படித்தது / பிடித்தது - 75

உதிரும் மலர்கள்

முறைகளை ஒருங்கிணைப்பவர்கள்
ஒவ்வொன்றாக ஞாபகமூட்ட
பரபரப்புடன்
இயங்கிக் கொண்டிருந்தார்கள்

முடிந்ததும்
கூடத்திற்கு
அழைத்துவரப்பட்டார்கள்

வாழ்த்துச் சொல்ல
மேடையேறியவர்கள்
சோடியம் விளக்கொளியில்
மலர்ந்து
உதிர்ந்து கொண்டிருந்தார்கள்

புதிய மலர்களைத்
தேடித் தேடி
பகிர்ந்து கொண்டிருந்த இளைஞர்கள்
தாம் ரசித்த
தாமரை மொட்டை
பாதுகாப்பான அடுக்கில்
கனவுக்கென சேமித்துக் கொண்டார்கள்

ஒலிப் பெருக்கியின் இரைச்சல்
கூடத்தின் சப்தத்தோடு
பிணக்கு கொண்டிருந்தது

புகைப்படமெடுக்க
அழைக்காத கோபத்தில்
சாப்பிட மறுத்து
ஒரு உறவு முறை
வெளிநடப்பு செய்து கொண்டிருந்தது

மணம் கொண்டவர்களுடான
நெருக்கத்தைக் காட்டிக் கொள்ள
முனைந்த நிகழ்வுகள்
திரையோடான வாழ்க்கையை
நிதர்சனப் படுத்தியது

புனைவின் இறுதிக் காட்சியாக
மணம்கொண்டவர்களுக்கு
ஒரு கூட்டம்
திகட்ட திகட்ட
பந்தி பரிமாறியது

கடைசிப் பந்தியில் அமர்ந்த விழா அமைப்பாளர்கள்
விழாவின் கூட்டத்தையும்
விருந்தின் சுவையையும்
சிலாகித்துக் கொண்டிருந்தார்

தூர் நெளிந்த
ஈயப்பாத்திரத்தில்
மீந்த உணவெடுக்க வந்திருந்த
மேலாடையில்லாத பாவாடைச் சிறுமி
ஐஸ்கிரீம் மறுக்கப்பட்ட
புறக்கணிப்பின் வலியை
அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்

- மண்குதிரை

நன்றி: மண்குதிரை