பரத்தை கூற்று : கவிஞர் யாத்ரா

கவிஞர் யாத்ராவை நெடுங்காலமாகவே வாசித்து வருகிறேன். அவரும் அப்படியே என சில தினம் முன் அவர் அனுப்பிய‌‌ மின்னஞ்சலின் வழி புரிந்தேன். அதன் ஒரு பகுதி இது:

*******

அன்பின் சி சரவணகார்த்திகேயன்

நானும் உங்களை நீண்ட நாட்களாகவே வாசித்து வருகிறேன். உங்களை நான் நீண்ட நாட்களாகவே அறிவேன். உங்களுக்கும் சாரு அவர்களுக்குமான கடிதப்பரிமாறல்கள் அவற்றில் உங்களின் கூர்மையான அவதானிப்பு மற்றும் உங்கள் நடை இவற்றையெல்லாம் வெகுவாக வியந்திருக்கிறேன். உங்களின் சர்க்கார் பிலாசபிக்களை படித்து மிக மிக ரசித்திருக்கிறேன். பிறகு அகநாழிகை பதிப்பகத்தில் தங்கள் கவிதைத்தொகுதி வரப்போவதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.

கவிதைத்தொகுதியை வாசிக்க மிகுந்த ஆவலோடிருக்கிறேன்.

என்றும் அன்புடன்
யாத்ரா

*******

பரத்தை கூற்று தயாரான‌வுடன் யாத்ராவிற்கும் ஒரு பிரதி அனுப்பியிருந்தேன். பதிலாய் இன்று அவரிடமிருந்து வந்த மின்னஞ்சலினை அவர் அனுமதியுடன் இங்கே ப‌திகிறேன்:

*******

அன்பின் கார்த்தி

முதலில் மிக்க நன்றி, அருமையான இத்தொகுப்பை வெளிவந்த உடனேயே வாசிக்க அனுப்பித்தந்தமைக்கு. அதிகம் பேசப்படாத பேசத்தயங்கும் விஷயங்களை தேர்ந்து கொண்டதிலேயே இக்கவிதைத்தொகுப்பு முழு கவனம் பெறும், அவசியம் பேசப்படவேண்டிய எழுதப்படவேண்டிய விஷயங்கள் இவை.

இப்பொழுது தான் தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடித்தேன், குரல்கள் குரல்கள் குரல்கள், அமைதியாக அருகில் அமர்ந்து அவர்கள் மனதுடன் வெளிப்படையாக பாசாங்கில்லாமல் அவர்கள் ஆழ்மன உணர்வுகளை பேசக்கேட்டது போலிருக்கிறது, கோவம் ஆதங்கம் பரிதாபம் சுயஇரக்கம் கர்வம் எள்ளல் துரோகம் கருப்பு நகைச்சுவை கறார்த்தனம் பெருமிதம் ஆதிக்க மனநிலை திமிர் தன் தரப்பு நியாயம் மதிநுட்பம் புணர்ச்சியின் கலைநயம் தியானநிலை யோகநிலை ஞானநிலை ஏக்கம் வியாபார தந்திரம் விதவித அனுபவங்கள் அந்தரங்க உரையாடல்கள் குத்திக்காட்டல்கள் சித்தர் மனநிலை யுக்திகள் அபத்தங்கள் பொய்கள் உடல் பற்றிய புரிதல் சீண்டிப்பார்த்தல் ரகசியங்கள் அலட்சியம் நுணுக்கம் நெருக்கடிகள் கிண்டல்கள் தேவை ஆழ்மன ஆசைகள் நிராசைகள் நிர்பந்தம் நக்கல் இயலாமை பகடி,,,,,,,,,,,,,,,,, என எவ்வளவு உணர்வுகள்.

பொதுப்புத்தியினரால் கீழ்த்தரமாகப் பார்க்கப்படும் பாலியல் தொழிலாளிகளை மனதோடு மனதாக ஆழமாக தோழமையோடு அணுகி எழுதியிருக்கிறீர்கள், இது இது இது என குறிப்பிட்டு சொல்ல முடியாத படிக்கு எல்லாமே பிடித்திருக்கிறது. இவ்வளவு அருமையான கவிதைகள் கவிதைத்தளம் வாய்த்திருப்பது அபூர்வம், என் மனமார்ந்த வாழ்த்துகள். நுட்பமான அவதானிப்புகள் எல்லாம் ஐந்நூறு கவிதைகளிலிருந்து 150 கவிதைகள் அதுவும் 21 வயதில், அதுவும் அந்த வயதில் சாதாரணர்களால் தொடத்தயங்கும் தளம்,,,, பிரம்மிப்பாக இருக்கிறது. இன்னும் நீங்கள் நிறைய கவிதைகள் எழுதவேண்டும் என்பது என் ஆசை, எல்லா உணர்வுகளையும் கவிதையாக்கும் நுட்பம் உங்களுக்கு மிகச்சிறிய வயதிலேயே கைவந்திருக்கிறது, வாழ்த்துகள். மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பாக வெளிவந்திருக்கிறது பரத்தைக்கூற்று.

வாழ்த்துகள் நண்பா

என்றும் அன்புடன்
யாத்ரா

*******

இது போன்ற சகபடைப்பளிகளின் இன்சொற்கள் அடுத்தடுத்த‌ படைப்புகளைக் கூடுதல் பொறுப்புணர்வோடு உருவாக்குவது தொடர்பாய்ப் பெரும்மலைப்பையே தருகின்றன.

No comments: