கடிதம்: ethuvarai-eezham

தருண்யனிடமிருந்து மீண்டுமொரு கடிதம்:

############

கதியிழந்த மக்கள்
அல்லது
கடவுளர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளுதல்


- இளமொட்டைச் சிறுபுழுதி -

‘எதுவரை’ என்ற கேள்வியைப் போலவே, ‘எப்படித் தொடங்குவது’ என்பதும் யோசித்தால் மிக ஆயாசப்படுத்துகிற கேள்விதான். சமூகத்தை நிமிர்த்துவதற்கு வேண்டிய தொடக்கங்களை விடுங்கள். எழுதுவதைத் தொடங்குவது கூட இன்னும் பெரும் சவாலாகவே இருக்கிறது.

போரின் முடிவில் கஜினி முகம்மதாகச் சிந்திப்பதா அசோகச் சக்கரவர்த்தியாகச் சிந்திப்பதா என்ற தெரிவில் ஒருவேளை ‘எதுவரை’ என்ற கேள்விக்கு விடை வந்துவிடலாம் போலத் தோன்றுகிறது. ஆனால் இன்றும் இதுபற்றி ஒரு உரையாடலை ஆரம்பிப்பது அவ்வளவு சுலபமாய்த் தெரியவில்லை. நம் சமூகத்தின் வீரம், புத்திசாலித்தனம், ஏனைய மூடர்களை கட்டிமேய்த்து ஆண்ட காலம் போன்ற ஏறுபட்டி தளநார் வகைகளின் எழுப்ப நினைவுகளிலிருந்து இன்னும் நாம் இறங்கி வந்ததாகத் தெரியவில்லை.

போரிலும், போரின் பின்னுமான வாதைகளுக்குள் நேரடியாகச் சிக்குப்படாது, வெளியிலிருந்து அழிவுகளை உணர்ந்தவர்களின் வீரக்குமுறலையும் பழிதீர்ப்பு மனவோட்டத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ‘வவுனியா முகாம்களை வந்து பாருங்கள் இந்த மக்களை மீண்டும் ஆவேசப்படுத்தினால் மேலும் விளையப் போவதைச் சிந்தித்து, அடுத்த வழிமுறை ஏதேனும் பற்றிப் பேசுங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லலாம் என்றால்.... என்ன சொல்ல பௌசர், போரின் குரூரத்திற்குள் கிழிபட்டு வந்து முள்ளுக்கம்பிகளுக்குள் அடக்கப்பட்டிருக்கும் மக்களிடம் பேசினால்.... இன்னும் கோபமும் விரோதமும் பழிதீர்க்கும் உணர்ச்சியுமாய், கொஞ்சம் தட்டிவிட்டால் மீண்டும் பற்றிக்கொண்டுவிடும் என்று பயமூட்டுவதாகவே இருக்கிறது. அவர்களுக்கு, இன்றைய உலகயதார்த்தத்துக்குள் வாழும் மனத்தயாரிப்பை வழங்க, உலகெங்குமிருந்து அனைத்து உளவளப் பணியாளர்களும்தான் வந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.

நம் மனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது பெரும்பாலும் ரோசம், தியாகம், பழியுணர்ச்சியால்தான் போலும்! வாழ்வதற்கான விவேகம், சகிப்பு, விட்டுக்கொடுப்பு, பன்மை இணைவு போன்ற கோழைத்தனங்களின்(?) உபயோகம் பற்றிய எந்த அடியாழ வண்டல்களும் நம் மனங்களினுள் இல்லை. மனிதர்கள் தாம் புனைந்துகொண்ட சில கற்பித உணர்வுகளுக்காக தங்கள் உயிரை இழந்துவிடத் தயாராயிருக்கும் மனஅமைப்பை அறிந்துகொள்ள அதிர்ச்சியாகவே இருக்கிறது.

மொழி அழிந்துவிடக் கூடாது, தேசக்கனவு அழிந்துவிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு மனித உயிர்கள் வேண்டுமானாலும் அழியலாம் என்ற எங்கள் அடிமனதின் நியாயங்களை அடிப்படைகளை மாற்றாமல் நம் அழிவுகளைத் தடுத்துக்கொள்வது எவ்வாறு?

ஒரு மொழிக்கு அதற்கென்றொரு நாடில்லாவிட்டால் அந்த மொழி அழிந்துவிடும் என்பதற்கான சாத்தியங்களிருப்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்காக, மொழியைக் காக்க சில ஆயிரம் மனித உயிர்களை இழக்கலாம் என்பது சரிதானா? இதற்கு, வீரமும், உணர்ச்சிகரமுமான ஒரு நிலையிலிருந்து முடிவெடுக்கிறவர்களோடு ஒத்துப்போகலாமா? மனம் நடுங்கவைக்கும் அதிர்வுகளும் அழிவுகளும் கண்டவர்கள், பழிவாங்கும் உணர்ச்சியோடு மீண்டும் அந்த சுழலுக்குள் போவது தவிர, வாழ்வதற்கான வேறு வழிகளைக் காட்ட நம் சமூகத்தின் அறிவுசார் பிரஜைகள் யாருமில்லையா?

