தந்தைமையின் முலைப்பால்


குழந்தைகளின் பொம்மைகளாக இருப்பது
பொறுப்புகள் மிகுந்த பணி
என்று கருதும் அவை
தாமும் குழந்தைகளாகவே
நடத்தப்பட வேண்டும்
என்று நினைக்கின்றன‌


- மனுஷ்ய புத்திரன் ('அதீதத்தின் ருசி' தொகுப்பிலிருந்து)

*

சினிமா பார்த்தெல்லாம் கண்கள் ரெண்டும் பிசுபிசுத்து நிற்பேன் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. காதல், தவமாய்த் தவமிருந்து, பருத்தி வீரன், சுப்ரமணிய‌புரம், பரதேசி போன்ற ப‌டங்கள் கூட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின என்பது தாண்டி கலங்கடித்தது என்று சொல்லவியலாது. ஆனால் இந்த ராம் என்கிற ராட்சசன் என்னைச் சுக்கலாய் உடைத்து விட்டார்.

  
தங்க மீன்கள். அன்பும் அழகியலும் இழையோடப் புனைந்திருக்கும் அழுத்தமான செல்லுலாய்ட் கவிதை. இதற்கு முன் வெளியான‌ இதற்கு இணையான படம் என்ன என்று யோசித்தால் மிஷ்கினின் நந்தலாலா தான் நினைவுக்கு வருகிறது.

செல்லம்மா என்ற மகளுக்கும் கல்யாணி என்ற தந்தைக்கும் இடையே இயல்பாகவே உயிர்த்திருக்கும் அதீத அன்பின் அதிருசியே இப்படம். கலாப்பூர்வம் என்பதற்கான‌ எந்த சடங்குகளோ சம்பிரதாயங்களோ இன்றி மிகச் சுவாரஸ்யமாகப் பின்னப்பட்ட நேர்த்தியான திரைக்கதை. உறவின் பாசப் பிணைப்பைக் காட்டும் படங்களில் பொதுவாய் கதையின் மைய நரம்புக்குத் தொடர்பற்ற செண்டிமெண்ட் காட்சிகள் வைக்க எத்தனிப்பதே தமிழ் சினிமா பாணி. தங்க மீன்களில் ராம் அதைச் செய்யவில்லை என்பதே இதை அனைவரும் ரசிக்கும்படியான‌ நல்ல கமர்ஷியல் சினிமா ஆக்குகிறது.

குழந்தையைப் பொறுத்த வரை அதைச் சுற்றியுள்ள நாம் அனைவருமே பொம்மைகள் தாம். இப்படி பொம்மைகளான நாம் மேலே சொல்லி இருக்கும் மனுஷ்ய புத்திரன் கவிதையில் வருவது போல் குழந்தையைக் கவனித்துக் கொள்ள சிரத்தை எடுத்துக் கொள்கிறோம் என்ற பெயரில் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம். இந்தப் படத்தில் உண்மையில் யாருமே கெட்டவர்கள் இல்லை என்பது தான் முக்கியமான விஷயம். எல்லோரும் அவரவர் இயல்பில் அவரவர் நியாயங்களுடன் இருக்கின்றனர். அதை செயல்படுத்தும் பிடிவாதத்தில் தம் குழந்தைத்தனத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர். இவர்கள் அத்தனை பேரின் குழந்தைத்தனம் ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாக இறுதியில் அக்குழந்தை பெரிய மனுஷத்தனமாக நடந்து கொள்ள முயற்சிக்கிறது. மிக நுட்பமான இவ்விஷயத்தை காட்சிரீதியாக மிக அழகாகச் சொல்லி விடுகிறார் ராம்.

தமிழ் சினிமா மிகக்குறைவாகவே குழந்தைகளை சித்தரித்திருக்கிறது. துர்கா படம் போல் அதீத நாடகத்தனமான பாத்திரங்கள். அல்லது மணிரத்னம் படங்களில் வருவது போல் வயதுக்கு மீறிய‌ பாத்திரங்கள். இரண்டும் விடுத்து இயல்பாய் குழந்தைகளைக் குழந்தைகளாகவே காட்டிய படங்கள் மிகக் குறைவு. யோசித்தால் உடனடியாய் தெய்வத்திருமகள் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது (அந்தப் படத்தை இயல்பென்று சொல்லவில்லை; நிலா கதாபாத்திரம் மட்டும் தான்). தங்க மீன்கள் அந்த வகை தான். இதில் வரும் குழந்தைகள் நாடகத்தனமானவை அல்ல; அதீத புத்திசாலிகளும் அல்ல. நாம் நம் வீடுகளில் பக்கத்து வீடுகளில் இயல்பாய் சந்திக்கும் துடிப்பான குழந்தைகள். 

கற்றது தமிழ் படத்திலிருந்தே ராம் வசனங்களில் ஸ்பெஷலிஸ்ட். இந்தப் படத்திலும் அது தொடர்கிறது. அந்தப் படத்தில் ரௌத்ரம்; இந்தப் படத்தில் ப்ரியம். படம் நெடுகிலும் நெகிழ வைக்கிற வசனத் துண்டுகள் (My picks: "பணம் இல்லாதவன எல்லாம் முட்டாள்னு நினைக்காதீங்கடா", "பணம் இல்லாம இருக்கறது பிரச்சனை இல்ல, இருக்கற இடத்துல இல்லாம இருக்கறது தான் பிரச்சனை", "நீ மட்டும் செத்துப் போகவே கூடாது, என்னப்பா?", "நாயைத் தானே அடிக்க முடியும்!").

தங்க மீன்களுக்காக‌ ராம் சிறந்த இயக்குநருக்கான தங்கத் தாமரை தேசிய விருது பெற்றால் ஆச்சரியப்பட மாட்டேன்.

ராமுக்கு அடுத்தபடி படத்தில் கவனிக்க வைப்பவர் ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாரா. படம் முழுக்கவும் சாத்தியம் மீறிய‌ அழகுடன் ஆனால் இயல்பு மீறாத யதார்த்ததுடன் கண்ககளில் நிறைகிறது. கிராமமோ கொச்சினோ காணத் திகட்டாமல் காட்சி தீட்டி இருக்கிறார். இது தான் அவருக்கு முதல் முழு நீளத் திரைப்படம் என நினைக்கிறேன். அபாரமான அறிமுகம்.

அடுத்தது யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களில் மட்டும் ஆனந்த யாழை மீட்டுகிறார் (அதிலும் ஃபர்ஸ்ட் லாஸ்ட் பாடல் இந்த படத்தின் பின்புலத்துக்கும் மூடுக்கும் பொருந்தவில்லை). பின்னணி இசை படத்தின் வீச்சுக்கு நியாயம் செய்யவில்லை.

செல்லம்மாவாக வரும் பேபி சாதனா கல்யாணியாக வரும் இயக்குநர் ராம் இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இருவருக்குமே ஆங்காங்கே சில முகபாவங்களில் மிகை துருத்தினாலும் ஒட்டுமொத்த கதைப் போக்கில் உறுத்தலாகத் தோன்றாமல் அந்தக் கதாபாத்திரங்களின் இயல்பு என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன். அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது எல்விடா மிஸ்ஸாக வரும் பத்மப்ரியா. செல்லம்மாவுடன் தொலைபேசும் காட்சி அவரது ஆகச்சிறந்த பெர்ஃபார்மன்ஸ். வடிவு பாத்திரத்தில் வரும் ஷெல்லி கிஷோர், கல்யாணியின் தந்தையாக வரும் பூ ராமு, தாயாக வரும் ரோகிணி, தங்கையாக வரும் ரம்யா, ஸ்டெல்லா மிஸ்ஸாக வரும் லிஸி எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். செல்லம்மாவின் தோழி 'பூரி' நித்யஸ்ரீயாக வரும் பேபி சஞ்சனா கேளடி கண்மணி நீனாவை நினைவு படுத்துகிறாள்.

இந்தத் தீவிரமான படத்தைத் தன் பேனரில் தயாரிக்க‌ முன்வந்ததும், படம் வெளியிட அரங்குகள் கிடைக்காத போதும் பொறுமை காத்து வெளியிட்டிருப்பதும், படம் மக்களைச் சென்றடைய நன்றாக‌ விளம்பரம் செய்வதும், பல நூதன ப்ரோமோக்களில் இறங்கி இருப்பதும் தயாரிப்பாளராய் கௌதம் மேனன் மீது மிகுந்த மதிப்பை ஏற்படுத்துகிறது.

*

படத்தில் வரும் மிகை உணர்ச்சிக் காட்சிகள் பற்றி சில விமர்சனங்கள் கேள்விப்படுகிறேன். இருக்கட்டுமே, அன்பு என்பதே ஒரு வகையில் மிகை தானே! இன்னும் சொல்லப்போனால் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு விஷயம் காட்டப்பட்டால் சுலபமாய் மிகை என்று முத்திரை குத்தி விடுகிறோம். தங்க மீன்களில் வரும் காட்சிகள் மிகையே அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டு கொண்டாட‌ நீங்கள் செல்லம்மாவாகவோ கல்யாணியாகவோ இருக்க வேண்டும். வேறு வழி இல்லை.

இன்னும் ஒரு விமர்சனம் அப்பா - மகள் கதைக்கு சம்மந்தமே இல்லாத வறுமை எனும் எதிர்மறை சோகத்தை படத்தில் திணித்திருக்கிறார் என. இதை நான் உறுதியாய் மறுக்கிறேன். கற்றது தமிழ் படத்தில் ராம் இதைச் செய்திருந்தார் என்பது உண்மையே. தமிழ் படித்தவன் இன்று படும் கஷ்டங்களைக் காட்டுவது தான் படத்தின் நோக்கம் எனில் கதை நாயகன் குடும்பத்தைக் கோரமானதொரு விப‌த்தில் இழப்பது, ஆசிரியரை இழப்பது, காதலியைப் பிரிவது, அவளைப் பாலியல் தொழிலாளியாக சந்திப்பது போன்ற சோகங்கள் எதுவும் அவசியமே இல்லை தான். காரணம் அவன் தமிழ் படித்ததாலோ சம்பாத்தியம் குறைவாக இருப்பதாலோ இவை நிகழவில்லை. அதனால் அவை படத்துக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் அனாவசிய எதிர்மறைகள் தாம். ஆனால் தங்க மீன்கள் அப்படி இல்லை. இது கதையே வறுமை நிலையில் இருக்கும் ஒரு தந்தைக்கும் அவனது மகளுக்கும் இடையேயான பாசம் தான். சொல்லப் போனால் பணம் இருப்பவன் மிகச் சுலபமாக தன் குழந்தையின் தேவையை நிறைவேற்றுவதில் பாசத்தை விட அவன் பொருளாதாரமே முன் நிற்கிறது. ஆனால் பணம் அற்றவன் அலைந்து திரிந்து பொருளீட்டி தன் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதில் தானே பாசம் ஜ்வலிக்கிறது!

மற்றுமொரு விமர்சனம் குழந்தை வளர்ப்பு சார்ந்து படம் முன்வைக்கும் விஷயம் சார்ந்தது. குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் படிக்காமல் இருந்தால் கேட்பது தவறா? அவர்கள் கேட்டால் எதுவென்றாலும் வாங்கித் தர வேண்டுமா? என்று. படம் அவற்றை எல்லாம் சொல்லவே இல்லை. அரசுப் பள்ளிக்கூடங்களை விட தனியார் பள்ளிகளே சிறந்தவை என நினைத்துக் கொண்டு உங்கள் வசதிக்கு மீறி செலவழித்து நீங்களும் கஷ்டப்பட்டு, குழந்தையையும் சிரம‌ப்படுத்தாதீர் என்பது தான் தங்க மீன்கள் முன்வைக்கும் ஒரே கருத்து. மற்றபடி, மகள் கேட்பதை வாங்கித் தர அலைவது என்பது அந்தத் தந்தையின் பாசத்தை உணர்த்த வைக்கப்பட்டிருக்கும் விஷயம் மட்டுமே. அதிலும் பொருளின் விலையறியாதே அவள் ஆசைப்படுகிறாள் என்பது தெளிவாகவே சொல்லப்படுகிறது. ஆனாலும் அதெல்லாம் ஒரு காரணமா என நினைக்கிறான்.

கடைசியாய் வைக்கப்படும் முக்கியமான‌ விமர்சனம் பல விஷயங்களைக் குழப்பி எடுத்து வைத்திருக்கிறார் என்பது. ராம் சொல்ல வந்திருப்பது அப்பா - மகள் பாசமா, வறுமையின் சோகமா, கல்விப் பிரச்சனையா என்று கேட்கிறார்கள். Titanic காதல் படமா கப்பல் படமா என்று கேட்பது போன்றதே இது. ரெண்டுமே என்பது தான் அக்கேள்விக்கான பதில். அதே போல் தங்க மீன்கள் பிரதானமாய்ப் பேசும் விஷயம் குழந்தை வளர்ப்பு தான். ஆனால் அது மட்டுமல்ல; அதைச் சுற்றி மேலே கேட்கப்பட்ட எல்லாமும் சொல்லப்படுகிறது. அதில் அனாவசியமும் ஏதும் இல்லை; குழப்பமும் ஏதும் இல்லை.

*

தங்க மீன்கள் அடிப்படையில் குழந்தைகளுக்கான படம் அல்ல; அவர்களோடு அதிகம் பழக நேரும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான படம். அவர்கள் தங்களை இந்தப் படத்தின் கதாபாத்திரங்களில் பார்க்கலாம். வீடு திரும்பிய பின் தாம் ஏதேனும் மாற வேண்டி இருக்கிறதா என்பது குறித்து யோசிக்கலாம். படம் யோசிப்பதும் யாசிப்பதும் அதைத் தான்.

நல்ல சினிமாவை முதுகில் தட்டுவதும் முதுகில் குத்துவதும் தமிழ் சினிமா ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. நான் நேற்று ஓசூர் மஞ்சுநாதாவில் படம் பார்த்த போது முக்கால்வாசி நிறைந்த அரங்கில் அடிக்கடி சிரிக்கிறார்கள், ஆங்காங்கே புன்னகைக்கிறார்கள், க்ளைமேக்ஸில் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள், அரங்கை விட்டு வெளியே வருகையில் கடைவிழியோரம் கசியும் நீரை மெல்லத் துடைத்துக் கொள்கிறார்கள். இதைக் கொண்டு பார்க்கையில் படம் வியாபார வெற்றியும் அடைந்து விடுமென்றே அவதானிக்கிறேன். இயக்குநர் ராம் மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

*

படம் பார்த்த பின் அதியமான் - அவ்வை - நெல்லிக்கனி பற்றிய தேவதேவன் கவிதையை மாற்றிப் போடத் தோன்றுகிறது.

அன்பின் தீண்டல் அறிந்ததனாலோ
அமரவாழ்வு எய்தி நிற்கின்றனர்,
கல்யாணியும் செல்லம்மாவும்
வோடஃபோன் நாய்க்குட்டியும்?


*

Comments

SudarKodi said…
படத்தின் ஆழத்தையும் உங்கள் ரசிப்புத் தன்மையையும் புரிந்து கொள்ள முடிகிறது ரைட்டர்.. கிளாப்ஸ் ராமிற்கும் உங்களுக்கும்!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்