படித்தது / பிடித்தது - 90

அப்பா இன்றைக்கும் கனவில் வந்தார்
நினைவுக்குள் மிதக்கிற
சிகரட் முத்தமும்
சாராயம் நெடிக்கிற
கச்சான் அல்வா உருண்டையும்
இன்றைக்கும் அவரிடமிருந்தது…
தாடிமொய்த்த அவர் கன்னத்துக்கு
நான் அளிக்கும் முத்தத்தின் விலையாய்
கச்சான் அல்வாவைச் சொல்கிறார்…
எப்போதும் அவர்
இப்படித்தான் வருகிறார்..
நான் வளர்ந்ததை அப்பா அறியாரா
இல்லை வளர்ந்த பின்னான அப்பாவை
என் கனவுக்குத் தெரியாதா
பத்தொன்பது வருடங்கள்
கழிந்துவிட்டதென்றும்
என் முத்தங்களிற்கான
காரணங்களும்
அர்த்தங்களும் மாறிப்போயின என்பதையும்
அவருக்குச் சொல்வதாய்
தீர்மானித்த அன்றைக்கு உணர்ந்தேன்
அப்பாவரும் கனவுக்காய்
காத்துக்கிடக்கிற
குட்டிப்பையன் ஒருவன்
எனக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை

- த. அகிலன்

நன்றி: ஆனந்த விகடன், 26.12.2008

No comments: