போர்க்களமும் திருவாசகமும் - 1

பெறியியல் இறுதியாண்டு.

கவிதை என்கிற பெயரில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தது ச‌லித்துப் போயிருந்த இருண்ட‌ காலகட்டம். சினிமாத்துறை க‌ஞ்சா மாதிரி தூரத்திலிருந்தே வசீகரித்துக் கொண்டிருந்தது. கூடப்படித்துக் கொண்டிருந்த என் நண்பன் தயாரிக்கவிருந்த திரைப்படமொன்றில், பாட்டெழுதும் சரக்கு ஏதேனும் என்னிடம் தேறுமா என சோதித்துப் பார்க்க‌ அழைத்திருந்தான்.

இயக்குநர் ராஜ்மோகன் சென்னை தரமணி திரைப்படக்கல்லூரியில் கோல்ட் மெடலிஸ்ட். அதற்கு முன் சில குறும்படங்களும், ஒரு டி.வி. சீரியலும் இயக்கியிருந்தார். முழு நீளத்திரைப்படமென்று பார்த்தால் இது தான் முதல் படம். நீண்ட கால முயற்சிக்குப் பின், பல குடும்ப சிக்கல்களுக்குப் பின் இந்த வாய்ப்பு கிடைத்த போது அவருக்கு வயது கிட்டதட்ட 35.

"போர்க்களம்" என்ற அப்படத்தின் கதாநாயகன் 'ஜித்தன்' ரமேஷ், ஹீரோயின் புதுமுகம், இசை கார்த்திக்ராஜா, ஒளிப்பதிவு மசாணி (பி.சி.ஸ்ரீராமிடம் உதவிராளராயிருந்தவர்), படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ். தயாரிப்பளர் காஜா மைதீனின் தம்பியான ஜமால் என்பவ‌ரும் என் நண்பன் தந்தையும் கூட்டாக தயாரித்து Super Good Filmsக்கு first-copy அடிப்படையில் விற்பது எனத் திட்டம்.

இயக்குநர் ராஜ்மோகன் என்னிடம் முழுக்கதையும் சொல்லி, பாடல்கள் வரும் நான்கு இடங்களையும் சொன்னார். அது ஒரு சுமாரான காதல் கதை. ஒரு பொறுப்பற்ற ஏழை ப்ளஸ் டூ மாணவன், பணக்கார அமைச்சரின் மக‌ளைக் காதலித்து ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குகிறான். அப்புறம் 7/G பாணியில் ஒரு ட்ராஜிடியான முடிவு. Literally unimpressive story-line.

எனக்குப் பிடித்திருந்தது அவர் கதை சொன்ன விதம் தான். காட்சி வாரியாக வசனங்களுடன் ஒரு மணி நேரம் கதை சொன்னார் (தயாரிப்பாளர்கள் அல்லது முக்கிய நடிகர்களிடம் கதை சொல்லும் போது இன்னும் விலாவாரியாக மூன்று மணி நேரம் கதை சொல்வார் என்றான் என் நண்பன்). அவரிடம் ஒரு பொறி இருக்கத்தான் செய்தது. அதை அவர் தவறான கதைகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறாரோ எனத் தோன்றியது. நல்லதோர் வீணை..

அப்போது எனக்கு கதையோ, மற்ற விஷயங்களோ முக்கியமாகப் படவில்லை. கார்த்திக்ராஜா இசையில் தமிழகத்து பட்டி தொட்டி டீக்கடை எஃப்.எம். ரேடியோக்களில் ஒலிக்கும் என் பாடல் வரிகள் பற்றிய கனவு தான் என்னை ஆக்ரமித்திருந்தது. நான் சிச்சுவேஷன்களுடன் விடுதி அறைக்கு வந்து யோசித்து யோசித்து ஓரிரவில் பாடல்களை எழுதி முடித்தேன்.

மறுநாள் இயக்குநரைச் சந்தித்து என் பாடல்களைத் தந்தேன். பாடலின் பிரதிகளை அவருக்கு நான் கைமாற்றியது கண்னதாசனின் தி.நகர் வீட்டுக் கீழே வைத்துத் தான். எதேச்சையாய் அமைந்த அவ்விஷயத்தை சகுனம் எனச் சிலாகித்தான் என் நண்பன். பின்னணியில் மானசீகமாய் "இது ஒரு பொன் மாலைப் பொழுது" ஒலித்தது. எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ராஜ்மோகன் அவற்றைப் பொறுமையாக படித்துப் பார்த்து விட்டு "எல்லாவற்றிலும் காதலை விட காமம் ஒரு சிட்டிகை தூக்கலாகவே இருக்கிறது. கவிஞ‌ர் வாலியை வைத்துத் தான் பாடல்கள் எழுதுவதாக உத்தேசித்திருந்தேன். இருந்தாலும் பார்க்கிறேன், ஏதாவது ஒன்றையாவது பயன்படுத்திக்கொள்ள முடியுமா என" என்றார். நான் தலையாட்டினேன்.

மெல்ல மெல்ல வேலைகளை ஆரம்பித்தார்கள். வாடகைக்கு அலுவலகம் ஏற்பாடு செய்தார்கள். படத்தயாரிப்பு சம்மந்தமான ஆட்கள் பார்க்கக் கிடைத்தார்கள். டைட்டிலின் டிசைன் முடிவு செய்தனர். டைட்டில் ஃபிலிம் சேம்பரில் பதிவுசெய்யப்பட்டது. ரம்ஜான் மாதத்தில் ஜமாலின் இடத்தில் வயிறு புடைக்க மட்டன் பிரியாணி சாப்பிட்டோம்.

பின்னர் நிகழ்ந்தவை எதிர்பாராதவை; ஆனால் வெகு வேகமானவை. அடுத்த வாரமே படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ஜமாலுக்கும், இயக்குநருக்கும் துணை இயக்குநர்களை நியமிக்கும் விஷயத்தில் வாதம் முற்றி கடைசியில் சண்டையில் முடிந்தது (ஆரம்பம் முதலே இருவருக்கும் புகைச்சல் இருந்து வந்தது). ப‌டத்தயாரிப்பு அப்படியே கைவிடப்பட்டது.

இப்படியாகத்தான் என் முதல் சினிமா அனுபவம் ஓர் எதிர்பாராத அபார்ஷனில் முடிந்தது. ஆனாலும் இயக்குநர் ராஜ்மோகன் விடுவதாக இல்லை. வீட்டில் சண்டைப்போட்டு தன் பங்கு சொத்தை வாங்கி, அப்பணத்தைக் கொண்டு, வேறொரு தயாரிப்பாளருடன் சேர்ந்து, நவ்தீப்பை கதாநாயகனாக வைத்து, ஜாஸி கிஃப்ட் இசையில் அதே படத்தை "திருவாசகம்" என்ற பெயரில் மீண்டும் தொடங்கி விட்டார். இன்னும் எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இப்போது பாடல்கள் எழுதிக்கொண்டிருப்பவர் கவிப்பேரரசு வைரமுத்து.

No comments: