ஸ்பாம் மெயில் - தொடர்ச்சி

ஸ்பாம் மெயில் குறித்த எனது முந்தைய பதிவுக்கு எழுத்தாளர் என்.சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் இவை:

*******

நண்பரே, ஸ்பாம் மெயிலை மறுப்பது ஒருவர் தனி உரிமை. அதற்காக இப்படியெல்லாமா திட்டுவீர்கள்? :)

என்னைப் பொறுத்தவரை தவறு எஸ்.ரா.மீதுதான், அவர் அந்த முதல் மெயிலில் எல்லா ஐடிகளையும் bccயில் போட்டிருக்கவேண்டும்

நீங்கள் சொல்வதுபோல் ரூல் செட்டப் செய்து அந்த த்ரெட்டை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புவதெல்லாம் சிலருக்குதான்தெரியும்

மற்றவர்கள் நெளிந்திருப்பார்கள். இருவர் தைரியமாகச் சொன்னார்கள். இப்படித் திட்டுகிறீர்கள் :)

எஸ்ரா விருது பெற்றது சந்தோஷம்.அதற்காக எல்லோரும் அவரை என் முன்னிலையில்தான் பாராட்டவேண்டுமா? :)

இதே நிஜப் பாராட்டுக் கூட்டமாக இருந்தால் அங்கே சென்று உட்கார்ந்தது என் முடிவு, காது நிறையக் கேட்டிருப்பேன்

இங்கே நடப்பது அதுவல்ல, அந்த த்ரெட்டில் என் முகவரி இருப்பது என் முடிவல்ல, எஸ்.ரா. முடிவு

உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள், ஸ்பாம் எந்த வடிவில் வந்தாலும் தவறே. இது எஸ்.ரா.வை அவமானப்படுத்துவதாகாது

*******

என் வரையில் சொக்கன் பழகுதற்கு மிகுந்த pleasant ஆன மனிதர். அவரிடம் யாரேனும் கோபிக்கவும் முடியுமா என வியந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஆசாமியையே ("இப்படியெல்லாமா திட்டுவீர்கள்?" என்று கேட்குமள‌விற்கு) எனது இடுகை பாதிக்கிற‌தெனில் அவருக்கு சில தன்னிலை விளக்கங்கள் தரக் கடமைப்பட்டவனாகிறேன்.

*******

டியர் சொக்கன்,

ஸ்பாம் செய்வது தவறு தான் என்பதை அப்பதிவின் முதல் பத்தியிலேயே ஸ்பஷ்டமாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். இப்போது இங்கும் உறுதி செய்கிறேன். ஆனால் உலகின் எந்த சித்தாந்தத்துக்கும் இருப்பது போல் இதற்கும் விதிவிலக்கென்று ஒன்று இருக்கலாமல்லவா?

மனித சிறுநீர் நம் மீது படுவது நிச்சயம் அருவருப்பானதும் ஆரோக்கியக்கேடானதும் தான். ஆனால் அதுவே ஒரு குழந்தையின் சிறுநீர் நம் மீது படும் போது வேறு மாதிரியாக எடுத்துக் கொள்கிறோம். குழந்தையுடையதெனினும் சிறுநீர் மேலே படுவது நல்லதல்ல என்று தான் தர்க்கமும், விஞ்ஞானமும் சொல்கின்றன‌. ஆனால் அதைத்தாண்டிய, மீறிக்கொப்பளிக்கும் ஓர் உணர்வு மனிதனுக்கு இருக்கிற‌து. அதனாலேயே அதைப் பொருட்படுத்துவதில்லை.

ஆனால் அதற்கும் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். "ஐயோ குழந்த மேல ஒண்ணுக்கு போயிட்டுது. அசிங்கம், அசிங்கம். அந்த டெட்டால் கொண்டா. அந்த ஆசிட் எடு. கழுவனும்" எனக் கூவும் மிகைப்படுத்தல் சிலருக்கு மட்டும் சாத்தியப் படுகிற‌து. சொக்கன், அது உங்கள் குழந்தையாக இருப்பின், அந்த கூச்சல் உங்களுக்கு எப்படி இருக்கும். எஸ்.ரா.வுக்கு அப்படி இருந்ததா தெரியவில்லை. எனக்கு அப்படித்தான் இருந்தது.

