லவ் டுடே

ஒரு வார இதழின் காதலர் தின சிறப்பிதழுக்காக‌ எழுதிய குறிப்பு இது. அதில் வெளியாகவில்லை. அதனால் இங்கே.

******

காதல் என்பது கெட்டவார்த்தை என்ற குழந்தைகளின் புரிதலில் தவறேதும் இருப்பதாய்த் தெரியவில்லை. பெரியவர்களானதும்தான் குழம்பி விடுகிறோம்!

பதின்மமும், இருபதும், முப்பதும் சேர்ந்தது தான் இளைய தலைமுறை. பதின்மங்களில் பூக்கும் காதலில் பாலினக்கவர்ச்சி பெரும்பங்கு வகிக்கும். இருபதுகளில் உதிக்கும் காதலில் பணமும் பாதுகாப்பும் போட்டி போடும். முப்பதுகளில் முகிழ்க்கும் காதல் ஒப்பீட்டளவில் கொஞ்சமாய் உத்தமம். இளமையில் மெய்க்காதல் என்பது மெய்யைக் காதலிப்பது தான். மெய் பூசிய பொய்க்காதல். இது இன்று நேற்று என்றல்ல; ஆதிகாலந்தொட்டே இப்படித்தான்.

பொதுவாய் இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும் ஒரு பண்டமாகவே பார்க்கின்றனர். அரிசி, பருப்பு போல், ஷூ, செருப்பு போல், மின்னணு சாதனம் போல் காதலும் ஒரு பண்டம். தீர்ந்தால் நிரப்புவது, உடைந்தால் வேறொன்று.

காதலை எடை போடுகிறார்கள்; இன்னமும் சற்றே உசத்தி வாய்க்காதா என உறங்கும் போதும் ஒருவிழி திறந்தே வைத்திருக்கிறார்கள். வாய்ப்புக்கிடைத்தால் ஆத்மசுத்தியோடு முறித்து விட்டு இடம் மாறிக் கொள்கிறார்கள். சர்வநாசூக்காய் கற்பு என்பது வழக்கொழிந்த இழிசொல் என்று வைத்துக் கொண்டாலும் கொஞ்சம் கூட உறுத்தலே இன்றி காதலை சுலபமாகக் கைகழுவிவிட முடிகிறது இன்று. கடந்த இரு தசாப்தங்களாக இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கும் பொருளாதார சுதந்திரம் தரும் அதீத தன்னம்பிக்கையின் ஒரு பகுதியாக காதலை முறித்துக் கொள்வதும் இருக்கிறது. விவாகரத்துகள் மென்பொருள் துறையில் பெருகி வருவதன் காரணம் இது தான். காதல் என்பது தற்காலிக ஏற்பாடு. சிறந்த டீல் கிடைப்பதற்கான ஏலம். அவ்வளவே. தக்கன பிழைத்துக் காதலித்துக் கிடக்கின்றன.

இவை எல்லாவற்றையும் மீறி வீட்டில் போராடி திருமணத்தில் முடியும் (தொடங்கும்?) காதல்கள் மிகச்சொற்பம். காதலைத் திருமணமாக நீட்டித்துக் கொள்வதில் லாபங்கள் இருப்பதால் தான் அந்தப் போராட்டமும் கூட.

மற்றபடி, உண்மையான காதல் என்பது இளைய தலைமுறைக்கு என்றைக்குமே சாத்தியமில்லை. காரணம் அது இருவரும் சந்தித்துப் பழகிய பத்தாண்டுகளுக்குப் பின் தான் பிறக்கிறது. அப்போது அவனோ அவளோ நாற்பதுகளில் இருப்பார்கள். இன்று இருப்பதெல்லாம் இதுவும் கடந்து போகும் வகைக் காதல்கள் மட்டும் தாம்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்