ஹாஸ்யத்துக்கு குறைவில்லை

  1. "கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி" என்று பாரதி சொன்னதாக படித்தேன். கவிதை எழுதுவதையே நிறுத்தி விடலாமா என ஒரு கணம் தோன்றியது. ஆனால் தமிழர் நலனை முன்னிட்டு... எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  2. மத்திய கேபினெட் அமைச்சரவையில் அ.ராசாவுக்கு இடம் கிடைத்து கனிமொழிக்கு இடம் கிடைக்காமல் போனதற்கு என் மனைவி சொன்ன காரணத்தை நான் இங்கே எழுதினால் நாளை காலையே என் வீட்டுக்கு சில பல அஸ்திரங்கள் ஆயுதங்கள் சகிதம் ஆட்டோ வரும். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  3. முன்னிரவில் பெங்களூர் டோமளூர் மேம்பாலத்தில் நின்று எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் தொன்னூறு தீபிகா படுகோனேக்கள் தெரிகிறார்கள். பி.எஸ்.என்.எல். உபயத்தில் மின்னொளியூட்டப்பட்ட பாலி வினைல் விளம்பரப் பலகைகள். வியாபாரம் தான் இல்லையென்கிறார்கள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  4. நேற்றிரவு உறக்கத்தில் "நர்மதா நர்மதா" என்று நான் உளறிக் கொண்டிருந்ததாக என் மனைவி புலம்பினாள். உண்மையில் நர்மதா என்பது என் அலுவலகத்தில் இருக்கும் டெஸ்டிங்கிற்கு பயன்படும் எங்கள் சொந்தத் தயாரிப்பான செர்வரின் பெயர். சொன்னால் நம்ப மாட்டாள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  5. இந்த ஐ.பி.எல்-இல் நான் பெங்களூர் அணியைத் தான் ஆதரித்தேன். இரண்டு காரணங்கள். ஒன்று ராகுல் டிராவிட்; மற்றது கேத்ரினா கைஃப். என் மனைவி உட்பட என்னுடைய பல நண்பர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தான் ஃபேவரைட். காரணம் கேட்டால் "நம்ம ஊர்" என்பார்கள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  6. ஜெர்மனியிலிருக்கும் என் சினேகிதி நேற்று தொலைபேசியில் அழைத்தாள். நான் ஏதோ வேலையிலிருந்ததால் பேசவில்லை. இன்று சாட்டில் "ஏன் பேசவில்லை?" எனக்கேட்டாள். "நல்ல புரிதலுடைய நட்புக்குள் இது போன்ற கேள்விகள் வராது" என்றேன். "நன்றி" என்று பதில் வந்தது. எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  7. நண்பனொருவன் பிராமணன்; கிறித்துவப்பெண்ணைக் காதலிக்கிறான். மற்றொருவன் கிறித்துவன்; பிராமணப்பெண்ணைக் காதலிக்கிறான். இரண்டுமே மதத்தால் தொக்கி நிற்கிறது. ஜோடி மாற்றிக் கொண்டால் சுமூகமாய்ப் பிரச்சனை தீருமே என்றால் கோபிக்கிறார்கள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  8. இன்னொரு நண்பன் தன் சினேகிதியுடன் கே.எஃப்.சி.யில் சிக்கன் கடித்துக் கொண்டிருக்கையில் அட‌க்க முடியாமல் வாயு பிரித்திருக்கிறான். அவள் இரு முறை மூக்கை உறிஞ்சி விட்டு முகம் சுழித்து "ம்ஹூம். சிக்கன் நாத்தம்" என்று அன்னப்பறவை மாதிரி சொல்லியிருக்கிறாள். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  9. மற்றொரு நண்பனுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். வலது தொடைக்கு இரண்டு அங்குலம் மேலே பெரிய மச்சமுள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் ராஜாங்கம் ஆள்வான் என்று யாரோ ஜோதிடன் சொல்ல அதை எப்படி வெரிஃபை செய்வது என குழப்பதிலிருக்கிறான். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.
  10. லேப்டாப் அதிகம் உபயோகித்தால் ஆண்மை போய் விடும் என்பதை விஞ்ஞானப்பூர்வ விளக்கத்துடன் எங்கோ படித்து விட்டு என் மனைவி அரண்டு போயிருக்கிறாள். நான் ஒரு நாளைக்கு சராசரியாய் கிட்டத்தட்ட பதினைந்து மணி நேரம் மடிக்கணிணியுடன் வாசம் செய்கிறவன். எப்போதும் ஹாஸ்யத்துக்கு குறைவில்லை.

Comments

Anonymous said…
thigh mole is toooo much :-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்