சகா : சில குறிப்புகள் - 10

சகாவுக்கு குறைந்தபட்சம் நூறு ரயில் சினேகங்களாவது இருக்கும் (till now and counting...!) - அத்தனையும் பெண்கள். உடன் பயணிக்கும் ஆண்கள் யாருடனும் - டி.டி.ஆர் உட்பட - அவன் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. அதுவே பெண்ணென்றால் பயணம் முடிவதற்குள் குறைந்தபட்சம் செல்பேசி எண்களாவது பரஸ்பரம் பரிமாறப் பட்டிருக்கும். அதிகபட்சம் எச்சில்.

அப்படி தான் ஒருத்தி ரயிலிலிருந்து இறங்கும் போது சகாவிடம் "வேணாங்க, அவருக்கு தெரிஞ்சா வெட்டியே போட்ருவாரு" என்றாள், அழும் கைக்குழந்தையை தோளில் சாய்த்து சமாதானப்படுத்திக் கொண்டே. பின்னாலேயே வந்த அந்த‌ 'வெட்டுபவர்' சகாவை விரோதமாய்ப் பார்த்துக் கொண்டே இறங்கிப் போனார். அவள் திரும்பிப் பார்க்கவேயில்லை.

சகா த‌ன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அதில் அழுத்தமாய் ஒட்டியிருந்த அவள் குங்குமம் இன்னமும் காய்ந்திருக்கவில்லை.

**********************

இத்த‌னை பெண் சகவாசத்தில் திளைத்திருந்த போதும், சகாவிட‌மிருக்கும் பிரத்யேக குணம் என்னவென்றால், எந்தக் காலத்திலும் யார் பின்னாலும் அவன் அலைந்து திரிந்ததில்லை. எல்லாம் தானாய்க் கனிந்தவை. இப்படிப்பட்ட ஒரு கம்பீர‌ப் பின்புலத்துடன் கூடிய சகாவின் இருபதாண்டு சரித்திரத்துக்கும் சோதனை வந்து தொலைத்தது - ஓர் அழகான ராட்சசியின் வடிவில்.

இறைவனின் திருவிளையாடலை என்னவென்பது!

மிர்ச்சி சுசித்ராவைக் காப்பியடித்து ஆண் குரலில் - ஆனால் கொங்குத் தமிழில் - பேசிப் புகழடைந்த அந்தப் பிரபல ஆர்.ஜே.வை ஏதோ பார்ட்டியில் பார்த்த சகாவுக்கு அக்கணமே மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவளோ சகாவைக் கண்டு கொள்ளவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சகா கடைசியில் அவளுக்கு ஒற்றை வரியில் ஓர் எஸ்.எம்.எஸ். அனுப்பினான்.

"My pillows are losing chastity because of you". அதற்கு அவள் என்ன பதில் அனுப்பினாள் என்பதை நான் எழுதினால் அவள் கணவன் கோபிக்கக்கூடும்.

**********************

சகாவின் சினேகிதியொருத்தி (நிஜப்பெயர் வேண்டாம். டெய்ஸி என வைத்துக் கொள்வோம்) மிகவும் மாடர்ன் - எல்லாவற்றிலுமே. ஒரு முறை நானும், சகாவும் இன்னொரு நண்பனுடன் ஏதோ இந்திப் படம் போகத் திட்டமிட்டிருந்த போது, கடைசி நேரத்தில் அந்த 3வது ஆள் ஜகா வாங்கி விட, 200 ரூபாய் டிக்கெட்டை பாழ் பண்ண மனதில்லாமல் சகா டெய்ஸிக்கு கூப்பிட்டான்.

துரதிர்ஷ்டவசமாய், அவ‌ளுக்கு அன்று வேறு 'என்கேஜ்மெண்ட்'கள் ஏதும் இல்லாமல் போக, இடம் கேட்டுக் கொண்டு (படம் கேட்கவில்லை!) இருபது நிமிடத்தில் கிளம்பி வந்தவளை சகா எனக்கு அறிமுகப்படுத்தினான். அவள் அபாயகரமான சுதந்திரத்துடன் ஒரு வெளிர் மஞ்சள் நிற 'ரவிக்' (Sleeveless என்பதால் 'கை' விடுபட்டுள்ளது. வார்த்தை உப‌யம் - சகா) அணிந்திருந்தாள்.

"She is not a Wet Nurse as you think" என்று கண்ணடித்தான் சகா. நான் தலையில் அடித்துக் கொண்டேன். அவள் புரியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

**********************

சகா ஒரு முறை மல்லாக்கப்படுத்து மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே சிந்தனை வயப்பட்டவனாக என்னிடம் கேட்டான், "Dai, Do you know how to impress a girl?" (அதை அவன் என்னிடம் தான் கேட்டானா அல்லது அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டானா என்று தெரியவில்லை). ஆனால் என் பதிலை எதிர்பாராதவன் போல் சில நொடிகள் இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான்.

"It's a four-letter word which ends with 'k'" என்றான். ஆங்கிலத்தின் அத்தனை அதிகாரப்பூர்வ நான்கெழுத்து கெட்ட‌வார்த்தைகளும் மனதில் வந்து போயின. ஆனாலும் அவை எதையுமே அவன் சொல்லப்போவதில்லை என்று உள்ளே ஒரு பட்சியோ கௌளியோ எதோ ஒன்று சொல்லியது. எந்த வகையிலும் என்னை ஏமாற்றாமல் சகா மெல்லத் தன் திருவாய் மலர்ந்தருளினான்.

"Talk". யோசித்துப்பார்த்தால் அவன் சொன்னது சரியென்றே தோன்றியது. காரணம் அந்தச் சித்தாந்தத்தின் வாழும் உதாரணமே அவன் தான்.

Comments

நான் சகாவின் ரசிகன்
Unknown said…
இன்னும் எத்தனை நாள் காத்திருக்க வேண்டும், சகா-வின் அடுத்த குறிப்புக்காக...?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்