தேவதைகளும் புத்த‌கங்களும்

பெங்களூர் புத்தகத் திருவிழா - 2010 நாளை மறுநாள் (அதாவது நவம்பர் 12, 2010 - வெள்ளிக்கிழமை அன்று) தொடங்குகிறது. கொல்கத்தாவிற்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி என்று இதனைச் சொல்கிறார்கள் (300 ஸ்டால்கள், 2 லட்சம் பார்வையாளர்கள், 15 கோடி வியாபாரம்).  பெங்களூர் பேலஸ் க்ரவுண்ட்ஸில் ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்வைத் திருவிழா என்றழைப்பதைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆம். ஒருவகையில் நிஜமாலுமே திருவிழா தான்!

அலட்சிய‌ ஸ்லீவ்லெஸ் அல்லது அபாய மினிஸ்கர்ட் அணிந்த ஆயிரத்து சொச்சம் ‌வெண்சரும யுவதிகள் கையில் புத்தகங்களோடு (பெரும்பாலும் சேத்தன் பகத் அல்லது ஜே.கே.ரௌலிங், சில‌பேர் சிட்னி ஷெல்டன் அல்லது ஜெஃப்ரி ஆர்ச்சர், மீறிப்போனால் டேன் ப்ரௌன் அல்லது அயன் ராண்ட்) குறுக்கும் நெடுக்கும் பூனை நடை நடந்து உங்களை அலட்டாமல் இடித்துக் கடக்கிறார்கள் என்றால் அது திருவிழா இல்லையா?

பெயரில் கூட fair இல்லை; festival தான்!

புத்த‌கக்காட்சிக்கு நுழைவுச்சீட்டு என்ற வகையில் மட்டும் தலைக்கு இருபது ரூபாய் வசூலிக்கிறார்கள். ஆனாலும் தயக்கமின்றி தாத்தா பாட்டி முதல் நண்டு சிண்டு வரை குடும்ப சகிதம் கூட்டம் அம்முகிறது. சென்னை மக்கள் 5 ரூபாய்க்கு தலையிலடித்துக் கொள்வதை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். இருபது ரூபாய் வாங்குகிறார்கள் என்றால் அதற்கு தகுந்த மாதிரி ambiance ஏற்பாடு செய்கிறார்கள். கண்காட்சி அரங்கினுள் உள்ளே நடந்தால் வியர்வையில் உள்ளாடை வெளியாடை ஊறாது, தரை விரிப்பினில் கால்க‌ள் தடுக்கி விழ நேராது, டூவீலர் பார்க்கிங்கிற்கு யுத்தம் செய்ய வேண்டி இராது.

நம்மூரில் BAPASI மாதிரி இங்கே BBPA என்ற அமைப்பு வைத்து இதை நிர்வகிக்கிறார்கள். கன்னடம் அல்லாத மற்ற‌ இந்திய மொழிப் பதிப்பகங்கள் ஸ்டால் போட சேவை வரி உட்பட‌ கிட்டதட்ட 30,000 ரூபாய் கறந்து விடுகிறார்கள். இதன் காரணமாக‌ பங்கு பெறும் தமிழ் பதிப்பகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சென்ற ஆண்டு கிழக்கு, விகடன், கால‌ச்சுவடு, உயிர்மை ஆகிய‌ பதிப்பகங்கள் வந்திருந்ததாக‌ ஞாபகம். அவர்கள் கூட தமது புத்தக‌ வெளியீடுகளை exhaustive-ஆகக் கடை பரப்பியதாகத் தெரியவில்லை.

சரி, விஷ‌யத்திற்கு வருகிறேன். கண்காட்சியின் உயிர்மை பதிப்பக‌ அரங்கில் எனது பரத்தை கூற்று நூல் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார் பதிப்பாளர் பொன்.வாசுதேவன்‌. ஸ்டால் எண் பற்றிய விபரம் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறேன். நேரம் வாய்த்தால் பெங்களூர் ப்ளாகர், ட்விட்டர், பஸ் வாசிகளை சந்திக்கலாமென உத்தேசம். பார்க்கலாம்.

துவாபரயுகத்தில் குருக்ஷேத்திரமாய் இருந்திருக்குமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மிகப்பெரியது பெங்களூர் புத்தகக்காட்சி நடக்கும் பேலஸ் க்ரவுண்ட்ஸ். மொத்தம் ஐந்து வாசல்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைய வெவ்வேறு பேருந்து நிறுத்தங்களில் இறங்க வேண்டும் - அந்த அளவுக்குப் பெரியது. இவற்றில் Vishala Vihar என்றழைக்கப்படும் வாசலருகே தான் புத்தகக்காட்சி நடக்கிறது (ஆட்டோ ட்ரைவர்களிடம் மட்டும் வழி கேட்காதீர்கள். Vishala Vihar தவிர்த்த எல்லா வாசல்களுக்கும் அழைத்துச் சென்று விட்டு கடைசியில் அங்கே கொண்டு போய் விடுவார்கள். போன முறை எனக்கு அப்படித்தான் நேர்ந்தது).‌ மற்றபடி, தினம் காலை 11 மணி முதல் 9 மணி வரை நடக்கும் கண்காட்சி வரும் நவம்பர் 21, 2010 (ஞாயிற்றுக்கிழமை) அன்றோடு முடிவடைகிறது.

பெங்களூர் அன்பர்கள் / நண்பர்கள் முந்துங்கள்!

Comments

viki said…
அலட்சிய‌ ஸ்லீவ்லெஸ் அல்லது அபாய மினிஸ்கர்ட் அணிந்த ஆயிரத்து சொச்சம் ‌வெண்சரும யுவதிகள் கையில் புத்தகங்களோடு (பெரும்பாலும் சேத்தன் பகத் அல்லது ஜே.கே.ரௌலிங், சில‌பேர் சிட்னி ஷெல்டன் அல்லது ஜெஃப்ரி ஆர்ச்சர், மீறிப்போனால் டேன் ப்ரௌன் அல்லது அயன் ராண்ட்) /////
.
.
அது நூற்றுக்கு இருநூறு விழுக்காடு உண்மை."எனக்கு டமில் தெரியாது" தொடங்கி "தமிழில் சிறந்த எழுத்துகளே இல்லை" என்பது வரை ஆயிரம் குறை சொல்வார்கள் இந்த அறிவு சீவிகள்!சரி அப்போ தாஸ்தாயேவ்ஸ்கி டால்ஸ்டாய் ,மாக்சிம் கார்க்கி etc..etc..படித்திருப்பார்கள என்றால் பதில் "இல்லை" .யப்பா இவுக படிக்கும் ரசனை புல்லரிக்குது!!!
viki said…
அது சரி. அப்போது ராணி காமிக்ஸ் என்ற பெயரில் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்திற்கு ஒரு முறையோ வரும்(சரியாக ஞாபகம் இல்லை) வரும்.அதில் இந்த மாயாவி, கார்த் (கார்த்தி இல்லை!) போன்ற கதாபாத்திரங்கள் வரும்.இப்போ வருகிறதா என தெரியவில்லை!மற்றொரு புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்