கமலுக்கு மூன்று கேள்விகள்

கலைஞர் தொலைக்காட்சியில் இன்றிரவு ஒன்பதரை மணி முதல் ஒளிபரப்பான கமல்ஹாசனுடனான நேரலைத் தொலைபேசி உரையாடலில் அவருடன் பேச கொடுக்கப்பட்ட 044-224307999 என்கிற எண்ணை கடந்த ஒன்றரை மணி நேரமாக நூறு தடவைக்கு மேல் அடித்துப் பார்த்து தோல்வியுற்று ஓய்ந்த கையுடன் இதை எழுதுகிறேன். பேசியிருந்தால் இத்தனை கோர்வையாக வந்திருக்காது எனினும் நான் பேச நினைத்ததன் சாரம் இது தான்:

#############################

வணக்கம்,

நான் பெங்களூரிலிருந்து சரவணகார்த்திகேயன் பேசுகிறேன்.

கமல்ஹாசன், செளக்கியமாக இருக்கிறீர்களா? நான் உங்கள் ரசிகன் அல்ல; வெறியன். அதாவது fan அல்ல fanatic. முதலில் உங்களின் உன்னைப்போல் ஒருவன் படத்தின் வியாபார வெற்றிக்கு என் வாழ்த்துகள்.

வலைதளத்தில் பதிவராய் எழுதிக் கொண்டிருக்கும் முளை விடும் ஓர் எழுத்தாளன் மற்றும் தீவிர வாசிப்பாளன் என்கிற முறையில், என்னிடம் உங்களுக்கு கேட்க மூன்று கேள்விகள் இருக்கின்றன:
  1. உங்களுக்குள் இருக்கும் கவிஞன் அவ்வப்போது திரைப்பட பாடலாகவும், வார இதழ் கவிதையாகவும் வெளியே தலைகாட்டுகிறான். சில வருடங்கள் முன்பு கூட உங்கள் கவிதைகள் தொகுப்பாக வெளி வருகிறது என செய்திகள் வந்தன. எப்போது அவற்றைப் புத்தகமாக வெளியிடப் போகிறீர்கள்?
  1. குறைந்தபட்சம் பதினைந்து நல்ல திரைக்கதைகளை நீங்கள் இதுவரை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் அவற்ரில் ஹே ராம் தவிர வேறு எதுவும் புத்தகமாக வெளிவரவில்லை. அவை அனைத்தும் புத்தகமாக வெளிவந்தால் திரைக்கதை பற்றிய நல்ல பாடங்களாக அவை இருக்கும். வெளியிடும் எண்ணமிருக்கிறதா?
  1. ஓர் எச்சரிக்கை. நிச்சயம் இது மிகைப்படுத்தப்பட்ட கேள்வி அல்ல. இந்திய / தமிழக சூழ்நிலையில் கமல்ஹாசன் என்கிற சிந்தனையாளனின் அரசியல், கலை, இலக்கியம், சினிமா சார்ந்த பார்வைகளின் முக்கியத்துவத்தின் பின்புலத்திலிருந்து இதைக் கேட்கிறேன். உங்கள் சுயசரிதையை எழுதுவீர்களா?
அடுத்த வருடம் தசாவதாரம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய‌ விருது வாங்கவும், மருதநாயகம், மர்மயோகி போன்ற உங்கள் கனவுத் திட்டங்கள் திரைப்படங்களாக சாத்தியமாகவும் வாழ்த்துகிறேன்.

நன்றி.

Comments

அன்றைய நிகழ்ச்சியில் ஒரு விஷயம் கவனித்தீர்களா ? எத்தனையோ பேர் ' உன்னை போல் ஒருவன் ' கதை சூப்பர் , கான்செப்ட் சூப்பர் என்றெல்லாம் சொன்ன போது, ஒரு முறை கூட கமல் தானாகவே முன் வந்து அதன் மூலமான ஹிந்தி படத்தைப் பற்றி கூறவே இல்லை. ஒரு ரசிகையின் அது தொடர்பான கேள்விக்கு கமலின் கோபம்தான் பதிலாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் கமலின் மீது எனக்கிருந்த நேர்மறை பிம்பம் சற்றே மங்கிப் போனது.
இத்தனைக்கும் ஹிந்திப் படமான ' the wednesday ' அனைத்து அம்சங்களிலும் இதை விட ஒரு படி மேல்தான்.
@மேடேஸ்வரன்
Ya. Even I expected him to tell about the hindi original which he never did till the end of the interview.. That's Disappointing..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்