இங்குள்ள நிலைமை இதுதான் பௌசர்! கொழும்பிலோ தெற்கிலோ இன்று ஒரு மிகப்பாரிய குண்டுவெடிப்பு நிகழுமென்றால், அதன் விளைவுகள் இன்னும் எவ்வளவு சீரழிவுக்கு நம்மைத் தள்ளும் என்பதை நினைக்க விடாத - அதற்கு மேலாக எழும் ஒருவித ஆவேச திருப்தியே பிரதான நீரோட்ட தமிழ் உணர்வாக இன்னுமிருக்கிறது. இனியுமொரு வீரத்தின் விளைவை இந்த சமூகம் தாங்குமா?

இந்த விரக்திச் சூழலிலிருந்து மீள்வதற்கும், வாழ்வை மீட்பதற்கும், உயிரழிவுகளற்ற ஒரு வழிமுறையைக் கண்டடைந்து கொள்ளும் சவால் நம் சமூகங்களைச் சேர்ந்த அறிவார்ந்த பிரஜைகளின் முன்னாலுள்ளது. அரசை வழிமொழிவது அல்லது முற்றாக நிராகரிப்பது என்னுமிரண்டையும் தவிர்த்து, நமக்கு - இந்த நாட்டுக்கு வேண்டியது பற்றிப் பேசப்பட வேண்டும். மொத்த மக்களிடமும் அதற்கான உரையாடல் திறக்கப்பட வேண்டும். இன்று, அரசுடன் மேசையின் எதிர்ப்புறமிருந்து பேசுவதற்கு தெரிகின்ற அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது எங்ஙனம்? இன்னும் பாரிய சீரழிவுகள் தொடர்வதற்குக் காரணகர்த்தாக்களாய் நாம் எதிர்காலத்திலும் கண்டுபிடித்துத் திட்டப் பலருளர். மக்களிடம் வன்முறை தவிர்த்து வாழ்வது குறித்த நம்பிக்கைகள் உருவாகிவரக் காரணராக யார் யார் முன்வருவர்?

உயிர் உனக்கு வெல்லமா? என்று கேட்டால், ஓம் என்று சொல்வதில் இழிவு இருப்பதாக உணர்வதும் ஒரு பிரச்சினை எனத் தோன்றுகிறது. வாழ்வதற்கான விருப்பம் கோழைத்தனமாக எண்பிக்கப்பட்ட நம் மன்னர்கால வீரப்புனைவுகளின் விளைவு இது. பயம் நம் ஆதார உணர்ச்சிகளுள் ஒன்றாக இருப்பது, வாழும் விருப்பத்தினால்தானே. பரிணாமம் என்பதும் நாம் உயிர் பிழைத்துக்கொள்ளும் வழி கண்டு நடந்து வந்ததுதானே. வன்முறையால் எதிரிகளை வீழ்த்திப் பிழைத்தது குகைமனிதனின் வாழ்க்கைமுறை. இன்றும் நாம் பிழைத்தலுக்கு ஆதி மனிதர் வழிமுறையையேவா வைத்திருப்பது?

நாமும், நம் குழந்தைகளும் எதிர்காலச் சந்ததிகளும் வாழ்வதற்கு நாம் செய்ய வேண்டிய தியாகம் நமது உயிர்களல்ல நம் வெறுப்புணர்வை, விரோதத்தை, ஏகப்பெருமித பழியுணர்ச்சிகளையே நாம் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

தமிழவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ படித்தபோது, இப்போது உயிரோசை இணைய இதழில் தொடராய் எழுதிவரும் ‘திராவிடத் தமிழவன்’ வேறுபட்டுத் தெரிகிறார். தேச, மொழி, கலாசார எல்லைகளைக் கடந்த உணர்வுகளையும், எல்லா அடையாளங்களையும் மீறி மனிதர்கள் எல்லோரும் ஒன்றுதான் என்பதாக ஒரு சித்திரம் நாவலில் கிடைக்கிறது.

உயிரோசையிலோ, தமிழர்களின் மூலப்படிம உணர்வு பற்றியும், அது ஒரு தன்னேரில்லாத் தலைவனைத் தேடுவது பற்றியும், அதன் மூலம் தமிழுக்கென்றொரு நாடு தேடும் பணியில் உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் தட்டியெழுப்பி வருவதைக் காணமுடிகிறது.

