குடிப்பழக்கம் : ஒரு விவாதம்

இன்று ஃபேஸ்புக்கில் நடிகை ஸ்ருதி ஹாசன் (அல்லது அவரைப் போன்ற ஒரு பெண்) குடித்துக் கொண்டிருக்கும் (அல்லது குடிப்பவர்களுடன் அமர்ந்திருக்கும்) ஒரு படத்தை நான் "இதுல என்ன தப்பு இருக்கு?" என்று கேட்டு பகிர, தொடர்ந்து எழுத்தாளர்கள் ஞாநி, பாஸ்கர் சக்தி இருவருடனும் குடிப்பழக்கம் குறித்து நகழ்த்திய விவாதம் இது:

*******


Saravanakarthikeyan Chinnadurai இதுல என்ன தப்பு இருக்கு?

Gnani Sankaran அதியமானோடு சேர்ந்து கள் குடித்த அவ்வை தமிழ்ப் பெண்தான். இதுவும் நம்ம மரபுல இருக்கற விஷயம்தான். குடிக்கக்கூடாது என்பது கற்பு மாதிரிதான். ஆண், பெண் இருபாலாருக்கும் அதைப் பொதுவில் வைப்போம்.

Saravanakarthikeyan Chinnadurai @Gnani Sankaran நான் குடிப்பதில்லை. ஆனால் அதை ஒழுக்கத்தோடு என்றும் சம்மந்தப்படுத்திக் கொண்டதில்லை. நான் குடிக்காமலிருப்பதற்கு காரணங்கள் வேறு. குடிக்கு அடிமையாகக் கூடாது எனப்து வரை புரிகிறது. ஆனால் ஏன் குடிக்கவே கூடாது என்று சொல்லப்படுகிறது எனப் புரியவில்லை.

குடிப்பது ஒரு கொண்டாட்டம் என்று சொல்வது எவ்வளவு அறிவீனமோ, அது போன்றது தானே, குடிப்பது ஒழுக்கக்கேடு என்பதும். இன்றைய கார்ப்பரேட் உலகில் குடிப்பது என்பது ஃபேஸ்புக், ட்விட்டர் போல் ஒரு social networking சாதனம். தவிர மது ஒருவகையில் உணவும் அல்லவா? அளவு தாண்டாத வரை குடிப்பதை ஒரு பிரச்சனையாகப் பார்க்க முடியவில்லை. அளவு மிஞ்சினால் அமுதமும் விஷமே. சாக்லேட் கூட அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலுக்குக் கேடு தான். அதற்காக சாக்லேட் சாப்பிடுவது ஒழுக்கமீறாலாகி விடுமா?

Bhaskar Sakthi @Saravanakarthikeyan Chinnadurai...சாக்லெட் காபி டீ போன்ற விஷயங்களை மதுவுடன் ஒப்பிட முடியாது நண்பரே...அவையெல்லாம் சிறுமூளையை பாதிப்பதில்லை. தொடர்ந்து உபயோகிக்கத் தூண்டி ஒரு கட்டத்தில் குடிநோயாளியாக மாற்றுவதில்லை. அளவு அதிகமாகும் போது உங்களை விபரீதங்கள் செய்யத் தூண்டுவதில்லை. டாஸ்மாக்கில் போதை அதிகமாகி கைகலப்பு பெரிதாகி கொலையில் முடிந்த சம்பவங்களை யோசித்துப் பாருங்கள். குடியை கட்டுக்குள் வைக்கத் தெரியாத சமூகத்தில் குடிப்பழக்கம் தீமையானதே. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தி விபத்து ஏற்பட்டு விளைந்த மரணங்கள் ஐந்து.கைகால் முறிவும் காயங்களும் எக்கச் சக்கம்.

Bhaskar Sakthi வடசென்னையில் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி பாலத்தின் மீதிருந்து கீழே விழுந்து உடல் சிதறி செத்துப் போன கூலித் தொழிலாளியின் வயது 28. வயதான பெற்றோரின் ஒரே மகன்....குடித்து விட்டு வண்டி ஓட்டுவது மேல் நாடுகளில் குற்றம். இங்கோ அது சாகசம்.

Saravanakarthikeyan Chinnadurai @Bhaskar Sakthi அளவுக்கு மிஞ்சினால் தானே அவை நிகழ்கின்றன? வெளிநாடுகளிலும் குடிக்கத்தானே செய்கிறார்கள். ஒரே வித்தியாசம் அவனுக்கு இருக்கும் சுய‌க்கட்டுப்பாடு நம்மவர்களுக்கு இருப்பதில்லை. அது மதுவின் பிழையன்று; மனிதனின் தவறல்லவா?

Bhaskar Sakthi ·ஆம். அதைத்தான் சொல்கிறேன்.//குடியை கட்டுக்குள் வைக்கத் தெரியாத சமூகத்தில் குடிப்பழக்கம் தீமையானதே//.வெளி நாடுகளில் குடித்து விட்டு ரோட்டில் கிடக்கிறார்களா என்ன? சலூனில் முடிவெட்டுகையில் ஒரு இளைஞன் புத்தாண்டில் குடித்து விட்டு மூவரும் ஒரு பைக்கில் 100 கி மீ வேகத்துக்கும் மேல் பறந்ததை விவரித்தபோது அவனை கடிந்து கொண்டேன். ஆனால் அவன் அதை ஒரு சாகசமாகத்தான் கருதுகிறான். இளவயதினர் பலர் செய்துள்ள குற்றச்செயல்களில் குடி ஒரு முக்கிய பின்னணியாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய கிராமத்து இளைஞர்களின் பகல் பொழுதுகள் எல்லாமே மாலை நேரக் குடியை மனதில் வைத்தே நகர்கின்றன. இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் நம் சமூகத்தில் குடியால் ஏற்படப் போகும் கேடுகள் மிக மோசமானவையாக இருக்கும்.

Gnani Sankaran மேலை நாட்டுடன் குடிப்பழக்க அளவுகளை ஒப்பிடுவது அபத்தமானது. அது கட்டுப்பாடு பக்குவம் மட்டும் சார்ந்த விஷயம் அல்ல. வெப்ப தட்ப நிலை சார்ந்ததும் கூட. அளவுக்கு மீறி சாக்லெட் சாப்பிடுபவன் அவன் உடல்நலத்தை மட்டுமே கெடுத்துக் கொள்கிறான். அளவுக்கு மீறி குடிப்பவன் தன் உடல்நலத்தை மட்டுமல்ல, சுற்றிலும் இருப்பவர் நிம்மதியை, குடும்பத்தினரின் வாழ்க்கையை, பொருளாதாரத்தை எல்லாம் கெடுக்கிறான். ஏழைக் குடும்பங்களில் குடிகாரக் கணவன்களாலும் சகோதரர்களாலும் பெண்கள் படும் துயரத்தை ஒரு வேளை நேரில் பார்த்தால் குடி ஒழுக்கமா, கட்டுப்பாடா,மருத்துவப்பிரச்சினையா, மன நலப்பிரச்சினையா என்று பட்டி மன்றம் நடத்துவோருக்கு தெளிவு வரும். அப்படியும் வராதவர்களுடன் விவாதிப்பதில் அர்த்தமே இல்லை. தமிழ் சமூகத்தை, இளைய தலைமுறையை குடி ஏற்கனவே கடுமையாகக் கெடுத்துவிட்டது. அதற்கு முழுப் பொறுப்பு கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும்தான்.

Saravanakarthikeyan Chinnadurai @Bhaskar Sakthi நீங்கள் குறிப்பிடும் இந்த அடிப்படையில் தான் மதுவை மறுதலிக்கிறோம் என்றால் அதை வெளிப்படையாகவே முன்வைக்கலாமே.

அதாவது "மது அருந்துவது ஒழுக்கக்கேடு இல்லை. கட்டுக்குள் இருக்கும் போது அது உடலுக்கும் பாதிப்பில்லை. ஆனால் தமிழ்ச் சமூகம் (அல்லது இந்தியச் சமூகம்) என்பது மரபியல் ரீதியாகவும், சூழல் ரீதியாக‌வும் மதுவுக்கு மிகச்சுலபத்தில் அடிமையாகி விடக்கூடிய பலவீனமான மக்கள் திரளைத் தன் பெரும்பான்மையாகக் கொண்டது. அப்படி மோசமாக மது அருந்துவதினால் உயிர்ச்சேதம்முதல் குடும்பம் சிதைவது வரை பல விரும்பத்தாகாத கேடுகள் நடக்கின்றன‌. அதனால் மது அருந்தாதீர்" என்பது மாதிரியாகத் தானே மதுவுக்கு எதிரான பிரச்சாரம் அமைய வேண்டும்.

