நானெழுதிய‌ சில கடிதங்கள்

பரத்தை கூற்று புத்த‌கத்தினை வைரமுத்து, சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஞாநி, ஜெயமோகன் என நான் மிக விரும்பும் / மதிக்கும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அனுப்பி வைத்திருந்தேன் - அவற்றுடன் இணைத்திருந்த Covering-Letterக‌ள் இவை:

*******

05-செப்டெம்பர்-2010,
பெங்களூரு மஹாநகரம்.

கவிப்பேரரசு அவர்களுக்கு,

வந்தனம்.

2007ம் ஆண்டு குங்குமம் வார‌ இதழ் நடத்திய ‘வாசகர் கவிதைத் திருவிழா’வில் என‌து ‘ஒருத்தி நினைக்கையிலே’ என்ற படைப்பை முத்திரைக்கவிதையாகத் தேர்ந்தெடுத்திருந்தீர்கள் (6-9-2007 தேதியிட்ட இதழ் – பார்க்க இணைப்பு). அதுவே பிரசுரம் க‌ண்ட‌ என் முதல் படைப்பு; அதுவே என் முதல் இலக்கியப்பிரவேசம். அடுத்தடுத்து என்னை எழுத உத்வேக உரமேற்றியது அந்த மகாதிருப்புமுனை.

அவ்விதழில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் பற்றி நீங்கள் எழுதிய குறிப்பில் "இந்தக் கவிதைகளையெல்லாம் பெரும்படைப்புகள் படைப்பதற்கான பயிற்சிக்களங்கள் என்றே கருதுகிறேன்" என்று சொல்லியிருந்தீர்கள். இன்று கிட்டதட்ட மூன்று முழு ஆண்டுகள் கழிந்த நிலையில், ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத்தொகுதியுடன் உங்கள் முன் நிற்கிறேன். என்னுடைய இம்முயற்சியை பெரும்படைப்பா என்பதைக் காலம் தீர்மானிக்கட்டும்.

என்னை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள் என்பதால் என்னுடைய முதல் கவிதைப்புத்தகமான இத்தொகுப்பை உங்களுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இதில் புதிதாய்ச் சொல்லிச் சிலாகிக்க ஏதுமில்லை –

கடவுளுக்கு பக்தன் காணிக்கை செலுத்துவது மிகப் புராதனப் பழக்கமே.

நன்றி,

மரியாதை கலந்த ப்ரியங்களுடன்,
சி.சரவணகார்த்திகேயன்

இணைப்புகள்:
1. குங்குமம் பக்கங்களின் ஒளிப்பிரதி
2. பரத்தை கூற்று கவிதைத்தொகுப்பு

*******

பெங்களூர்,
09-அக்டோபர்-2010

டியர் சாரு,

அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எனது முதல் கவிதைத் தொகுதியான‌ பரத்தை கூற்று புத்தகத்தின் பிரதி ஒன்றினை இத்துடன் இணைத்திருக்கிறேன். நான் மிக மதித்து நேசிக்கும் சமகாலத் தமிழ்ப் படைப்பாளுமைகளுள் ஒருவரின் பார்வைக்கு என் முதல் எழுத்தினை வைப்பதில் பதட்டச்சாயை படர்ந்த‌ பெருமித மகிழ்வை உணர்கிறேன்.

நன்றி,

சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com

*******

பெங்களூர்,
09-அக்டோபர்-2010

டியர் எஸ்ரா,

பொன்.வாசுதேவன் அவர்களின் அகநாழிகை பதிப்பகம் மூலம் வெளிவந்திருக்கும் எனது முதல் கவிதைத் தொகுதியான‌ பரத்தை கூற்று புத்தகத்தின் பிரதி ஒன்றினை இத்துடன் இணைத்திருக்கிறேன். என்னைச் சாகடிக்காமல் மூழ்கடித்து வரும் ஒரு விசித்திர எழுத்துக்காரனுக்கு – எந்தளவிற்கெனில், காதல் நுரைத்துப்பொங்கிய என் அந்தமான் தேனிலவுப்போதையினூடே நான் வாசித்துக் கிடந்தது யாமம் நாவலை – என் முதல் படைப்பினை அனுப்புவதில் உளம்கொளாப் பேருவகை கொள்கிறேன்.

நன்றி,

சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com

*******

பெங்களூர்,
09-அக்டோபர்-2010

டியர் ஞாநி,

பொன்.வாசுதேவன் அவர்களின் அகநாழிகை பதிப்பகம் மூலமாக‌ வெளிவந்திருக்கும் எனது முதல் கவிதைத் தொகுதியான‌ பரத்தை கூற்று புத்தகத்தின் பிரதி ஒன்றினை இத்துடன் இணைத்திருக்கிறேன். என்னை வசீகரித்த, சில சமயம் வழிநடத்திய சமகாலச் சமூக ஆர்வலர்களுள் முதல்வருக்கு என் படைப்பினை அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நன்றி,

சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com

*******

பெங்களூர்,
03-நவம்பர்-2010

டியர் ஜெயமோகன்,

அகநாழிகை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் எனது முதல் கவிதைத் தொகுதியான‌ பரத்தை கூற்று புத்தகத்தின் பிரதி ஒன்றினை இத்துடன் இணைத்திருக்கிறேன். இது வேசிகள் தம் வாழ்க்கையை வார்த்தையாக்கிச் சொல்வதாய் அமைந்த பரப்பிலக்கியக் கவிதைகளின் சிறுகொத்து. ஒரு மொழியில், ஒரு சமயத்தில், ஒரு எழுத்தாளனுக்கு மட்டுமே சாத்தியப்படும் இடம் என்று ஒன்று உண்டு என முன்பொரு முறை சொல்லியிருந்தீர்கள். இன்று தமிழில் அந்த இடத்தில் அமர்ந்திருப்பவரது பார்வைக்கு என் கன்னி முயற்சியினை வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன் – உடன் சங்கோஜமும்.

நன்றி,

சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com

1 comment:

BalHanuman said...

Dear CSK,

உங்கள் ஒவ்வொரு கடிதமுமே ஒரு கவிதை போல் உள்ளது.

தேனிலவுக்குப் போகும்போது கூட நாவலும் கையுமாகவா? Too much :-)