார்கள். இவ்வளவு நாகரீகங்கள் வளர்ந்த பின்னும் நவீனங்கள் புகுந்த பின்னும் இன்னும் பிடிவாதமாக இவற்றை எல்லாம் பின்பற்றி வருகின்றனர் என்பதே இதில் தமிழர்கள் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம். தமிழகத்தில் தோற்பாவைக்கூத்து உள்ளிட்ட பல கலைகள் வேகமாக அருகி வருகின்றன.

மொத்தம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடித்த நடனத்தை சற்று நேரத்திற்கு படம் பிடித்தேன். அதை இங்கே பகிர்கிறேன்.


*******

தெய்யம் பற்றிய இரு பதிவுகள்:

Comments

Unknown said…
பார்க்கும் போது எனக்குள்ளும் அப்படி ஒரு கணத்தை ஏற்படுத்தியமைக்கு நன்றி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்