நீங்கள் சொல்வது போல் பிரச்சனையின் ஆதித்தவறு எஸ்.ரா. அனைவருக்கும் டூ போட்டு மெயில் அனுப்பியது தான். ஆனால் போரில் வென்று வரும் வீரனை தலை மேல் வைத்துக் கொண்டாடுவோமா, இல்லை அவன் சட்டை பித்தான் பிய்ந்திருக்கிறது என்று குறைபட்டுக் கொண்டிருப்போமா? அது ஒரு கொண்டாட்ட மனநிலை. உலகக்கோப்பை வாங்கிய போது சச்சின் பொதுவிடத்தே ஆயிரக்கண‌க்கானோர் முன்பு ஷாம்ப்பெயின் பருகிய‌து போல். அதை ரசிக்கவே அனுபவிக்கவே விரும்புகிறேன். குற்றம் சுமத்தி கல்லால் அடிக்க அல்ல.

சந்தனமுல்லையை விடுங்கள், இலக்கியத்துக்கும் தனக்கும் ஸ்நான ப்ராப்தி கூட இல்லை என்று கை துக்கி விட்டார். ஆனால் வா.மணிகண்டனுக்கெல்லாம் நிச்சயம் எஸ்.ரா.வைப் பிடிக்கவே செய்யும் என்பதே என் எண்ணம். அதனால் எஸ்.ரா.வை அவமானப்படுத்தி விட்டார்கள் என நான் நிச்சயம் சொல்லவில்லை. ஆனால் மனச்சங்கடப்படுத்தி விட்டார்கள் என்கிறேன். அவரையும் லூப்பில் வைத்துக்கொண்டே தான் அத்தனை பேச்சுக்களும் நிகழ்ந்தன. ஜெமோ, சாரு போன்றோர் கூட அதில் இருந்தார்கள் என்பதைக் கவனிக்கவும்.

அதே போல் ஸ்பாம் மெயில் வரும் போது நெளிய வேண்டுமென்றால், நாள் முழுக்க நெளிந்து கொண்டிருக்க வேண்டியது தான். ஒரு விதமான எரிச்சலுணர்வு வரை சரி, நீங்கள் சொல்வது வலிக்கும் என்பது மாதிரி இருக்கிற‌து.இது மிகையான எதிர்வினை இல்லையா?

நிச்சயம் உங்கள் அனுமதியின்றி, விருப்பமுமின்றித்தான் அந்த மெயில் செயினில் இருக்கிறீர்கள். என் வேண்டுகோளெல்லாம் ஓர் அற்புத எழுத்துக்காரனுக்காக அதைப் பொறுத்துப் போங்களேன் என்பது தான். சொக்கன், கார்ப்பரேட் கலாசாரத்தில் எவ்வளவோ அர்த்தமற்ற, விருப்பமற்ற நீண்ட மீட்டிங்களில் உட்கார வேண்டியிருக்கிறது. பணி நிமித்தம் அல்லது பய நிமித்தம் அங்கெல்லாம் மௌனம் அனுஷ்ட்டிக்கிறோம். இவ்விடத்தே மரியாதை நிமித்தம் அதே தியாகத்தைச் செய்யலாகாதா என்பதே என் ஆதங்கம்.

அப்பதிவில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன் என்பது உண்மையே. வார்த்தைகள் தடித்திருக்கின்றன என்பதும் நிஜமே. நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் யோசித்துப் பதிவிட்டிருந்தால் ரௌத்திரத்தின் ஆண்மை காயடிக்கப்பட்டிருக்கும். இப்போது கோபம் மட்டுப்பட்டிருக்கிறது. ஆனால் நிலைப்பாடு அதே தான். அவர்களின் அலட்டல் தான் அந்த மெயில்களின் சாரம். அதற்கு பதில் தந்தே ஆக வேண்டும்.

எல்லா ச‌மய‌ சந்தர்ப்பங்களிலும் தர்க்கத்தின் பின்னோடும் எந்திரமாகவே எதிர்வினையாற்றவியலாது. நமது சுரப்பிகளின் உத்தரவையும் அவ்வப்போது கேட்டுப்பழக வேண்டும். நாமெல்லாம் ஸ்மரணை கொண்ட மனிதர்கள் என்பதில் அப்போது தான் நமக்கே நம்பிக்கை வரும்.

-CSK

*******

மிகுந்த நியாயமான அல்லது நியாயம் போலவே தோன்றும் சொக்கனின் மேற்கண்ட கருத்துக்கள் மேலும் சிலருக்கும் இருக்கும் நிகழ்தகவின் காரணத்தால் அவர்கட்கும் இதையே பதிலாகச் சொல்லிக் கொள்ளும் பொருட்டே இதைப் பதிவாக இட்டிருக்கிறேன்.

Comments

அன்புள்ள நண்பருக்கு,

நீங்கள் சொல்வதும் சரிதான். அதனால்தான் நான் அந்த மெயிலுக்கு பதில் அனுப்பவில்லை. ட்விட்டரில்மட்டுமே கருத்துச் சொன்னேன்.

- என். சொக்கன்,
பெங்களூரு.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்