உ.போ.ஒ. vs A Wednesday!

உன்னைப் போல் ஒருவன்.

எதுவுமே மாற்றவில்லை; அப்படியே எடுத்திருக்கிறார்கள். திரைக்கதை - வசனம் தொடங்கி கேமிரா ஆங்கிள், காஸ்ட்யூம் டிசைன், கலை இயக்கம் வரை காட்சிக்கு காட்சி எல்லாமே டிட்டோ "A Wednesday!" தான் (ஆனால் மனசாட்சியே இல்லாமல் மூலக்கதை என்று மட்டும் குறிப்பிட்டு நீரஜ் பாண்டே பெயரை படம் முடிந்து கடைசியில் பொடியெழுத்துக்களில் போடுகிறார்கள்). அதன் காரணமாக என்னால் இரண்டு படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒப்பீடு செய்வதை மறைக்கவோ மறுக்கவோ போவதில்லை.


கணேஷ் வெங்கட்ராமனை விட ஜிம்மி ஷெர்கில் நன்றாக நடித்திருந்தார் (அந்த வெறித்தனம் missing). பரத் ரெட்டியை விட அமீர் பஷீர் நன்றாக நடித்திருந்தார் (அந்த அசட்டுத்தனம் missing). அனுஜா ஐயரை விட தீபால் ஷா நன்றாக நடித்திருந்தார் (அந்த குறும்புத்தனம் missing) மோகன்லாலை விட அனுபம் கேர் நன்றாக நடித்திருந்தார் (அந்த கம்பீரம் missing). கடைசியாக, என்ன சொல்ல வருகிறேன் என உங்களுக்கே புரிந்திருக்கும். ஆம். கமல்ஹாசனை விட ந‌ஸ்ருதீன் ஷா தான் நன்றாக நடித்திருந்தார் (அந்த யதார்த்தம் missing).

நான் சொல்வதை பொதுப்படையாக எடுத்துக்கொண்டு யாரும் தவறான அபிப்ராயம் கொள்ள‌ வேண்டாம். அனுபம் கேரை விட மோகன்லால் தான் சிறந்த நடிகன்; அதே போல் நஸ்ருதீன் ஷாவை விட கமல்ஹாசன் தான் சிறந்த நடிகன். அது எல்லோரும் ஒத்துக்கொள்ளக்கூடிய, புரிந்து கொள்ளக்கூடிய ஓர் எளிய உண்மை. ஆனால் "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "A Wednesday!" படங்களின் கதாபாத்திரங்கள் அவ்வாறு அமைந்து அன்னார்களின் நடிப்புத்திறனும் வேறு மாதிரி வெளிப்பட்டு விட்டது.

இயக்குநரான சக்ரி டோலெட்டிக்கு பெரிய வேலை ஒன்றும் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கூட மூலத்தில் கூடுதல் நேர்த்தியிருந்ததாகப் படுகிறது. இரா.முருகன் மட்டும் ஆங்காங்கே கைதட்ட வைக்கிறார் (வசனகர்த்தாவான இவர் பெயரும் கடைசியில் மேற்குறிப்பிட்ட‌ அந்தச் சின்ன எழுத்துருவில் தான்). படத்தில் பாடல்கள் இல்லை ('அல்லா ஜானே' பாடலின் ஆரம்பம் மட்டும் துவக்கத்திலும் இடைவேளையிலும் வருகிறது - அதிலும் மனுஷ்ய புத்திரன் இல்லை).

மற்றபடி இன்று முழுக்க வலைப்பதிவுகளில் விமர்சனம் என்ற பெயரில் உ.போ.ஒ. படத்தை தலையில் தூக்கி வைத்து கிட்டதட்ட எல்லோருமே கொண்டாடியிருப்பதையெல்லாம் நம்பாதீர்கள். படம் நன்றாக இருப்பது நிஜமே; எனக்கும் பிடித்திருக்கிறது. தாரளமாய் குடும்பத்துடன் திரையரங்கு போய்ப் பார்க்க வேண்டிய படம் தான்; சந்தேகமேயில்லை. ஆனால் அதே சமயம் இதன் மூலமான "A Wednesday!" தான் இதை விட நேர்த்தியானதொரு படைப்பு என்பதும் மறுக்கவோ நிராகரிக்கவோ முடியாத உண்மை.

பின்குறிப்புகள்:
 1. இந்தி மூலத்தைப் பார்க்காத என் சினேகிதன் உ.போ.ஒ. பார்த்து விட்டு "The film is not convincing" என்றான். "A Wednesday!" படத்தைப் பற்றி அவன் அப்படி சொல்லியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
 2. இரண்டையும் ஒப்பிடாதீர்கள் என்கிற தத்தித்தனமான‌ வாதத்தை நிச்சயம் ஏற்க முடியாது; ஏன் ஒப்பிடக்கூடாது என பகுதறிவுக்குட்பட்ட காரணம் ஒன்று சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்.
**************

பிற்சேர்க்கை-1
: (செப்டெம்பர் 19, 2009 இரவு 10:00 மணிக்கு எழுதப்படுகிறது)

பார்ப்பனிய அரசியலை முன்வைத்து உ.போ.ஒ. பற்றிய சுகுணா திவாகரின் விமர்சனம், இதுவரை படம் குறித்து பதிவு செய்யப்பட்டிருப்பவைகளில் ஒரு முக்கியமான மாற்றுப்பார்வையைத் தருகிறது:
'உன்னைப் போல் ஒருவன்' ‍ கமலின் இன்னுமொரு இந்துத்துவச் சினிமா

**************

பிற்சேர்க்கை-2: (செப்டெம்பர் 20, 2009 மாலை 04:00 மணிக்கு எழுதப்படுகிறது)

இன்று உ.போ.ஒ. படத்தை 2ம் முறை பார்த்தேன். இம்முறை மனதில் பட்டவை:
 1. பாடல்கள் சேர்க்காமல், 1 மணி 40 நிமிடம் படமெடுத்த கமலின் தைரியம்
 2. அனுபம்கேரின் கம்பீரம் இல்லையெனினும் மோகன்லாலின் அற்புத நடிப்பு
 3. Right from titles, பல காட்சிகளில் ஸ்ருதியின் பிரமாதமான பின்னணி இசை
 4. குஜராத் பற்றி இரா.முருகன் எழுதியிருக்கும் சில‌ தைரியமான வசனங்கள்
 5. மோகன்லாலுக்கும் லக்ஷ்மிக்கும் நடக்கும் அதிகாரப் போட்டி அரசியல்
 6. புத்திசாலித்தனமாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைஞரின் குரல்
 7. கமிஷனர் அலுவலகம், கோபாலபுரம் என தோட்டா தரணியின் கலை
 8. ரெட்ஒன் என்ற‌ கேம‌ராவில் மனோஜ் சோனியின் துல்லிய ஒளிப்பதிவு
 9. நடிகர் விஜய்யை பிரதிபலிப்பது போன்ற ஸ்ரீமன் கதாபாத்திரத்தின் ஆக்கம்
 10. போலீஸ்காரன் பெண்டாட்டி பூனம் கெளரின் பிரமிக்க வைக்கும் வனப்பு

5 comments:

Balakumar said...

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. இந்த படத்திற்கு ஏன் "A" சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று-விஜய் போன்றோர் நடிக்கும் அபத்த ஆபாச குப்பைகளுக்கு கூட "U" தறும்போது!

சுரேஷ் கண்ணன் said...

//நஸ்ருதீன் ஷாவை விட கமல்ஹாசன் தான் சிறந்த நடிகன்.//

i disagree with this.

//இரண்டையும் ஒப்பிடாதீர்கள் என்கிற தத்தித்தனமான‌ வாதத்தை நிச்சயம் ஏற்க முடியாது//

i agree with this. :-) it is inevitable.

Anonymous said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை, ஆனால் போஸ்டர்களிலேயே நஸ்ருதீன்ஷா- வின் வயதான மிடில் கிளாஸ் பெர்சொனின் லுக் கமல் இடம் இல்லை(கேரக்டர்-ன் முக்கிய அம்சம் அது) கமல் தன மெஜஸ்டிக் லுக்-ல் என்னை போல் ஒருவன் என்று என்ன முடியாதபடியே தெரிகிறார்

D.R.Ashok said...

//பார்ப்பனிய அரசியலை முன்வைத்து உ.போ.ஒ. பற்றிய சுகுணா திவாகரின் விமர்சனம், இதுவரை படம் குறித்து பதிவு செய்யப்பட்டிருப்பவைகளில் ஒரு முக்கியமான மாற்றுப்பார்வையைத் தருகிறது//
நானும் இப்பொழுதுதான் படித்தேன் சுகுனாவை முதன் முறையாக.. கலக்கல்.

பகிர்வுக்கு நன்றி சரவணகார்த்திகேயன்.

viki said...

அதில் சொல்வது போல் குஜராத் சம்பவம் 2002 இல நடந்தது கோவை சம்பவம் 1998 இல நடந்தது இரண்டையும் முடித்து போட்டது மிகப்பெரிய ஓட்டை ..மேலும் குஜராதில் கருவருக்கப்படது பற்றி கண்ணீருடன் கூறும் கமல் அந்த சம்பவத்திற்கு மூலமான காவியை பற்றி சொல்லாமல் அதனால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் எதிர்வினை செய்ய கூடாது என சொல்வது போல் உள்ளது நான் கமலிடம் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை