கடிதம்: Eezham

தருண்யனிடமிருந்து சென்ற வாரம் வந்த மற்றுமொரு கடிதம்; என் பதில் கீழே:

############
மேய்ச்சல்வெளி

- சுல்தான் -

வவுனியா நிவாரண முகாமில் பழைய நண்பரைப் பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்க நேர்ந்தது. கொழும்பில் இருந்து வந்தவனுக்கு, முகாமிலிருந்து ஆளை வெளியே எடுக்கத் தத்துவமுண்டா என அவர் அறிய உன்னித் தொய்வடைந்த பிறகு, “நிறையக் கதைக்க வேணும். நீ கனநேரம் நிக்கேலாது” என்று நெகிழ்வாகக் கைகளைப் பற்றிச் சிறிது நேரம் பேச்சற்று முகம் பார்த்து நின்றார்.

“என்னப்பா நடந்தது? சண்டைக்கு முந்தித் தப்பி வர ஏலாமல் போச்சே?”

என் முகத்தை விசித்திரம் தோன்றப் பார்த்தார். பிறகு சொன்னார். “இப்பிடி முடியுமெண்டு ஆர் கண்டது? அப்பப்ப தொடர்ச்சியாய் உள்ளுர் வெளியூர் பேப்பர் எல்லாம் படிச்சு நடப்புகள் போக்குகளை அறிஞ்சு வைச்சுக் கொண்டிருந்த எங்களையே ஏமாத்தித்தான் போட்டாங்கள்...”

“கிளிநொச்சிக்குப் பிறகும் எந்த நம்பிக்கையில போய்க் கொண்டிருந்தனீங்கள்?”

“இப்ப யோசிச்சால் முட்டாள்த்தனம் விளங்குது. குருட்டு நம்பிக்கையிலயும், இவ்வளவு நாள் கஷ்டங்கள் தாங்கி எதிர்பார்த்த கனவு அழிஞ்சு போக விட்டிடக் கூடாது எண்ட அவதியிலயும் பின்னால ஓடிக்கொண்டிருந்த எங்களுக்கு கடைசிக் கட்டத்தில அவங்கள் செய்ததும் ஆகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்தான்!”

“மற்றவை சொல்லாம். நீங்களும் கடைசிக் கட்டத்திலதான் விளங்கினதெண்டு சொல்லலாமோ?”

“இல்லை, கடைசி நேரம் தப்பி ஓடி வருவதைத் தவிர வேறு நம்பிக்கைகளற்றுப் போனபிறகு, ஓடி வந்த சனத்தில பெரும்பகுதியை அவங்களே வேணுமெண்டு செல்லடிச்சு அழிச்சாங்கள் எண்டதைத்தான் தாங்க முடியேல்லை...”

“அச்சுறுத்தல் அழித்தொழிப்புகளால் போராட்ட நியாயத்தை வலிஞ்சு தக்கவைச்சுக் கொள்ளுறதெண்ட நிலைமைதான் எப்போதோ ஆகிப் போச்சே! கடைசி நேர அழிவு வரைக்கும் காத்திருந்துதான் விளங்கோணுமே நீங்களும்?”

“சரியடாப்பா, மற்ற இயக்கங்களை, எதிர்த்துப் பேசினவையை, மாறுதலாய்ச் சிந்திச்சவையை எல்லாம் எங்களுக்குள்ளேயே கொலை செய்து கொண்டிருந்தவங்கள்தான். இருந்தாலும், எங்கடை பிரச்சினையின் பக்கம் உலகத்தைப் பார்க்க வைச்சதும், எங்களுக்குப் பிரச்சினை இல்லையெண்டு அரசாங்கம் ஏமாத்திப்போட்டுப் போகேலாது... ஏதாவது செய்யத்தான் வேணுமெண்டு அவையை யோசிக்க வைச்சதும், நாங்கள் ஒண்டும் ஏலாவாளியள் இல்லை எண்டு காட்டினதும் அவங்கள்தானே?”

“இப்பிடியொரு மோட்டு ரோசத்தைத்தான் சனத்துக்கும் திணிச்சு போலிக் கிறாக்குகளில திளைக்கவிட்டு ஏமாத்தி அழியவிட்டியளா?” என்று அதிர்ச்சி தாங்காமல் கேட்டேன்.

“என்ன, கோபப்படுறாய்?” என்றார் நண்பர்.

“கோபப்படாமல் என்ன செய்யிறது? இவ்வளவு சனத்தை அழியவும் அவதிப்படவும் விட்டுட்டு, அந்தத் துரோகம் பற்றின குற்றவுணர்வு கொஞ்சமும் இல்லாமல், அதுக்கு மேலாலை தூக்கிப்பிடிக்க வீரத்தால என்னமோ சாதிச்சதெண்ட மோட்டு விளக்கம்தானா உங்களிட்டையும் இருக்கு?”

