செல்வேந்திரன் எனும் கவிநடையன்

*******

"எழுத்தெனும் பெருநோயின் அறிகுறி கவிதை." - செல்வேந்திரன் ('முடியலத்துவம்' தொகுப்பிலிருந்து - ப.53)

*******

முதல் மகவையும், முதல் நூலையும் ஒரு சேரப் பிரசவித்திருக்கும் செல்வேந்திரனுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்!

வாசிப்பின் எளிமை கருதி புத்தக்காட்சியில் வாங்கிய புத்தகங்களுள் நான் முதலில் வாசித்தது செல்வேந்திரனின் முடியலத்துவம் தான். இதே தலைப்பில் அவர் ஆனந்த‌ விகடன் இதழில் சில ஆண்டுகள் முன்பு எழுதிய சிறுகவிதைகள், மற்றும் இன்ன பிற இதழ்கள், வலைப்பதிவு ஆகியவற்றில் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு தான் இந்நூல்.


முன்னுரையிலேயே disclaimer போட்டு விடுகிறார் - "இக்கவிதைகள் அச்சுரு கொள்வதால், தமிழிலக்கியத்தில் எனக்கொரு இடம் கிடைத்துவிடுமெனும் ஆவல் எனக்கில்லை". கடைசிக்கவிதை இப்படி இருக்கிறது - "மொழி / கலைத்து ஆடும் / என் சிறுபிள்ளை / விளையாட்டை / நீ கவிதையென்கிறாய்". கொஞ்ச காலம் முன்பு மின்னரட்டையில் பேசிய போதும் இதே கருத்தைத் தான் சொன்னார். அதாவது அவரது கவிதைகளின் இடம் குறித்து நன்கு அறிந்தே அதைப் புத்தகமாக்க முயற்சியெடுக்காமல் இருந்தார். பிற்பாடு அன்பர்கள் நண்பர்களின் வற்புறுத்தலினூடே அவரது கவிதைகள் நூல் வடிவம் பெறுகின்ற‌ன (பின்ன‌ட்டைக்குறிப்பில் மட்டும் மிகை தாண்டவமாடுகிறது. யார‌ய்யா எழுதியது அதை?).

இந்தப் பின்புலத்தில் தான் நான் இந்நூலை விமர்சனம் செய்யப் புகுகிறேன். அவரே புரிந்து கொண்டு ஒப்புக்கொண்டு விட்ட‌ விஷயங்கள் என்பதால் இந்த விமர்சனத்தில் அவருக்கு புதிய செய்தி எதுவும் கிடைக்காது போகலாம். அதனால் இவ்விமர்சனம் வாசகர்களையே பிரதான நுகர்வோராகக் கொண்டியங்குகிறது.

முதலில் தொகுப்பின் பிரச்சனைகளை, குறைகளை முன்வைத்து விடுகிறேன்.

கவிதைகளில் சகிக்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட ஒற்றுப்பிழைகள். சில இடங்களில் எழுத்துப்பிழைகள். இவை போக ஒருமை பன்மை மயக்கப் பிழைகள் வேறு (உதா: ப.21 - எக்ஸ்போ - "இருந்தது கடைகள்") கவிதையின் தரத்திற்குத் தான் வாய்தா தர முடியும்; இது மாதிரி கவனமின்மையால் ஏற்படும் பிழைகள் எரிச்சலூட்டுகின்றன. ஒன்றிரண்டு தவறுகள் விடுபடுதல் சகஜம், மன்னிப்புக்குரியவை. ஆனால் இவ்வகையிலான ஏராள, தாராள எழுத்துப்பிழைகள் கண்டிக்கத் தக்கவை மட்டுமல்ல; தண்டிக்கத் தக்கதும் கூட. இன்னும் சிரத்தை எடுத்து இவற்றைச் சரி செய்திருக்க வேண்டும்.

ஐந்து கவிதைகள் இருமுறை பிரசுரமாகி இருக்கின்றன (ப.19&21 - ஒரு கவிஞன் உருவாகிறான், ப.35&73 - மாநாடு, ப.41&68 - விமர்சனம், ப.44&46 - முதல்வர் வருகிறார், ப.52&67 - புரிதல்). சிலவற்றில் ஒன்றுக்கும் மற்றதற்கும் இடையே சில்லறை வேறுபாடுகளுங் கொண்டிருக்கின்றன. அப்புறம் நடத்துனர் 1 மற்றும் நடத்துனர் 2 (ப.52) ஒரே மாதிரியானவை.

விகடனில் முடியல‌த்துவம் வந்த போது அவ்வப்போது வாசித்திருக்கிறேன். அப்போதே அவை பெரிதாக ஈர்க்கவில்லை. காரணம் அவற்றில் பெரும்பாலானவை - கவனிக்கவும் : எல்லாமும் அல்ல; பெரும்பாலானவை - இடதுகையால் புறந்தள்ளக்கூடிய டெம்ப்ளேட் கவிதைகள். இப்போது தொகுப்பாகப் படிக்கையிலும் அதே உணர்வு தான் ஏற்படுகிறது (விகடனில் வெளியாகி மிகுந்த வரவேற்பினைப் பெற்ற அவரது "எங்களது சம்பளம்" கவிதையைக் கூட வேறொரு சந்தர்ப்பத்தில் கடுமையாக விமர்சித்து அவரது பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தேன்).

