அகநாழிகை - ஓர் அறிமுகம்

அகநாழிகை ஜூன் இதழ் வெளியாகியுள்ளது.

எந்தவொரு சிற்றிதழையும் போல் இன்ன கால இடைவெளியில் இதழ் வெளி வரும் என்று அறுதியிட்டுக் கூறவியலாத நிலையாமையுடன் தான் அகநாழிகையும் இருக்கிறது. அதன் முதலிர‌ண்டு இரு மாத இதழ்களாக வெளியாயின; பின்னிரு இதழ்கள் மூன்று மாத இடைவெளியில் வெளியாகி இருக்கின்றன. சற்றேரக்குறைய அல்லது உத்தேசமாக அகநாழிகையை ஒரு காலாண்டிதழாகக் கொள்ளலாம்.

தற்போது வெளியாகி கடைகளில் கிடைத்துக் கொண்டிருக்கும் இந்த ஜூன் மாத இதழ் அதற்கு முந்தைய மூன்று இதழ்களைக் காட்டிலும் வடிவ‌மைப்பில் நன்றாகவே வந்திருக்கிறது. அட்டையின் தாள், முகப்புப் படம், தாள்களின் தரம், எழுத்துக்கள், லேஅவுட் எல்லாமே ஓரளவு நல்ல நிலையை எய்தியிருக்கிறது. ஆனால் உள்ளடக்கத்தின் பரிணாம‌ம் குறித்த‌ திருப்தி சற்றே விவாதத்திற்குரியதாக இருக்கிற‌து.

என்னைப் பொறுத்தவரை, அகநாழிகை இதழுக்கு தற்போதைய‌ அவசரத் தேவை இரண்டு:‌ 1. அத‌ன் வாசகர்களை அதிகமாக்குவது 2. அதில் எழுதுபவர்களை அதிகமாக்குவது. இதில் பின்னது முன்னதைக் காட்டிலும் முக்கியமானது. அதன் ஒரு பகுதியாக இதழின் ஆசிரியர் குழு விரிவாக்கத்தைக் கொள்வது நல்லது. தற்போதைக்கு வாசுதேவன் ஒருவரே ப‌டைப்புகளைத் தேர்ந்தெடுத்தல் / நிராகரித்தல் எல்லாவற்றையுமே செய்வதாகத் தெரிகிறது. அது இதழின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாக இன்னும் சொல்லப்போனால் ஊறு விளைவிப்பதாகவே இருக்கும்.

மேற்சொன்ன‌ இந்த இரு விஷயங்களும் நிகழ அகநாழிகை இதழ் பரவலாக தீவிர வாசகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் ஒரு குழுவுக்கான - குறிப்பாய் வலைப்பதிவர்களுக்கான - அச்சு ஊடகத்தளமாக (மட்டும்) அகநாழிகை சுருங்கி விடக்கூடிய‌ அபாயம் இருக்கிறது.

அடுத்தது இதழின் பிராண்டிங் - இதழ் பெயரின் எழுத்துருவில் (பிரத்யேக எம்ப்ளமும் இதில் அடங்கும்) தொடங்குகிறது அது. காகிதத்தின் தரம், உள்ளிருக்கும் எழுத்திருக்கள், பக்கங்களின் எண்ணிக்கை, புத்த்கத்தின் நீள-அகலம், உள்ள‌டக்க வரிசை என்று பல விஷயங்கள் இந்த பிராண்டிங் என்பதன் கீழ் இருந்தாலும் ஒரு புதிய சிற்றிதழில் இதில் சில வேறுபாடுகளை அனுமதிக்கலாம். ஆனால் முதலாவதாயும் பிரதானமாதாயும் இருக்கும் இதழின் பெயரின் எழுத்துருவையே மாற்றிக் கொண்டே இருப்பது நல்லதல்ல.

இந்த இதழின் உள்ளடக்கத்தைப் பொறுத்தம‌ட்டில் ஆசிரியர் தலையங்கமும், ஜெயந்தி சங்கரின் கட்டுரையும், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் நேர்காணலும், ரா.கிரிதரனின் தொடரும், அய்யப்ப மாதவனின் சிறுகதையும், ஆர்.அபிலாஷின் விமர்சனமும் முக்கியமானவை. மற்றபடி, கவிதைகள் தான் (என்னுடையதையும் சேர்த்து) பக்கங்களை நிரப்பியிருக்கின்றன. சில கவிதைகளும் முக்கியமானவையாகவே தோன்றுகின்றன.

*******

அகநாழிகை கிடைக்குமிடங்கள்:

சென்னை:
1. நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர் [போன்: 28158171, 28156006]
2. டிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு [செல்: 9940446650 போன்: 65157525]
3. திரு.குகன், நாகரத்னா பதிப்பகம் [செல்: 9940448599]

மதுரை:
பாரதி புக் ஹவுஸ், 28, வணிக வளாகம் [செல்: 9789336277]

கோயம்புத்தூர்:
விஜயா புத்தக நிலையம், 20, ராஜவீதி [போன்: 04222577941]

சேலம்:
தக்கை வெ.பாபு [செல்: 9865153007]

*******

இதழுக்கு சந்தா செலுத்த‌ அல்லது மேலும் விவரங்கள் அறிய‌ அகநாழிகை இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் அவர்களை aganazhigai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் / 9994541010 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

*******

ஒரு இதழை வெளிக்கொணர‌ மட்டும் கிட்டதட்ட கால் ல‌ட்சம் இந்திய ரூபாய்களுக்கு மேல் செலவு இழுத்து விடுகிறது என்று வாசுதேவன் குறிப்பிட்டதாக ஞாபகம். தவிர, எப்போதும் தேவைப்படலாம் என்பதால் கணிசமான எண்ணிகையிலான அகநாழிகை பதிப்பக வெளியீடுகளைக் கையிலேயே வைத்துக் கொண்டு தான் அலைகிறார். பிரதி பலன் எதிர்பாராத‌ (practically, எதிர்பார்க்கவும் முடியாத) அந்த தனி மனித இலக்கிய முயற்சிக்காகவே நல்ல தரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தச் சிற்றிதழை தீவிர வாசகர்கள் அனைவருக்கும் சிபாரிசு செய்கிறேன்.

Comments

viki said…
நல்ல ஒரு மற்றொரு இதழை அறிமுகம் செய்ததற்கு நன்றி.அதைவிட அந்த இதழ் எங்கு கிடைக்கும் என முகவரியுடன் வெளியிட்டதற்கு மேலும் ஒரு நன்றி.
ஏனெனில் நான் சென்னையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் காலச்சுவடு புத்தகத்திற்காக அலையாத கடை இல்லை (உயிர்மை ஆண்டு சந்தா செலுத்திவிட்டதால் அந்த அலைச்சல் மிச்சம்).கடைசியில் அலைச்சல் மட்டுமே மிச்சம்.பிறகு நான் எனது சொந்த ஊரிலேயே ஒரு கடையை கண்டு பிடித்து விட்டேன்.
இந்த ஆங்கில விட்டலாச்சாரியார் ஹாரி போட்டேரை படிக்கதான் பலர் அடித்து பிடித்து அலைகின்றனர்.
கேட்டால் தமிழில் நல்ல எழுத்துக்களோ அல்லது எழுத்தாளர்களோ இல்லை என்பர்(அப்போ சுஜாதா போன்றவர்கள் நாக்கை வழித்து கொண்டா இருந்தனர்?இவர்களுக்கு தமிழில் படிப்பது இழுக்கு.அவ்வளவே.)இந்த ஹாரி போட்டர் புத்தகம் தெருவில் தள்ளுவண்டியில் விற்கின்றனர்.ஆனால் நல்ல தமிழ் இலக்கிய இதழ்களை நாய் போல் அலைந்தாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை நாசமாய் போன தமிழகம் மற்றும் தமிழன்!!!

Popular posts from this blog

‪அனு சித்தாரம்

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

நுளம்பு [சிறுகதை]