நண்பர் பேசாதிருந்தார். தொடர்ந்து சொன்னேன். “சமூக நல்லியல்புகளையும் சனத்தையும் குரூரமாய்த் தொடர்ந்து சாகடிச்சது, கருத்து மாறுபாட்டை கொலைகள் செய்து தீர்த்தது, எதிர்த்தரப்பிலும் பொதுமக்களைக் கொன்றழித்ததை போராட்ட வழிமுறையாக்கியது, உலகின் எல்லா ராணுவங்களினதும் செயல்முறை-தன்மையிலிருந்து எப்பனும் மாறுபடாத குரூரத்துடன் தமிழ் ராணுவமும் இருந்ததெல்லாம் எங்கள் இனவிடுதலைப் போர் நியாயத்துக்குள் மறந்து-மறைத்துவிடக் கூடியவை எண்டதுதான் உங்கள் ‘அற’ ஞாயமாயிருந்ததா? படிச்சனீங்கள், விஷயம் தெரிஞ்சனீங்கள் எல்லாருக்கும் இனரீதியான ரோசம்தான் உயிரழிப்புகள் மானுட இழிவுகளுக்கெல்லாம் மேலாய் நிண்டதா?”

“என்னடாப்பா நீ! எங்கடை சனத்தை எதிர்த்தரப்பு நாளும் பொழுதும் அழிச்சுக் கொண்டிருக்கேக்கை, நாங்கள் மட்டும் அறம் நீதி எண்டு பேசிக் கொண்டிருக்கேலுமா? அவைக்கு விளங்கக்கூடிய பாஷையிலதானே திருப்பிப் பதில் சொல்ல வேண்டியிருக்கு?”

அவர் சொல்வதிலுள்ள அபத்தத்தையும் குரூரத்தையும் அவரே உணர்ந்து கொள்ளட்டும் எனப் பேசாதிருந்தேன். வன்முறை என்ற இருபக்கமும் கூரான கத்தியை எடுத்துப் பிடித்த பிறகு, எல்லாவற்றுக்கும் எதிரியைத் திட்டியபடியே எங்கள் பக்க அழிவையும் நடத்திக் கொண்டிருப்பதல்லால் வேறென்ன விளைவை அடைய முடியும்? நண்பர் யோசிக்கிறாரா என்று பார்த்துவிட்டுக் கேட்டேன்.

“அடிக்கு அடிதான் நமது பதில் என்றால், நாம் அழுவதற்கோ முறையிடுவதற்கோ நியாயமற்றுப் போகிறதே! இனி நாம் என்ன செய்ய, திரும்பவும் பரம்பரை வீரத்தைச் சொல்லி அடிப்பதற்கு மக்களைத் தயார்ப்படுத்த வேண்டியதுதானா?”

“என்ன செய்யச் சொல்கிறாய்? பெரும்பான்மையாக இருக்கிறவை சரியாய் நடந்து கொள்ளாட்டில் நாம் என்னத்தைச் செய்யிறது?”

“அவைக்கு விளங்கிற பாஷையில பதில் சொல்லப் போறதாய் சட்டையை மடிச்சுக்கொண்டு இறங்கிய பிறகு, அவர்கள் சரியாய் நடந்துகொள்ளேல்லை எண்டு புலம்பிக் கொண்டிருக்க முடியுமா? சண்டைதான் எண்டு தேர்வு செய்திட்டால் தர்மம் நியாயம் பற்றி யாரிடம் யார் கேட்கிறது? தர்மயுத்தம் எண்டு எதுவுமில்லை. யுத்தமே அதர்மம்தான் அநியாயம்தான். அதன் பாஷை வன்முறை. விளைவு உயிர்ச்சிதைவு வாழ்க்கைச் சிதைவுதான்!”