ஆனால் இங்கு ஒழுக்கமும் உடல்கேடும் தானே மதுவுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஆயுதங்கள். அது விஷயத்தைத் திரிக்கும் முயற்சியல்லவா? அதைத் தான் எதிர்க்கிறேன்.

அல்லது இப்படித் தெளிவாகச் சொன்னால் தமிழனுக்குப் புரியாது. புரிந்தாலும் பின்பற்றும் சுரணை கிடையாது. அதனால் தான் பூச்சாண்டி காட்ட வேண்டி இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?

Gnani Sankaran இது தவிர ஏன் நடிகை குடிக்கும் படத்தை எடுத்துப் போடவேண்டும் ? அது என்ன் உளவியல்? இந்தப் படத்தை எடுத்துப் போடுபவர், இங்கே பகிர்பவர்கள் இவர்கள் உறவுப்பெண்களில் குடிக்கும் பெண் இருந்தால் அவள் குடிக்கும் படத்தை எடுத்துப் போட்டு என் தங்கச்சி, என் முறைப்பெண் குடிக்கும் காட்சி என்று போடுவார்களா? நடிகையின் ஒழுக்கம் பற்றிய நிரந்தர ஆணாதிக்க கவலையுடைய மனம்தான் இந்தப் படத்தை எடுத்துபோடவும் பகிரவும் செய்யும். முதலில் இந்த மனப்பிறழ்வுக்கு சிகிச்சை தேவை.

Saravanakarthikeyan Chinnadurai @Gnani Sankaran //வெப்ப தட்ப நிலை சார்ந்ததும் கூட.// அப்படியென்றால் இந்தியா போன்ற சீதோஷ்ணம் கொண்ட வேறு எந்த மேலை நாட்டிலும் குடிப்பழக்கமே இல்லை என்கிறீர்களா? அவர்களும் குளிர் தேசங்கள் போல குடிக்கத்தானே செய்கிறார்கள். அளவு தான் வித்தியாசம். அதைத் தான் சொல்கிறேன். அவனுக்கு மது அதிகமானால் என்ன பிரச்சனை என்ற அறிவும் அதன் நீட்சியான பயமும் இருக்கிறது. அது அவனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இங்கு அது இல்லை. நாளை பற்றிய கவலையே இல்லாதவன் குடித்துத் தான் அழிவான். அதற்காக மதுவை எப்படிக் குறை சொல்வது?

மற்றபடி, கஜானாவை நிரப்ப‌ இங்கே அரசாங்கமே மதுவை மக்களிடையே ஊக்குவிப்பது பெருஞ்சாபம் தான். கண்டிக்கப்பட வேண்டியது தான்.

Gnani Sankaran மேலை நாடுகளில் குடி அடிமையாக இருப்பவனை குடும்பம் காப்பாற்றாது. பெண்ணை சார்ந்து குடிகார ஆண் ஒட்டுண்ணியாக வாழ அங்கே முடியவே முடியாது. இங்கே பெண்ணை தனக்கான அடிமையாக ஆண் வைத்திருக்கும் மரபும், பண்பாடும், குடும்ப அமைப்பும் குடிகார ஆணுக்கு சாதகமாக இருகின்றன. இதைப் பெண்கள் உடைத்தெறியும்போது கணிசமான மாற்றம் வரும்.

Saravanakarthikeyan Chinnadurai @‎Gnani Sankaran //ஆணாதிக்க கவலையுடைய மனம்தான் இந்தப் படத்தை எடுத்துபோடவும் பகிரவும் செய்யும்.// நான் இதைத் தவறில்லை என்று சுட்டிக்காட்டவே பகிர்ந்திருக்கிறேன் என்ற புரிதலின் அடிப்படியில் என்னைக் குறிக்காமல் தான் இதைச் சொல்லியிருப்பீர்கள் என நம்புகிறேன்.

Saravanakarthikeyan Chinnadurai @‎Gnani Sankaran //இது தவிர ஏன் நடிகை குடிக்கும் படத்தை எடுத்துப் போடவேண்டும் // அங்கே தானே பிரச்சனையே ஆரம்பித்தது! பெண் குடிக்கிறாள் என்பது தான் இவர்கள் பிரச்சனை; குடி அல்ல. அதிலும் அந்தப் பெண் ஒரு நடிகை என்றதும் மேலும் கிளுகிளுப்பாகி விட்டது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்