படித்தது / பிடித்தது - 37

சிநேகிதிகளின் கணவர்கள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
எப்போதும் உருவாகிவிடுகிறது
ஒரு சதுரங்கக் கட்டம்

ஒரு கலைக்கமுடியாத பாவனையின்
மர்ம நிழல்

ஒரு சர்க்கஸ் கோமாளியின்
அபாயகரமான சாகசங்கள்

ஒரு அபத்த வெளியில்
விரிக்கப்பட்ட வலை

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதிகளின் கண்களை
முற்றாகத் தவிர்த்துவிடுகிறேன்

அவளது ஆடையின் வண்ணங்களை
அவளது தேனீரின் ரகசியப் பிரியங்களை
மறுதலித்துவிடுகிறேன்

அவளைப் பற்றிய ஒரு நினைவை
வேறொரு சம்பவத்தோடு இணைத்துவிடுகிறேன்

அவளது கணவனைப்போலவே
அவளது இருப்பை
ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகிதங்களில்
நாம் அனுமதிக்கப்படுவது
ஒரு கருணை

அது நம்மிடம் காட்டப்படும்
ஒரு பெருந்தன்மை

சில சமயம் நம் சிநேகிதிகளுக்கு
காட்டப்படும் பெருந்தன்மை

நாம் சந்தேதிக்கப்படவில்லை
என நம்மை நம்ப வைக்கும்
ஒரு தந்திரமான விளையாட்டு

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
என் சிநேகிதி எப்போதும்
பிசாசுகளின் புதிர்மொழியொன்றைப்
பேசுகிறாள்

உரையாடல்களின்
அபாயகரமான திருப்பங்களை
பதற்றத்துடன் லாவகமாகக் கடந்து செல்கிறாள்

எதைப் பற்றிய பேச்சிலும்
கணவரைப் பற்றிய
ஒரு பின்குறிப்பை இணைத்துவிடுகிறாள்

ஒவ்வொரு சந்திப்பின் முடிவில்
மிகவும் ஆயாசமடைந்து
கணவர்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பது
நல்லது என்று யோசிக்கத் தொடங்குகிறாள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களின் இடையே இருப்பது
ஒரு உறவல்ல
இலக்குகள் ஏதுமற்ற
ஒரு பந்தயம்

ஒரு அன்னியனுக்குக் காட்டும்
வன்மம் மிகுந்த மரியாதை

ஒரு சட்டபூர்வ உரிமையாளனுக்கு எதிராக
ஒரு பொறுக்கியின் ரகசிய கலகம்

தொண்டையில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட
ஒரு மீன் முள்

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
நான் எனது பழக்கவழக்கங்களை
மாற்றிக் கொள்கிறேன்

அவர்களது எல்லா அக்கறைகளையும்
எனது அக்கறைகளாக்கிக் கொள்கிறேன்

சிநேகிதிகளுடன் பேச
ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது

அவர்களின் கணவர்களுடன் பேச
ஏராளமான கச்சாப் பொருள்கள் தேவைப்படுகின்றன

சிநேகிதிகளின் கணவர்களுடனான
சிநேகங்களில்
சிநேகிதிக்குப் பதில்
சிநேகிதியின் குழந்தைகளை
நேசிக்கக் கற்றுக் கொண்டேன்

எவ்வளவு குடிக்க வேண்டும்
ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும்
நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும்
எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும்
என எல்லாவற்றையும் பழகிக் கொண்டேன்

நான் குழப்பமடைவதெல்லாம்
சிநேகிதியை பெயர் சொல்லாமல்
எப்படி அழைப்பது என்று

அல்லது பெயர்களை
வெறும் பெயர்களாக மட்டும்
எப்படி உச்சரிப்பது என்று

ஒரு சிநேகிதியை
‘ சிஸ்டர்’ என்று அழைக்கும்
ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து
எப்படித் தப்பிச் செல்வது என்று

- மனுஷ்ய புத்திரன்

நன்றி: சாருஆன்லைன்.காம்

பின்குறிப்புகள்:
  1. இக்கவிதை எனக்கு ஆதவனின் கதைகளை ஞாபகப்படுத்துகிறது.
  2. எனக்கும் சினேகிதிகள் உண்டு; அவர்களுக்கும் கணவர்கள் உண்டு.
  3. முக்கியமாய் அவர்கள் யாரும் என் வலைதளத்தைப் படிப்பதில்லை.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்