பரத்தை கூற்று : அதிஷா

பரத்தை கூற்று வெளியீடு பற்றி பத்திரிக்கையாளர் அதிஷாவின் பதிவு இது:

*******

http://www.athishaonline.com/2010/10/blog-post_18.html

*******

at Monday, October 18, 2010

சொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி

இவ்வளவு சீக்கிரமே அவன் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அன்றைய தினம் விஜயதசமியாகையால் அலுவலகம் விடுமுறை. குமாஸ்தாயிய மனநிலையின் படி விடுமுறை நாளில் வெளியே சுற்றி நேரத்தை வீணடிக்காமல் மனைவி மக்களோடு செலவில்லாமல் டிவி புதுப்படம் மானாட மயிலாட பார்த்து சுகிப்பவன். இருந்தாலும் இது அதிகம் சந்தித்திராத இணைய நட்புக்காக..இலக்கியத்திற்காக சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியதாயிருக்கிறது. ஐந்து மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணிக்கே தயாராகிவிட்டிருந்தான். பெட்ரோல் போட்டு காற்றுப்பிடித்து போகும் வழியில் புகைவிட்டு டிஸ்கவரிபுக் பேலஸை அடைகையிலே நேரம் 4.55.

கொடுமை என்னவென்றால் அவனுக்கு முன்பாகவே , பார்வையாளர்கள் வருகைக்கு முன்பாகவே இலக்கிய சூறாவளிகள் வருவதற்கு முன்பாகவே விழாவின் சிறப்பு விருந்தினரான சாருநிவேதிதா வந்துவிட்டிருந்தார். சமகால இலக்கிய பரப்பில் இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்பது எண்ணவொண்ணா ஆச்சர்யமே.. அண்மையில் ஒரு இசை இலக்கிய விமர்சகரின் (இலக்கிய இசை விமர்சகர்?) புத்தக விமர்சன கூட்டம் ஆறு மணிக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆடி அசைந்து வந்த இலக்கிய பிதாமகர்களாலும் சினிமா ஜிலாக்குகளாலும் உத்தமதமிழ் எழுத்தாளர்களாலும் ஏழுமணிக்குத்தான் தொடங்கினர். இதனால் பிரபல இலக்கிய விமர்சகர் ராம்ஜி யாகூ உள்ளிட்ட பலரும் கோபித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறியதெல்லாம் பழைய கதை.

அவன் கண்களுக்கு சாரு எப்போதும் இல்லாத அளவிற்கு மொட்டைதலையாய் இருந்தாலும் கவர்ச்சிக்கன்னணாக தெரிந்திருக்க வேண்டும். பார்த்ததுமே குப்புற விழுந்து வணக்கம் தல என்றான். அவர் எப்போதும் போல அகல திறந்த கண்களுடன் அடடே நீயா? என்கிற ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தார். சாருவிடம் அவனுக்கு பிடித்ததே அவன் எதை சொன்னாலும் ஓஓஓ என்று ஒரு ஆச்சர்ய பார்வை பார்ப்பார். அப்படியே பதிப்பாளர் அகநாழிகை பொன்வாசுதேவனுடன் எங்கோ டீக்கடை பக்கம் சாரு மறைய , தூரத்தில் தெரிந்த புனைவு எழுத்தாளர்கள் மணிஜி நர்சிம்ஜிகளோடு தன் பேச்சை தொடங்கினான். பேச்சு பேச்சாக இருக்கும் போதே வாங்க பாஸ் புக்க வெளியிட்டுற போறாய்ங்க என்று நர்சிம்ஜி சொல்ல அவனும் அவர்களோடு மேலேறினான். விழா 5.30க்கு ஷார்பாக தொடங்கியது.

டிஸ்கவரி புக் பேலஸில் இதுவரை பல புத்தக வெளியீடுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இம்முறை அங்கே அனல் பறந்தது. மக்களெல்லாம் நனைந்து போய் அமர்ந்திருந்தனர். நானும் நர்சிம்ஜியும் சாருவுக்கு அருகில் அமர்ந்துகொண்டோம். பீப்லி லைவ் குறித்து நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் சாரு என்றான். ''அட இதையேதான்ப்பா அந்த கலாகௌமுதி எடிட்டரும் சொன்னாரு'' என்றார் சாரு. அவன் புன்னகைத்தான். என்ன சாரு இருக்க இருக்க இளமை கொப்பளிக்க அழகாகிட்டே போறீங்களே என்றான் அவன்.. சாரு புன்னகைத்தார். கேரளாவுக்கு நாவல் எழுதப்போனீங்களா இல்ல ஃபுல் சர்வீஸா? ரெண்டும்தான்பா என்று கூறியவர் மீண்டும் புன்னகைத்தார். அடுத்த நாவல் என்ன ஒரு க்ளுவும் இல்லையே? அதைப்பத்தி இன்னைக்கு பேசிரலாம்னு இருக்கேன்ப்பா! ஆர்வம் மேலிட முதல் வரிசையில் அவன் அமர்ந்திருக்க மேடையேறினார் சாரு.

அது எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் என்னும் இளம் எழுத்தாளரின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா. சாருவுக்கும் கவிதைக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம். பாவம் அந்த எழுத்தாளர் சாருவை வைத்துதானா தன் புத்தகத்தை வெளியிட வேண்டும்? சொந்த செலவில் சூனியம். வெளியிட்டார். சாரு பேச்சை தொடங்கினார். அவருடைய பேச்சு..

'' இன்றைக்கு அரசியல்,ஜனரஞ்சக பத்திரிகைகள் மட்டுமல்ல சிறுபத்திரிகை இலக்கிய உலகமும் ஊழல் நிறைந்த ஒன்றாகிவிட்டது. பொது மேடையில் இரண்டு எழுத்தாளர்கள் பிரபல இயக்குனருக்கு சோப்புப்போட்டு காலில் விழாத குறையாக வாய்ப்பு கேட்கும் இழிநிலைதான் இன்றைக்கு இருக்கிறது.'' என்று பேசத்தொடங்கியவர் அப்படியே எந்திரன் பக்கம் தாவினார். படத்தை கொஞ்ச நேரம் கிழித்து தொங்கவிட்டார். அப்படியே சுற்றியவர் ஆப்பிரிக்காவின் சர்வாதிகார மன்னன் (பெயர் குறிப்பிடவில்லை) ஒருவனுடைய அராஜகங்கள் குறித்தும், அவன் எப்படி புணர்வதற்காக பெண்களை தேர்ந்தெடுப்பான் என்பதையும் குறிப்பிட்டார். அதே போல தமிழ்நாட்டிலும் ஒரு பேரரசர் இருப்பதாகவும், மதுரையில் ஒரு இளவரசரும் சென்னையில் ஒருவரும் இருப்பதாகவும் சொன்னார். அடுத்து அரசியின் ஆட்சி வரும்போல் தெரிகிறது என்று தொடர்ந்தார்.

சிலே என்கிற தேசத்தில் அனைவருமே கவிஞர்களாம்.. 'போலவே' தமிழ்நாட்டிலும்.

வெளியிடப்பட்ட புத்தகத்தினை வைரமுத்துவுக்கு சமர்ப்பிருந்திருந்தார் எழுத்தாளர். ஆனால் புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து என குறிப்பிடப்பட்டிருந்தது.. அதென்னய்யா கவிப்பேரரசு என்று அடைமொழிகள் குறித்து அரைமணிநேரம் பேசினார். இளையராஜாதான் இசை ஞானி என்றால் மற்றவர்களெல்லாம் என்ன இசை முட்டாள்களா என்று அந்த பேச்சு கொஞ்ச நேரம் தொடர்ந்தது.

பின் கமலஹாசனை மகாநதியில் பாரட்டியதையும் குறுதிப்புனலில் விமர்சித்ததையும் , குறிப்பிட்டு சொன்னார். அசோகமித்திரனின்
இதற்கு நடுவே தன்னுடை நாவல் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சாரு சில காலம் ஆண் விபச்சாரியாக இருந்த அனுபவங்களே இந்நாவல், இதில் அவர்களுடைய உடல் மீதான வன்முறையும், அதன் வலியும் வேதனையையும் பதிவு செய்யப்போவதாகவும் கோடிட்டு காட்டினார். இதே போல லத்தீன் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் ஆண் விபச்சாரியாக இருந்து அந்த அனுபவங்களை நாவலாக எழுதியுள்ளாராம். சாருவின் நாவல் டிசம்பர் மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் காமராஜர் அரங்கில் வெளியிடப்படவுள்ளதாக ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். கிம்கிடுக்கின் திரைப்படங்களில் உடல்மீதான வன்முறை எப்படியெல்லாம் காட்டப்பட்டது என்பது குறித்துப்பேசினார். 3

கடைசியாக சில சமகால உலக கவிதைகளை வாசித்துக்காட்டினார். பின் பாவப்பட்ட அந்த எழுத்தாளரின் கவிதைகள் குறித்து பேசினார். இந்த கவிதை தொகுப்பை சுஜாதா உயிரோடிருந்தால் தலை தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்.. வைரமுத்து பாராட்டுவார்.. ஆனால் இந்த தொகுப்பில் வெறும் வார்த்தைகள்தான் இருக்கின்றன.. பரத்தையர்களில் குரல் இக்கவிதைகளில் ஒலிக்கவில்லை.. அவர்களுடைய வலியும் வேதனையும் இல்லவே இல்லை.. இந்த தொகுப்பில் சில கவிதைகளில் நல்ல வார்த்தை விளையாட்டு உண்டு. என்று குறிப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்த அந்த எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். கவிதை நன்றாக இல்லை என்று இறுதியாக சொன்னவர்.. இப்படி சொல்வதற்காக சரவணகார்த்திகேயன் சந்தோசப்படவேண்டும்.. என்று உரையை பேசிய சில மணி நேரங்களில் சில நிமிடங்கள் புத்தகத்தைப்பற்றியும் பேசி முடித்துக்கொண்டார். சரவணகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.. இதை எதிர்பார்த்துதான் அவர் சாருவையே அழைத்தாராம்.

இதற்கே வெக்கை தாங்க முடியவில்லை.. உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி எப்படா சாரு பேசி முடிப்பாரு வெளிய காத்தோட்டமா போய் நிற்கலாம் ஆக்ஸிஜனும் கார்பன் மோனாக்ஸைடும் கொஞ்சம் நிக்கோடினும் புடிக்கலாம் என்று இருந்தது அவனுக்கு. சாரு பேசிமுடிக்கவும் வெளியேறினான். சாருவை தொடர்ந்து ச.கா ஒரு கத்தை பேப்பர்களுடன் ஏற்புரை வழங்க.. அவனும் அவனுடைய சமகால வலைப்பதிவர்களோடும் இலக்கியவாதிகளோடும் வெளியே புகைவிடத்தொடங்கினர். மழைபெய்ய தொடங்கியது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்