ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கம்

"நமக்கு தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும்."

- ரோசா வசந்த் அவர்களின் வலைப்பதிவான‌ 'ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்...!' என்பதிலிருந்து

**************

ஜ்யோவ்ராம் சுந்தரின் பதிவு மற்றும் பைத்தியகாரனின் ivansivan ட்வீட்கள் வாயிலாக‌ நடந்த அசம்பாவிதங்கள் பற்றிய‌ புகை படர்ந்ததோர் அறிமுகம் கிடைக்கிறது. யார் பக்கம் நியாயம் என்கிற கத்தி மேல் நடக்கிற சங்கதிக்கே நான் வரவில்லை. அதில் எனக்கு ஆர்வமுமில்லை. ஆனாலும் சர்ச்சையில் குளிர்காய்வது என்பதைத் தாண்டி இது சம்பந்தமாக எனக்கு சில பொதுவான பகிரல்கள் இருக்கின்றன. அதற்கு மேல் அதிகப்பிரசங்கித்த‌னம் ஏதுமில்லை.

என்ன காரணம் என்றாலும் அடித்தது தவறு தான். அதில் எவ்வித சந்தேகமோ மாற்றுக்கருத்தோ நிச்சயம் இருக்க முடியாது. ஆனாலும் என் சொந்த அனுபவம் மற்றும் மனப்போக்கின் அடிப்படையில் அப்படி அடித்ததைப் என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. என் வாழ்க்கையில் மிக நெருங்கிய சினேகிதர்கள் என்று நான் கருதிய பலரிடமும் அப்படி நடந்து கொண்டு அவர்களின் விலை மதிப்பற்ற நட்பினை இழந்து நின்றிருக்கிறேன்.

எவ்வளவு நாகரிகமாய் வளர்ந்து நின்றாலும் எக்காலத்திலும் நாமெல்லாம் யுத்தத்தில் அல்லது வேட்டையில் மேனியெங்கும் ரத்தம் பூசி நின்ற ஆதி மனித எச்சங்களே. அந்த மிருக புத்தி என்றென்றைக்கும் நம் ஆழ்மனதில் அழியாது ஒளிந்திருந்து, இது போன்ற சமயங்களில் வெளிவந்து நம்மைக் காட்டிக் கொடுத்து விடும். மற்றபடி, நாம் இது சரி இது தவறு என குழுக்களாய்ப் பிரிந்து நின்று பதிவிட்டுப் பொழுது போக்கலாம். அவ்வளவு தான்.

வெட்கப்படுகிறேன்.

பின்குறிப்புகள்:
  1. தலைப்பில் இருக்கும் 'குட்டி பூர்ஷ்வா' என்பது என்னையே குறிக்கிறது.
  2. ஜ்யோவ்ராம் / ரோசாவுக்கு ஆதரவாய் / எதிராய் எழுதப்பட்டதல்ல இது.
**************

பிற்சேர்க்கை: (அக்டோபர் 14, 2009 காலை 11:00 மணிக்கு எழுதப்படுகிறது)

dynobuoy என்பவ‌ரின் ட்வீட் மூலம் ivansivan என்ற‌ ட்விட்ட‌ர் ஐடியில் எழுதுவது 'பைத்தியகாரன்' என்ற புனைபெயர் கொண்ட சிவராமன் அல்ல; வேறு சிவன் என்றறிகிறேன். அது முழுக்க முழுக்க என் தவறான புரிதல் அல்லது அனுமானத்தின் காரணமாய் ஏற்பட்டது. தவறான தகவல் தந்தமைக்கு வருந்துகிறேன்; தற்போது அதைத் திருத்திக் கொண்டிருக்கிறேன்.

சிவராமன் மற்றும் ivansivan மன்னிக்கவும்; dynobuoyக்கு நன்றி!

No comments: