பரத்தை கூற்று : பதிவர் R.கோபி

பரத்தை கூற்று புத்தகம் குறித்து பதிவர் R.கோபியின் விரிவான விமர்சனப்பதிவு:

*******

http://ramamoorthygopi.blogspot.com/2011/02/blog-post_03.html

*******

சி. சரவணகார்த்திகேயனின் பரத்தை கூற்று

Posted by Gopi Ramamoorthy at 6:06 PM Thursday, February 3, 2011

நுழையுமுன்

புத்தகத்தைப் பதிப்பித்த அகநாழிகை பதிப்பகத்திற்கு நன்றி. இதுபோன்ற புத்தகம் எழுதுவதென்பது கம்பிமேல் நடப்பது போன்ற வித்தை. சரியாகவே நடந்திருக்கிறார் சரவண கார்த்திகேயன்.

2007 ஆம் ஆண்டு குங்குமம் வார இதழ் நடத்திய வாசகருக்கான போட்டியில் இவருடைய ‘ஒருத்தி நினைக்கையிலே’ என்ற படைப்பு கவிஞர் வைரமுத்துவால் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்படிருக்கிறது. மோதிரக் கையால் குட்டு வாங்கி இருக்கிறார்.

முதல் கவிதைத் தொகுப்பில் இது போன்ற ஒரு விஷயத்தைப் பாடுபொருளாக எடுத்துக்கொள்ள நிறைய துணிச்சல் வேண்டும். நிறைய தன்னம்பிக்கை வேண்டும்.

முன்னுரை

இந்தத் தொகுப்பின் முக்கியமான அம்சம் இதன் முன்னுரை. ஒரு தேர்ந்த வழக்கறிஞர் தயாரித்த அறிக்கை போல உள்ளது. முன்னரையில் இருந்து சில முக்கியமான வரிகள்:

நம்மைச் சுற்றியுள்ள நாம் நன்கறிந்த 36 பெண்களில் ஒருத்தி, பாலியலை ஏதேனும் ஒருவகைப் பொருளாதாரப் பண்டமாற்றில் விற்றுக் கொண்டிருக்கிறாள்.


...தேவரடியாள் இறந்தாள்; தேவடியாள் பிறந்தாள்.


வேசியினம் தோன்றும் முன்பே வேசித்தனம் தோன்றிவிட்டது என்பது தெளிவு.


...தீண்டலால் அவர்கள் அடையும் தீண்டாமை இது.

குறைந்தபட்சம் பத்து முறையாவது அடித்துத் திருத்தப்பட்ட கவிதைகள் இவை என்கிறார். ஐந்நூறு கவிதைகளில் இருந்து பொறுக்கி எடுத்து நூற்றைம்பது கவிதைகளைத் தொகுத்திருக்கிறார்.

தொகுப்பின் முன்னுரை முடிந்த பிறகு வேசிகள் பேச ஆரம்பிக்கிறார்கள். வேசிகள் பேச ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் படிப்பவருக்குப் பெரிய ஏமாற்றம் வந்துவிடும். முன்னுரையில் இருக்கும் காத்திரம், நேக்கு போக்கு, நாசூக்கு, இடக்கரடக்கல், assertiveness காணாமல் போய்விடுகிறது. வார்தைகள் கொச்சையாக வந்து விழுகின்றன. சில இடங்களில் சொல்ல வேண்டியதை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாமல் பேசுவது போலத் தோன்றும்.

மேற்சொன்ன எல்லாம் உண்மை. மேலோட்டமாகப் பார்த்தால் அந்த ஏமாற்றம் நிச்சயம் இருக்கும். கவிஞரால் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகப் புள்ளி விவரங்களுடன் to the point பேசமுடியும். வேசிகள் அப்படிப்பட்டவர் அல்லர். நேரடியாக ஒரு விஷயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் மொழி அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்ட விதத்தில்தான் இருக்கும். அதை polish செய்திருந்தால் ரொம்ப செயற்கையாகப் போயிருக்கும்.

தொகுப்பின் மொத்த சாராம்சமும் முன்னுரையில் வந்துவிடுகிறது. இவர் கேட்பதெல்லாம் \ சொல்ல வருவதெல்லாம் இதுதான்.

நாம் தேவை ஏற்படும்போது மட்டும் செய்யும் விஷயத்தை வேசிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பதுதான் (நமக்கும் அவர்களுக்கும் இருக்கக்கூடிய) பிரதம வித்தியாசம்.


விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக மட்டுமே அவர்களுக்கு உரிய பாதுகாப்பையும் ஒப்பீட்டளவில் சற்றதிக சமூக அந்தஸ்தையும் அளிக்க முடியும்.

வேசிகளின் நிலை குறித்து எழுத சமூக அக்கறை போதும். வேறேதும் தேவையில்லை. உய்த்துணர்தல், துய்த்துணர்தல் என்ற ஏதேனும் ஒருவகையில் ஒரு விஷயத்தை உணர்ந்துகொள்ளலாம்.

கவிதைகளுக்குள்

சில கவிதைகள் நெஞ்சைத் தைக்கின்றன. சில வெறும் புலம்பல்கள் (ஆனால் அவை அப்படித்தான் இருக்கும். இருக்க வேண்டும். அதுதான் இயல்பு). சில எதிர்பார்ப்புகள். சில சுய பச்சாதாபங்கள், சாடல்கள், இன்னும் இதுபோல சொல்லிக் கொண்டே போகலாம். முக்கியமாக நான் கருதுவது ‘நாங்களும் பெண்கள்தான்’ என்று அவர்கள் சொல்லும் இடங்கள் மட்டுமே.

சில வேசிகள் ஆங்கிலமும் பேசுகின்றனர். அவை ஒன்றும் பெரிதாக உறுத்துவதில்லை. பிடித்த ஆனால் இங்கே பகிராமல் போகும் கவிதைகள் நிறைய உண்டு. பதிவின் நீளத்திற்கஞ்சி. ஒருசில கவிதைகளில் கேட்கப்படும் கேள்விகளின் வீரியம் தாங்கமுடியாததாக உள்ளது. அவற்றை வேண்டுமென்றே தவிர்க்கிறேன். இது என்னுடைய மனமுதிர்வின்மையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இருபத்தாண்டு நெடிய
பரத்தைமைக்குப்பின்பும்
புடவையுடுத்துகையில்
மாராபைச் சரிசெய்யும்
விரல்களின் அனிச்சை

நானும் பெண்தான் என்று சொல்கிறாள். இருபது ஆண்டுகள் என்று சொல்வதைவிட இருபத்தாண்டு என்று சொல்வது சிறப்பு. Two decades versus twenty years. எது நீண்ட காலமாகப் படுகிறது படிக்கும்போது? Obviously, two decades.

தொலைவே ஊரிலிருக்கும்
தாய் தந்தை தம்பி தங்கை
எவருமரிந்திளர் – அவர்தம்
உணவென் உடம்பென.

யோசித்துப் பார்த்தால் வலிக்கிறது. வேசிகள் என்ன வேலை செய்கிறேன் என்று சொல்வார்கள் பிறந்த வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்போது?

ஊருக்கு ஓர் பெயர்
மாற்றிக்கொள்கிறோம்
எப்போதுமிவர்கட்கு
தேவைப்படுகிறது
மண்ணின் மணம்.

மும்பை போனால் இந்தியில் பேசுகிறோம் நாம். பெங்களூரில் நமச்காரா சொல்கிறோம். சென்னையில் வணக்கம் சொல்கிறோம். நாம் எந்த விதத்தில் இவர்களிடமிருந்து மாறுபடுகிறோம்? இல்லை இல்லை நாம் வேறு அவர்கள் வேறு என்பவர்கள் கீழே உள்ளதைப் படியுங்கள்.

மதிப்பெண் வாங்கப் பேராசிரியரிடத்தோ
பேரம் பேசுகையில் கடைக்காரனிடத்தோ
வட்டி வாங்கவரும் கடன்காரனிடத்தோ
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடத்தோ
நீண்ட வரிசையில் முன் நிற்பவனிடத்தோ
பல்லிளித்துக் குழைந்து நின்றிருக்கக்கூடும்
உம் வீட்டுப்பெண்டிர் – அதன் பெயர் என்ன?


இனிஷியல் பிரச்சனை
தீர்க்கும் கருணையுடன்
சிற்சில கருக்கொலைகள்.

சமூகத்தில் நல்ல பெயர் கிடையாது. ஒரு வட்டத்திற்குள் வாழும் வாழ்க்கை வாய்ப்பதில்லை. கூடுதலாக மேலே சொன்ன பாவமும் செய்ய வேண்டியுள்ளது:(

அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை
ஒற்றைக் கணத்தில் எனைப் போலாக்கும்
வல்லமை வாய்ந்தது உன் அகால மரணம்.

இது எச்சரிக்கை மணி.

திரைக்கதாநாயகியாகும் கனவில் ரயிலேறிய சிலர்
வட்டி கட்ட வக்கில்லாது அசலுக்கு பதிலான சிலர்
நெடுஞ்சாலைக் கொடுஞ்சாவில் நாதியிழந்த சிலர்
கணவன் / காதலானால் களவாடி விற்கப்பட்ட சிலர்.


அரசியல் பிழைத்தோரது Ex- ஆசை நாயகிகள் சிலர்
பாலியல் வண்புணர்வில் பிய்த்தெறியப்பட்ட சிலர்
பரம்பரைப் பலக்கமாய்த் தொழில் தொடரும் சிலர்
பகட்டாய் வாழ்ந்திருக்கப் பொருள் தேடிவரும் சிலர்.

ஒரு பெண் பரத்தையாகும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மேற்சொன்ன இரு கவிதைகளும் பட்டியலிடுகின்றன.

விவாதம்

நான் படிக்கும் சில கதைகளில் வேசிகள் வந்து போவார்கள் அவ்வளவே. அவர்கள் கோணத்தில் இருந்து இதுவரை நான் யோசித்ததில்லை. யோசிக்க வேண்டிய அவசியம் இருந்ததுமில்லை. புத்தகத்தை எடுத்தோம், மேலோட்டமாக வாசித்தோம் (நான் வாசிப்பது நேரத்தைக் கொல்ல மட்டுமே), இனி அடுத்த புத்தகம் என்று போய்விடுபவன் நான்.

சில படைப்புகளை அது போல இப்போது கடந்துவிட முடிவதில்லை. யோசிக்க வைக்கின்றன. சமீபத்தில் யோசிக்க வைத்தவை ஜி. நாகராஜனின் படைப்புகள், தஞ்சை பிரகாஷ் கதைகள், யு. ஆர். ஆனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவல், திலீப்குமார் சிறுகதைகள். இதுவரை வாசித்ததெல்லாம் ச்சும்மா, வாசிப்பே இப்போதுதான் தொடங்குகிறதோ என்று கூட சமயத்தில் தோன்றுகிறது.

ஜி நாகராஜனின் படைப்புகள் படித்த பின் வேசிகள் மேல் ஒரு விதமான நல்ல அபிப்ராயம் மனதில் தோன்றியது உண்மை. அதுவரை அவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதுதான் என் அபிப்ராயம். சம்ஸ்காரா நாவல் படித்து முடித்ததும் அதில் வரும் சந்திரி கதாபாத்திரம் என் மதிப்பில் உயர்ந்து நிற்கிறாள்.

சந்திரி நாரணப்பாவின் (சந்திரி நாரணப்பாவின் ஆசைநாயகி)ஈமச் சடங்கு செலவிற்காக நகையைக் கழட்டித் தருகிறாள் (வேசியும் மனுஷியே, வேசியிடம் போன பொருள் திரும்பாது என்று யார் சொல்வது?). சாப்பிடாமல் இருக்கிறாள். ஆசாரியாரை (ஆசாரியார்தான் நாரணப்பாவின் சம்ஸ்காரத்தை எப்படி செய்யவேண்டும் என்று தீர்ப்பு கூறும் இடத்தில் இருப்பவர்) ஆசுவாசப் படுத்தப் போய்த் தன்னையே தருகிறாள் (இது பெரிய விஷயமா என்று கேட்காதீர்கள். அவள் நாரணப்பாவின் வேசி. ஊருக்கே வேசி அல்லல்). பிணமோ அழுகுகிறது. அக்ராஹார வாசிகளோ ஒரு முடிவும் எடுக்கவில்லை. தன்னுடைய எஜமானனின் பிணம் எரியூட்டப் பட வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு அவளுக்கு நிறைய இருக்கிறது. நடைமுறைத் தீர்வு எரியூட்டுவதுதான். அதைத்தான் அந்த நாவலில் அவள் செய்வாள்.

இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் உடலால் எத்தனை பேருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் அவளுடைய பிற செய்கைகளை முன்னிறுத்திப் பார்க்கும்போது (intrinsic value) விகல்பமாகவே தெரிவதில்லை.

விபசாரத்தை சட்டபூர்வமாக்குவது குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் உண்டு.

இப்போது இலைமறை காய்மறையாக நடைபெறும் விஷயத்தை அங்கீகரித்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமா, தீமைகள் அதிகமா?

ஏற்கனவே சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தாய்லாந்து போன்ற நாடுகளின் சமூக சூழல் எவ்வாறு உள்ளது?

ஆணுக்கு மட்டும்தான் வேசிகள் தேவையா? பெண்ணுக்கு அது போன்ற தேவைகள் இருக்காதா?

இந்தக் கேள்விகளுக்கு முன் நாம் கேட்க வேண்டிய மற்றொரு முக்கியக் கேள்வி: வேசிகள் தேவையா?

தெளிவான பதில் இல்லை என்னிடம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் தொழிலாளர்களின் அவசியத்தை விளக்கினார். கை கால் இல்லாத ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் உடலுறவில் நாட்டம் உண்டு. அவர் யாரிடம் உடலுறவு கொள்வது?

நான் சில உதாரணங்கள் தருகிறேன். அறுபது வயதான மறுமணம் செய்ய விரும்பாத மனைவியை இழந்த ஒரு முதியவர் யாரிடம் உடலுறவு கொள்வது? தோளுக்கு மேல் வளர்ந்த பையன், அவனுக்குக் கல்யாணமும் ஆகி விட்டது. தந்தைக்கோ அந்த விஷயத்தில் நாட்டம் இன்னும் உள்ளது. இரண்டாம் திருமணம் செய்ய உள்ளூர ஆசை. ஆனால் சமூகத்தின் மேல் பயம். என்ன செய்வார் அவர்?

பதிவின் இந்தப் பகுதிக்கு விவாதம் என்று தலைப்பிட்டேனே ஒழிய விவாதிக்க எனக்கு ஒன்றும் தோன்றுவதில்லை. அந்த அளவிற்கு ஞானம், தகுதி, தொலைநோக்கு, சமூகம் குறித்த பார்வை எனக்கு இல்லை. கேள்வி கேட்கவாவது தோன்றுகிறதே என்ற திருப்தியுடன் முடித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் தோன்றுகிறது.

புத்தகம் குறித்து மேலும் கொஞ்சம்

பிக்காசோவின் ஓவியம் அட்டையில். நல்ல யோசனை. ஆனால் நான்கு பெண்கள் முன்னட்டையில், ஒரு பெண் பின்னட்டையில். ஓவியத்தின் அழகை இது கெடுத்து விடுகிறது.

புத்தகத்தின் அமைப்பு: கவிதைகளை ஐந்து பகுதிகளாகப் பிரித்திருக்கிறார். அவற்றுக்கு ஐந்திணைப் பெயர்களையும் வைத்திருக்கிறார். ஐந்திணைப் பகுப்பு சரிவரப் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது.

அகநாழிகை வெளியீடு, ஐம்பது ரூபாய்

முடிவாக

இந்த நூல் விவாதிக்கப்பட வேண்டும். பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில்.

நூற்றைம்பது பாக்களில் ஒன்றிரண்டு (அல்லது அதற்கு மேலும்) ஒரு சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். அதை எழுத்தாகப் பார்க்காமல் பரத்தையின் கூற்றாகப் பார்த்தால் இந்தக் கஷ்டம் இல்லை.

முன்னுரையைப் படித்துவிட்டே தொகுப்பினுள் நுழைய வேண்டும். அதிர்ச்சி மதிப்பீடிற்கோ அல்லது அவசர அவசரமாக எழுதப்பட்ட ஒரு தொகுப்போ இல்லை இது.

சரவண கார்த்திகேயனை வாழ்த்த எனக்கு ஒரே ஒரு தகுதி மட்டுமே உண்டு. நான் அவரைவிட வயதில் மூத்தவன். வாழ்த்துகள் சரவண கார்த்திகேயன்! சந்திரயான் நூலுக்கு (கிழக்கு பதிப்பகம்) தமிழக அரசு விருது கிடைத்தமைக்கும் வாழ்த்துகள்!

பரத்தை கூற்று புத்தகம் பற்றிய நிறைய சுட்டிகளை இங்குக் காணலாம்.

பின்குறிப்புகள்:

பதிவில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களைக் குறித்து மேலும் கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன். அதற்காகவே இந்தப் பின்குறிப்புகள்.

ஜெயகாந்தனின் முன்னுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவை தனிப்புத்தகமாகவே கிடைக்கிறது. அவருடைய நாவல்களைப் படிக்கும்போது சமயத்தில் ‘ஏன் இப்படி’ என்ற கேள்வி தோன்றும். உடனே முன்னுரையைப் படித்தால் அதற்கான விளக்கம் கிடைக்கும். ஜெயகாந்தனின் எல்லா நாவல்களையும் வாசித்திராதவர்கள் இந்த முன்னுரையை வாசித்து அதிலிருந்து நூல்பிடித்து அவருடைய நாவல்களை வாசிக்கலாம்.

ஓவியம் பற்றி எழுதியதால் இதை எழுதுகிறேன். ஓவியம் ஒரு பெரிய முதலீடு. மல்டி மில்லியனர்கள் நன்கு வரையக் கூடிய ஓவியர்களை சிறுவயதில் அடையாளம் கண்டு அவர்களைப் போஷிப்பார்கள். எழுத்தாளர்களை அவ்வாறு இனம்கண்டு யாராவது செய்கிறார்களா என்று தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்