இன்று ட்விட்டரில் தமிழில் எழுதப்படும் கணிசமான நக்கல் / தத்துவ‌ ட்வீட்களுக்கு ஒருவகையில் செல்வேந்திரனின் முடியத்துவமே முன்னோடி. அப்போது முடியல‌த்துவத்தைப் பிரசுரித்த விகடன் தான் இப்போது வலைபாயுதே என்ற தலைப்பில் ட்வீட்களைத் தேர்ந்தெடுத்து பிரசுரிப்பதை நான் சொல்வதன் proof-of-concept ஆகக் கொள்ளலாம்.

இவற்றில் 99% கவிதைகளுக்கு தலைப்பே அவசியமில்லை. குருவிக்குக் கொம்பு முளைத்தது மாதிரி துருத்திக் கொண்டிருக்கின்றன இத்தலைப்புக்கள். இன்னும் சில கவிதைகளில் சில வார்த்தைகளை / வாக்கியங்களைத் துண்டித்திருந்தால் நல்ல கவிதைகளாக ஆகியிருக்கக்கூடும் (உதா: ப.28 - கவிதை சிப்பாய் - கடைசி இரு வரிகள்).

தொகுப்பிலிருக்கும் கவிதைகளை சில வகைமைகளுக்குள் அடக்கி விடலாம். சில நகைச்சுவைத் துணுக்குகள் (உதா: ப.38 - நேரம்). சில சுவார‌ஸ்யமான‌ definitionகள் (உதா: ப.27 - க்ளாஸ் லீடர்). சில குடும்பமலர் கவிதைகள் (உதா: ப.57 - மார்கழி). சில வார்த்தை ஜாலங்கள் (ப.57 - ஐ நோ வெரி வெல்). சில மொக்கை ஸ்டேட்மெண்ட்கள் (உதா: ப.58 - வா). சில poetic justice வகை (உதா: ப.59 உதவி). சில அடிமட்டக் காதல் கவிதைகள் (உதா: ப.64 - வெற்றிகரமான தோல்வி). சில சிந்தனைப் போலிகள் (உதா: ப.73 - கிரிக்கெட்). சில‌ ட்விட்டர் டெம்ப்ளேட் (உதா: ப.65 - காலிங்...). சில வடிவேலு டைப் காமெடிகள் (ப.50 - ஆழ்நிலை). சில சந்தானம் வகை வசனங்கள் (உதா: ப.31 - ஜிம்). சில சுஜாதா பாணி 'சுருக்'கள் (உதா: ப.37 - கடமை வீரன்). கிட்டத்தட்ட தொகுப்பின் எண்பது சதவிகித கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன.

இந்த வகையறாவையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட தொகுப்பில் கிட்டதட்ட முப்பது நல்ல கவிதைகள் தேறுகின்றன. ஒப்பீட்டளவில் இது நல்ல எண்ணிக்கையாகவே தோன்றுகிற‌து.

அந்த நல்ல கவிதைகளாவன: ப.11 - பொன்னாடை, ப.14 - காலைக்கடன், சம்ஹாரம், ப.17 - பாரம், ப.18 - பாவிகளே!, ப.23 - அம்மா, ப.24 - 16 வயதினிலே, ப.25 - விஷயஞானம், அறிவிப்பு, ப.26 - சாஃப்ட் நேச்சர், ப.27 - மெட்ரோ, ப.29 - 12பி, நாகரிகம், ப.30 - காதல் கவிதை ப.34 - கிளர்ச்சி, ப.42 - தர்மம், கோவில், ப.44 - குடும்ப அரசியல், ப.45 - தொழில் தர்மம், ப.46 - யார்? ப.47 - லாட்ஜ், ப.50 - குடி, ப.51 - எவர், ப.60 - டோரா, ப.65 - காதல், ப.69 - திணை ப.72 - துயர், ப.74 - பட்டியல் (முதல் கவிதை மட்டும்), ப.76 - அசாவாமை, ப.79 - யாவர்க்குமான கவிதை (முதலிரண்டு கவிதைகள்).

இந்த 82 பக்கத் தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த கவிதை - அசாவாமை.

புத்தகம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது (ஆக்கம் : நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி பதிப்பகம்). அழகானதும் பொருத்தமானதுமான அட்டைப்படம். கவிதைகளுக்குப் பயன்படுத்தியிருக்கும் எழுத்துரு வசீகரம்.

சில கவிதைகளில் நகர வாழ்வின் அபத்தங்கள் வலுவாகப் பதிவாகி இருப்பதே இத்தொகுப்பின் significance. இன்னும் சில கவிதைகளில் இருக்கும் அபாரமான மொழி விளையாட்டு கவனிக்கத்தக்கது. இந்தக்கலவை முக்கியமானதாகப் படுகிறது. மற்றபடி verdict கேட்டால் வெகுசில நல்ல கவிதைகளை மட்டும் தாங்கிய சுமாரான தொகுப்பு என்பேன்.

செல்வேந்திரன் கவிதைக்காகப் படைக்கப்பட்டவன் அல்லன். இது வாசிப்பு வழி வந்த‌டைந்த‌ அவதானிப்பு.

நான் கவிஞனாயிருப்பதன் பலனை என் உரைநடையில் தான் பெறுகிறேன். கிட்டதட்ட செல்வேந்திரனுக்கும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. அவரது வலைப்பதிவில் வாசிக்கக்கிடைக்கும் கவிதையல்லாத இடுகைகளில் நிரம்பித்ததும்பும் கவித்துவம் அளப்பரியது. ஒருவகையில் சகபடைப்பாளியாய் எனக்குப் பொறாமையூட்டுவது!

தமிழில் இதுமாதிரியான கவித்துவ உரைநடை வாய்த்த சமகால எழுத்தாளர் என க.சீ.சிவக்குமாரைச் சொல்லுவேன். அப்புறம் கொஞ்சம் போல் அ.முத்துலிங்கம் மற்றும் இரா.முருகன். சங்க இலக்கியச் சாறேறிய ஒரு தனித்துவ எழுத்தாடல். இதைக்கொண்டு அற்புதமான உரைநடையில் அபுனைவு இலக்கியங்கள் சமைக்கலாம். எழுத்தின் பரிணாம வளர்ச்சியில் கவிதைகளை இழந்த பின் அதுவே செல்வேந்திரனின் எதிர்காலத்தடமாக அமையும் எனத் தோன்றுகிற‌து.

தொடர்ந்து எழுதினால் தமிழின் முக்கியமான அடுத்த தலைமுறை எழுத்தாளராக செல்வேந்திரன் அறியப்படுவார்.

Comments

எக்சைல் அரச்ச மாவ அரைப்போமா- எனது விமர்சனம்!(கண் அவிந்தால் நிர்வாகம் பொறுப்பேற்காது-கும்மாங்கோ)

http://vadakkupatti.blogspot.com/2012/01/blog-post.html
Anonymous said…
பின்னட்டையில் நூலாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதனை எழுதிய கரங்களுக்குத் தங்க காப்பு. மூன்றே வாக்கியங்களில் எழுத்தாளரின் பெயர் உட்பட ஆறு பிழைகள்.

தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத்திரம் ஆகிய ஐந்து கதைகளைத் தவிர்த்து ஏனைய பன்னிரெண்டு கதைகளும் ‘நாட் ஸோ பிரிண்ட் ஓர்த்தி’ வகையரா.

ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம்.

மஞ்சள் துண்டு கிடைத்ததும் மளிகைக்கடை வைக்க நினைத்த சுண்டெலி போல பின்னூட்டங்களின் அளவையும், வியந்தோதலையும் மனதிற்கொண்டு புத்தகம் போட துணிவது அபாயகரமானது.

பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை

ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது. ஆனால் அப்படி இடம்பெறுகிற படைப்பில் வாசகச் சுவை இல்லையென்றால் அதற்கு அப்பத்திரிகையின் படைப்புகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளரும் முக்கிய காரணம். ஆனால், அக்கதைகளைப் பற்றிய சுயமதிப்பீடு அதை எழுதியவனுக்கு எப்போதும் இருந்தாக வேண்டும். பிற்காலத்தில் தொகுதி கொண்டுவரும் முயற்சியின் போது அந்தக் குப்பைகளைக் கவனத்தோடும் கறாரோடும் ஒதுக்கியே தீரவேண்டும். ஆனந்தவிகடனில் வருவதை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. கூடாது

http://www.selventhiran.com/2010/03/blog-post_14.html

http://www.selventhiran.com/2010/03/blog-post_15.html

வாழ்க‌ த‌மிழில‌க்கிய‌மும் இல‌க்கிய‌வாதிக‌ளும்
selventhiran said…
@ சி.எஸ்.கே, மனச்சாய்வற்ற விமர்சனம். வழிமொழிகிறேன்.

@ அனாணி, தப்பை யார் செய்தாலும் தப்புத்தான். சுட்டுகிறவனே செய்தால் மகா தப்பிதம்! நன்றி!
சமகாலத்தில் தமிழில் உரைநடையில் கவித்துவம் கொண்டவர் எஸ்.ரா மட்டுமே. கவிதையில் உரைநடை கொண்டவர் என்று மனுஷை சொல்லலாம்.
@என்.விநாயகமுருகன்
எஸ்ரா உரைநடையில் கவித்துவம் கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை (முன்பே என் காவல் கோட்டம் விமர்சனத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளேன்). ஆனால் நான் இங்கு சொல்ல விரும்பிய உரைநடைக் கவித்துவம் என்பது சங்க இலக்கியத்தின் நீட்சியாய் எழுதப்படும் ஒருவகையை மட்டுமே. அந்த வகைமைக்குள் எஸ்ரா வரமாட்டார் என்பதாலேயே அவர் பெயரை இவ்விடத்தில் தெரிந்தே தவிர்த்திருக்கிறேன்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்