பொதுவாகவே இன்னொரு மனிதனுக்காக - அவன் எந்த நிற மொழி இன தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் - பரிவு கொள்கிற, அவன் துயரத்திற்காகக் கலங்குகிற உள்ளம் கொண்டிருக்கும் நாம், நமது இனத்துக்குத் துன்பம் நேர்கையில் இன்னொரு இனத்தின் முழு மனிதர்களையுமே அரக்கர்களாகப் பார்த்து ஆவேசமுறவும், அவர்களோடு உரையாட முடியாதவர்களாகவும் ஆகிறோம். நம்முடைய இன ஒற்றுமையை வலுப்படுத்தி எதிரிக்குழுக்களை ஒழித்துவிட முனையும் ஆதிகால மனிதர் குணத்திற்கு அடிமையாகி விடுகிறோம். இதுதான் அந்த மூலப்படிம உணர்வென்றால், இதை வெல்வது எப்படி என்றல்லவா நாம் பேச வேண்டும். பாடையிலே போகும்போதும் பைந்தமிழ் இருந்தால் போதும் என்கிற மூலப்படிம உருகுநிலை எல்லாம் தன்னை மட்டுமல்லாது மேலும் எத்தனை பேரைச் சாகடிக்க விரும்புகிற வார்த்தைகள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்?

அமைப்பியலை தமிழில் அறிமுகம் செய்ததன் மூலம் பின்நவீனத்துவ சிந்தனைகளின் வருகைக்கும் ஒரு முகாந்திரமாய் இருந்தவர் என்பது, இன்றைய அவரது தமிழ்த் தேசியத்தை உற்சாகப்படுத்தும் எழுத்துக்களைப் படிக்கிற போது ஆச்சரியமூட்டுவதாய் உள்ளது. இந்த உயிரோசை கட்டுரைகளை தமிழவனின் கோமாளித்தனங்கள் என்று ஒரே வரியில் நகையாடுகிறார் தமிழ்ப் பி.ந. எழுத்தாளர்களில் ஒருவரான சாரு நிவேதிதா.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்த அடையாள அரசியல் மற்றும் உணர்வுப் பெருக்குகை உருவாக்கிவிடுகிற வன்முறையும் அழிவுகளும் பற்றிய பேச்சுக்களில் தமிழவனும் ஒரு பகுதியாக இருந்திருக்கிறார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்தில், எஸ்.என். நாகராஜன், “நாம் தமிழர்கள்...” என்று பேச ஆரம்பித்தபோது, எதிர்வு சிவக்குமார் குறுக்கிட்டு “யார் யாரெல்லாம் தமிழர்கள்? நீங்கள் எத்தனை பேர்?” என்று கேட்டபோது தமிழவனும் மேடையிலிருந்தார்.

இன்று அவரது பதில்: தமிழ் மூலப்படிம உணர்வால் இயக்கப்படுகிற கருணாநிதி, வைகோ, நெடுமாறன், தா.பாண்டியன் போன்றோர் தமிழர்கள். ஜெயலலிதா, வரதராசன் மற்றும் காங்கிரஸ்காரர்கள் இந்தத் தமிழ் மூலமல்லாதவர்கள் என்பதாக இருக்கிறது. இப்போது இலங்கை வடக்கு கிழக்கில் உயிரோடு மிஞ்சியிருப்பவர்களை அவர் வகைப்படுத்துவது எப்படியிருக்கும் என்று யோசிக்கப் பயமாக இருக்கிறது. (நாவலில் வேறு, கடவுள் மறுஉயிர்ப்புச் செய்யும் நாள் நவம்பர் 26.) அதிருக்க, தாய்த்தமிழகத்தில் கூட்டணி, தேர்தல் என்று வந்துவிட்டால் நந்தமிழர்கள் மூலப்படிம ஆய்வாளர்களின் மூளையை எப்படிக் காய வைத்துவிடுவார்கள் என்பது நடந்துமுடிந்த ஜோக்!

அழிவுகள், சித்திரவதைகள் அற்ற வாழ்வுக்கான கதையாடல்களை முன்கொணரப் பேச்சுக்களை நிகழ்த்தியவர்களும் கூட அடையாளங்களை முன்வைத்து மனிதர்களை விலக்கும் பேச்சுக்குத் திரும்பியிருப்பது அச்சமூட்டுகிறது. உலக மனிதர்கள் எல்லோரும் அவரவர் மூலப்படிம உணர்வுக்குத் திரும்ப - உலக அமைதி வரக் கூடுமென்றால் நல்லதுதான். தமிழுக்காக நாமும் உயிரை விட்டுவிடலாம். ஒருவேளை, மூலப்படிம உணர்வுத் தொடர்பற்றவர்கள் இல்லாமல் போய்விடுவதுதான் அமைதிக்கு வழியோ என்னவோ.

(எம்.பௌசரை ஆசிரியராகக் கொண்டு லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இரண்டாவது இதழில் உள்ள கட்டுரை)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்