நண்பர் பேசத் தயாரில்லை. நான் மேலும் சொன்னேன். மக்களைக் காக்க, வாழவைக்க – எவ்வளவு சிரமமாயிருந்தாலும் – உயிரழிவுகள் தவிர்ந்த வழிமுறைகளை யோசிக்க, அதற்கான சிரமங்களை கடின உழைப்பை மேற்கொள்ளப் பஞ்சிப்படும் தந்திரசாலிகள்தான் வெறுமனே எதிரிகளைத் தூற்றிக்கொண்டே நம் கஷ்டங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணரென்பதைப் பிரமாண்டமாக்கிச் சண்டையை நிரந்தரமாக்கி வைத்திருக்க முயல்கிறார்கள். சுயநலத்தை மறைத்து, மற்றவர்களின் பிழைகளைச் சொல்லியபடியே சண்டையும் உயிர்த்தியாகமும் வாழ்வுத் தொலைப்பும்தான் வழி என்ற முடிவுக்கு மக்களைத் தள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள். யுத்தமற்ற, மரண ஓலங்கள் அற்ற இந்தச் சூழ்நிலையை எப்படி நிரந்தரமாக்குவது என்பதுபற்றி யோசிக்க கள்ளப்படுகிறார்கள். அதற்கான பிரயத்தனங்களில் இறங்கப் பஞ்சிப்பட்டு அதிருப்திகளையும் அவநம்பிக்கைகளையுமே பேசியபடி இருக்கிறார்கள்.

நாம் வாழ்வதற்கு, இனியாவது அவலங்களை வாங்கி மடியில் கட்டிக்கொள்ளாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு, எங்களுக்குள்ளேயே புழுங்கி குசுகுசுக்கும் விரக்தியோ, மற்றவர்களை உசுப்பிவிட்டுப் புல்லரிப்புக் காணும் ரோச வீரப் பேச்சுக்களோ உதவப் போவதில்லை. நாம் பேச வேண்டியிருப்பது இலங்கை அரசுடனும் இந்நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களுடனும்தான்!

############

தருண்யன்,

வீரம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் தமிழர்களை போரில் மரிக்கச் செய்தது எத்தனை குற்றமோ, அதற்கு எள்ளளவும் குறையாதது தான் வெற்றிக்களிப்பில் மேனியெங்கும் ரத்தம் பூசிக்கொண்டு தாண்டவமாடும் சிங்களர்களுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் மேற்குறிப்பிட்ட கட்டுரை / உரையாடல். அது எந்த அடிப்படையில் சாத்தியமென‌ நீங்கள் நினைக்கிறீர்கள் என எவ்வளவு யோசித்தும் இக்கணம் வரை எனக்கு விளங்கவே இல்லை.

நீங்கள் / சுல்தான் மேலே குறிப்பிடுவது போல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவ‌தெல்லாம் என்னைப் பொறுத்தவரை (அதாவது என் சிற்றறிவின் தர்க்கத்துக்கு எட்டிய அளவில்) கதைக்குதவாத வெற்று வாதம். ஆடு நனைவதற்கு ஓநாய் அழாது என்பதைப் போல், ஜெயித்தவனுக்கு தோற்றவன் மீது எக்காலத்திலும், எச்சூழ்நிலையிலும், எக்காரணத்திற்காகவும், எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை.

அவ்வளவு ஏன்? தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படும் கலைஞரே கூட இதில் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் வசிக்கும் ஆறரை கோடிப் பேருக்கும் தீடீரென்று ஈழத்தமிழர்கள் மீதான நிஜமான அக்கறை வந்து வரப்போகும் தேர்தலில் மாநில அரசை மாற்றினாலும் அதனால் ஒரு பலனும் ஏற்படாது. இவ்விஷயத்தில் பேச்சுவார்த்தை, ஆட்சி மாற்றம் போன்ற வார்த்தைகளெல்லாம் அர்த்தமிழந்து நாட்களாகின்றன.

அழிந்து கொண்டிருக்கும் தமிழ‌ர்க‌ளுக்கு ஏதாவது நல்லது நடக்குமென்றால் அதைச் செய்யும் வல்லமை இந்த உலகில் மூன்று பேருக்கு மட்டும் தான் உண்டு. ஒருவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா; இன்னொருவர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி. இவர்களில் யாராவது பிரச்சனையில் தலையிட்டா லன்றி ஈழத்தமிழன் இனி வரும் தலைமுறைகளிலெல்லாம் அகதியாய், அடிமையாய் வாழ்வதைத் தவிர‌ வேறு மார்க்கமில்லை.

பிரச்சனையில் தலையிடுவது என்று நான் குறிப்பிடுவது வெறும் அறிக்கை விடுவதையல்ல. இலங்கைக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக‌ (தேவைப்பட்டால் ராணுவ ரீதியிலும்) அழுத்தம் தருவது. அதன் மூலமாக இலங்கைத்தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரங்களையும், சொந்த‌ தேசமென்ற‌ பாதுகாப்புணர்வையும் பெற்றுத் தருவது. மற்றபடி, ஆட்சிப்பங்கீடு, தனி தேசம் எல்லாம் கொஞ்சம் ஒத்திப் போடலாம்.

மூன்றாவது நபர் யாரென்று கேட்கிறீர்களா? மகிந்தா ராஜபக்ஷே.

-CSK

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்